தற்காலப் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கற்பித்தல்

நுணுக்கங்களைக் கற்பிப்பது அல்ல, ஆர்வத்தை உண்டாக்குவது!

பாலர் பள்ளியில் குழந்தைகளுக்குத் தாய்மொழி கற்றுக்கொடுப்பது ஒரு தொழில் மட்டுமன்று, ஒரு தலைமுறைக்கு நம் மொழியைக் கடத்தும் கடப்பாட்டின் முதலடி. அந்த அடிப்படையில்தான், ஓர் ஆங்கில ஆசிரியராக என் பணியைத் தொடங்கினாலும் தமிழ் கற்றுக்கொடுக்க வாய்ப்பு வந்தபோது அதைத் தவறவிடவில்லை.

பாலர் பள்ளியில் தமிழ்மொழி கற்பித்தல் என்பது மொழியின் நுணுக்கங்களைக் கற்பிப்பது அல்ல, தமிழின்மீது பிள்ளைகளுக்கு ஆர்வத்தை உண்டாக்குவது. சிறுவயதிலேயே மொழியைச் சுமையாக ஆக்கிவிடாமல் சுகமாக ஆகுவது. அதற்கு மொழி மட்டுமின்றி விளையாட்டு, கலை, பண்பாடு சார்ந்த பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தவேண்டும். மொழிவிளையாட்டுகள், கரகம், கோலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, பறையிசை உள்ளிட்ட புலன்களை ஈர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்தோம். சிங்கப்பூர்ச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அவை புதியதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தன. அவர்கள் தம் பெற்றோரிடம் சென்று தாங்கள் கண்ட புதிய விஷயங்களைக் குறித்துக் கேட்டனர். மேலும் தொடர்ந்து பங்கேற்க விரும்பும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் அளிக்கும் ஒத்துழைப்பு புதிய முன்னெடுப்புகளுக்குப் பெரிதும் துணைபுரிகிறது. பாலர் பள்ளித் தாய்மொழிக் கல்விக்கான சிறந்த ஆசிரியர் விருதை 2020ஆம் ஆண்டு நான் பெற்றேன். அது நான் செல்லும் திசை சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தி, பணியை மேலும் மெருகேற்றும் உந்துசக்தியாகவும் அமைந்தது.

-ஜெய ரூபி கரோலின், பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் (PCF Sparkletots) பாலர்பள்ளி

சிறு வெற்றிப் பொறியைப் பற்றவைத்தால் போதும்!

என் 13 ஆண்டுகாலத் தமிழ்க் கற்பித்தல் பணியில் பலதரப்பட்ட மாணவர்களைக் கண்டதுண்டு. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடை எழுதியவர்கள் உண்டு. பதில்கள் தெரிந்திருந்தாலும் எழுத இயலவில்லை என்றுகூறி வெறும்தாளைத் தந்தவர்களும் உண்டு. அப்படியொரு மாணவரால் நன்றாகத் தமிழில் பேசமுடிவதைக் கண்டேன். அவரை ஒரு பேச்சுப் போட்டிக்கு அழைத்துச்சென்றேன். அதில் வெற்றிபெற்றதும் அவருக்குத் தமிழில் நம்பிக்கை பிறந்தது. அதன்பிறகு மெல்லமெல்ல எழுத்திலும் பிடிமானம் கிடைத்தது. எங்காவது ஒரு சிறிய வெற்றிப் பொறியைத் தமிழில் மாணவர்களிடம் பற்றவைத்தால் போதும். வெற்றித்தீ பிற இடங்களுக்கும் பரவிவிடும்.

ஒரு மாணவர் லண்டனில் வளர்ந்து சிங்கப்பூருக்கு வந்தார். தமிழை அப்படியே ஆங்கிலத்தைப் போலவே பேசுவார், எழுதுவார். அபாரமான நினைவாற்றல் அவரிடம் இருந்தது. ஆகவே பல சொற்களை அறிமுகம் செய்துகொள்ளும் சொல்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் செய்தேன். அதன்மூலம் தன் சொல்வளத்தை விரைந்து பெருக்கிக்கொண்டார். பிறகு தமிழ் என்றாலே மனப்பாடம் செய்து எழுதுவது என்றிருந்த அவரது அணுகுமுறை மாறியது. தமிழ்த் தேர்வில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண் பெற்றார்.
எங்கள் பள்ளியின் ‘இமயம்’ போட்டி தமிழில்பேசக் கூச்சப்படுவோருக்கு உதவியுள்ளது. கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் பயிற்சி இருந்தால் போதும். ஆசிரியப்பணி அறப்பணி மட்டுமின்றி அயராத பணியும்கூட. என்றாவது ஒரு மாணவர் வந்து தமிழில் அவருடைய திறன் மேம்பட்டதற்குக் காரணமாக நம்மைச் சொல்லி நன்றி தெரிவிக்கும்போது பட்ட பாடெல்லாம் பறந்துவிடும். மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றி.

-அனுராதா வெங்கடேஸ்வரன், என்பிஎஸ் (NPS) அனைத்துலகப் பள்ளி

தெளிவான நோக்கம், குன்றாத ஆர்வம், விடாப்பிடியான பொறுமை

கேடில்லாத செல்வமான கல்வியை அளிக்கும் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்க வேண்டும் என்பது என்னுடைய இலக்காக இருந்தது. அதற்கேற்ப ஆசிரியப் பணியின் ஆரம்பக்கட்டத்தில் எனக்குக் கற்பித்தல் வழியாகக் கிடைத்த நற்பெயர் மனநிறைவையும் அளித்தது. ஆனால், காலம் செல்லச்செல்ல எனக்குள் பல கேள்விகள் எழத் தொடங்கின. அக்கேள்விகள் நான் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்த காரணங்களை மறுபடியும் ஆழமாகச் சிந்திக்க வைத்தன. அச்சிந்தனை ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

எளிதாக அடையக்கூடிய வெற்றிகள் வெகுவிரைவில் ஒருவித நிறைவை அளித்துவிடக்கூடியவை. ஆகவே என் பணியில் மேம்பாட்டைத் தொடர்ந்து வளர்க்க வேண்டுமானால் தெளிவான நோக்கம், குன்றாத ஆர்வம், விடாப்பிடியான பொறுமை ஆகிய மூன்று முக்கியக் கூறுகளை மனதில் நிறுத்துவது அவசியம் எனக் கண்டுகொண்டேன். தமிழ் எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் இயலாமல் சிரமப்பட்ட மாணவர் ஒருவரைத் தமிழ்மொழி ஆதரவுத் திட்டத்தின் (MTSP) வழியாகப் படிப்படியாக முன்னேற்றியபோது அக்கூறுகள் மிகவும் உதவின. தமிழ்ப் பாடத்துடன் அவற்றையும் மாணவர்களுக்கு கற்பிக்க முயன்றுவருகிறேன்.

இந்த அணுகுமுறையின் பலனை உடனடியாக அளவிடமுடியாது என்றாலும் காலப்போக்கில் மாற்றங்கள் உண்டாகக்கூடும் என அனுபவத்தின்மூலம் உறுதியாக நம்புகிறேன். தமிழ்த் தேர்வுகளில் தேர்ச்சி பெறும்போது மாணவர்களின் முகங்களில் தோன்றும் மகிழ்ச்சிக்கும் நன்றிப் பெருக்கிற்கும் ஈடே இல்லை. ஆசிரியர் பணியில் உடனடியாகக் கிடைக்கும் ஒரு நிறைவு என்றால் அதுதான். மற்ற மாற்றங்களுக்குப் பல்லாண்டுகள் காத்திருக்கத் தயாராகவேண்டும்.

-பீ. ரேகா டிருக்சீ, லியன்ஹுவா (Lianhua) தொடக்கப்பள்ளி

மொழிநுட்பம் கற்பிக்க உதவிய தொழில்நுட்பம்

பல்லாண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் நான் தொடக்கத்தில் வழக்கமான முறையில் தமிழ்ப் பாடம் கற்றுக்கொடுத்தேன். மேலும் மாணவர்கள் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சிபெறப் பல உத்திமுறைகளைக் கையாண்டேன். மாணவர்களும் சிறப்பான மதிப்பெண் பெற்றுத் தேறினார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமிழைக் கற்றார்களா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அக்கேள்விக்கு விடைகாண மாணவர்களை உற்றுநோக்கத் தொடங்கினேன். அவர்களிடம் ஒரு கருத்தாய்வும் செய்தேன். அவர்களின் கருத்துகள் என் கற்பித்தல் அணுகுமுறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இக்கால மாணவர்கள் தொழில்நுட்ப யுகத்தில் பிறந்துவளர்ந்தவர்கள் என்பதால் தொழில்நுட்பத்தில் இயல்பாகவே அதிக ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவர்கள். ஆகவே தொழில்நுட்பத்தை என் கற்பித்தலில் பயன்படுத்த முடிவுசெய்தேன். என் பாடவேளைகளின்போது ‘கற்றல் நிலையங்களை’ உருவாக்கினேன். ஒவ்வொரு நிலையத்திலுள்ள நடவடிக்கையிலும் 15 நிமிடங்களுக்கு ஈடுபட்டு ஒரு குறிபிட்ட திறனையோ மொழி ஆற்றலையோ கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பச் செயலிகளான ‘வோர்ட்வால்’, ‘ கஹூட்’ , ‘புளூக்கட்’ (Wordwall, Kahoot, Blooket) போன்றவற்றைப் பயன்படுத்தி மொழிசர்ந்த இணைய விளையாட்டுகளை உருவாக்கி அவற்றை சுவாரஸ்யமான நடவடிக்கைகளாக மாற்றினேன். ஒரே பாடவேளையில் வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவை மாணவர்களுக்குப் புது அனுபவமாகவும் மகிழ்வூட்டும் கற்றலாகவும் அமைந்தன.

மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது. ஓர் ஆசிரியர் தம்முடைய மாணவர்களுக்கு ஏற்பத் தம் கற்பித்தல் உத்திகளைத் தொடர்ந்து மாற்றி அமைக்கும்போதுதான் வகுப்பில் ஆர்வமூட்டும் கற்பித்தலும் ஈடுபாடுள்ள கற்றலும் நிகழும். தொழில்நுட்பத்தைப் பயிற்றுக் கருவியாகப் பயன்படுத்தி ஆர்வமூட்டும் வகையில் கற்பித்தது 2021இல் எனக்கு நல்லாசிரியர் விருதைப் பெற்றுத்தந்தது.

-யோகேஸ்வரி பாலசுப்பிரமணியன், பொங்கோல் உயர்நிலைப் பள்ளி