சேஞ்ச் அலி

நாணயமும் நாணய மாற்றும்


எம்.ஏ. முஸ்தபா

நாணய மாற்றுத் தொழிலில் வியாபாரிகள் பலரோடு பழக்கம் ஏற்பட்டது. அதில் சிங்கப்பூரைக் கடந்து பாங்காக், துபாய், மலேசியா என வெளிநாடுகளில் இருப்பவர்களும் உண்டு.

அப்படித்தான் பாங்காக்கில் ஹர்பஜன் சிங் என்ற நாணய வியாபாரி அறிமுகமானார். அவர் சிங்கப்பூர் வங்கியில் கணக்கு வைத்திருந்து, அதை பாங்காங்கில் இருந்தே பயன்படுத்திக் கொண்டிருந்தார். அந்தக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அவர் சொல்லும் நபரிடம் கொடுக்கும் வேலை எனக்கு. அவரின் பணம் ஐந்து லட்சம் வெள்ளி எப்போதும் நம்மிடம் இருக்கும். ஏனென்றால் வாங்க வேண்டிய நபர் காலை மாலை என எப்போது வேண்டுமானாலும் வருவார். அந்த ஐந்து லட்சம் வெள்ளி விநியோகம் முடிந்ததும், மீண்டும் ஐந்து லட்சம் வெள்ளி எடுப்போம்.

ஒருவர் உடனே கொடுப்பார்; ஒருவர் தாமதமாகக் கொடுப்பார். விதிவிலக்காக யாரேனும் பணத்தை எடுத்துகொண்டு போயே போய்விட்டால் அவ்வளவுதான்.

சிங்கப்பூர்ச் சட்டவிதிப்படி கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பேன். பொதுவாகவே இந்தத் தொழிலில் கணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டும். பணம் கொடுத்துப் பணம் வாங்கும் தொழில் அல்லவா? வெறுமனே லாப நட்டம் பார்க்கும் தொழில் அல்ல. ஒருவர் உடனே கொடுப்பார்; ஒருவர் தாமதமாகக் கொடுப்பார். விதிவிலக்காக யாரேனும் பணத்தை எடுத்துகொண்டு போயே போய்விட்டால் அவ்வளவுதான். அதனால் யார் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்யவும் கணக்கு வழக்குகள் உதவும். அதனால் ஹர்பஜன் சிங்குக்கு தினமும் கணக்குகளை அனுப்பிக்கொண்டே இருப்பேன்.

அப்போது நான் தங்கம், வெள்ளிக் கட்டிகளை வாங்கி விற்றுக்கொண்டிருந்தேன். அவரும் நம்மிடம் வாங்குவார். அப்படிக் கொடுத்ததில் அவர் நமக்கு தரவேண்டிய ஐந்து லட்சம் வெள்ளியை வரவு செய்யாமல் விட்டுவிட்டோம். என்ன செய்வது எனக் குழப்பம். எப்படியும் அவரிடம் கணக்கு இருக்கும் இல்லையா? அதை வைத்து அவரிடமே கேட்டுவிடலாம் என்று என் ஆடிட்டரையும் அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க நேரில் சென்றேன்.

முழுவிபரத்தையும் சொல்லி ஐந்து லட்சம் வெள்ளியைக் கொடுக்கும்படிக் கேட்டேன். அதைக் கேட்ட அவர் “பாங்காக் வழக்கப்படி அன்றைய கணக்கு விபரத்தை அன்றே முடித்து குறிப்புத்தாள்களைக் கிழித்துப் போட்டுவிடுவோம். இல்லையென்றால் பல பிரச்சனைகள் வந்துவிடும். இருந்தாலும் உன்னை நம்புகிறேன். உன் கணக்கையும் நம்புகிறேன்” என்று சொல்லி பணத்தைக் கொடுத்தார். எத்தனையோ பேரிடம் அவர் பழகியிருந்தாலும் ஐந்து லட்சம் வெள்ளியை என் வார்த்தையை நம்பி எடுத்துக்கொடுத்ததற்கு என் மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்ததே காரணம். சமீபத்தில் 94 வயதில் இறந்துவிட்டார். மலேசியாவிலும் இதுபோல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

நாணயமாற்றில் இரண்டு விஷயங்கள் நடக்கும். நம்மை அறியாமல் கணக்கை விட்டிருப்போம். சில நேரம் அவர்கள் அறியாமல் கணக்கை விட்டிருப்பார்கள். எவ்வளவு சுத்தமாகக் கணக்கு வைத்திருந்தாலும் சில நேரம் தவறு நடந்துவிடும்தானே? அதனால் நாணயம் என்பது இந்த நாணயமாற்றுத் தொழிலில் ரொம்ப முக்கியம்.

நீங்கள் யோக்கியனாக இருந்தால் முதலீடு கூடத் தேவையில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் நம்பிக் கொடுப்பார்கள். நிறைய பணம் வைத்திருந்து திருட்டுத்தனம் செய்பவராக இருந்தால் அவர் மீது நம்பிக்கை அறவே வராது. ’ஸ்டாக் இல்லை’ என்று சொல்லி அவரிடம் வியாபாரம் செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள். தமிழ் முஸ்லீம்களில் 99 வீதம் பேர் தொழிலை நாணயத்தோடு செய்துவந்தார்கள். இன்றைக்கும் தமிழ் முஸ்லீம்கள் தொழிலில் நீடிக்க அந்த நாணயம்தான் காரணம்.

எட்டு லட்சம் வெள்ளியாக இருந்தாலும் வங்கியில் போடுவதைக் காட்டிலும், கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கிறார்கள். வங்கிக்குச் சென்றால் வரிசையில் நிற்க வேண்டும்; காசோலை எழுதித் தரவேண்டும்; காத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் சென்று ’தா’ என்றால் தந்துவிடப் போகிறார்கள் என்று சொல்வார்கள். இதற்கு அடிப்படையானது தமிழ் முஸ்லீம்கள் மீதுள்ள நம்பிக்கை. ஏனென்றால் புடவைக் கடை என்றால் துணிதான் மூலதனம். ஆனால் பணமாற்றில் பணம்தான் மூலதனம். கொடுக்க வந்தாலும், வாங்க வந்தாலும் பணத்தோடுதான் வேலை. அதனால் நம்பிக்கைதான் முக்கியம்.

எவ்வளவு சுத்தமாகக் கணக்கு வைத்திருந்தாலும் சில நேரம் தவறு நடந்துவிடும்தானே? அதனால் நாணயம் என்பது இந்த நாணயமாற்றுத் தொழிலில் ரொம்ப முக்கியம்.

என்னுடைய உறவினர் கடையில் நடந்த சம்பவம் இது. அப்போது எல்லாம் ‘கிரடிட் கார்டு’ கிடையாது. ‘டிராவலர்ஸ் செக்’குகளில் செலவு செய்தார்கள். முக்கியமான வியாபாரிகளுக்குக் காலையில் டிராவலர்ஸ் செக் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து விடுவார்கள். மாலையில் அந்த டிராவலர்ஸ் செக்கை வைத்துப் பணம் வசூல் செய்வார்கள். டிராவலர்ஸ் செக் என்பது அந்த நாட்டுக்குச் சென்று ‘கிளியரன்ஸ்’ ஆகி வரும்வரை அதற்கு மதிப்பு இருக்கும்.

இப்படி நடந்துகொண்டிருக்கும்போது வங்கியின் அதிகாரியே வந்து ஒருவரை அறிமுகப்படுத்துகிறார். அவர் அமெரிக்கன் ‘டிரஸ்ஸரி செக்’கைத் தருகிறார். அப்போது பிலிப்பைன்ஸில் அமெரிக்கக் கடற்படை இருந்தது. அமெரிக்கக் கடற்படையில் பணிபுரிபவர்களுக்கு டிரஸ்ஸரி செக்கில்தான் சம்பளம் தரப்பட்டு வந்தது.
‘டிரஸ்ஸரி செக்கை மொத்தமாக உங்களிடம் தருகிறேன்’ என்கிறார் அவர். இவர்களுக்கு அந்த செக் பற்றி ஏதும் தெரியவில்லை. முன்பின் பார்த்ததுகூட இல்லை. இப்போதுள்ள ஐம்பது வெள்ளி நோட்டு அளவில் ‘பார் கோடு’ போட்டிருக்கும். அதனால் அதை மறுக்கிறார்கள். ஆனால் அவரோ “இந்த செக் அந்த நாட்டுக்குச் சென்று கிளியராகி உங்களுக்குப் பணம் வந்ததும் எங்களுக்குக் கொடுங்கள் போதும். நாங்கள் தினமும் செக் தருகிறோம்” என்கிறார். அதை இவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

வழக்கமாக டிராவலர்ஸ் செக் என்றால் மூன்று நாளில் கிளியராகி விடும். வங்கியில் சொல்வதைக் கேட்டு இன்னும் நான்குநாள் சேர்த்து ஒருவாரம் கழித்துப் பணம்தருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஏற்ற டிராவலர்ஸ் செக்குகளும் தருகிறார்கள். ஒரு லட்சம், இரண்டு லட்சம் எனக்கூடிக்கூடி மில்லியன் கணக்கில் பரிமாற்றம் நடக்கிறது. இவர்களுக்கு டிரஸ்ஸரி செக் கிளியராகி பணம் வந்துவிடும். இவர்கள் தந்த டிராவலர் செக் மூலம் அவருக்குப் பணம் கிடைத்துவிடும். இந்தப் பரிமாற்றத்தில் யாருக்கும் பிரச்சனை இல்லை.

பெரிய மோசடிக்காரனிடம் மாட்டியும் அதிலிருந்து மீண்ட இவர்கள் இப்போதும் தொழில் செய்வதற்கு ஒரே காரணம் நாணயமாக இருப்பதுதான்.

திடீரென்று, அவர் கொடுத்த செக் திரும்பிவிடுகிறது. அதைத் தெரியப்படுத்தியதும் அதற்குப் பதிலாக வேறு செக் கொடுக்கிறார். இப்படி அடிக்கடி நடக்கிறது. ஒருநாள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் நின்றுவிடுகின்றன. வங்கியிலும் இது போன்ற செக்கை வாங்க வேண்டாம் என்று இவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். அதனால் இவர்களும் இனிமேல் டிரஸ்ஸரி செக் வேண்டாம் என்று அவரிடம் தெரிவித்துவிடுகிறார்கள்.

தெளிவாகப் போய்க் கொண்டிருப்பதைப் போல இருந்தது எங்கே சிக்கல் ஆனது தெரியுமா? அமெரிக்க வங்கி விதிகளின் படி Treasury Bill ஒரு வருடம் மாற்றத் தக்கவகையில் புழக்கத்தில் இருப்பதால் அதைப் பயன்படுத்தித்தான் அந்த பிலிப்பைன்ஸ்காரன் ஏமாற்றியிருக்கிறான். அதைக் கண்டுபிடித்து அவன் மேல் வழக்குப் பதிவு செய்து சிறையிலும் அடைத்துவிட்டார்கள். ஆனால் இந்த ஏமாற்று விவகாரத்தில் அந்த வங்கியையே மூடிவிட வேண்டியதாயிற்று.

பணமாற்று செய்தவர்கள் முடங்கிவிட்டார்கள். இதில் யாரும் யாரையும் ‘சார்ஜ்’ பண்ண முடியாது. எளிமையாகச் சொல்வது என்றால், எனக்கு ஒரு செக் வரவேண்டியுள்ளது; அதில் உங்கள் பெயர் போட்டு வங்கிக் கணக்கில் போடச் சொல்கிறேன். அது கிளியர் ஆகியது. இரண்டுநாள் நீங்கள் சுத்தலில் வைத்திருந்து பிறகு எனக்குத் தருவீர்கள். ஆனால் நான் யாரோ ஒருவரின் ‘செக் புக்’கைத் திருடிக்கொண்டு உங்களிடம் தந்திருந்தால் வங்கி எப்படிப் பணம்தரும்? இதுதான் இந்தச் சம்பவத்தில் நடந்தது.

இது பற்றி செய்தித்தாள்களில் ’வணிகரை ஏமாற்றியவர்கள்’ என்று மேலோட்டமாகத்தான் செய்தி வந்தது. இப்போது மாதிரி சட்டென்று புத்தகங்களும் வராது. இது நடந்தது 1983ஆம் ஆண்டில். இவ்வளவு பெரிய மோசடிக்காரனிடம் மாட்டியும் அதிலிருந்து மீண்ட இவர்கள் இப்போதும் தொழில் செய்வதற்கு ஒரே காரணம் நாணயமாக இருப்பதுதான்.

நம்பிக்கையின் பேரால் சிலர் ஏமாந்ததும் இருக்கும் இல்லையா? நிச்சயமாக இல்லை. சாலையில் நின்றுகொண்டே பணமாற்று செய்பவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் எவ்வளவு தொகை இருக்கப்போகிறது? 1000, 2000 வெள்ளிதானே? அதற்கு மேல் என்றால் பெரிய நிறுவனத்திற்கு வந்து மாற்றிக் கொடுப்பார்கள். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமே இல்லையே.

அந்தக் காலங்களில் எத்தனையோ லட்சங்களில் வியபாரம் நடந்திருக்கிறது. எந்த இடத்திலும் மோசடி நடந்தது இல்லை. ‘கள்ளநோட்டைக் கலந்து கொடுத்தாங்க’ என்று ஒரு புகாரும் வந்தது இல்லை. தப்பான விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நூறு வீதம் சொல்லலாம். அதனால்தான் வங்கியில் பணம் போட்டதைப்போல நம்பலாம் என்று பணமாற்று செய்பவர்கள் மீது நல்ல மரியாதை இருக்கிறது.