அத்துமீறல்களும் அஞ்சா நெறியும்

சாம்பவி ராஜாங்கம்

என்று பாடிப் பெண்களைப் போற்றினார் மகாகவி. அப்படிப்பட்டப் புவியாளும் திறன்கொண்ட பெண்கள் பல சவால்களையும் இன்னல்களையும் அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்கிறார்கள். அவற்றில் பாலியல் குற்றங்களும் அடங்கும் என்பது வருந்தத்தக்க ஒன்று. தங்கள் வாழ்நாட்களில் 81 விழுக்காட்டுப் பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன [1]. ஆண்களில் 34 விழுக்காட்டினர் மட்டுமே பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள்.

சிங்கப்பூரில் சில பாலியல் குற்றங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான தண்டனைகள் என்னென்ன, பாலியல் கொடுமைகளையோ, வற்புறுத்தலையோ எதிர்நோக்கும் பெண்களுக்குத் தரப்படும் உதவிகள், சட்ட, நீதித்துறை அணுகுமுறைகள் ஆகியவற்றை இக்கட்டுரை விவரிக்கும்.

‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்,
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’

பாலியல் வல்லுறவு

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375, வல்லுறவைப் பாலியல் குற்றங்களில் முதல் குற்றமாகக் குறிக்கிறது. பெண்ணின் ஒப்புதலின்றி வாய், குதம், யோனி வழியாக ஆண் சேர்க்கை நிகழ்ந்தால் அதை வல்லுறவாகச் சட்டம் வகைப்படுத்துகிறது. மேலும் பெண்ணின் வயது 14க்குக் குறைவாக இருக்குமானால், அவளது ஒப்புதல் இருந்தாலும் அது வல்லுறவே. பக்குவமற்ற வயதில் சிறுமியர் அறியாமையிலோ வற்புறுத்தலிலோ அளிக்கும் ஒப்புதலைச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

திருமணம் எனும் அங்கீகாரத்தால் மனைவியிடம் கணவர் வல்லந்தமாக நடந்துகொள்வது வல்லுறவுக் குற்றம் என வகைப்படுத்தப்படாமல் பலகாலமாக இருந்துவந்தது. ஆனால் 2019இல் வெளிவந்தக் குற்றவியல் சீர்திருத்தச் சட்டம் அதனை மாற்றியமைத்தது. இன்று, குற்றவியல் சட்டம் பிரிவு 375(4)இன் கீழ், மனைவியாகவே இருந்தாலும் அவரது ஒப்புதலில்லாத சேர்க்கை நிகழ்ந்தால் கணவர்மீது வல்லுறவுக் குற்றம் சுமத்தப்படலாம்.

குடும்ப வன்முறையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணவரின் பாலியல் வற்புறுத்தலும் ஓர் அங்கமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் அவதியுறும் பெண்கள் துணிச்சலுடன் முன்வந்து தாங்கள் எதிர்நோக்கும் கொடுமைகளை முன்வைக்கவேண்டும்; திருமண பந்தத்திற்குள் சட்டம் நுழைந்து பாதுகாப்பு அளிப்பதில்லை என்று பெண்கள் எண்ணிவிடக்கூடாது. அதற்காகவே மாற்றப்பட்ட சட்டம் இது.

வல்லுறவுக் குற்றத்திற்காக அதிகபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனையும், அபாரதமோ அல்லது பிரம்படி தண்டனையோ விதிக்கப்படலாம். வல்லுறவு கொள்ள அல்லது வல்லுறவுக்கு உதவ முயன்று ஒரு பெண்ணைக் காயப்படுத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, அதுவும் பிரிவு 375(3)இன் கீழ் குற்றமே. அக்குற்றத்தைப் புரிவோருக்கு குறைந்தபட்சம் எட்டாண்டு சிறைத்தண்டையோடு (அதிகபட்சம் 20 ஆண்டு), 12 பிரம்படியும் தண்டனை விதிக்கப்படும்.

பார்வை மோகம் (voyeurism)

ஒருவரை அவரது அந்தரங்க நேரத்தில், அவர் சம்மதமின்றிக் கண்காணிப்பது, பார்வை மோகம் என்ற குற்றத்தில் சேரும். இக்குற்றம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377BBஇல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பார்வை மோகக் குற்றம் பல விதங்களில் நடைபெறலாம். ஆனால், பெண்கள் பெரும்பாலாக எதிர்நோக்கும் சூழ்நிலைகள் இவையே: கழிவறையில் பதுங்கி இருக்கும் ஓர் ஆடவர் பெண்ணைக் காண்பது, பெண்ணைச் சாளரத்தின் வழி தனியாகவோ ஆடையின்றியோ இருக்கும் வேளைகளில் காண்பது, புகைப்படம் எடுப்பது, பெண்களின் உடைமாற்றும் அறையில் கண்காணிப்பது, கருவி ஒன்றைக் கொண்டு படம்பிடிப்பது.

பார்வை மோகக் குற்றத்தின்கீழ் தண்டிக்கப்படும் ஒருவருக்கு, ஈராண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். சிறைத்தண்டனை இன்றி, அபராதமோ அல்லது பிரம்படி தண்டனையோ வழங்கப்படலாம். அல்லது இம்மூன்று வகையான தண்டனைகளில் இரண்டோ மூன்றோ சேர்த்தும் விதிக்கப்படலாம்.

குற்றவியல் சட்டம் பிரிவு 375(4)இன் கீழ், மனைவியாகவே இருந்தாலும் அவரது ஒப்புதலில்லாத சேர்க்கை நிகழ்ந்தால் கணவர்மீது வல்லுறவுக் குற்றம் சுமத்தப்படலாம்.

பாலியல் வெளிக்காட்டல் (sexual exposure)

ஒருவருக்கு அதிர்ச்சியோ துன்பமோ தரும் நோக்கத்தோடு, பார்ப்போரின் ஒப்புதலின்றி, தனது பாலியல் உறுப்புகளை வெளிப்படுத்தும் ஒருவர் பாலியல் வெளிப்பாடு குற்றத்தைப் புரிகிறார். இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377BF இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், பெண்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு அவ்வாறு வெளிக்காட்டியோர் பலர் பிடிபட்டுள்ளனர் [2]. அக்குற்றத்தைப் புரிவோருக்கு சிறை தண்டனையோ (அதிகப்படியாக ஓராண்டுகாலம்), அல்லது அபராதமோ, அல்லது இரண்டுமோ வழங்கப்படும். பாலியல் வெளிப்பாட்டுக் குற்றத்தை 14 வயதுக்குக் குறைந்த சிறுமியரிடம் புரிவோருக்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத்தண்டனையோ அபாரதமோ பிரம்படி தண்டனையோ வழங்கப்படும்.

உதவி நிலையங்கள்

குற்ற வழக்குகளுக்குக் காலாவதியாகும் தன்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பாலியல் குற்றத்திற்கு ஆளாகியிருந்தாலும், அச்சம்பவத்தைக் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்.

காவல் நிலையங்களில் பாலியல் குற்றங்களைப் புகார் செய்ய முன்வருவோருக்கு தனியுரிமையும் (privacy) முன்னுரிமையும் தரப்படும்.

சென்ற ஆண்டில் (2022) மட்டும் சிங்கப்பூரில் 2,549 பாலியல் குற்றங்கள் புகார்கள் செய்யப்பட்டன. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்றாலும், பாலியல் குற்றங்களைக் குறித்துப் புகார் அளிக்க பல பெண்கள் (ஆண்களும் கூட) துணிச்சலாக முன்வருகின்றனர் என்ற மாற்றத்தைக் குறித்து மகிழ்ச்சி கொள்ளலாம். தற்போது காவல் நிலையங்களில் பாலியல் குற்றங்களைப் புகார் செய்ய முன்வருவோருக்கு தனியுரிமையும் (privacy) முன்னுரிமையும் தரப்படும். விசாரணை தனிப்பட்ட முறையில் நடைப்பெறும்.

பாலியல் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நலத்தின் அளவுக்கே மன நலமும் மிக முக்கியம். பாலியல் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற மனநல ஆலோசகர்களை எளிதில் ஏற்பாடு செய்து உதவ உதவி நிலையங்கள் உண்டு: Care Corner Project StART’s Sexual Assault Recovery (6476 1482), Association of Women for Action & Research (AWARE) பாலியல் குற்றத்திற்கான உதவி மையம் (6779 0282).


இறுதியாக…

பாலியல் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், அப்பொழுதுகூட பாதிக்கப்பட்டோரின் அடையாளம் வெளிவராமல் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்பொழுது பொதுமக்கள் அனுமதிக்கப்படாத தனிப்பட்ட நீதிமன்றத்தில் நடைபெறும்; வாக்குமூலம் தரப்படும்போது குற்றவாளியைக் காணாமல் இருக்க பாதிக்கப்பட்டவர் ஒரு திரையின்பின் அமர்ந்து பேசலாம், அல்லது காணொளி வழியாகக்கூட வாக்குமூலத்தை அளிக்கலாம்.

பாலியல் குற்றத்திற்கு ஆளானோர் பின்விளைவுகளைக் கருதிச் சகித்துக்கொண்டு போய்விடாமல் துணிச்சலாகப் புகாரளிக்க முன்வரவேண்டும் என்பதற்குத்தான் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நடந்த குற்றத்தை வெளிப்படுத்துவதில் எந்த அவமானத்திற்கும் இடமில்லை. பாதிக்கப்பட்டோரை ஆதரிக்கவும் காக்கவும் சட்டம், காவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் எனப் பெரும்படை இருப்பதால் அவர்கள் அச்சத்தில் மறைந்து வாழவும் அவசியமில்லை.

பாரதி அறைகூவிய நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் குறிப்பாக நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி இன்று பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடப் பெண்களுக்கு அவசியமாகவும் அதிகமாகவும் தேவைப்படுகின்றன.