மொழிபெயர்ப்புக் கவிதை

0
300

நாளை, விடியற் காலையில், கிழக்கு வெளுக்கும்பொழுதில்
நான் கிளம்புவேன். உன் காத்திருப்பை நான் அறிவேன்.
காடுகளினூடே செல்வேன். மலைகளைக் கடந்து செல்வேன்.
உன்னிடமிருந்து இனியும் என்னால் விலகி இருக்கமுடியாது.

என் பார்வை என் நினைவுகளிலேயே பதிந்திருக்கும்.
வேறெதையும் பார்க்கவோ, கேட்கவோ இயலாது.
தனியனாக, முகமற்றவனாக, கூன் விழுந்தபடி, கைகளைக் கட்டியபடி நடப்பேன்.
பகலும் எனக்கு இரவான சோகத்துடன் நடப்பேன்.

மாலைக் கதிரவனின் பொன் கிரணங்களைக் காணாது
ஹாஃப்ல நோக்கி வரும் கலங்களையும் காணாது
உன் கல்லறையை அடைந்து, அதன் மீது
பசும் ஹாலி இலைகளுடன் கூடிய ஹீதர் மலர்க்கொத்தை வைப்பேன்.

கவிஞர் பற்றிய குறிப்பு

விக்டர் ஹ்யூகோ

ஓவியர், மனித உரிமை ஆர்வலர், அரசியல் பார்வையாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஃப்ரெஞ்சு கவிஞர் விக்டர் ஹ்யூகோவுக்கு (1802-1885) அறிமுகம் அதிகம் தேவையில்லை. இந்தக் கவிதையில் மறைந்த தன் மகளின் நினைவு நாளில் அவர் கல்லறைக்குச் செல்வதைப் பற்றி உருக்கமாகச் சொல்லும்போது, 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஹென்ரி நடத்திய ஹாஃப்ல துறைமுக முற்றுகை போன்ற நிகழ்வுகூடத் தனக்கு ஒரு பொருட்டாக இருக்காது என்று கோடி காட்டுகிறார்.


(சரியான புரிதல்களுக்காக ஃப்ரெஞ்சு மூலத்துடன் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியும் தேவைப்பட்டது)