தெய்வத்துடனும் பேசக்கூடாது!

சிவானந்தம் நீலகண்டன்

கேகே மகளிர் சிறார் மருத்துவமனையில், ஒரு திங்கட்கிழமை காலையில், பெண்நோய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கக் காத்திருந்தேன். என் பின்னால் தன் கைபேசித் திரையில் விரலை மேலும்கீழும் இழுத்தபடி அம்மா அமர்ந்திருந்தாள். ‘குட் மார்னிங்’ செய்தியை வாட்ஸாப்பில் பகிர்வது குறித்து மீண்டும் அவள் சந்தேகம் ஏதும் கேட்டுவிடக்கூடாது, கடவுளே!

அந்நேரம் நான் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கவேண்டியவள். ஆனால் பாழாய்ப்போன மாதவிடாய் மூன்று மாதமாக வரவில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலின் அழுத்தத்தில் இதெல்லாம் அவ்வப்போது நடப்பதுதான். எனக்குப் புரிகிறது, ஆனால் என் 60 வயது அம்மாவுக்குப் புரியவில்லை. என்மீது அவளுக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைவு என்பதும் ஒரு காரணம். அடிக்கடி “நான் உன் தாய்” என உரிமையை நிலைநாட்டி என் விஷயத்தில் மூக்கை நுழைத்துக்கொண்டே இருப்பாள், அன்று மருத்துவமனைக்கும் கூடவே வந்துவிட்டாள்.

அஷ்வாணி அஷ்வத்

இந்தியக் குடும்பங்களில் ஏனோ மாதவிடாய் நேரடியாகப் பேசப்படுவதில்லை. ‘அசுத்தம்’ என்பார்கள். ‘எம்’ என்ற சங்கேதக் குறியீடும் உண்டு. “டாக்டர் சோதனை அது இது என்று ஏதும் கருவியை நுழைத்துவிடப் போகிறார். இந்த விஷயத்தில் நாமதான் கவனமாக இருக்கணும். அதுக்குதான் கூடவே வந்தேன், நான் பாத்துக்கிறேன்” என்றாள் அம்மா. எனக்கு 30 வயது ஆகிவிட்டது என்றாலும் நான் “சின்னப்பொண்ணு, எதுவும் தெரியாது” என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

அப்போது எனக்குப் பத்து வயது. அது ஒரு வெள்ளிக்கிழமை, பின்மதிய நேரம். மிஸ் டான் கொடுத்த கணித வீட்டுப்பாடம் காத்திருக்கட்டும் என்று தொலைக்காட்சியில் ‘கிட்ஸ் செண்ட்ரல்’ பார்த்துக்கொண்டு ‘ஸ்ட்ராபெரி யோகர்ட்’ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அதெல்லாம் இனி திரும்பிவராத கனாக்காலம்!

அடிவயிற்றில் ஒரு மாதிரியான உருட்டுவலி. கழிவறைக்குச் சென்றால் வழக்கத்திற்கு மாறான ஒரு செந்திரவம் எங்கிருந்தோ வெளிப்பட்டதோடு உடைகளையும் கறையாக்கிவிட்டது. ஒருகணம் பயந்தாலும் அது ‘ஸ்ட்ராபெரி யோகர்ட்’ சிந்தியதாகத்தான் இருக்கவேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன். கறைபட்ட ஆடைகளை வாளித் தண்ணீருக்குள் முக்கி, பணிப்பெண்ணிடம் அலசிப்போடச் சொல்லிவிட்டு, உடைமாற்ற அறைக்குள் சென்றேன். அடிவயிற்றைக் கொத்தாகப் பிடித்துப் பிசைவதைப்போல மீண்டும் உக்கிரமான வலி.

“அம்மூ..” கொலுசுச் சத்தம் கிணுகிணுக்கப் பணிப்பெண் என் அறைவாசலுக்கு ஓடிவந்தது தெரிந்தது. அந்தமாதிரியான திகில்முகத்துடன் அவளை நான் பார்த்ததே இல்லை. “சிலுவார கழத்துறியா?” என்றாள். நான் யோசனையுடன் தலையசைத்து இணங்க, புதிதாக மாற்றிய ஆடையில் மீண்டும் அதே கறை.

“ஆனா இப்ப நான் ஸ்ட்ராபெரி யோகர்ட் சாப்புடவே இல்லையே?” என்றேன். “இது ரத்தம்” என்றாள் அவள்.

இந்தியக் குடும்பங்களில் ஏனோ மாதவிடாய் நேரடியாகப் பேசப்படுவதில்லை. 'அசுத்தம்' என்பார்கள். 'எம்' என்ற சங்கேதக் குறியீடும் உண்டு.

ரத்தமா? ஏன் என் உடம்பில் ரத்தம் வருகிறது? ஏதும் மோசமான வியாதியா? நான் சாகப் போகிறேனா? எனக்குக் கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது. அவள் சமாதானப்படுத்தினாள். அடுத்த நிமிடம் எங்கிருந்தோ புயலாக வந்த அம்மா அவளது அறைக்குள் என்னை இழுத்துச் சென்றுவிட்டாள். அதுவரை நான் பார்த்தேயிராத வெண்ணிறப் பொருள் ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்தாள். அது வேடிக்கையாக இருந்தது என்றாலும் அப்போதிருந்த மனநிலையில் வேடிக்கையை ரசிக்க இயலவில்லை.

பள்ளியில் எதையும் கேள்வி கேட்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளனர். அந்த வெள்ளிக்கிழமை இரவில் எனக்கு ஒரு நூறு கேள்விகளாவது இருந்தன.

“அம்மா.. ஏன் எனக்கு ரத்தம் வருது?”

“எல்லாப் பொண்ணுங்களுக்கும் வர்றதுதான். எனக்கு, நம்ப பணிப்பெண்ணுக்கு, உன் ஆண்டிங்களுக்கு எல்லாருக்கும்”

“என் ஃபிரண்ட்ஸ்ங்களுக்குமா?”

“அவங்களுக்கு அப்பறமா வரலாம். ஆனா அவங்ககிட்டப் போயி கேட்டுகிட்டு இருக்காத”

“ஏன்?”

“அ..யா.. எதுக்கு இன்னைக்கு இப்புடி கேள்விமேலெ கேள்வி கேக்குற?”

பள்ளியில் எதையும் கேள்வி கேட்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளனர். அந்த வெள்ளிக்கிழமை இரவில் எனக்கு ஒரு நூறு கேள்விகளாவது இருந்தன: எதற்கு என் உடலில் சில இடங்கள் மட்டும் உரோமங்களுடன் ஊதியும் போயின? ஏன் நாளெல்லாம் நான் அறைக்குள்ளேயே கிடக்கவேண்டும்? ஏன் பள்ளிக்குப் போகக்கூடாது? ஏன் அண்ணனுடன் பேசக்கூடாது? ஏன் பூஜையறைக்குள் போகக்கூடாது? எதற்கு முட்டையை உடைத்துப் பச்சையாகக் காலையில் ஒரேமடக்கில் விழுங்கவேண்டும்? வெளியே செல்லும்போது ஏன் குதிரைவால் கொண்டைக்குமேல் ஓர் ஆணியைச் செருகிக்கொள்ள வேண்டும்?

பணிப்பெண் அவளது சொந்த ஊரான மதுரையாக இருந்தால் இந்நேரம் நடப்பதே வேறு என்றாள். வீட்டுக்கு வெளியே ஒரு சிறு குடிலை அமைத்து அதில் உட்கார வைத்துவிடுவார்களாம். ‘சானிடரி நாப்கின்’ கிடைக்காத நிலையில் துணிதானாம். மாதவிடாய் கண்ட பெண் அசுத்தமானவள், எந்த வேலைக்கும் ஆகாதவள். அதிலும் பூஜையறை என்றால்… பேச்சே கூடாது. பச்சை முட்டை கருப்பையை வலுவாக்குமாம். கொண்டையில் வைக்கப்படும் ஆணி, கெட்ட ஆவிகள் ரத்தவாடையை மோப்பம் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிடாமல் காக்குமாம்!

அசுத்தமாக ஆனதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

“இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட. சொந்தக்காரங்கள்லாம் நெறைய கிஃப்ட் வாங்கிட்டு வருவாங்க” என்று அவள் குதூகலமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அசுத்தமாக ஆனதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

கேகே மருத்துவமனை மருத்துவர், அவருக்கும் 30வயதை ஒட்டித்தான் இருக்கும், மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணங்களை விளக்கினார். ஒருவாரம் உட்கொள்ள வேண்டிய ஹார்மோன் மாத்திரைகளை எழுதினார்.

“சோயா சாஸுடன் அன்னாசிப் பழத்தை அவள் சாப்பிடலாமா?” என்று மருத்துவரிடம் கேட்டாள் அம்மா. மீண்டும் கண்டகண்ட வலைமனைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்டாள் போல. மருத்துவர் லேசாகச் சிரித்துக்கொண்டார். “பேரீச்சம் பழம் எப்படி?” என்று அடுத்த கணையை வீசினாள். மேலும் அச்சூழலை அபத்தமாக அவள் மாற்றுவதற்குமுன், நான் இடைவெட்டாக உள்ளே புகுந்து “கொஞ்சம் தீவிரமான உடற்பயிற்சி செய்துபார்க்கிறேன். என் தோழிக்கு அது உதவியது” என்று முகம் சிவக்கச் சமாளித்தேன்.

“நல்லது… இயற்கையான பல வழிகளை முயற்சிக்கலாம் ஆனால் நம் உடல்கள் வெவ்வேறு மாதிரியானவை என்பதால் அனைவரும் ஒரேவிதமான பலன்களை எதிர்பார்ப்பதற்கில்லை. உங்களுக்குக் கொஞ்சம் மருந்தும் அவசியம்”

“அவளுக்கு டெஸ்ட் ஏதும் எடுக்கணுமா?” என்றாள் அம்மா. நல்லவேளையாக ஏதுமில்லை. மருத்துவரின் ஆலோசனை அறையிலிருந்து வெளியாகும்போது அம்மாவை அழுத்தமாக முறைத்தேன்.

“உன் மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா?”

“மூட நம்பிக்கையா? இதெல்லாம் தலைமுறை தலைமுறையா கண்கண்ட மருத்துவம். பலபேருக்கு நல்லா வேலசெஞ்சிருக்கு”

“முட்டாள்தனமா இருக்கு. அதெல்லாம் நீயே வெச்சுக்க. என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும்”

“ஏன் இவ்ளோ ரூடா பண்ற? இன்னைக்கு லீவ் போட்டுட்டு உங்கூட வந்திருக்கேன் தெரியுமா?”

“நானா கேட்டேன்?”

வேகமாகக் கேட்டுவிட்டு அருகிலிருந்த கழிவறைக்குள் புகுந்தேன். பழைய கழிவறை நினைவுகள் மீண்டன. இருபது ஆண்டுகளுக்குமுன் பருவமடைந்தபோது மாதவிடாய் வந்துவிட்டதே என்று கலங்கினேன். இன்று வரவில்லையே என்று கவலைப்படுகிறேன்.

சடக்கென்று என்னுடல் எனக்கே வெறுப்பாக இருந்தது. மீண்டும் மாதவிடாய் வராவிட்டால் என்னாகும்? அமினோரியாவாக இருக்குமோ? மீண்டும் கேள்விகள், இம்முறை எதிர்த்திசையில். என் கண்கள் கலங்கிவிட்டன. துர்க்காம்மா, மாரியம்மா என்னைப் பழையபடி ஆக்கிவிடு. அசுத்தமாகவே இருந்தாலும் பரவாயில்லை.

பெண்ணுடல் குறித்த வெளிப்பாடுகள் வெட்கப்பட வேண்டியவை என்றும் அவமானத்திற்குரியவை என்றும் காலகாலமாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. அவமானத்திற்குரிய ஒன்றை மறைப்பதும் அமைதியாகக் கடந்துவிடுவதும் சரிதானே?

பத்து வயதில், பாட்டியின் பூப்போட்ட சாரத்தைச் சுற்றி, சமையலறையை ஒட்டிய கழிவறையில் ஒரு நீல முக்காலியில் உட்கார வைத்தனர். சொந்தக்காரப் பெண்மணிகள் வண்ணப் புடவைகளையும் பஞ்சாபி ஆடைகளையும் அணிந்துகொண்டு, கையில் ஆளுக்கொரு குண்டானில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு என்னைச் சூழ்ந்துவிட்டனர்.

பெண்ணுடல் குறித்த வெளிப்பாடுகள் வெட்கப்பட வேண்டியவை என்றும் அவமானத்திற்குரியவை என்றும் காலகாலமாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன.

பூப்பெய்து வாழ்த்துப் பாடலைப் பாடிக்கொண்டே மஞ்சளும் ரோஜா இதழ்களும் சேர்த்த தண்ணீரை மாமழையாகப் பெய்தனர். தண்ணீரின் வேகத்தில் கட்டியிருந்த சாரம் மார்பிலிருந்து நழுவப்பார்த்தது. அதைச் சங்கடத்துடன் இழுத்துப் பிடித்துக்கொண்டேன்.
ஒருவழியாக அங்கிருந்து என்னை வெளியேற்றி வரவேற்பறைக்குள் இட்டுச்சென்றனர். நெருங்கிய சொந்தபந்தங்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அவர்களின் ஈட்டிப் பார்வைகள் என்னைத் துளைத்துச் சென்றன. தலையைக் கவிழ்ந்தபடி விரைந்து என் அறைக்குள் புகுந்தேன்.

நான் மரத்துப்போன ஒரு சிரிப்பை அப்படியே மாற்றாமல் வைத்துக்கொண்டிருந்தேன். அந்த நாள் பிறந்தநாளையும் தீபாவளியையும் சேர்த்துவிட்டதைப்போல இருந்தது.

அம்மாவின் பட்டுப்புடவையைப் பணிப்பெண் எனக்குக் கட்டிவிட்டாள், இல்லை, ஒருமாதிரி சுற்றிவிட்டாள். முதல்முறை சேலை கட்டியதில் ஒரு படபடப்பு இருந்தது. அம்மாவும் பணிபெண்ணுமாய்ச் சேர்ந்து வளையல், மணிக்கம்மல், அட்டிகை எனத் தங்கத்தால் என்னை ஜோடித்தனர். பிறகு என மார்புக்குக் குறுக்காக இரு மல்லிகைப்பூ மாலைகளைப் போட்டனர். முகப்பூச்சு, ஒப்பனைகளையும் செய்தனர்.

நான் கண்ணாடியில் என்னை பார்த்தபோது, முந்தியநாள் ஸ்ட்ராபெரி யோகர்ட் சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சி பார்த்த பெண்ணை அங்கு காணவில்லை. திருமணத்துக்குத் தயாரான ஒரு சிறு மணமகள் அங்கு இருந்தாள். அம்மாவேறு மூக்குக் கண்ணாடியைப் போடவேண்டாம், அது அழகைக் குறைத்துவிடும் என்று பிடுங்கிக்கொண்டாள்.

கண்ணாடி போடாமல் வரவேற்பறைக்குள் நுழைந்தபோது அனைத்தும் அலசலாகத் தெரிந்தது. சுற்றப்பட்டிருந்த புடவையோ இடுப்பிலிருந்து எந்நேரமும் நழுவத் தயாராக இருந்தது. பூஜையறை மூடியிருந்தது. அம்மாவின் தங்க மாங்காய்கள் காய்த்த ஊதாப்புடவையை ஜன்னலை மறைத்துத் திரையைப்போலக் கட்டியிருந்தனர். தரைவிரிப்பின் இருமருங்கிலும் வெள்ளிக் குத்துவிளக்குகள். விரிப்பு நிறைய வெள்ளித் தட்டுகளில் வெற்றிலை, மாம்பழம், திராட்சை, பேரீச்சை, கற்கண்டு, இனிப்புகள், சாமந்திப்பூ.

அங்கிருந்த மனைக்கட்டையைக் காட்டி “உக்காரு” என்றாள் அம்மா. சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து என் தலையில் கொஞ்சம் பன்னீர் தெளித்தனர். கன்னத்திலும் கைகளிலும் மஞ்சளைப் பூசினர். நகைகளையும் ‘அங்பாங்’ பாக்கெட்டுகளையும் பரிசளித்து ‘போஸ்’ கொடுத்துப் புகைப்படம் பிடித்துக்கொண்டனர்.

நான் மரத்துப்போன ஒரு சிரிப்பை அப்படியே மாற்றாமல் வைத்துக்கொண்டிருந்தேன். அந்த நாள் பிறந்தநாளையும் தீபாவளியையும் சேர்த்துவிட்டதைப்போல இருந்தது. எனக்கு உதிரப்போக்கு இருப்பது அங்கு வந்திருந்த அனைவருக்கும் தெரியும் என்பதை நினைத்தபோது வெட்கம் பிடுங்கித்தின்றது. இருந்தும் அப்படியொரு விழா அவசியம் என்று அம்மா சொல்லிவிட்டாள்.

“ஆமா ஆமா, பத்து வயசுதான் ஆகுது. ஆனா சடங்கு பண்ணிடறதுதான் நல்லது. கொஞ்சம் பெரியவளா ஆனதும் கிராண்டா பண்ணிடலாம்” என்று சொந்தக்காரர்களிடம் ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள். அப்பாவை நான் பார்க்கும்போதெல்லாம்அவர் ஏனோ தன் பாதத்தைப் பார்க்கத் தொடங்கினார். அண்ணனுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. அவன் தன் அறையில் கணினியில் மூழ்கியிருந்தான். தெய்வங்களிடம் பேசுவதற்கும் வழியில்லை. ‘பேசக்கூடாதது’ என ஒன்றை நான் ஏற்றுக்கொண்ட தருணம் அது.

அதன்பின், சுமார் ஓராண்டு கழிந்து, ஒரு நூலகத்திற்குச் சென்றபோது பூப்பெய்துதல் குறித்த புத்தகம் ஒன்று கண்ணில்பட்டது. யாரும் பார்க்காதபோது அதை எடுத்து அதன் வண்ணப் பக்கங்களைப் புரட்டினேன். பெண்ணுடல் மாற்றங்கள் அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த கணினி ஒன்றில் ‘சடங்கு’ என்று தேடினேன். பெண் பூப்பெய்தியதும் நடத்தப்படும் சடங்கு விழா இந்தியாவில் ஒருகாலத்தில் திருமணத்திற்குத் தயாரான பெண் தங்களிடம் இருப்பதை உறவினர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதையும் அது தொடர்ந்து பாரம்பரியமாக நடந்துவருவதையும் அறிந்தேன். இதைக் குறித்தெல்லாம் ஏன் அம்மா எதுவுமே சொல்லவில்லை?

இருபதாண்டுகள் கழித்து, இன்று அம்மாவிடம் எதையும் கேட்பதற்கு என்னிடம் துணிச்சல் நிறையவே இருக்கிறது. சமையலறையில் சோயா சாஸை அன்னாசியில் தெளித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.

“அப்ப உனக்குப் பத்து வயசு. அப்பவே வந்துடும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும். நான் 14 வயசுலதான் வந்தேன். நான் சொல்றதுக்கு முன்னாடியே நீ பெரியவளா ஆயிட்ட” என்றாள்.

“ஆனா நீ எனக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்ல.. எதுவுமே சொல்லலியே”

“அ..யா.. பாட்டிகூடத்தான் எனக்கு எதுவுமே சொல்லல. நீயே படிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான். அதுல என்ன பிரச்சன?”

அப்போதுதான் உறைத்தது. அம்மா பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பவள் என்பது ஒருபக்கம் இருந்தாலும் என் உடலைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவளுடைய அனுமதி எனக்குத் தேவையில்லையே! அறிவின் திறவுகோல் என்றோ என் கைக்கு வந்துவிட்டதே!
கையில் அன்னாசிக் கோப்பையைத் தந்து, சற்று மெல்லிய குரலில், “வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்காத சரியா? இத சாப்பிடு, சீக்கிரம் ‘எம்’ வந்துடும், நான் வேண்டிக்கிறேன்” என்றாள். நான் ஒரு புன்னகையுடன் கோப்பையை வாங்கிக்கொண்டேன்.

தெய்வத்துடன்கூட அன்று பேசமுடியாமல் பூஜையறை பூட்டப்பட்ட அந்தப் ‘பேசக்கூடாத’ விஷயத்தை தெய்வமே கொண்டாடிக்கொண்டிருப்பதை இன்று இணையத்தில் என்னால் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அஸ்ஸாமில், காமாக்யா தேவி கோவிலில், தேவி மாதவிடாய் காணுவதாக ஓர் ஐதீகம். அதையொட்டி ஒவ்வோராண்டும் ஜூன் மாதத்தில் மூன்று நாள்கள் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. பிரம்மபுத்திரா நதியில் செந்தாரை பரவும்படி குங்குமப்பொடியை ஒரு குறியீடாகக் கலந்துவிடுகின்றனர்.

இன்னொரு பக்கம் பாரம்பரியமிக்க ஆயுர்வேத மருத்துவக் கொள்கை மாதவிடாயை ‘வாத தோஷம்’ என்று வகைப்படுத்துகிறது. அதாவது வாத தோஷம் பெண்ணுடலில் கூடிக்கொண்டேபோய் ஒருகட்டத்தில் வெளியேறுவதே மாதவிடாய். அந்நிலையில் உடலின் ஆற்றல் சமன்பாடுகள் தொடர்ந்து மாறும் என்பதால்தான் வீட்டைவிட்டு வெளியே செல்லல் தடைசெய்யப்பட்டதாக ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது அசுத்தம் என்பதற்காக அல்ல, கோவில் போன்ற பிற ஆற்றல்கள் வெளிப்படும் இடங்களுக்குச் செல்வது அச்சமன்பாடுகளைச் சிக்கலாக்கிவிடும் என்பதற்காக.

ஆனால் சொந்தப் பண்பாட்டின் ஒரு பகுதி எப்படி ஒருவரின் சுதந்திரத்தைத் தடைசெய்வதாக இருக்கமுடியும்? அப்படியான கேள்விகளில் இருந்துதான் பண்பாட்டில் காலப்பொருத்தமான மாற்றங்களைக் கைக்கொள்வதற்கான உரையாடல்களைத் தொடங்கமுடியும். மாதவிடாய்க்கும் பெண்ணுக்கும் உள்ள உறவையும் சமூக, பண்பாட்டு ஊடாட்டங்களில் மாதவிடாய் பெறும் இடத்தையும் மறுவரையறை செய்யவேண்டிய தேவை இன்றும் இருக்கிறது.

மாதவிடாய் ஓர் இயற்கையான, உயிரியல்பூர்வமான, மகத்தான, தன்னூக்க சக்தி என உணர்வதற்கு காமாக்யா தேவியைத் துணைகொள்ளலாமா? மாதவிடாய் குறித்துப் பேசுவதற்குக் குடும்பங்கள் தயாராகலாமா? ஒரு பத்துவயதுப் பெண் சங்கடமாக உணர்கிறாள் என்றால் பூப்பெய்து சடங்கைக் கைவிடலாமா?

இக்கேள்விகளுக்கான பதில்கள் எப்படி இருந்தாலும் அடுத்தமுறை மாதவிடாய் காணும்போது எந்தப்பெண்ணும் வெட்கப்படவோ அவமானப்படவோ அவசியமில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.