சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல

ராஃபிள்ஸுக்கு வந்த சோதனைகள்

பாலபாஸ்கரன்

சிங்கப்பூரின் உதயத்தை 1819 மார்ச் 19 அன்று கல்கத்தா பத்திரிகை ஒன்று பிரமாதமாக வரவேற்றது. அரசியல், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான நிகழ்வு என்று அது வருணித்தது. கல்கத்தா வணிகச் சமூகத்தினரும் சிங்கப்பூரின் உதயத்தை வரவேற்று மகிழ்ந்தனர்.

ராஃபிள்ஸ் 1819 மார்ச் மாதம் வட சுமத்ராவின் அச்சை சென்று ஏழு வாரம் தங்கினார். அச்சை அரசவையிலும் ஒரு வாரிசுப் பிரச்சனை. அச்சை சுல்தான் ஜவ்ஹார் அல் ஆலம் ஷா 1815இல் ரஷ்யப் பேரரசருக்குக் கடிதம் எழுதி ஒரு ரஷ்யக் குடியேற்றப் பகுதியை இங்கு நிறுவிக்கொள்ளுமாறு வேண்டினார். அதற்குக் கைம்மாறாகப் பகைவரிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டுமென்று சுல்தான் கேட்டுக்கொண்டார். ரஷ்ய மன்னர் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ராஃபிள்ஸ் மிகுந்த கவனத்துடன் ஏப்ரல் 22 அன்று அச்சையுடன் பிரிட்டிஷாருக்குச் சாதகமான ஒரு வர்த்தக உடன்படிக்கை செய்துகொண்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தெரியாமலோ அதற்குச் சம்மதம் இல்லாமலோ அச்சை அரசாங்கம் யாருடனும் எத்தகைய உடன்பாடும் செய்துகொள்ளக் கூடாது என்பது அதன் சாரம். ஏப்ரல் 29 அன்று ராஃபிள்ஸ் அச்சையிலிருந்து பினாங்கு திரும்பினார்.

அன்றைய மதராசில் காலூன்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 1771இல் அச்சையில் வணிகத் தொடர்புகளை நிறுவ முயன்றபோது முட்டுக்கட்டை போட்டனர், அச்சை அரசாங்கத்தில் அப்போது மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த, தமிழ் முஸ்லிம் வணிகப் பிரமுகர்கள். சுமார் ஐம்பதாண்டுக்குப் பிறகு ராஃபிள்ஸ் அதை முறியடித்தார்.

பிரிட்டிஷார் சிங்கப்பூரில் கொடியேற்றிவிட்டனர் என்ற தகவல் அறிந்து டச்சுக்காரர், சிங்கப்பூர் உதயமான இரண்டு வாரம் கழித்துப் பினாங்கு கவர்னர் பேனர்மனிடம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். சிங்கப்பூர்ப் பிரதேசம் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகச் சொல்லி டச்சுக்காரர் முரண்டு பிடித்தனர். புதிய சிங்கப்பூரின் புது சுல்தான், தெமெங்கோங் ஆகிய இருவரும் பயந்துவிட்டனர்.

மலாக்காவுக்கு மீண்டும் வந்துவிட்ட டச்சு கவர்னருக்கு இருவரும் 1819 பிப்ரவரி 16 அன்று கடிதம் எழுதி, ராஃபிள்ஸ் தங்களை மிரட்டி ஒப்பந்தம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தியதாகக் கதையைத் திரித்துவிட்டனர். ராஃபிள்ஸ் தன்னிச்சையாக நடந்துகொண்டார் என்று கர்னல் பேனர்மனும் மலாக்கா டச்சு கவர்னருக்குக் கடிதம் எழுதித் தன் மீது வரக்கூடிய பழியைத் துடைத்துக்கொள்ள முயன்றார்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு, ராஃபிள்ஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகப் பிரதிநிதியே தவிர அரசியல் உடன்பாடு செய்துகொள்ளும் அதிகாரம் கொண்டவரல்லர் என்று அறிவித்து சாமர்த்தியமாக நழுவப் பார்த்தது. ஐந்தாண்டுவரை டச்சு அரசாங்கம் சிங்கப்பூரை அங்கீகரிக்கவே இல்லை. டச்சுக்காரர் தாக்கப் போவதாகவும் செய்தி பரவியது. பாதுகாப்புக்கு உதவி செய்யுமாறு கர்னல் ஃபார்க்குவார் பினாங்கு கவர்னர் பேனர்மனுக்கு அவசர வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கிலேயே அறுபது வயதில் காலமான இந்தக் கர்னல் பேனர்மன் என்பவர்தான் கயத்தாற்றில் வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கில் ஏற்றியவர்.

‘உதவியெல்லாம் கிடையாது, டச்சுக்காரரைப் பகைக்க வேண்டாம், சிங்கப்பூரைக் காலி செய்துவிட்டு ஓடிவாருங்கள்’ என்று பதில் சொல்லிவிட்டார் பேனர்மன். மலாக்கா நீரிணையில் பினாங்குத் துறைமுகம் மட்டுமே போதும் என்பது அவருடைய எண்ணம்.

ஃபார்க்குவாரின் மகள் வழியில் வந்த ஏழாம் தலைமுறையைச் சேர்ந்தவர் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. சிங்கப்பூருக்கு வந்தபோது, ஃபார்க்குவார் மகளின் நினைவுக் கல்வெட்டைத் தன் குடும்பத்தினருக்குக் காண்பித்த ட்ரூடோ.

சிங்கப்பூர் நிறுவப்பட்ட ஆறு மாதம் கழித்து 1819 ஆகஸ்ட் 8 அன்று பினாங்கிலேயே அறுபது வயதில் காலமான இந்தக் கர்னல் பேனர்மன் என்பவர்தான், திருநெல்வேலிப் பாளையக்காரரை ஒடுக்கும் சண்டையில் 1799 அக்டோபர் 16 அன்று கயத்தாற்றில் வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கில் ஏற்றியவர். பேனர்மனுக்குப் பிறகு பினாங்கு கவர்னராக வரவிரும்பினார் ராஃபிள்ஸ். அது வாய்க்காமலே போய்விட்டது.

ராஃபிள்ஸ் இரண்டாவது தடவையாக 1819 மே 31 அன்று சிங்கப்பூருக்கு வந்தபோதுதான் பினாங்கிலிருந்து இந்தியர் பலரைக் கொண்டு வந்து குடியேற்றி மரம், செங்கல், மண்வெட்டி, வெட்டுக்கத்தி முதலான கட்டுமானச் சாமான்களையும் தளவாடங்களையும் ஏற்றி வந்ததோடு, பொதுப்பணித் துறைக்கு மாடுகளையும் கொண்டுவந்து கொடுத்தார். அந்தப் பயணத்தில்தான் நாராயணப் பிள்ளை பினாங்கிலிருந்து வந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. அவர் ஒரு மலையாளியா தமிழரா என்ற விவாதமும் உண்டு.

இப்பயணத்தில் நான்கு வாரம் தங்கிய ராஃபிள்ஸ் மறுபடியும் சுல்தான் உசேனை சிங்கப்பூருக்கு வரவழைத்து அவரே ஜோகூர் சுல்தான் என்பதை அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்த 1819 ஜுன் 26 அன்று எளிய முறையில் அவருக்கு அரியணை ஏறும் விழா நடத்திவைத்தார். பிரிட்டிஷார், சுல்தான், தெமெங்கோங் ஆகிய முத்தரப்பும் இணைந்த ஒருவகைக் கூட்டரசாங்க ஏற்பாட்டுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது. சுல்தானுக்குக் கம்போங் கிளாம் பகுதியில் 56 ஏக்கர் நிலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அங்கு அவர் மாளிகை கட்டிக்கொண்டார். தெமெங்கோங் தெலுக் பிளாங்கா பகுதியில் 200 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டார்.

ஒரு சீனப் படகோட்டி, 1906இல்,
 தன் 75 காசு தினக்கூலியில் 40 காசைக் கஞ்சாவில் புகைத்துவிடுவார்.

சிங்கப்பூரின் வளர்ச்சி அபரிமிதமாக முன்னேறியது. முதல் ஆண்டிலேயே நான்கு லட்சம் வெள்ளி வர்த்தகம் நடைபெற்றது. முதல் இரண்டரையாண்டில் மூவாயிரம் கலங்கள் வந்து அணைந்தன. 1821இல் எட்டு மில்லியன் வெள்ளியைத் தொட்ட வர்த்தகப் பரிமாற்றம் 1825இல் 22 மில்லியன் வெள்ளியை எட்டிப்பிடித்துப் பினாங்கைப் பின்னுக்குத் தள்ளியது. அந்த ஆண்டில் தென்கிழக்காசிய நாடுகளுடன் 62%, இந்தியாவுடன் 20%, ஐரோப்பாவுடன் 18% வர்த்தகம் மேற்கொண்டது சிங்கப்பூர்.

மக்கள்தொகையும் 1824இல் பத்தாயிரத்துக்கு உயர்ந்தது. இதில் இந்தியர் மொத்தம் 786 பேர்தான். சிங்கப்பூரின் மொத்த வருமானத்தில் 1825 முதல் 1910 வரை கஞ்சா விற்பனை மட்டும் 30 முதல் 55 விழுக்காட்டை வழங்கியது. உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன சீனக் கூலிகளின் கஞ்சா புகைக்கும் பழக்கமே அதற்குக் காரணம். ஒரு சீனப் படகோட்டி, 1906இல், தன் 75 காசு தினக்கூலியில் 40 காசைக் கஞ்சாவில் புகைத்துவிடுவார்.

ராஃபிள்சின் மூன்றாவது பயணம் 1822 அக்டோபர் தொடங்கி 1823 ஜுன் வரை எட்டு மாதம் நீடித்தது. அடிக்கடி தலைவலியும் காய்ச்சலும் கண்டு உடல்நலக் குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார் ராஃபிள்ஸ். மூன்றரை ஆண்டுக்குப் பிறகு கடைசி முறையாக சிங்கப்பூர் வந்தவர், தாம் சொன்னபடி கர்னல் ஃபார்க்குவார் நடக்கவில்லை என்று அவர் மீது சீறி விழுந்தார்.

பினாங்கிலுள்ள கர்னல் பேனர்மன் கல்லறை

காடுகளும் மேடுகளும் மண்டிக்கிடந்த ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு புதிய மண்ணில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடித்தவர் ஃபார்க்குவார் என்றும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த அவரை மட்டந்தட்டிச் சிறுமைப்படுத்தி வேலையை விட்டு நீக்கியது ராஃபிள்ஸ் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான நன்றி கெட்ட செயல் என்றும் வரலாற்றாசிரியர் சொல்வதுண்டு.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல்கூட அப்போதே இதற்காக ராஃபிள்சைக் குறைகூறியதுண்டு. சிங்கப்பூரைத் தன் மேலாண்மையில் வைத்துக் கொண்ட ராஃபிள்ஸ், அவர் தங்கியிருந்த தொலைதூர பென்கூலின் நகருக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு கடிதம் போய் பதில் திரும்பிவர ஏழு மாதம் பிடிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்க முடியாது. அருகிலுள்ள பினாங்கின் மேலாண்மைக்கு சிங்கப்பூரை விட்டுவிட ராஃபிள்ஸ் விரும்பவில்லை.

ஆரம்பத்திலிருந்தே ஃபார்க்குவாரைப் பிடிக்கவில்லை ராஃபிள்சுக்கு. அவரை வெளியேற்றிவிட்டால் தம் விருப்பம்போல நடந்து கொள்ளலாம் என்று ராஃபிள்ஸ் தீர்மானித்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்ட ஃபார்க்குவாரும் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய்க் கோபத்தில் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிடவே 1820 மார்ச் 24 அன்று கேப்டன் டிராவர்ஸ் என்பவரை சிங்கப்பூரின் புதிய தலைமை நிர்வாகியாக அறிவித்தார் ராஃபிள்ஸ்.

நண்பர்களின் ஆலோசனைக்கும் வற்புறுத்தலுக்கும் பிறகு மனம் மாறி ராஜினாமாவை மீட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்தார் ஃபார்க்குவார். அவருடைய மகள் எஸ்தர் – மருமகன் பிரான்சிஸ் பெர்னர்ட் தம்பதியருக்கு 1819 ஜுலை 25ல் பிறந்த ஆன் (Ann) என்ற பெண் குழந்தையே சிங்கப்பூரில் பிறந்த முதல் குழந்தை. பிரான்சிஸ் பெர்னர்ட் சிங்கப்பூர் கிரானிக்கல் என்ற சிங்கப்பூரின் முதல் செய்திப்பத்திரிகையை 1824 இல் தொடங்கி நடத்தியவர்.

ராஃபிள்சுக்கு சமூக, வணிகப் பிரமுகர்கள் நன்றிப்பெருக்குடன் பிரியாவிடை வழங்கினார்கள். ராஃபிள்ஸ் தாம் எழுதிய ஜுன் 9 பிரியாவிடைக் கடிதத்தில், சிங்கப்பூர் எப்போதும் வரிவிதிப்பு இல்லாத துறைமாகவே இருக்கும். அதில் சற்றும் சந்தேகமில்லை என்று நம்பிக்கையுடன் உறுதியளித்தார்.

என் ஒரே குழந்தை சிங்கப்பூர்தான் என்று பெருமிதம் கொண்டவர் ராஃபிள்ஸ். அதன் வளர்ச்சியைக் காணும்போது புத்தெழுச்சியும் புத்தூக்கமும் பிறக்கின்றன என்று துள்ளிக்குதித்தார். எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ? 1821 ஜுலைக்கும் 1822 ஜனவரிக்கும் இடைப்பட்ட ஆறு மாதத்தில் பென்கூலினில் ராஃபிள்சின் மூன்று பிள்ளைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். அவர்கள் ஒன்றரை வயதுக்கும் நான்கு வயதுக்கும் இடைப்பட்ட சின்னஞ்சிறுசுகள்.

பள்ளிப் படிப்பையே முடிக்காத ராஃபிள்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வரவேண்டும் என்றுகூட ஆசைப்பட்டார். தன்னால் முடியும் என்று நம்பினார்.

ராஃபிள்ஸ் தம்பதியினர் எஞ்சிய ஒரே குழந்தையை நண்பர்களின் அரவணைப்பில், தாங்கள் உடன்போகாமல், லண்டனுக்குத் தனியாக அனுப்பி வைத்தனர். ராஃபிள்சின் உறவினர் சிலரும் நண்பர் சிலரும்கூட இறந்துபோயினர். ராஃபிள்சும் அவருடைய மனைவியும் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். ராஃபிள்ஸின் உடல் நலம் மேலும் கேடுற்றது. அவ்வப்போது வாட்டி வதைக்கும் தலைவலி தீவிரமடைந்து தொடர்ந்து படுக்கையில் கிடக்க நேரிட்டது.

துயரமும் தோல்வியும் அடுக்கடுக்காக வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் புதிய ஊக்கத்துடன் செயலாற்றுபவர் ராஃபிள்ஸ் என்பதை அவருடைய வரலாறு உணர்த்துகிறது. பள்ளிப் படிப்பையே முடிக்காத ராஃபிள்ஸ் மேன்மேலும் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போனார். நாடாளுமன்ற உறுப்பினராக வரவிரும்பினார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வரவேண்டும் என்றுகூட ஆசைப்பட்டார். தன்னால் முடியும் என்று நம்பினார்.

பினாங்கு கவர்னர் பேனர்மன் 1819 ஆகஸ்ட் 8 அன்று பினாங்கிலேயே காலரா நோய் கண்டு காலமானதும், அவருடைய பதவிக்குக் குறிவைத்த ராஃபிள்ஸ் உடனே கல்கத்தா சென்று மோதிப் பார்த்தார். டச்சுக்காரரின் எதிர்ப்பால் சிங்கப்பூரின் எதிர்காலமே உறுதியில்லாமல் இருந்ததால் கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் பொறுமையாக இருந்தார். அதனால் ராஃபிள்ஸ் நம்பிக்கை இழந்து பென்கூலின் திரும்பிவிட்டார்.

பேனர்மனின் மருமகன் வில்லியம் எட்வர்ட் ஃபிலிப்ஸ் 1820 மார்ச் மாதம் பினாங்கின் புதிய கவர்னராக நியமனம் பெற்று நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சில ஆண்டு கழித்து ஒரு சுகமான திருப்புமுனை வாய்த்தது.

(தொடரும்)