தொழில்வெற்றிக்குத் தேவை துணிவும் முனைப்புமே!

நித்திஷ் செந்தூர்

ஜெமினி அச்சகம் காந்தி தேவி நேர்காணல்

சிங்கப்பூர்த் தமிழ் அச்சகத் துறையில் பெண்களைப் பார்ப்பது மிகவும் அரிது. அதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்து வருகிறார் காந்தி தேவி வடிவேலு. ‘ஜெமினி’ அச்சகத்தை 37 ஆண்டுகளாக நடத்திவரும் காந்தி, ஒரு பெண்மணியாக அச்சகத் துறையில் கால்பதித்து சாதித்துள்ளார். அவரிடம் அச்சகத் துறை ஈடுபாடு, சவால்கள், சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் விரிவான உரையாடலை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நிகழ்த்தியது.

சொந்தத் தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆர்வம் எப்போது வந்தது

பெலஸ்தியர் பெண்கள் பள்ளியில் பயின்றபோது, நான் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தேன். எனது வட்டாரத்தில் வசித்த மாணவர்கள் சிலர் கல்வியில் சிரமத்தை எதிர்நோக்கினர். அவர்களுக்கு இலவசமாகத் துணைப்பாட வகுப்புகளை நடத்தினேன். அப்போது மிகுந்த துடிப்புடன் இருப்பேன். உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது, துணைப்பாட வகுப்புகளைத் தன்னுரிமைத் தொழிலாக (freelance) நடத்தினேன். அப்போதுதான் எனது தொழில்முனைப்பு துளிர்விடத் தொடங்கியது எனலாம்.

அச்சகத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

இயற்கையாகவே எனக்குக் கலைகளின்மீது பேரார்வம் இருந்தது. அதன் காரணமாக ரெக்ஸ் வர்த்தகப் பள்ளியில் (Rex Commercial School) சேர்ந்தேன். அப்போது எனக்கு 17 வயதுதான். அங்குத் தட்டச்சு செய்தல் (typewriting), தட்டச்சு அமைத்தல் (typesetting), சுருக்கெழுத்து (shorthand) முதலியவற்றைக் கற்றுக்கொண்டேன். அப்போது அப்பள்ளியின் உரிமையாளர் எனது திறன்களைப் பார்த்து, ‘VGK Press’ எனப்படும் அவரது அச்சகத்தில் பணியாற்ற அழைப்பு விடுத்தார். நானும் உற்சாகத்துடன் அங்கு போனேன். பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அங்கிருந்து எனது அச்சகத்துறைப் பயணம் ஆரம்பித்தது.

எந்தெந்த அச்சகங்களில் பணியாற்றி உள்ளீர்கள்?

‘VGK Press’ அச்சகத்திற்குப் பிறகு ‘கேசவா’ அச்சகத்தில் பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது 20. இவ்விரு இடங்களில்தான் அச்சகத் தொழில் குறித்த அம்சங்களையும் நுட்பங்களையும் அதிகமாக அறிந்துகொண்டேன். கேசவா அச்சகத்தின் தொழில் நலிவடைந்ததால் அதன் உரிமையாளர் நிறுவனத்தை ‘Stamford Press’க்கு விற்றார். அங்கும் நான் பணியாற்றினேன். அதனைத் தவிர்த்து ‘National Printers’ எனும் அச்சகத்தில் வேலை பார்த்த அனுபவமும் உள்ளது.

‘தமிழ்த் தூதன்’ எனும் இதழ் அக்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்தது. அதற்கான வரைகலை வடிவமைப்புப் பணிகளை (graphic designing) நான் செய்து வந்தேன். ‘Longman Publishing’ நிறுவனத்திலும் வரைகலை வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டேன். அக்காலத்தில் ‘IBM Word Processor’ கணினியைக் கொண்டுதான், தட்டச்சு, வடிவமைப்பு, வரைகலை முதலிய அச்சகப் பணிகள் செய்யப்பட்டன.

சொந்த நிறுவனம் தொடங்கும் எண்ணம் உதயமானது எப்போது?

அச்சகத் தொழிலுக்கான திறன்களைக் கற்கும் ஆர்வத்திற்கு என்னிடம் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. மேலும் பல்வேறு அச்சகங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு அத்தொழிலின் நுணுக்கமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. எனவே அனுபவத்தையே முதலீடாக வைத்து, 1986ஆம் ஆண்டில் நான் ‘காந்தி அச்சகம்’ (Ganthi Printing Service) எனும் நிறுவனத்தை சிராங்கூன் பிளாசாவில் தொடங்கினேன். அப்போது என் நிறுவனத்தில் ஒருவர் மட்டுமே வேலை செய்தார். சொந்த நிறுவனத்தை 28 வயதில் ஆரம்பித்த தருணம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

‘காந்தி அச்சகம்’ எப்படி ‘ஜெமினி அச்சகமாக’ மாறியது?

முதலில் ‘காந்தி அச்சகம்’ என எனது பெயரில்தான் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. பிறகு 1999ஆம் ஆண்டில் ‘ ஜெமினி அச்சகம்’ (Sri Gemini Printers Pte Ltd) என எனது ராசியின் பெயரில் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆனால் ‘’ என்ற எழுத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

பல்வேறு அச்சகங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு அத்தொழிலின் நுணுக்கமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.

சிலர் அச்சகத்தைக் கோவில் அல்லது வழிபாட்டுத் தலம் எனக் கருதி நாடி வந்தனர். குழப்பத்தைக் களைய ‘’ எழுத்தை நீக்கிவிட முடிவுசெய்தோம். அப்படித்தான் 2006ஆம் ஆண்டு முதல் இன்று வரை ‘ஜெமினி அச்சகம்’ (Gemini Graphics & Printings Pte Ltd) எனும் பெயரில் நிறுவனம் இயங்கிவருகிறது.

தொழிலில் என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள்?

வாடகை அதிகமாக இருந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, 1986ஆம் ஆண்டில், 1000 வெள்ளி வாடகையாகத் தரவேண்டியிருந்தது. அலுவலகம் சிராங்கூன் பிளாசாவில் இருந்தது. ஆனால் அச்சடிக்கும் பணி எல்லாம், தோ பாயோவில் இருந்த சீன அச்சகம் ஒன்றில் நடைபெற்றது. ஆஃப்செட் பிரிண்டிங் (offset printing) சேவையை அலுவலகத்திலிருந்து செய்யமுடியாத காரணத்தால் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டியிருந்தது.

மாறிமாறிப் பல இடங்களுக்குச் செல்வது சிரமமாக இருந்தது. வாகன உரிமச் சான்றிதழைப் பெறப் பல தடவை முயற்சி செய்தபோதிலும், பலன் கிடைக்கவில்லை. எனவே டாக்ஸி மூலம்தான் ஒவ்வோர் இடத்திற்கும் சென்றேன். கனமான பொருள்களைத் தூக்கிக்கொண்டு செல்வது சுலபமல்ல.

அதுமட்டுமின்றி, அச்சகத்தின் அலுவலகமும் அவ்வப்போது இடம் மாறிக்கொண்டே இருந்தது. சிராங்கூன் பிளாசாவில் 1986ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை இருந்தேன். அதன்பிறகு அலுவலகம் சையது ஆல்வி ரோட்டுக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1999ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில், அலுவலகம் பெலிலியோஸ் லேனுக்கு மாற்றப்பட்டது. இறுதியாக 2006ஆம் ஆண்டில் தற்போது அமைந்துள்ள புளோக் 668, சண்டர் ரோட்டுக்கு அலுவலகம் இடம் மாறியது. ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும், தளவாடங்கள், கணினிகள், காகிதங்கள், திருமண அட்டைகள் முதலியவற்றை எடுத்துகொண்டு போவது சிரமத்திலும் சிரமம். தற்போது அலுவலகம் அமைத்துள்ள இடத்திற்கான புதுப்பிப்புப் பணிகளுக்கு ஆக அதிகப் பொருட்செலவு ஆனது.

நிதிச் சுமையைச் சமாளிக்கப் பங்காளிகள் (partners) என்னுடன் இணைந்தனர். தற்போது ஒருவர் மட்டும் பங்காளியாக இருந்துவருகிறார். ஊழியர் பற்றாக்குறை, விளம்பரப்படுத்துவதில் சிரமம் ஆகிய சவால்களும் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. வெளிநாட்டினரை வேலைக்கு வைத்தால் தீர்வை செலுத்தவேண்டும். தீர்வை மட்டுமின்றி, கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாட்டினர் சிங்கப்பூருக்குள் நுழைவது மிகச் சிரமமாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடி நேரங்களில், உள்ளுர்வாசிகளைப் பணியமர்த்துவதுதான் ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தினாலும் நான் சிங்கப்பூரர்களே மட்டுமே வேலைக்குச் சேர்த்தேன். தற்போது மூன்று பெண்கள் இங்கு வேலை செய்கின்றனர்.

கொவிட் காலகட்டம்…

கொவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பல தொழில்கள் முடங்கிப்போயின; சில மறைந்துபோயின. ஆனால் எனக்கோ நிலைமை தலைகீழாக இருந்தது. கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் (Circuit Breaker) அறிவிக்கப்பட்டபோது, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் எனது அச்சகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் எல்லா அச்சகங்களும் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. சிராங்கூன் ரோடு பகுதியில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருந்தகங்களின் அருகில் எனது நிறுவனம் அமைந்திருப்பதால் அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்பது எனது கணிப்பு.

சிங்கப்பூர்வாசிகள் அச்சக சேவைகளுக்கு மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்ல முடியாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் என்னை நாடி வந்தனர். குறைந்த எண்ணிக்கையில் தேவையானவற்றை மட்டும் அவர்கள் அச்சிட்டபோதிலும் வாடிக்கையாளர்கள் பெருகினர். வியாபாரமும் நன்றாக இருந்தது. கொவிட் காலகட்டத்தில் திருமணங்களும் நடைபெற்றன. பத்து, இருபது அழைப்பிதழ்களை அச்சிடக் கோரிய வாடிக்கையாளர்களையும் நான் கைவிடவில்லை.

சொந்த அச்சிடும் இயந்திரங்களை வைத்திருக்கிறீர்களா?

கேலாங் பாருவில் 1990களில் சொந்த அச்சிடும் இயந்திரங்களை வைத்திருந்தேன். ஆஃப்செட் பிரிண்டிங் சேவைக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் பொறிகளும் என்னிடம் இருந்தன. சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இயந்திரங்களை 30,000 வெள்ளிக்கு வாங்கினேன். அரசாங்கம் அவ்விடத்தைக் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இயந்திரங்களை மிகக் குறைந்த விலைக்கு ஒரு மலேசிய நிறுவனத்திடம் விற்றுவிட்டேன். தற்போது என்னிடம் சொந்த அச்சிடும் இயந்திரங்கள் இல்லை.

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் எனது அச்சகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

எவ்விதமான அச்சிடும் பணிகளை மேற்கொள்கிறீர்கள்?

நூல்கள், இதழ்கள், நிகழ்ச்சி நிரல்கள், துணைப்பாட நூல்கள், கட்டுரை தொகுப்பு ஏடுகள், திருக்குட நன்னீராட்டு விழா மலர்கள், நினைவுப் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், அர்ச்சனைச் சீட்டுகள், பெயர் அட்டைகள் முதலியவற்றை அச்சிட்டுத் தருகிறோம். கணிசமான அளவில் திருமண அழைப்பிதழ்களையும் அச்சிட்டுள்ளோம். கடந்த 37 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அழைப்பிதழ்களை அச்சிட்டுள்ளோம்.

மற்றவர்களுக்குப் புத்தகங்களை அச்சிட்டுத் தரும் நீங்கள், சொந்தமாகவே நூல்களைத் தயாரித்து வெளியிட்டது உண்டா?

உண்டு. இந்தியத் திருமணங்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், முறைகள் முதலியவைக் குறித்த தகவல்கள் அடங்கிய ‘Nuptial Bliss’ எனும் நூலை 2006ஆம் ஆண்டில் வெளியிட்டோம். அதில், ஏன் திருமணம் செய்கிறோம், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி, திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பது எப்படி முதலிய பல தலைப்புகளில் கட்டுரைகளைக் காணலாம். திருமணத்தைக் குறித்த வழிகாட்டி நூலாக அது திகழ்ந்தது. மேலும் திருமணம் தொடர்பான சேவைகளை வழங்குவோரின் விவரங்களும் அதில் அங்கம் வகித்தன.

மின்னிலக்க முறையில் செய்யமுடியும் என்பதால் அவற்றுக்கான தேவை சரிந்துவிட்டது. கோவில்களுக்கு அச்சிட்டுத் தரப்பட்ட அர்ச்சனை சீட்டுகளுக்கும் அதே கதி.

ஈராண்டு உழைப்பில் உதயமான இந்நூல் சுமார் 10,000 பிரதிகள் வெளியிடப்பட்டன. புதுத் தம்பதிகளுக்கும் பொதுமக்களுக்கும் நூலை இலவசமாக வழங்கினோம். அதன்மூலம் எங்கள் நிறுவனத்தின் பெயரும் பல இடங்களுக்குச் சென்றது. வாடிக்கையாளர்களும் கூடினர். இந்தியச் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பை இந்நூல் பெற்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி அச்சகத் துறையையும் உங்கள் தொழிலையும் பாதித்துள்ளதா?

கண்டிப்பாகப் பாதித்துள்ளது. முன்பெல்லாம் வர்த்தக வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் விலைப் பட்டியல் புத்தகங்களையும் பொருள் விவரப்பட்டியல் புத்தகங்களையும் (invoices) அச்சிட என்னை நாடி வருவார்கள். தற்போது அது 50 விழுக்காடு குறைந்துவிட்டது. எல்லாம் கணினியில் மின்னிலக்க முறையில் செய்யமுடியும் என்பதால் அவற்றுக்கான தேவை சரிந்துவிட்டது. கோவில்களுக்கு அச்சிட்டுத் தரப்பட்ட அர்ச்சனை சீட்டுகளுக்கும் அதே கதி.

திருமண மின்-அழைப்பிதழ்கள் தற்போது பிரபலம் அடைந்துவருகின்றன. திருமண அழைப்பிதழ்களை அச்சிடும் எண்ணிக்கையை அது ஓரளவு குறைத்துள்ளது என்றாலும் இன்னும் அழைப்பிதழ்களை அச்சிதழ்களாக வெளியிடும் வழக்கத்தை அது அதிகம் பாதிக்கவில்லை. என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் பாரம்பரியத்திற்கு நிச்சயம் தனி இடம் உண்டு. பெரியவர்களும் மின்-அழைப்பிதழ்களைவிட பாரம்பரியமான அச்சு அழைப்பிதழ்களையே விரும்புகின்றனர்.

அச்சிடும் செலவு எவ்வளவு உயர்ந்தது?

சுமார் 40 ஆண்டுகளில் செலவுகள் மும்மடங்கு உயர்ந்துள்ளன. காகிதத்தின் விலை, ஊழியர்களுக்கான சம்பளம், வாடகை முதலிய காரணங்களால் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளது.

அச்சகத் துறையின் பொற்காலம்…

என்னைப் பொறுத்தவரை 2010ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தை என் தொழிலின் பொற்காலம் என்பேன். அந்தக் காலகட்டத்தில் கல்வியமைச்சுக்கு நிறைய நூல்களை அச்சிட்டுக் கொடுத்தோம். தொடக்கநிலை மாணவர் படைப்புகளின் தொகுப்பு நூலான ‘வானவில்’, ‘பரிசு பெற்ற சிறுகதைகளும் கட்டுரைகளும்’ முதலியவை அவற்றுள் சில. அந்நூல்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன.

உள்ளூரில் அச்சிடப்படும் புத்தகங்களுக்கு ஏதும் தனித்துவம் இருக்கிறதா?

உள்ளூரில் பெரும்பாலான புத்தகங்கள் ஜப்பானியக் கலைக் காகிதம் (Japanese Art Paper) கொண்டு அச்சிடப்படுகின்றன. பக்கங்கள் பளபளப்பாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பளபளப்புத் தன்மையை (glossy) அக்காகிதம் வழங்குகிறது. அதுபோக ‘UV Spot’, ‘Embossing’ ஆகிய அம்சங்களையும் பரவலாகப் பார்க்க முடியும். விரல்களை வைத்து தொட்டுப் பார்க்கும்போது, அவ்விடம் சற்றுத் தடித்து முப்பரிமாணத்தில் இருப்பதை உணரலாம். அதேநேரத்தில், பிரகாசமாகவும் இருக்கும்.

உழைப்பையும் நேரத்தையும் நேர்த்தியாகப் போடும்போது, அதன்மேல் பிடிமானம் ஏற்படும். ஆரம்பத்திலேயே ஒரு தொழிலிருந்து மற்றொரு தொழிலுக்குத் தாவக் கூடாது.

பக்கபலமாக இருந்தவர்கள்…

எனது பயணத்தில் பக்கபலமாக இருந்தவர் என் அண்ணன் மகன் காந்த். வரைகலையிலும் மொழிபெயர்ப்புப் பணியிலும் கைதேர்ந்தவர். கணவர் குணசேகரனின் ஆதரவும் குடும்ப உறுப்பினர்களின் உறுதுணையும் எனக்குப் பூரணமாக இருந்தது. எனது சகோதரி ஜமுனா பல்லாண்டுக் காலமாக எனக்கு உதவி வருகிறார். மூத்த வரைகலை வடிவமைப்பாளராக 13 ஆண்டுகளாய்ப் பணியாற்றி வரும் செல்வியை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

எதிர்காலத் திட்டங்கள்…

விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளோம். தற்போது ‘Gemini_Printers_Singapore’ எனும் டிக்டாக் (TikTok) பக்கத்தை ஆரம்பித்துள்ளோம். புதிய வடிவமைப்பில் வந்துள்ள பல திருமண அழைப்பிதழ்களைக் காணொளிகளாக அங்கு நீங்கள் காணலாம். இளையர்களை எங்கள் விளம்பர முயற்சிகள் ஈர்க்கும் என நம்புகிறோம்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

பெண்கள் தொழில்முனைப்பைக் கையில் எடுக்கவேண்டும். சும்மா வீட்டில் முடங்கிப்போய் இல்லாமல், வியாபாரத்தில் எப்படி இறங்கலாம் என்பதைச் சிந்திக்கவேண்டும். அது சிறு அளவில் இருந்தாலும் பரவயில்லை. ஆனால் முதல் அடியைத் துணிந்து அவர்கள் எடுத்து வைக்கவேண்டும். தொழிலுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பணம் அல்ல, துணிவும் தொழில்முனைப்பும் தான்.

இருப்பதைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக முடிவுசெய்யவேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்த பிறகு, அதில் உழைப்பையும் நேரத்தையும் நேர்த்தியாகப் போடும்போது, அதன்மேல் பிடிமானம் ஏற்படும். ஆரம்பத்திலேயே ஒரு தொழிலிருந்து மற்றொரு தொழிலுக்குத் தாவக் கூடாது. காலப்போக்கில் நீங்கள் ஆரம்பித்த தொழிலில் கொடிகட்டிப் பறப்பீர்கள். அந்த நிலையை அடைந்த பிறகு, தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கலாம்.
தலைமைத்துவப் பொறுப்புகளிலும் மகளிர் மேலோங்கி மிளிரவேண்டும்!