உதிரிப்பூக்கள்

0
269
மஹேஷ்

மலர்களைப் போற்றும் அஞ்சல்தலைகள்

அழிந்துபோகும் நிலையில் உள்ள சில சிங்கை மலர்களுக்காக சிங்போஸ்ட் 4 அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது. தேசியப் பூங்கா வாரியமும் உயிர்ப்பன்ம வட்டமேசையும் (Biodiversity Roundtable) இணைந்து நடத்தும் உயிர்ப்பன்மக் கொண்டாட்டங்களை ஒட்டி இவை ஹார்ட்பீட்@பிடோக் வளாகத்தில் வெளியிடப்பட்டன. இந்த 4 மலர்களுமே அழிந்துபோய்விட்டவை என்று கருதப்பட்ட நிலையில் 2010க்கும் 2014க்கும் இடையில் மீண்டும் கண்டறியப்பட்டன. உதட்டுச்சாயத் தாவரம், கோப்ஸிய சிங்கப்பூரா, சிவப்பு சலாக், ஃபாக்ரியா ஸ்ப்லெண்டன்ஸ் உள்ளிட்ட இத்தாவரங்கள் பல்வேறு தேடல்களின்போது மீண்டும் காணக்கிடைத்தவை.

-நன்றி: Singpost.com

காற்றிலிருந்து உணவு

நம்மைச் சுற்றியுள்ள வாயுமண்டலத்தில் உள்ள சில நுண்ணுயிரிகளை வளர்த்து அவற்றை உலரவைத்துப் பொடியாக ஆக்கி தயாரிக்கப்பட்ட ‘சொலெய்ன்’ எனும் புரதச்சத்துமிக்க உணவை ஃபின்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான சோலார் ஃபுட்ஸ் முதன்முதலாக சிங்கையில் அனுமதி பெற்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஒயின் தயாரிப்பதைப் போல நுண்ணுயிரிகளை கரியமில வாயு, உயிர்வாயு, ஹைட்ரஜன் போன்றவற்றில் நொதிக்க வைத்து 65% புரதச்சத்து, 8% கொழுப்பு, மற்ற நார்ச்சத்துகளும் ஊட்டச்சத்துகளும் உள்ள இந்த உணவு இறைச்சி, பால்பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தி பல வகையான பானங்கள், ரொட்டிகள், பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். மேம்பட்ட சுவையும் உண்டு என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

-படம் நன்றி: foodingredientsfirst.com

நட்புறவின் வெள்ளிவிழா

சிங்கப்பூர் ஆகாயப் படையின் 150வது பிரிவு (squadron) ஃப்ரான்ஸ் நாட்டின் கஸா (Cazaux) விமானத்தளத்தில் இயங்கி வருவதன் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. இருநாட்டுப் தற்காப்புத் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த மைல்கல் விழாவில் பேசிய டாக்டர்.ஹெங், அடிப்படை விமானப் பயிற்சிகளுக்குப் பிறகு ஃப்ரான்ஸில் சிறப்புப் போர்விமானப் பயிற்சிபெறும் விமானிகளைப் பாராட்டினார். இராணுவத் துறையில் இந்தப் பங்காளித்துவத்துத்தைப் பெரிதும் பாராட்டிய ஃப்ரான்ஸ் நாட்டின் அமைச்சர் திரு.லெகோனு பாதுகாப்பு தொடர்பான இத்தகைய முயற்சிகள் இன்னமும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று உறுதி கூறினார்.

-படம் நன்றி: mindef

சிங்கை மருத்துவரின் 193 கிமீ நீச்சல் சாதனை

சிங்கப்பூர்க் கடற்படையைச் சேர்ந்த 32 வயது மருத்துவர் ச்சுவா ஜியா, உலகின் மிக நீண்ட மாரத்தான் நீச்சல் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹட்சன் நதியில் 8 பாலங்களை நீந்திக்கடக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளார். ஒரு பாலத்துக்கும் இன்னொரு பாலத்துக்கும் இடையே உள்ள சுமார் 23 கிமீ தூரத்தை ஒரு நாளில் 6-7 மணி நேரத்தில் நீந்திக் கடந்து, 7 நாள்களில் அனைத்துப் பாலங்களையும் கடந்தார். மொத்தம் 193 கிமீ நீளமுள்ள இந்த தூரம் ஏறத்தாழ சிங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை எல்லையின் நீளமாகும். இந்தச் சாதனை முயற்சியின்போது பனிமூட்டம், பெருமழை, ஆலங்கட்டி மழை, எதிர் அலைகள் போன்ற கடும் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் மனஉறுதியுடன் தொடர்ந்து முன்னேறி திட்டப்படி முடித்ததாக மிகுந்த பெருமையுடன் கூறினார் ச்சுவா ஜியா.

-படம் நன்றி: channelnews