முனைவர் வாசுகி கைலாசம், ஆங்கில இலக்கியத்தில் இளநிலைப் பட்டமும் ஆசிய, ஆப்பிரிக்க ஒப்புநோக்கு இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 2015இல் முனைவர் பட்டம் பெற்ற இவர் அங்கேயே விரிவுரையாளராக 2019வரை பணியாற்றினார். பிறகு அமெரிக்காவின் பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகத் தெற்கு, தென்கிழக்காசிய ஆய்வுகள் புலத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த மாதம் (ஜூன் 2023) அவர் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவருடன் நிகழ்த்தப்பட்ட உரையாடல் இங்கே.
உங்கள் இளமைக்காலத் தமிழார்வம், பிற்கால ஆய்வுகள், சிங்கப்பூர்த் தொடர்பு இவற்றைக் குறித்துச் சுருக்கமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலுமா?
என் குடும்பத்தில் தமிழ்ப் புழக்கம் அதிகம் இருந்தது. தாத்தா திராவிட இயக்க இலக்கியப் பிரிவின் முக்கிய ஆளுமையாகப் பாண்டிச்சேரியில் இருந்தவர். அப்பாவுக்கும் தமிழார்வம் அதிகம். அச்சூழலில் வளர்ந்ததால் நான் தீவிர வாசகராக இருந்தேன் என்றாலும் ஆங்கிலத்தில்தான் அதிகமும் வாசித்துக்கொண்டிருந்தேன். லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டக்கல்வி படித்தபோதுதான் நம் தமிழ்ப் படைப்புகளின் மீதும் பண்பாட்டின் மீதும் ஆர்வம் திரும்பியது. தமிழைப் பிரிந்துசெல்லும் இடைவெளி தமிழின் அருமையை உணர்த்தியது.
மூன்றாம் உலக இலக்கியம் குறித்த ஆய்வுகள் லண்டன் பல்கலைக்கழகத்தின் சோவாஸில் (School of Oriental and African Studies, SOAS) ஊக்குவிக்கப்பட்டன. அப்படித்தான் ஆசிய, ஆப்பிரிக்க இலக்கிய ஒப்புநோக்கு ஆய்வில் நுழைந்தேன். ஆனால் தெற்காசியா என்றால் இந்தியா, இந்தியா என்றால் வங்க இலக்கியம் என்பதாகத்தான் ஆய்வுகள் பெரும்பாலும் இருந்தன. தமிழ் என்றால் முன்நவீனத்துவக் காலத்தை எடுத்துக்கொள்வார்கள். அப்போக்கிலிருந்தும் மாறுபட்டதாக என் ஆய்வு அமைந்தது.
சிங்கப்பூருடன் பலகாலமாக எங்கள் குடும்பத்துக்குத் தொடர்பு உண்டு. அப்பாவின் தாத்தா இங்கு 1920களில் பலசரக்குக்கடை வைத்திருந்தார். அது பின்னர் பல்வேறு தொழில்களாக ஆகி ‘தாஜ்மஹால்’ அப்பளத் தொழிலாக உருமாறியது. பிறகு 2000களின் தொடக்கத்திலிருந்து அப்பா சிங்கப்பூரில் பணியாற்றினார். அதுவும் முனைவர் பட்டப்படிப்பிற்கு தேசியப் பல்கலைகழகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தது.
உங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்காக இலங்கை இலக்கியத்தை, அதிலும் குறிப்பாக 2000-2009 காலகட்டத்தில் வெளியான இலக்கியத்தை, தேர்வுசெய்ய என்ன காரணம்?
தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) இயக்கத்தின் போராட்டம் குறித்தும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் குறித்தும் என் வீட்டுச் சூழலில் தொடர்ந்தும் தீவிரமாகவும் விவாதங்கள் நடந்துவந்தன. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, இந்தியா-பங்களாதேஷ் பிரிவினைகளை ஒட்டிய வன்முறைகளைக் குறித்த இலக்கியப் பதிவுகளும் அவற்றைக் குறித்த ஆய்வுகளும் அதிகம் வெளிவந்திருந்தன. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப்போர் வன்முறை குறித்த பதிவுகள் குறைவாக இருந்தன. இப்படியாகச் சில காரணங்கள் இருந்தன. மேலும் ஆய்வுக்கான வழிகாட்டிகள் அமைந்ததை ஒட்டியும் தலைப்பில் சில மாற்றங்கள் செய்யவேண்டிவந்தது.
கல்வியாளராக முடிவுசெய்தது ஏன், எப்போது? உங்களை இத்துறைக்குள் ஈர்த்த முன்னோடிகள் எவரும் உண்டா?
கல்வியாளராக ஆனது திட்டமிட்டு நடந்ததல்ல, இயல்பாக, படிப்படியாக நடந்தது. எங்கள் குடும்பத்தில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் இருந்தது, ஆனால் பொருளீட்டும் வேலைகளுக்குச் செல்லாமல் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தலைவியாக ஆவதே வழக்கமாக இருந்தது. என் பெற்றோர் தம் இரு பெண்களும் பட்டப்படிப்பு பெறவேண்டும், சொந்தக்காலில் நின்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தனர். எப்படியோ அவர்கள் 90களின் தொழிற்கல்வி மோகத்திற்கு ஆட்படவில்லை. நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என்றனர். வாசிப்பதில் இருந்த தீவிர ஆர்வம் காரணமாக நான் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே பிறகு ஆய்வாளராகவும் கல்வியாளராகவும் ஆக வழியமைத்தது.
பேராசிரியர்கள் பெர்னாட் பேட் (பார்னி), ஆ.இரா.வேங்கடாசலபதி, மார்த்தா செல்பி, சித்ரா சங்கரன் போன்ற பல முன்னோடிகளின் பெரிய பட்டியலே உண்டு. பின்னாளில் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆய்வாளர் வ.கீதா ஆகியோரின் எழுத்துகளும் என்னை ஈர்த்தன. நான் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஆய்வாளர் அருண் மகிழ்நனின் அறிமுகம் கிட்டியது. அவர் முன்னெடுத்த தமிழ் சார்ந்த மாநாடுகள், ஆய்வரங்குகளில் – குறிப்பாக அவர் மதியுரைஞராகச் செயல்பட்ட உலகத் தமிழ் இளையர் மாநாடு 2012 – நிகழ்த்தப்பட்ட விவாதங்களும் தமிழ்ச் சமூகம் குறித்த அவரது சிந்தனைகளும் என்னை ஈர்த்தன, பார்வைகளையும் விரிவாக்கின.
உங்களுடைய நடப்பு ஆய்வு எதில் மையம்கொண்டுள்ளது? நூல் வெளியீட்டுத் திட்டம் ஏதுமுள்ளதா?
தமிழ்நாடு, சிங்கப்பூர் / மலேசியா, இலங்கை இலக்கியங்களில், 1940-80 காலகட்டத்தில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாவல்களைக்கொண்டு, ‘தமிழ் யதார்த்தம்’ என்பதை எப்படி ஒரு கோட்பாடாகப் புரிந்துகொள்வது, விளக்குவது என ஆராயும் ஆய்வில் தற்போது ஈடுபட்டுள்ளேன். நவீனத்துவத் தாக்கங்களை உள்ளடக்கிய அழகியல் கோட்பாடு என்னும் அடிப்படையை வைத்துக்கொண்டு அக்காலகட்டத்தின் வெவ்வேறு தமிழ்ச் சமூகங்களில் எழுந்த படைப்புகளை ஆராய்ந்தால் புதிய வெளிச்சங்கள் கிட்டக்கூடும் என்று நம்புகிறேன்.
இந்த ஆய்வு ஆங்கிலத்தில் நூலாக்கம் பெறும். ஆயினும் ஆய்வுக்கான நூல்கள் அனைத்தும் தமிழ்ப்பிரதிகளே. மேற்கோள் காட்டும்போது என்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அளிக்கவேண்டிவரும். என்னைப் பொறுத்தவரை என் மொத்த ஆய்வு வாழ்க்கையிலும் ஒரு நான்கு புத்தகங்கள் வெளியிட்டாலே போதும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அதிகம் எழுதிக்குவிப்பதைவிட தீர்க்கமான, தாக்கமுள்ள சில நூல்களை மட்டும் வெளியிட விரும்புகிறேன்.
முதலில் சிங்கப்பூரிலும் பிறகு அமெரிக்காவிலும் தமிழ்ச் சமூகம் சார்ந்த (இலக்கியம், பண்பாடு, அடையாளம், காட்சி ஊடகம்) பாடங்களைக் கற்பித்துள்ளீர்கள். கற்றலிலும் கற்பித்தலிலும் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடுகள் உள்ளனவா?
கற்றல், கற்பித்தல் அமெரிக்க வகுப்பறைகளில் விவாதிப்பதன் வழியாகவே நடக்கின்றன. கேள்விகளும் வாதவிவாதங்களுமே ஆழமான புரிதல்களுக்கு இட்டுச்செல்லும் என்பது அங்குள்ள அணுகுமுறை. பேராசிரியரிடம் மதிப்பும் மரியாதையும் மாணவர்களுக்கு உண்டு என்றாலும் பேராசிரியரின் கூற்றில் குறைகண்டுபிடிப்பதையோ அவருடைய கருத்துக்கு எதிர்க்கருத்துக் கூறுவதையோ மரியாதைக் குறைவான செயல்களாக அங்குள்ள மாணவர்கள் கருதுவதில்லை. ஆசிரியர்களும் வாதவிவாதங்களையே விரும்புகின்றனர்.
சிங்கப்பூரின் வகுப்புகளில் ‘பவர் பாயிண்ட்’ முக்கியமான இடத்தை வகிப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அவ்வப்போது எழுதிக் காட்டுவதும் சில ‘ஸ்லைடு’கள் பயன்படுத்துவதும் உண்டு. மொத்தப் பாடத்தையும் வரிவரியாக முன்கூட்டியே தயாரிப்பதில்லை. அவரவர் தேவைக்கேற்ப குறிப்புகளை மாணவர்கள் எழுதிக்கொள்வர். அந்தவகையில் மாணவர்கள் விழிப்புடன் இருந்து உன்னிப்பாகப் பாடத்தைக் கவனிக்கவும் அந்தமுறை உந்துகிறது. கற்பிக்கப்படும் விஷயங்களைப் பெரும்பாலும் மனக்கண்ணிலேயே உள்வாங்கி கிரகித்துக்கொள்ள வேண்டியிருக்கும் அத்தகைய முறை மாணவர், ஆசிரியர் இருவருக்குமே சவாலானதுதான் என்றாலும் ஆக்ககரமான விளைவுகளை அளிக்கின்றன என்பதை நடைமுறையில் காணமுடிகிறது.
உங்கள் ஆய்வுகளிலும் கற்பித்தலிலும் தமிழ்த் திரைப்படங்களைக் குறித்த அலசல்களும் கண்ணோட்டங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. திரைப்படங்கள் தமிழ்ச் சமூகத்தில் பொழுதுபோக்கு என்பதைத்தாண்டிய நிலைக்கு வந்துவிட்டதால் அவ்வாறு நிகழ்கிறதா?
தமிழ் வாழ்க்கையுடன் திரைப்படம் இரண்டறக் கலந்துவிட்டது. தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பது, அவற்றைக் குறித்துப் பேசுவது, அன்றாட வாழ்க்கைத் தருணங்களில் திரைப்பட வசனங்களைப் பயன்படுத்துவது, திரையிலிருப்பதை நிஜத்திற்குக் கொண்டுவருவது, கருத்துகளையும் நிலைபாடுகளையும் உருவாக்கிக்கொள்வது எனப் பல்வேறு வடிவங்களில் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழர் வாழ்வில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. திரைப்படங்கள் என்றாலே திரையரங்குகள் என்ற நிலை இன்றில்லை என்பதால் சின்னத்திரையில் வரும் தொடர்கள், குறும்படங்கள், நாடகங்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
என்னுடைய ஆய்வுகளிலும் கற்பித்தலிலும் திரைப்படங்கள் இடம்பெறுவதற்கு, சொல்லப்படும் கருத்து உடனடியாகவும் நேரடியாகவும் புரிந்துகொள்ளப்பட அது வாய்ப்பளிக்கிறது என்பதே முக்கியக் காரணம். என்னுடைய அணுகுமுறை நல்ல பலனை அளித்துள்ளதைக் காணமுடிகிறது. ஒவ்வோர் அரையாண்டின் இறுதியிலும் எந்தவிதமான பாடங்களைக் கற்கவிரும்புகிறீர்கள் என்று மாணவர்களிடம் தகவல் சேகரிக்கும்போது திரைப்படங்கள் சார்ந்த பாடங்களை அவர்களுள் பலர் குறிப்பிடுகின்றனர். ஆகவே திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றிப் பண்பாடு, அடையாளம் சார்ந்த கற்றல், கற்பித்தலிலும் திறம்படப் பயன்படுத்தலாம்.
தற்காலத் தமிழிலக்கியத்தில் காணப்படும் தமிழ் அடையாளம், தற்காலத் தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்படும் தமிழ் அடையாளம் இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? எது சமூக யதார்த்த நிலைக்கு நெருக்கமாக அமைகிறது?
தமிழ் இலக்கியத்தில் தனிமனிதர்களின் சித்திரிப்புகள் ஒன்றுசேர்ந்து ஒருவகையான தமிழ் அடையாளம் உருவாகிறது. ஆனால் திரைப்படத்தில் பொதுவாகத் தமிழ் அடையாளத்தை மனதிற்கொண்டு உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள் உருப்பெருகின்றன. அப்படித்தான் நான் பார்க்கிறேன். எழுத்து ஊடகத்திற்கும் காட்சி ஊடகத்திற்கும் அதனதன் எல்லைகளும் சாத்தியங்களும் உள்ளன.
தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் தமிழ் அடையாளங்கள் தமிழ்ச் சமூக யதார்த்த நிலைக்கு மேலும் மேலும் நெருக்கமாகத் தொடர்ந்து ஆகிவருகின்றன. சமூகத்திலிருந்து திரைப்படங்களும் திரைப்படங்களிலிருந்து சமூகமும் தொடர்ந்தும் அதிக அளவிலும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றன. இலக்கிய-சமூகக் கொடுக்கல் வாங்கலும் உண்டு என்றாலும் திரைப்படத்தின் தாக்கம் அதிகம். ‘பொன்னியின் செல்வன்’ போன்ற புகழ்பெற்ற இலக்கியமும்கூட திரைப்படமாகும்போது அதன் வீச்சும் ஊடுருவலும் சமூகத்தில் பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆயினும் சில நுட்பமான அடையாள, பண்பாட்டு அம்சங்கள் இலக்கியத்தில் துல்லியமாக வெளிப்படக்கூடும்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வன்முறைக் காட்சிகளுக்கான ‘NC16’ என சிங்கப்பூரில் வகைப்படுத்தப்பட்டது. முதல் பாகத்தை (PG13) குடும்பத்துடன் பார்த்தவர்கள் இரண்டாம் பாகத்தை ஒன்றாகத் திரையரங்கில் காணமுடியாத நிலை உண்டானது. காட்சி ஊடகங்களின் வன்முறை, அது இளையரை பாதிக்கும்விதம் ஆகியவற்றைக் குறித்த உங்கள் பார்வை…
இன்றைய இளையரிடம் பரவலாக உள்ள பல கணினி விளையாட்டுகளில் வன்முறை அதிகம். வன்முறையைப் பல்வேறு பாணிகளில் இடம்பெறச் செய்வது அவ்விளையாட்டுகளில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அடிப்படை அம்சமாக இடம்பெறுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை அவ்வப்போது இடம்பெறுவதும் அவற்றைக் குறித்துப் பேசுவதும் அன்றாட வாழ்வின் பகுதியாகவே ஆகிவிட்டது. ஆகவே திரைப்படங்களில் இடம்பெறும் ஒரு சில வன்முறைக் காட்சிகள் இன்றைய இளையரைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்குமா என்பதே ஆய்வுக்குரிய விஷயம். சில கட்டுப்பாடுகளும் தணிக்கையும் காட்சி ஊடகங்களுக்கு அவசியம் என்றாலும் திரைப்படங்களில் மட்டும் அவற்றைத் தீவிரப்படுத்துவதால் பெரிதாகப் பலனில்லை என்பது என் கருத்து.
உங்கள் ‘மாஸ் ஹீரோவின் மறுவரையறை’ (Redefining the mass hero) ஆய்வுக்கட்டுரையில், 21ஆம் நூற்றாண்டுத் தமிழ்த்திரைக் கதாநாயகனைப் பொறியியல் கல்லூரி மாணவனாகவோ பட்டதாரியாகவோ காட்டும் போக்கைச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஏன் அந்தப்போக்கு உருவானது?
ஒருவகையில் தாராளமயமாக்கத்தின் விளைவு அது. தாராளமயமாக்கம் அரசியல் மாற்றம் மட்டுமின்றிப் பண்பாட்டு மாற்றமும்கூட. நடுத்தரவர்க்கத்தின் அபரிமிதமான எழுச்சி, தமிழ்நாட்டில் காணுமிடங்களிலெல்லாம் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி எனக் கடந்த 20-25 ஆண்டுகளில் வந்தடைந்த பல மாற்றங்களின் ஒரு பகுதியாக அப்போக்கைப் பார்க்கிறேன். பொறியியலில் உயர்கல்வி (ஐ.ஐ.டி.) என்பது 1960களிலேயே தொடங்கிவிட்டது என்றாலும் அது பிராமணச் சமூகத்துடன் மட்டும் இணைத்துப் பார்க்கப்படும் அளவிற்குக் குறுகலாகவே இருந்தது. பிறகு 90களிலும் அதன்பின்னும் வந்த பொறியியல் கல்வி, தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியது. அதனால் அந்தக்களத்தில் ஒரு கதாநாயகனை வைத்து அவரை அனைவருக்குமான நாயகனாகப் பிரதிநிதிக்க முடிந்தது.
‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் ஒரு பொறுப்பற்ற பொறியியல் மாணவன் சமூகப் பிரக்ஞையும் அக்கறையும் கொண்டவனாக மாறிவிடுகிறான். ‘சாக்லேட் பாய்’, அதிரடி ‘ஆக்ஷன் ஹீரோ’ ஆகிய போக்குகளிலிருந்து கதாநாயக பிம்பங்கள் – கதைக்கு அவசியமே இல்லை என்றாலும் – பொறியியல் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகளாக ஆயின. படித்த கதாநாயகர்களுக்கேற்ப ‘கார்ப்பொரேட்’ வில்லன்களும் அதிகரித்தனர். கதாநாயகர்களின் பல்வேறு மதிப்பீடுகளும் மாறின என்றாலும் ‘ஆண்மை’ (masculinity) குறித்த கண்ணோட்டம் மாறவில்லை. மேலும் அது தீவிரமடைந்து கட்டுடல் (six-packs) கதாநாயகர்கள் அதிகரித்திருப்பதையும் காணமுடிகிறது.
மீண்டும் இலக்கியத்திற்கு வருவோம். இவ்வட்டாரத்தின் அண்மைய வெளியீடுகளில் உங்களைக் கவர்ந்த படைப்பு எது?
மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவானின் ‘கையறு’ நாவலை அண்மையில் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. ஒற்றைக் கதாநாயகத் தன்மை இல்லாமல் ஒரு சம்பவத்தில் மையம்கொள்ளாமல் கட்டம்கட்டமாக நகரும் வரலாற்றுத் தன்மையுடன் (episodic historical fiction) அமைக்கப்பட்டிருந்தது என்னைக் கவர்ந்தது. அந்நாவலுக்கு அந்த வடிவம் பொருத்தமாக இருந்தது.
உங்களுடைய ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்’ ஆய்வுநூல் எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. இதை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. எங்களைப்போலக் கல்வித்துறையில் இருப்போர் செய்திருக்கவேண்டிய வேலை அது. கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எனக்கு இவ்வட்டாரத்தில் வெளியான நூல்கள் அமெரிக்காவில் கிடைக்கவில்லை. இப்போதுதான் பல அண்மைய சிங்கப்பூர் வெளியீடுகளை வாங்கிச் சேகரித்துள்ளேன். விரைவில் வாசித்துவிடுவேன்.
தமிழ்ப் புனைவுகள் ஆங்கிலத்தில் நல்லமுறையில் மொழிபெயர்க்கப்பட்டுப் பேரளவில் உலக இலக்கிய வாசகர்களைச் சென்றடைந்தால் லத்தீனமெரிக்க இலக்கியத்தைப்போலத் தமிழிலக்கியமும் அதற்கான இடத்தைப் பெறும் என்றொரு நம்பிக்கை உண்டு. உங்கள் பார்வை என்ன? இதுவரை வெளியான மொழிபெயர்ப்புகள் உருவாக்கியுள்ள தாக்கம் குறித்த உங்கள் அனுபவம் என்ன?
ஆங்கிலத்திற்கு நல்லமுறையில் மொழிபெயர்க்கப்பட்டுச் சென்றடைந்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நம் சங்க இலக்கியம் உலகத்தின் கவனத்தை ஈர்த்ததற்கு ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்கக் காரணி.
அண்மையில் அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் பெருமாள் முருகன் நாவல்களைக் குறித்து ஓர் ஆய்வாளர் விரிவாகப் பேசினார். அவர் தமிழரோ, தமிழறிந்தவரோ அல்ல ஆனால் ஆசியப் புனைவுகளை ஆராய்பவர். ஆங்கிலத்தில் வந்த பெருமாள் முருகனின் அனைத்துப் படைப்புகளையும் அவர் வாசித்திருந்தார். ஆகவே கல்வியாளர்கள் மத்தியிலும் வாசகர்களிடமும் பரவலாகச் சென்றுசேர ஆங்கில மொழிபெயர்ப்பு உதவுகிறது என்பதைத் தொடர்ந்து காண்கிறேன்.
தமிழ்/இந்திய வாழ்க்கை குறித்த ஆங்கில உலகின் கண்ணோட்டங்களுக்குப் பொருத்தமான அல்லது அவர்கள் வாசிக்க விரும்பக்கூடியக் களங்களே அதிகம் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் உள்ளது. அதைத் தாண்டியும் மொழிபெயர்ப்புகள் வரும்போது தமிழிலக்கியம் மேலும் முழுமையாகச் சென்றடையும்.
இளையரைத் தமிழ் இலக்கிய வாசிப்புக்குள் அதிக அளவில் ஈர்க்க என்ன செய்யலாம்? நன்கு பலனளித்த உத்தி ஒன்றை உங்கள் அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொள்ள இயலுமா?
வாசிப்பு ஆர்வம் சூழலிருந்துதான் வரவேண்டும். அமெரிக்காவில் குடும்பத்திலும் சமூகத்திலும் வாசிப்புக்கு ஓர் இடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு பண்பாடாகவும் பல்வேறு நிறுவனங்களின் வழியாகவும் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இலக்கிய வாசிப்பு என்பது பொதுவான வாசிப்புப் பழக்கத்திலிருந்து தானாகக் கிளைக்கவேண்டியதே. வாசிப்பை வழக்கப்படுத்துவதும் வசப்படுத்துவதுமே அடிப்படைத் தேவை.
என் வகுப்பு மாணவர்களைக் கவனித்தவரையில், புலம்பெயர்ச் சூழலில் அமையும் இலக்கியப் படைப்புகள் அவர்களை ஈர்க்கின்றன. அவற்றின் களங்கள், சிக்கல்களோடு அவர்கள் தம்மை எளிதில் பொருத்திப் பார்த்துக்கொள்ள அப்படைப்புகள் ஏதுவாக இருக்கின்றன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடி வயது, ஆர்வம், சூழல் போன்ற காரணிகளுக்கேற்ப நூல்களைத் தேர்வுசெய்து கொடுப்பதும் பலனளிக்கலாம். வாசிப்பை வேண்டாவெறுப்பாக அல்லாமல் மகிழ்ச்சிகரமாக ஆக்குவதே முக்கியம்.
இலக்கியத்தில் பேச்சுத்தமிழ்ப் பயன்பாடு சிங்கப்பூரில் இளையரை ஈர்க்க உதவுமா?
நான் சுமார் நான்காண்டு சிங்கப்பூரில் கற்பித்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, இலக்கியத்தில் செந்தமிழ், பேச்சுத்தமிழ்ப் பயன்பாடுகள் பெரிதாக மாணவர்களிடையே வேறுபட்ட தாக்கத்தை அளிக்கவில்லை. ஆனால் இலக்கியம் குறித்த உரையாடல்களில் பேச்சுத்தமிழைப் பயன்படுத்த இளையர் தயக்கமும் அச்சமும் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். அதற்கு அவர்களைக் குறைசொல்வதை விடுத்து நம் கண்ணோட்டங்களை மாற்ற முயலவேண்டும்.
ஒரு மேலைநாட்டு ஆய்வாளர் தமிழைக் குறைகளுடன் பேசினாலும் வரவேற்றுப் பாராட்டும் நாம் சக தமிழர் கொஞ்சம் தடுமாறினாலும் பரிகாசம் செய்துவிடுகிறோம். அதனால் இளையர் அத்தகைய சூழல்களுக்கு ஆட்பட்டுவிடாமல் தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றனர். தமிழ் பேசக்கூடிய மேலைநாட்டு ஆய்வாளர்கள் பலர், நான் பார்த்தவரை, தமிழ்நாட்டிற்குச் சென்று பல்லாண்டுகள் பேச்சுத்தமிழ்ப் புழங்கும் சூழலில் தங்கியவர்கள். அவர்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு சிங்கப்பூர்ச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே பேச்சுத்தமிழைப் பொறுத்தவரை இளையர் அவர்களால் முடிந்தவரை பேசினாலும் நாம் வரவேற்கவேண்டும், அதில் குறைகண்டுபிடிப்பது சரியாக இராது.
உங்கள் பயணத்தின் இடையே குறுகிய கால அவகாசத்திலும் இந்த நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி!
சிறப்பான கேள்விகளைக் கேட்டு என் எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள உதவியதற்கு நன்றி!