காணாமற்போன கள்ள மருதாணி

0
456

மலாய்-முஸ்லிம் திருமணங்களில் பாரம்பரியம் அடையும் பரிணாமம்

ஜமால் சேக்
அஸ்ரினா தநூரி,

பாரம்பரியங்களும் சம்பிரதாயங்களும் காலந்தோறும் மாறுகின்றன. மலாய்-முஸ்லிம் திருமணங்களும் அவ்விதிக்கு விலக்கல்ல. மணமகன் வருகையைப் பறைசாற்றும் கைக்கடக்கமான கொம்பாங் (kompang) தப்பில் எழும் தாளலயம், மகிழ்ச்சியில் பூரிக்கும் மணமகள், உற்சாகமான விருந்தோம்பல் வரவேற்பொலிகள் இவையெல்லாம் கலவையாக ஓரிடத்தில் இணைகிறதென்றால் அங்கு ஒரு பாரம்பரிய மலாய்த் திருமணம் நடக்கிறது என்று அர்த்தம்.

நாத்யா சுராடி

ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பைத் துடிப்புமிக்கதாகவும் வண்ணமயமாகவும் ஆக்குவதில் மலாய்த் திருமணங்களுக்கு நிகரில்லை. திருமண நாளில் மணமக்களுக்கு ராஜோபசாரம் நடக்கும். அன்று ஒருநாள் மணமக்கள்தாம் உற்றார் உறவினர் அனைவருக்கும் ராஜா ராணி.

மேலோட்டமாக மரபார்ந்ததாகத் தோன்றினாலும், கடந்த சில தசாப்தங்களில் மலாய்த் திருமணச் சம்பிரதாயங்கள் கணிசமாக மாறியிருக்கின்றன. சமகாலச் செல்நெறிகளுக்கும் நவீனப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாகப் பல மலாய்ச் சமூகச் சம்பிரதாயங்கள் மாறிவருவதன் ஒருபகுதியே திருமண வழக்கங்களில் காணப்படும் மாற்றங்கள் என்று குறிப்பிடுகிறார், எழுத்தாளரும் மலாய்ப் பண்பாட்டு ஆய்வாளருமான முகம்மது ஆரிஃப் அகமது.

மேலோட்டமாக மரபார்ந்ததாகத் தோன்றினாலும், கடந்த சில தசாப்தங்களில் மலாய்த் திருமணச் சம்பிரதாயங்கள் கணிசமாக மாறியிருக்கின்றன.

கம்பத்து (kampong) வாழ்விலிருந்து நகர வாழ்க்கைச் சூழலுக்கு மாறவேண்டியிருந்தது, பல்பண்பாட்டுச் சமூகத்துடன் கலந்துறவாடி வாழவேண்டியிருந்தது ஆகிய இரு காரணிகளும் பழைய மலாய் வழக்கங்கள் தற்போது கடைப்பிடிக்கப்படும் நிலைகளுக்குப் படிப்படியாக மாற்றம் அடைய வழிவகுத்தன என்கிறார் அவர்.

கம்பத்து வாழ்க்கைச் சூழலிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புப் பேட்டைகளுக்குக் குடியேற்றிய நகரமயமாக்கல்தான் இத்தகைய மாற்றங்களுக்கு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. மலாய்த் திருமணங்களில் விஞ்சி நிற்கும் தாமாக முன்வந்து உதவும் மனப்பான்மையும் (gotong royong), வலிமா (walimah) திருமண விருந்துச் சம்பிரதாயங்களும் அதுசார்ந்த விரிவான முன்னேற்பாடுகளும் மலாய்ச் சமூகம் கம்பத்திலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் நுழைந்தபோது மெல்லத் தேய்ந்துவிட்டன. மேலும், இஸ்லாத்திற்கு ஏற்புடைய நடைமுறை குறித்து அதிகரித்துவரும் விழிப்புணர்வால் சில பழக்கவழக்கங்களும் சடங்குகளும் இஸ்லாம் அல்லாதவை எனக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டன.

காலத்திற்கேற்ற மாற்றம்

மலாய்த் திருமணத்தில் கொம்பாங் தப்புகள் இசைக்கப்படும் ஒரு பெர்சான்டிங் நிகழ்வு, 2017

மலாய்த் திருமணங்கள் இஸ்லாமிய வழக்கங்களையும் மலாய்ப் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருங்கிணைக்கின்றன. இன்று சிங்கப்பூரில் நடக்கும் மலாய் முஸ்லிம் திருமணங்களில் நிக்காஹ் (nikah) திருமண நிகழ்வும், வலிமா வரவேற்பு விருந்தும், பெர்சான்டிங் (bersanding) ஆசிபெறும் சடங்கும், பெர்தான்டாங் (bertandang) பெண்ணழைப்பும் தவறாமல் இடம்பெறுகின்றன. ஆயினும் கடந்த 50, 60 ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக அவை மாற்றம் அடைந்துள்ளன.

மேற்கண்டவற்றில், நிக்காஹ் மட்டுமே சமயக்கடமையாக இஸ்லாத்தில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக வலிமா, பெர்சான்டிங்குக்கு முந்தைய தினம் நிக்காஹ் நடக்கும். மணமகளின் இல்லத்திலோ வரவேற்பு நிகழ்விலோ நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்டு, தொக் காடி (tok kadi) எனப்படும் அதிகாரபூர்வமாக இஸ்லாமியச் சமயத் திருமணம் செய்விப்பவரின் மேற்பார்வையில் திருமண நிகழ்வுகள் நடந்தேறும். அவர் திருமணச் சான்றிதழையும் வழங்குவார்.

கம்பத்துக் காலத்திய தாமாக முன்வந்து உதவும் மனப்பான்மை பொதுக் குடியிருப்புக்கு நகர்ந்ததில் மங்கிவிட்டது.
பன்னீர் தெளித்து, அட்சதை தூவி, மருதாணி தொட்டுவைக்கும் ஆசீர்வாத நலுங்குச் சடங்கின் ஒரு பகுதி, 2009.

திருமணத்தின்போது டுலாங் ஹந்தாரான் (dulang hantaran) எனப்படும் பரிசுத்தட்டு கொடுக்கும் வழக்கம் உண்டு. டுவிட் ஹந்தாரான் (duit hantaran) எனப்படும் ரொக்கமும், மாஸ் காவின் அல்லது மஹர் (mas kahwin or mahar) எனப்படும் தங்க ஆபரணமும் மணமகளுக்குப் பரிசாக மணமகனால் வழங்கப்படும். மணமகன் மணமகளுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் வழக்கம், கணவன் தன் மனைவியிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய புது வாழ்க்கை தொடங்குவதைக் குறிக்கும்.

கொம்பாங் இசைக்கேற்ப மாப்பிள்ளையின் முன் சிலாட் தற்காப்புக்கலை விளையாட்டுகள் நிகழ்த்தப்படும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

ஒருகாலத்தில் திருமணத்திற்குப்பிறகு மணமகளுக்கு மஹர் கொடுப்பது வழக்கம். தன் திருமணத்தின்போது மனைவியிடம் மஹர் தொகையான 22.50 வெள்ளியைக் கடன்சொல்லிப் பின்னரே கொடுத்ததாக நினைவுகூர்கிறார், 1941ல் திருமணம் செய்து கொண்ட பயிற்சி ஆசிரியர் முகமது அமின் பின் அப்துல் வஹாப். அவரது திருமணச் செலவே 150 வெள்ளிதானாம்! இன்று குறைந்தது 100 வெள்ளி மஹர் எதிர்பார்க்கப்படுகிறது. முழுத்தொகையையும் முன்கூட்டியே கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. மணமகன் ரொக்கத்திற்குப் பதிலாகத் தங்கமோ ஆபரணங்களோ அளிக்கலாம்.

மணமகள் வீட்டாருக்கு மணமகனால் தரப்படும் டுவிட் ஹந்தாரான் பரிசத்தொகை 1960களில் 500லிருந்து 1,000 வெள்ளிவரை இருந்தது. திருமணத்திற்கு முன்பே திருமணச் செலவுகளுக்காக வழங்கப்படும் இத்தொகை, 1980களில் திருமணங்களில் மிக முக்கியத்துவம் பெற்றது. தற்காலத்தில் 8,000 முதல் 20,000 வெள்ளிவரை வசதிக்குத்தக்கபடி அளிக்கப்படுகிறது. தொகையின் அளவு மணமகளின் படிப்பிற்கேற்றபடியும் கூடும்.

கூடுதலாகப் படித்த மணமகளுக்கு அதிகமான பரிசத்தொகை கொடுத்தாக வேண்டும். இத்தொகை வழக்கமாக முன்கூட்டியே பேசி முடிவு செய்யப்படுகிறது.

நிக்காஹ்வின்போது மணமகன் மணமகளுக்குப் பரிசுகள் வழங்குவது வழமை. முன்பெல்லாம் துணிமணிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மலாய் கேக்குகள், இனிப்புகளும் பரிசாக வழங்கப்பட்டன. இப்பரிசுகள் அன்னப்பறவை, பூக்கள் வடிவங்களில் வண்ணத் துணிமடிப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பொதிகளில் வழங்கப்பட்டன. தற்போது நகைகள்,கடிகாரங்கள், காலணிகள், கைப்பைகள், ஒப்பனைப் பொருள்கள், மின்னணுச் சாதனங்கள் எனப் பரிசுகளும் நவீனமயமாகிவிட்டன. வசதிபடைத்த மணமக்கள் சிலர் தங்களுக்குள் மோட்டார்சைக்கிள், கார் போன்ற விலையுயர்ந்த பொருள்களையும் பரிசாக வழங்கிக்கொள்கிறார்கள்.

பாரம்பரிய நாசி பிரியாணி, புதிதாக பஃபே முறை

ஒரு மலாய்த் திருமணம் (1960). மூங்கில் கழிகளின்மீது அமைக்கப்பட்ட பிரம்பு இருக்கையில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் அமர, மணமகளின் உறவினர்கள் அவர்களை ஊர்வலமாகச் சுமந்து வருகின்றனர்

வலிமா விருந்தும் மணமேடையில் மணமக்கள் உறவினர்களிடம் ஆசிகள் பெறும் பெர்சான்டிங் சடங்கும் மலாய்த் திருமணத்தின் உச்ச நிகழ்வுகள் எனலாம். நிக்காஹுக்கு மறுநாள் நடக்கும் வலிமா விருந்து பொதுவாகக் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடக்கும். சில நூறிலிருந்து ஆயிரம் பேர் வரை கூட வலிமா விருந்திற்குக் கூடுவார்கள். விருந்தில் நெய்ச்சோறோ நாசி பிரியாணியோ பலவகைப் பதார்த்தங்களுடன் பரிமாறப்படும். முன்பு 1950கள்வரை பெரும்பாலான மலாய்ச்சமூகம் கம்பத்து வாழ்க்கை வாழ்ந்தபோது வலிமா, பெர்சான்டிங் இரண்டும் கம்பங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் நடைபெற்றன.

அன்று ஒரு வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு ஊரே கூடி வேலை செய்தார்கள். கடின வேலைகளான வீட்டிற்கு வண்ணம் பூசுதல், மரவேலை செய்தல் போன்றவற்றை ஆண்களும் வீட்டை அலங்கரிப்பது, பனையோலை, வாழையிலைத் தோரணங்கள் கட்டுவது என்று பெண்களுக்கும் வேலை இருக்கும். ஆண் பெண் என்று அனைவரும் ஒன்றாகக்கூடி சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்து திருமண விருந்து தயாராகும்.

கம்போங் கிளாமில் 1920களில் திருமணம் செய்துகொண்ட அபு தாலிப் பின் அலி தனது திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மூன்று நான்கு நாளுக்கு முன்பே திருமணத்திற்காகச் சொந்தபந்தங்கள் வந்து விடுவார்கள். எல்லோரும் ஆளுக்கொரு வேலையைத் தாங்களே முன்வந்து செய்வார்கள். அப்போதெல்லாம் தனியாகச் சமையலுக்கென்று ஆள் வைப்பது கிடையாது. கூட்டாகச் சேர்ந்து அனைவரும் சமையல் வேலையில் ஈடுபட்டு மூன்று நாட்களுக்கு விருந்துகள் நடக்கும்.” என்றார்.

பாரம்பரிய மக்கான் பெர்ஹிடாங் (makan berhidang) முறைப்படி ஒரு மேசையில் மூன்று, நான்கு பேருக்குப் போதுமான உணவு பரிமாறப்படும். கென்டாராட் (kendarat) என்ற பணியாளர் உணவு, பானங்கள், கைகழுவ நீர் என அனைத்தையும் மேசைகளுக்குக் கொண்டுவருவார். குடும்ப அங்கத்தினர்களும் நட்புகளும் தாமாக முன்வந்து விருந்தினர்களை உபசரிப்பர்.

இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டது என்கிறார் எழுத்தாளர் அலிமான் பின் ஹாசன். “பொதுவாகக் கம்பத்து வாழ்வில் ஒவ்வொரும் தம்மை நண்பர்களாக அல்லாமல் நெருங்கிய சொந்தமாகவே கருதிக்கொள்வர். அதனால் திருமணமென்று வரும்போது எந்த வேறுபாடும் இல்லாமல், வெங்காயம் உரிப்பதுமுதல் மிளகாய் நறுக்குவதுவரை அனைத்து வேலைகளையும் தமது வீட்டுத் திருமணம்போல் இழுத்துப்போட்டு செய்வர். இப்போது காலம் மாறிவிட்டது. அனைவரும் வேலை, படிப்பு எனப் பரபரப்பாக உள்ளனர். அவர்களுக்குத் திருமண வேலைகளுக்கு உதவ அவகாசமில்லை” என்கிறார்.

அரசாங்கம் 1960களிலிருந்து மக்களைப் பொதுக் குடியிருப்புப் பேட்டைகளில் குடியேற்றத் தொடங்கிய பிறகு கம்பத்து வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது வீவக வீடுகளின் வெற்றுத்தளங்களில் மலாய்த் திருமண விருந்துகள் நடக்கின்றன. ஆயினும், கம்பத்துக் காலத்திய தாமாக முன்வந்து உதவும் மனப்பான்மை பொதுக் குடியிருப்புக்கு நகர்ந்ததில் மங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மணமகனும் மாப்பிள்ளைத் தோழர்களும் ஆடல், பாடல்களில் ஈடுபடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. அனேகமாக இது சீனப் பாரம்பரியத்திலிருந்து பெற்றுக்கொண்ட வழக்கமாக இருக்கவேண்டும்.

இன்று பெரும்பாலான மலாய்க் குடும்பங்கள் தொழில்முறை சமையற்காரர்களைக் கொண்டு திருமண விருந்து படைக்கிறார்கள். நாசி மின்யாக் அல்லது நாசி பிரியாணியும் இதர பதார்த்தங்களும் பாரம்பரிய வழக்கப்படித் தொடர்கின்றன என்றாலும் மேசைகளுக்கு உணவைக் கொண்டுவருவது மாறி தனக்குத் தானே பரிமாறிக்கொள்ளும் பஃபே முறை அறிமுகமாகிவிட்டது.

புத்தாயிரத்தின் தொடக்கத்திலிருந்து, வசதிமிக்க தம்பதிகள், திருமண விழா அமைப்பாளர்களை அமர்த்தி ஆடம்பரமான, கருப்பொருள் சார்ந்த திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். பசுந்தோட்டம், பழமையான கம்பம், கனவுக் காட்சி எனப் பல்வேறு கருப்பொருள்கள் இடம்பெறுகின்றன. கருப்பொருளுக்கு ஏற்ப உடையணிந்துவர விருந்தினர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பஃபே உணவுகள் நீங்கலாக சுடச்சுட உணவு தயாரிக்கும் தற்காலிக உணவு நிலையங்களும் விருந்துகளில் இடம்பெருகின்றன. அதுபோக நிழற்படம் எடுக்கும் அரங்குகளும் இனிப்புக் கடைகளும் அமைக்கப்பபடுகின்றன.

ஒரே நாளில் அனைத்துச் சடங்குகளையும் நடத்திமுடிக்கும்படிச் சுருங்கிவிட்டன. பெண்ணழைப்பே தேவையில்லை என்றுகூடச் சிலர் விட்டுவிடுகின்றனர்.
ஒரு ‘தொக் காடி’ நிக்காஹ் செய்துவைக்கிறார் (1980). நிக்காஹ் சடங்கு இஸ்லாத்தில் ஒரு மதக்கடமை. தொக் காடி திருமணத்தை அதிகாரபூர்வமாக உறுதிசெய்து சான்றிதழும் வழங்குவார்

அண்மைக் காலங்களில் திருமண அரங்கிலிருந்து அலங்காரம், உணவு, பரிசுகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதரும் சேவை நிறுவனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. தம்பதியர் பலர் வீவக வெற்றுத்தளத்துக்கு மாற்றாகப் பூங்காக்கள், கடற்கரைகள், மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள், விடுதிகள் எனப் பல்வேறு இடங்களில் திருமண வரவேற்வை நடத்துகின்றனர். சிலர் நண்பர்களுக்காகவும் வேலையிடச் சகாக்களுக்காகவும் தனியாக ஒரு சிறப்பு வரவேற்பு விருந்தும் ஏற்பாடு செய்கின்றனர்.

திருமண விழாக்களில் இடம்பெறும் பொழுதுபோக்கு அம்சங்களும் மாறிவிட்டன. கூட கேபாங் (kuda kepang) எனப்படும் ஜாவானிய மரக்குதிரை சன்னத நடனமும், சிலாட் எனப்படும் தற்காப்புக்கலை விளையாட்டுக்களும், பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்துப் பாடும் பாடல்களும் என 1980கள் வரை பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஸப்பின், மஸ்ரி, இனாங், ஜோகெட், டொன்டாங் சாயாங் போன்ற பாரம்பரிய, புகழ்பெற்ற மலாய் இசைகளும் ஆங்கில, இந்திப் பாடல்களும் இடம்பெற்றன. தற்போது ‘டீஜே’ வைத்து இசை ஒலிபரப்புவதாகப் பொழுதுபோக்கு சுருங்கிவிட்டது.

மாப்பிள்ளை அழைப்பில் போட்டிப் பாட்டில்லை

மணமேடைக்கு அருகிலேயே தம்பதியராகத் தம் முதல் விருந்தை அருந்தும் மணமக்கள், 2020

கொம்பாங் அல்லது ரெபானா (rebana) என்றழைக்கப்படும் கையால் தட்டும் சிறு தப்புக் கருவியின் குழு இசைக்கிடையே மாப்பிள்ளைத் தோழர்களுடன் மணமகன் மணமேடைக்கு அழைத்து வரப்படுவார். இது பெரராக் (berarak) ஊர்வலம் எனப்படுகிறது. பளபளக்கும் தாளில் செய்யப்பட்ட பனம்பூவைக் கையிலேந்தி இருவர் மணமகனுடன் வருவர். மணமேடையில் மணமகளின் முகத்தைப் பெண்ணொருவர் விசிறி கொண்டு மறைத்திருப்பார்.

மணமேடை ஏறுவதற்கு முன் மணமகன் பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏட்டிக்குப் போட்டியாகப் பாட்டு பாடி இரு தரப்பாரும் கேலிசெய்ய, மணமகன் “வாயில் கட்டணம்” (duit pagar) செலுத்த வேண்டும். இவ்வாறு பல சோதனைகளைத் தாண்டியபின் மணமகன் மணமேடையேற அனுமதிக்கப்படுவார். பிறகு, சிலாட் தற்காப்புக்கலை விளையாட்டு மணமக்கள் முன்பு நடந்தேறும். மணமகளின் முகத்தை மறைத்துப் பிடித்திருக்கும் பெண்ணுக்குத் திருப்தியான “விசிறிக் கட்டணம்” (duit kipas) கொடுத்தால்தான் அவர் மணமகளின் முகத்தைக் வெளிக்காட்டி அருகில் உட்கார அனுமதிப்பார். இதுவே மணமகன் தாண்டவேண்டிய கடைசித் தடை.

தற்காலத்தில் இந்த ஆசீர்வாத நலுங்குச் சடங்குகள் வெகு அரிதாகவே நடைபெறுகின்றன. முதலில் கள்ள மருதாணியும் சின்ன மருதாணியும் மறைந்தது.

மணமகனின் நெருங்கிய மூத்த உறவினர்கள்தான் மணமகனை மேடை வரை கூடவே வந்து அமர்த்துவார்கள். தற்போது மணமகனின் நண்பர்கள் அந்த வேலையைச் செய்கிறார்கள். மணமகனும் மாப்பிள்ளைத் தோழர்களும் ஆடல், பாடல்களில் ஈடுபடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. அனேகமாக இது சீனப் பாரம்பரியத்திலிருந்து பெற்றுக்கொண்ட வழக்கமாக இருக்கவேண்டும். ஏட்டிக்குப்போட்டி பாட்டுப்பாடுவது இன்று அருகிவிட்டது. அதற்குபதிலாக பணத்தைக் கொடுப்பது வழக்கத்துக்கு வந்துவிட்டது.

மணமேடைக்கு மணமக்கள் வந்த பிறகு, உற்றார் உறவினர் வரிசையாகச் சென்று மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் நிழற்படம் எடுத்துக்கொள்வர். பெர்சான்டிங் விழா மணமக்கள் கணவன் மனைவியாக ஒன்றாக முதல் உணவருந்துவதுடன் முடியும். முன்பெல்லாம் தனியாக ஒரு அறையில் மணமக்கள் உணவருந்துவார்கள், தற்காலத்தில் மேடைக்கருகில் அமைக்கப்படும் ஒரு சிறப்பு மேசையிலேயே உணவருந்துகின்றனர். விருந்தினர்களுடன் கலந்துறவாட வசதியாக இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கையோடு நடந்தேறும் பெண்ணழைப்பு (பெர்தான்டாங்)

விழாவின் நிறைவாக பெர்தான்டாங் (bertandang) எனும் பெண்ணழைப்பு மணமகன் வீட்டில் நடைபெறும். முன்பு இவ்வழைப்பு திருமண விருந்து முடிந்த ஒருவாரத்தில் நடக்கும். மாப்பிள்ளை தன் குடும்பத்தினருக்கும் கிராமத்தினருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திவைக்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது வலிமா, பெர்சான்டிங் நடக்கும் அதேநாளில் விருந்து முடிந்ததும் உடைமாற்றிக்கொண்டு மணமகனின் வீட்டிற்குப் போய்ச்சேருவதுடன் பெர்தான்டாங் முடிந்துவிடுகிறது.
மலாய்ச்சமூகம் கம்பத்தில் வாழ்ந்தபோது, நிக்காஹ் முதல் பெர்தான்டாங் வரை, ஒருவாரம் நீடித்த திருமணங்கள் தற்காலத்தில் ஒரே நாளில் அனைத்துச் சடங்குகளையும் நடத்திமுடிக்கும்படிச் சுருங்கிவிட்டன. பெண்ணழைப்பே தேவையில்லை என்றுகூடச் சிலர் விட்டுவிடுகின்றனர்.

மலாய் நடன முன்னோடியும் கலாசார விருது பெற்றவருமான சோம் சயீத், “தற்காலத்திருமணங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நிக்காஹும் பெர்சான்டிங்கும் மட்டுமே எஞ்சியுள்ளன. நேரமின்மை, நடைமுறைச் சாத்தியமின்மை போன்ற காரணங்களால் பல பாராம்பரிய அம்சங்கள் காணாமற்போய்விட்டன. திருமண தொடர்பான விழாக்கள் குறைந்தது மட்டுமின்றிப் பல மரபுகள், அவை சார்ந்த தயாரிப்புகள், அத்தயாரிப்புகளுக்கான கருவிகள் என அனைத்திலும் தேவையற்றவை எனக்கருதப்பட்டவை பின்பற்றப்படவில்லை” என்கிறார்.

மலர் முட்டைத் தாம்பூலம் ‘கேக்’ ஆனது!

புஙா தெலூர் எனப்படும் மலர்முட்டைத் தாம்பூலம்

மலாய்த் திருமணத்தில் பாரம்பரியமாக விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த தாம்பூலம் ‘புஙா தெலூர்’ (Bunga Telur) எனப்படும் மலர் முட்டைகள். ஒரு கண்ணாடிக் குவளையில் மஞ்சள் பூசிய அரிசி, அதன் மேல் சிவப்பு வண்ண அவித்த முட்டை, அதன்மேல் அலங்காரமாக ஒரு பூ என அது இருக்கும். முட்டை மகப்பேற்றையும் செல்வ வளத்தையும் குறிக்கும், மஞ்சளரிசி நேர்மை, ஒற்றுமையையும், பூ அன்பையும் குறிக்கும். உறவினர்களுக்கிடையே யார் எந்தப் பகுதியை உருவாக்குவது என்று போட்டியே நடக்கும். தற்போது மலர் முட்டைகளின் இடத்தைக் கேக் வகைகளும் சாக்லேட்டுகளும் ஆக்கிரமித்துக் கொண்டன.

காணாமற்போன கள்ள மருதாணி

மலாய்த் திருமணங்களின் முக்கியப் பகுதியாக இருந்த மருதாணி இடும் பெரினாய் (berinai) சடங்கு இன்று சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படுகிறது. இதுவோர் ஆசீர்வாத நலுங்குச் சடங்கு. இச்சடங்கில் மூன்று பகுதிகள் உண்டு; கள்ள மருதாணி, சின்ன மருதாணி, பெரிய மருதாணி.

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டவை (ஹராம்) எனக் கருதப்பட்ட சடங்குகள் கைவிடப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆசீர்வாத நலுங்குச் சடங்கு

நிக்காஹுக்கு இருநாள்களுக்கு முன்பே மணமகனைச் சார்ந்தோர் அறியாமல் பெண்தோழிகள் சேர்ந்துகொண்டு மணமகளுக்கு மருதாணி போடுவது கள்ள மருதாணி. அதற்கு அடுத்தநாள் சின்ன மருதாணி இடுவது நடக்கும். இதில் மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் இடம் உண்டு என்றாலும் முதலில் மாப்பிள்ளை பிறகு மணப்பெண் எனத் தனித்தனியாக நடக்கும். திருமணமான பின் பெண்வீட்டில் மாப்பிள்ளை, மணப்பெண் இருவருக்கும் ஒன்றாக நடப்பது பெரிய மருதாணி. இச்சடங்கின்போது மணப்பெண் ஏறக்குறைய 20 முறை உடைகளை மாற்றி மாற்றி வந்து உட்காருவார்.

தற்காலத்தில் இந்த ஆசீர்வாத நலுங்குச் சடங்குகள் வெகு அரிதாகவே நடைபெறுகின்றன. முதலில் கள்ள மருதாணியும் சின்ன மருதாணியும் மறைந்தது. பிறகு 1980களில் பெரிய மருதாணி மட்டுமே இருந்து 2000களின் தொடக்கத்தில் அதுவும் வழக்கத்திலிருந்து மறைந்து போயிற்று.

அடிபட்டுப்போன ஆசீர்வாத நலுங்கு

இந்த மாற்றங்களுக்கு ஒரு முக்கியக் காரணம், இஸ்லாமியக் கடமைகளைப் பற்றிய விரிவான புரிதலும் விழிப்புணர்வும் எனலாம். இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டவை (ஹராம்) எனக் கருதப்பட்ட சடங்குகள் கைவிடப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆசீர்வாத நலுங்குச் சடங்கு. இச்சடங்கு இந்து மதத்தில் அதன் தோற்றுவாய்களைக் கொண்டிருக்கிறது எனக்கூறப்படுவதால் அனேகமாக முற்றாக மறைந்துவிட்டது.

கூட கேபாங் எனப்படும் ஜாவானிய மரக்குதிரை சன்னத நடனமும் இதே காரணத்திற்காக வழக்கொழிந்தது.

நலுங்குச் சடங்கின்போது, ஆசீர்வாதம் செய்பவர் முதலில் புதுமணத் தம்பதிக்குப் பன்னீர் தெளித்தல், மஞ்சள் தோய்த்த அட்சதை தூவுதல், பிறகு உள்ளங்கைகளில் மருதாணி, அரிசிமாவு தொட்டு வைத்தல் ஆகியவற்றைச் செய்வார். உடனே உள்ளங்கைகளைத் துடைத்துவிட மாப்பிள்ளைத்தோழர், பெண்தோழி இருப்பர். நிறைவாக ஒரு முட்டையை மணமக்களின் மூக்கின் மேல் லேசாகத் தொட்டு ஆசீர்வாதத்தை முடித்துவிடுவார். ஆசீர்வாதம் செய்தவருக்கு அவித்த முட்டை, மஞ்சள் கலந்த அரிசி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அடையாளப்பரிசு ஒன்றை அளிப்பார்கள். இன்று இச்சடங்கு அனேகமாக இல்லை.

இருந்தாலும் மாப்பிள்ளை, பெண்ணின் பெற்றோர் மட்டும் ஆசீர்வதிப்பதுடன் முடிந்துவிடுகிறது.

பலவகை பதார்த்தங்களுடன் நெய்ச்சோறோ நாசி பிரியாணியோ பரிமாறப்படும் பாரம்பரிய மலாய்த் திருமண விருந்து, 1970களில்.

மணமகளை அலங்கரிக்கும் பொத்தோங் அன்டாம் (potong andam) என்னும் சடங்கும் இஸ்லாத்திற்கு ஏற்புடையதல்ல என்று கருதப்பட்டு விலக்கப்பட்டுவிட்டது. இந்தச் சடங்கில் மணமகளின் முகத்திலும் உடலிலுமுள்ள பூனைமுடி சடங்கு செய்பவரால் அகற்றப்படும். சடங்கு செய்யும் பெண் (mak andam) சில மந்திர உச்சரிப்புகளுடன் முடிகளை அகற்றுவார். வெட்டப்படும் முடி எப்படிக் கீழே விழுகிறது என்பதைக்கொண்டு பெண்ணின் கன்னித்தன்மையைத் தீர்மானிக்கும் வழக்கமும் இருந்தது. அவையெல்லாம் இஸ்லாம் அல்லாதவை என்பதால் கைவிடப்பட்டன.

முன்பு குறிப்பிடப்பட்ட கூட கேபாங் எனப்படும் ஜாவானிய மரக்குதிரை சன்னத நடனமும் இதே காரணத்திற்காக வழக்கொழிந்தது. சிங்கப்பூரில் 70களிலும் 80களிலும் இந்நடனம் வழக்கமான ஒன்றாக இருந்தது. நடனமாடுபவர்கள் ஒருகட்டத்தில் சன்னதம்கொண்டு பல்லால் தேங்காய் உரிப்பது, கண்ணாடித் துண்டுகளை மெல்லுவது, வாளி நிறையத் தண்ணீரைக் குடித்துக் காட்டுவது போன்ற சாகச நிகழ்ச்சிகளும் நடக்கும். மூயிஸ் (MUIS) அமைப்பு 1979இல் இது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்று அந்த வழக்கங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. அதன் விளைவாக இந்தப் பாரம்பரிய நடன நிகழ்ச்சி மெல்ல அற்றுப்போனது.

சிங்கப்பூரில் மட்டுமல்ல..

சிங்கப்பூரில் மாற்றத்திற்குள்ளான மலாய்த்திருமண நிகழ்வுகள் கோலாலம்பூர் போன்ற நகரங்களிலும் பின்பற்றப்பட்டன. விருந்துக்காக வீட்டுக்கு முன்பு கூடாரங்கள் அமைப்பது (கம்பத்து முறையைத் தழுவி செய்யப்படுவது), சமூகமாகத் திரண்டு திருமணத்திற்குத் தயாராவது ஆகியவற்றை விடுதி அரங்குகளும் திருமண ஏற்பாட்டாளர்களும் எடுத்துக்கொண்டனர். விரிவான, வெகுநேரம்பிடிக்கும் சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டன. சிங்கப்பூரைப் போலவே குறிப்பிட்ட கருப்பொருளில் அமையும் திருமணங்கள் என மலேசியாவில் நடைபெறும் மலாய்த்திருமணங்களும் மாற்றங்களைக் கண்டன. ஆசீர்வாதச் சடங்கு மட்டும் மலேசியாவில் இன்றும் வழக்கில் உள்ளது.

தவிர்க்கவியலாமல், சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கேற்ப, பாரம்பரியங்களும் சம்பிரதாயங்களும் மாற்றமடையும். புதிய புதிய வழக்கங்களும் எதிர்பார்ப்புகளும் வர வர, அவற்றுக்கேற்ப மலாய்த்திருமணச் சம்பிரதாயங்களும் தம்மைப் புதுப்பித்துக்கொண்டு புதிய பரிணாமம் பெறும்.