நானும் தமிழும்

இத்தொகுப்பில் தமிழ் அல்லாத பிற துறைகளில் சிறந்து விளங்குகின்ற 10 வல்லுநர்கள், தமிழ்மொழி எவ்வாறு தங்கள் வாழ்விலும் பணியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளனர். இளையர்களுக்குத் தமிழின்பால் ஆர்வத்தை அதிகரிக்கவும் அவர்களின் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் உருவான இத்தொகுப்பின் காணொளிப் பதிவுகளைக் காண விரைவுக் குறியீட்டை வருடலாம்.

இனக் கண்ணோட்டத்தை மாற்றும் கலைக்கருவி

அஷ்வாணி அஷ்வத்,
இலக்கியக் கலைகள் ஆசிரியர்

சிங்கப்பூரில் சுமார் 50 ஆண்டுகால (1960-2010) ஆங்கில நாடகங்களை நான் ஆராய்ந்தபோது அவற்றில் இந்தியக் கதாபாத்திரங்களைக் காண்பது மிக அரிதாக இருந்தது. அப்படியே காணமுடிந்தாலும் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழரைப்போல நடித்திருப்பார், தமிழில் பிழைபடப் பேசியிருப்பார். மேலும், தமிழர்க் கதாபாத்திரங்களும் கேலிக்குரியவையாகவோ தமிழரைக் குறித்த ஒற்றைப்படையான கண்ணோட்டத்திலோ அமைந்திருந்ததையும் கண்டேன். அவ்வுண்மை என்னைத் தொந்தரவு செய்தது. அதேநிலை தொடர்ந்தால் பல்லினச் சமுதாயத்தில் தமிழரைக்குறித்த தவறான எண்ணங்கள் ஆழமாகப் பதியக்கூடும் என்று அஞ்சினேன். என் ஆய்வு உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் Absence Makes the Heart என்னும் கதையாடல் நாடகத்தை (narrative play) எழுதினேன்.

மேலும், சூழலை மாற்றவேண்டி, நான் எழுதும் ஆங்கில நாடகங்களில் தமிழரை உள்ளது உள்ளதுபோலவே பதிவுசெய்யத் தொடங்கினேன். அம்முயற்சிகள் அனைத்து இனத்தினரிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன. எடுத்துக்காட்டாக, அண்மையில் Strawberry Girls என்னும் ஆங்கில நாடகத்தை எழுதினேன். ஒரு தமிழ்க் குடும்பத்தில், பெண் பூப்பெய்துதல், மாதவிடாய் தொடர்பாக எழும் சிக்கல்களை மையமாகக்கொண்டும் கதையை அமைத்திருந்தேன். பல இனங்களிலும் பண்பாடுகளிலும் இச்சிக்கல்கள் இருப்பதால் அவற்றை உடனே தம் பிரச்சனைகளோடு தொடர்புபடுத்திக்கொள்ள அவர்களால் முடிந்தது. அப்படியான பொதுப்புள்ளிகளிலிருந்துதான் நம்மைப்போலவேதான் தமிழர்களும் என்கிற எண்ணம் பிறருக்கு உருவாக முடியும்.

கலை ஓர் ஒருங்கிணைப்பு சக்தி என்ற நம்பிக்கை எனக்குண்டு. தமிழரையும் தமிழ்ப் பண்பாட்டையும் சரியான முறையில் பிரதிபலிக்கும், பிரதிநிதிக்கும். என் கலை முயற்சிகள் தொடரும்.

தாய்மொழி ஒரு மருந்து, அருமருந்து!

எம்.பிரேமிகா,
மருத்துவர்

வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் கொவிட் தொற்றுக்கு ஆளான 2020இல் நான் செங்காங் பொது மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அவர்களில் சுமார் 800 பேருக்கு நான் சிகிச்சை அளித்தேன். ஐம்பது வயதான தமிழர் ஒருவருக்குத் தொற்று கண்டிருந்தது. எனக்குத் தமிழ் பேசத்தெரியும் என்று தெரிந்தவுடன் தன் உடல்நிலை எப்படி உள்ளது, தேறிவிடுமா என்றெல்லாம் அவர் மனதில் தேக்கி வைத்திருந்த பல கேள்விகளைப் பதற்றத்துடன் கேட்க ஆரம்பித்தார். நானும் பொறுமையாக பதிலளித்துக்கொண்டே வந்தேன். ஒருகட்டத்தில் திடீரென்று உடைந்து அழத்தொடங்கிவிட்டார்.

இந்தியாவில் அவரது மகள் இறந்துவிட்டாள் என்பதும் கொவிட் கட்டுப்பாடுகளால் இறுதிச்சடங்குக்கூட அவரால் செல்லமுடியவில்லை என்பதும் பிறகுதான் தெரிந்தது. மேலும், விரக்தியில் இருக்கும் அவரது மனைவிக்கு ஆறுதலாக அருகில் இருக்கமுடியவில்லையே என்று அவர் கலங்கினார். என்னால் முடிந்த ஆறுதலைச் சொல்லித் தேற்றினேன். மருந்து அளிக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைக்கு அப்பால் ஒரு மருத்துவரின் மொழி, நோயாளிக்கு அளிக்கக்கூடிய ஆறுதலையும் நம்பிக்கையையும் அந்த அனுபவம் எனக்குக் காட்டித் தந்தது.

என் பணியிடத்தில், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழில் உரையாடுகிறேன். நோயாளிகள் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றால் அவர்களிடமும் தமிழில் பேசுகிறேன். மூத்தோரிடம் தடுப்பூசி குறித்த குழப்பங்களைத் தெளிவிக்கவும் எனக்குத் தமிழ் உதவியது. தாய்மொழியாக மட்டுமின்றித் தொழில்மொழியாகவும் பயன்படுத்த ஓர் அரிய வாய்ப்பை எனக்களித்த என் தமிழுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அன்று மனப்பாடம், இன்று வாழ்க்கைப் பாடம்

பார்கவ் கணேஷ்,
வெளியுறவுத்துறை அதிகாரி

என் சிறுவயதில், அன்றாடம் ஒரு திருக்குறளை இரவில் தூங்குவதற்குமுன், என் தந்தை அழுத்தமாக மனதிற் பதியும்படி சொல்வார். பொருள் புரியாவிட்டாலும் அதை மனப்பாடம் செய்யவேண்டியது என் வேலை. அப்படி நான் மனப்பாடம் செய்த பல குறட்பாக்களுள் ஒன்று, “அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று” (682). இக்குறள் சொல்லும் அன்பு என்னும் தேசப்பற்று, அறிவு என்னும் பேசவேண்டிய விஷயத்தைக் குறித்த விரிவான, ஆழமான புரிதல், சொல்வன்மை எனப்படும் சாதுரியமாகப் பேசும் திறன் இம்மூன்றும் அரசநயச் செயல்பாடுகளில் எவ்வளவு அவசியம் என்பது ஒரு வெளியுறவுத்துறை அதிகாரியாக இன்று நன்றாகப் புரிகிறது.

நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது, பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் வழியாக மகாபாரதமும், வாலியின் அவதார புருஷன் வழியாக ராமாயணமும் எனக்கு அறிமுகமானது. அவ்வயதில் அரசகுடும்பச் சண்டைகளாகவும் தனிப்பட்டவர்களின் போராட்டங்களாகவும் நான் புரிந்துகொண்ட அவ்விரு காப்பியங்களும் அரசியல், அரசநய விவகாரங்களின் அடிப்படைகளைத் தெள்ளத்தெளிவாக போதிக்கின்றன என்பதை இன்று உணர்கிறேன். அறம், தத்துவம், உத்திபூர்வ அரசியல் குறித்த பல சிக்கல்களுக்கு இக்காப்பியங்களின் உதவியை அவ்வப்போது நாடுகிறேன்.

தமிழை ஒரு பாடமாகத்தான் படிக்கத் தொடங்கினேன். காலப்போக்கில் அதன் அழகையும் இலக்கியச் சுவையையும் ரசித்தேன், ருசித்தேன். இன்று என் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாகத் தமிழ் ஆகிவிட்டது.

தாய்மொழி, உணர்வுகளுக்கான வெளி

முனைவர் ஷர்மிலி செல்வராஜி,
நரம்பியல் அறிவியலாளர்

என் அறிவியல் ஆராய்ச்சி மறதிநோய் குறித்தது. அறிவியல் ஆய்வில் தோல்விகளைச் சந்திப்பது ஓர் அன்றாட நிகழ்வு. ஆயினும் அதன்விளைவாக ஆத்திரம், சலிப்பு, வருத்தம் எல்லாம் அவ்வப்போது சூழ்ந்துகொள்ளும். அதுபோன்ற தருணங்களில் தமிழ் எனக்குத் துணையாக வருகிறது. என் உணர்வுகளைத் தமிழில் கவிதைகளாக வெளிப்படுத்துகிறேன். என் நோட்டுப்புத்தகங்களில் அறிவியல் குறிப்புகளோடு நான் கிறுக்கிய தமிழ்க்கவிதைகளும் இருக்கும். என் பட்ட இறுதி ஆய்வறிக்கையிலும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்கிற தமிழ் வாக்கியத்தைச் சேர்த்தேன். ஒருவகையில் தமிழ் என் உணர்வுகளுக்கான வெளியாகவும் வெளிச்சமாகவும் ஆகியிருக்கிறது.


அறிவியல் ஆராய்ச்சியில் பெண்கள் ஈடுபடுவது குறைவு. ஆகவே இத்துறையில் சாதிக்கவேண்டும், பெண்களின் அடையாளத்தை ஆழப் பதிக்கவேண்டும் என்னும் தீர்மானத்துடன் செயல்பட்டு வருகிறேன். என் ஆய்வுக்கூடத்தில் “வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என உக்கிரமாகக் கேட்கும் பாரதியின் படமும் அவ்வரியும் இருக்கும். அதைப் பார்க்கும்போதெல்லாம் என் உற்சாகம் கூடுகிறது, துடிப்புடன் செயலாற்ற முடிகிறது.

என் ஆராய்ச்சி அடுத்தகட்டத்துக்குப் போகும்போது கூடவே தமிழையும் கூட்டிச் செல்லவிருக்கிறேன். மறதிநோய் குறித்த விழிப்புணர்ச்சியை எளிய தமிழில் பேசவும் எழுதவும் திட்டமிட்டுள்ளேன். அம்முயற்சிகள் சிங்கப்பூரைத் தாண்டியும் செல்லவேண்டும் என்பதே என் ஆவல். தமிழ் அறவியலில் மட்டுமின்றி அறிவியலிலும் தொடரவேண்டும். எங்குசென்றாலும் சரி, தமிழும் நானும் இணைந்தே இருப்போம்.

உதவிக்கும் வருகிறது, உற்சாகமும் அளிக்கிறது!

குமரன் ராசப்பன்,
மருத்துவர்

என் மருத்துவப் பணிக்கு அப்பால் மலையேறும் விருப்பார்வமும் எனக்குண்டு. எவரெஸ்ட்டில் ஏறியிருக்கிறேன். தமிழர் எவராவது உடன் ஏறும்போது அதுவொரு தனி உற்சாகமாக, குடும்பத்துடன் மலையேறுவதைப்போல இருக்கும். அவ்வாறு ஒருவரிடம் தமிழா? என்று கேட்டபோது அவர் தெலுங்கு என்றும், தமிழில் பேசமுடியும் என்றும் சொன்னார். அது அப்போது அளித்த மகிழ்ச்சியும் துணையும் தமிழின் அருமையை எனக்கு உணர்த்தியது. அது தமிழ் என்னை ஆழமாகத் தொட்ட முதல் தருணம்.

இரண்டாவது, கைதிகளைச் சிறையில் சந்தித்துப்பேச, குறிப்பாகக் கைதிகளாக இருந்த தமிழ் இளையர்களிடம் தமிழில் பேசிப்பழக, எனக்குக் கிடைத்த வாய்ப்பு. அவர்களிடம் நான் முதலில் ஏறிய இரண்டு மலைகளின் உச்சிகளை அடைய இயலவில்லை என்று சொன்னேன். அவர்களுடைய வாழ்க்கைப் பின்னடைவுகளுடன் என் நிலையை இணைத்துப் பார்த்த அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். மேலும் நான் பத்திரமாக மலையேறித் திரும்பவேண்டும் என எனக்காக வேண்டிக்கொண்டார்கள். அப்படியே நானும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தேன், நல்லபடியாகத் திரும்பினேன். அவர்களுடன் என் நட்பு நீடிக்கிறது. அவர்களுடனான உறவு ஆழப்பட்டது தமிழால்தான்.

இறுதியாக, என் தொழில் அனுபவம். நான் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக இருக்கிறேன். தமிழ் பேசக்கூடிய நோயாளிகளிடம் தமிழில் பேசும்போது அவர்களுக்குத் துணிவையும் நம்பிக்கையையும் கூட்டமுடிகிறது. என் பரிந்துரைகளை அவர்கள் தயக்கமின்றி ஏற்பதையும் காணமுடிகிறது. ஒட்டுமொத்தமாக, வேலையிலும் சரி வெளியிலும் சரி தமிழ் தனக்கே உரித்தான விதங்களில் எனக்கு உதவியும் உற்சாகமும் அளித்துவருகிறது.

விட்டுப்போன தொடர்பு கிட்டிவிட்டது!

ரமேஷ் செல்வராஜ்,
வழக்கறிஞர்

நான் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அதன் தமிழ்ப்பேரவைத் தலைவராக இருந்தேன். ‘சங்கே முழங்கு’ போன்ற பெரிய அளவிலான தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் மாநாடுகள் எனத் தமிழுடன் நெருக்கமான உறவு எனக்கு அங்கு உண்டானது. ஆனால் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியவுடன் தமிழுக்கான வாய்ப்புகள் அற்றுப்போயின. ஈராண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு ஊழியருக்காக சிங்கப்பூரில் நான் வழக்காட நேர்ந்தபோது மீண்டும் தமிழில் பேசிப்புழங்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. கட்டணமின்றி அவ்வழக்கை நான் நடத்தினேன். நீதிமன்றத்தில் அவர் தமிழிலேயே பேசினார். தமிழ் தெரிந்ததால் ஒருவருக்கு அணுக்கமாக உதவ முடிந்தது என்னும் உண்மை எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.

வழக்குகளைத் தவிர தமிழில் கட்டணமில்லாச் சட்ட ஆலோசனைகளையும் சமூக மையங்களில் அளித்துவருகிறேன். தமிழர்கள் இணைந்து தொடக்கிய ‘தாறுமாறு ஓட்டக்குழு’ என்னும் குழுவிலும் உறுப்பினராக உள்ளேன், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறேன். ஓட்டம் மட்டுமின்றி நல்வாழ்வுக்கான உடற்பயிற்சிகள், பொதுநல நிகழ்ச்சிகள் என இவ்வமைப்பு எனக்குத் தமிழ்ச் சமூகத்துடன் உறவாட அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. அண்மையில் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்காக நிதி திரட்டினோம். கிட்டத்தட்ட ஒரு பெரிய குடும்பம்போலச் செயல்படுகிறோம். அச்செயல்பாடுகளால் தமிழ்ப்புழக்கம் இயல்பாக அதிகரிக்கிறது. தமிழோடு என் தொடர்பைத் தொடர்ந்து தக்கவைக்கவேண்டும் என்பதோடு அதிகரிக்கவும் வேண்டும் என்பதே என் விருப்பம்.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து…

முகமது ஃபாரூக்,
பார்வைப் பரிசோதகர் (optometrist)

கண்மருத்துவத் துறையில் என் ஆராய்ச்சிகளைச் செய்தபோதுதான் எதிர்பாராத வகையில் தமிழுடன் நெருக்கமான தொடர்பு உண்டானது. ஆய்வுகளில் பங்கேற்போர் அளிக்கும் ஒப்புதல் படிவங்கள் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இருக்கவேண்டியது அவசியம். வழக்கமாக ஆங்கிலத்தில் முதலில் உருவாக்கப்பட்டு, பிறகு மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அப்படியான மொழிபெயர்ப்புகளின் வழியாகத் தமிழுடன் பரிச்சயம் அதிகரித்தது. மேலும் வேலையிடத்தில் சில ஆங்கிலப் பதங்களுக்கான தமிழ்ச்சொற்கள் தேவைப்படும்போதும் உதவுவேன். எடுத்துக்காட்டாக, pharmachyக்கு மருந்தகம் என்பதுபோன்ற மொழிபெயர்ப்பு ஆலோசனைகளை வழங்குவேன்.

மொழிபெயர்ப்புகளுக்கு அப்பால், விழிநல விழிப்புணர்வு, மருத்துவம் தொடர்பான உரைகளைத் தமிழ் பேசும் மக்களிடையே ஆற்றியிருக்கிறேன். அதேநோக்கங்களை முன்வைத்துக் கையேடு ஒன்றை உருவாக்கவும் பங்களித்தேன். அதன்பொருட்டுத் தமிழில் சில வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ளேன். இம்முயற்சிகள் தொடரும். ஆராய்ச்சியில் தொடங்கிய தமிழ்த் தொடர்பு பிறகு சமூக சேவைக்கு விரிவடைந்து தற்போது தனித்திட்டமாகவும் உருவெடுத்துள்ளது.

தமிழ் சென்று தைக்கும் ஆழம் என்னை எப்போதுமே ஈர்த்துவந்திருக்கிறது. தமிழோடு பிணைந்திருப்பதை நான் விடப்போவதில்லை. தொடர்ந்து பேசிப்புழங்கும்போதுதான் தமிழ் உயிரோட்டமாக இருக்கும். ஒரு வாழும்மொழியாகத் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க விரும்புகிறேன்.

ஆங்கில விமர்சனத்தினுள் சென்ற தமிழ்க்கூறுகள்

முனைவர் சித்ரா சங்கரன்,
ஆங்கில இலக்கியப் பேராசிரியர்

ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன். ஆங்கில இலக்கியம் ஆங்கிலேயரின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் வேர்கொண்டது என்பதால் அதில் புதிதாக ஒரு பார்வையை அளிப்பது எனக்குச் சவாலாக இருந்தது. அப்போதுதான் ராஜா ராவ், ஆர்.கே.நாராயண் போன்ற இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளில் சைவ சித்தாந்தக் கூறுகளை ஆராயலாம் என்று முடிவெடுத்தேன். என் குடும்பப் பின்புலத்தின் காரணமாகச் சிறுவயதிலிருந்தே பழந்தமிழ் இலக்கிய அறிமுகமும் இருந்ததால் என்னால் விரைவாக ஆய்வை நிறைவுசெய்ய முடிந்தது.

அண்மைக்காலத்தில் இலக்கியச்சூழியல் விமர்சனம் (ecocriticism) என்னும் கருத்தாக்கம் பரவி வருகிறது. அது சூழியல் பிரச்சனைகள் சார்ந்து இலக்கியத்தை அணுகுகிறது. இயற்கையைக் கட்டியாளும் மனிதனின் பேராசையே சூழியல் பிரச்சனைகளுக்குக் காரணம் என்கிற பார்வையை மேலை விமர்சகர்கள் கொண்டிருந்தனர். நான் நம் சங்க இலக்கியத்தில் இயற்கை, பண்பாடு, இசை, கடவுள் எனக் கூட்டாகச் சேர்ந்த அமைப்பே திணை என்னும் கோணத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகப்படுத்தியபோது அது வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஆதிபராசக்தி உருவகத்தின் ஒரு பகுதியாக இயற்கை அமைகிறது என்பதைக் குறித்துப் பேசிவருகிறேன். ஆணாதிக்கச் சமூகம் பெண்களையும், இயற்கையையும் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரமுயன்றதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் என்னும் சூழியல் பெண்ணியவாதிகளின் பார்வைக்கு எதிரானது என் பார்வை. இவ்வாறு தமிழ் அம்சங்களைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்துக்குள் கொண்டுசெல்வது என் வாழ்வில் தொடர்கிறது.

பலமும் பாலமும் ஆன தாய்மொழி

முனைவர் மு.அ.காதர்,
பட்டயக் கணக்காய்வாளர்

ஒரு பட்டயக் கணக்காய்வாளராக அன்றாடம் பல வாடிக்கையாளர்கள் பலரிடம் தமிழில் உரையாடும் வாய்ப்பு எனக்கிருக்கிறது. தமிழில் பேசி அவர்களின் எண்ணங்களையும் தேவைகளையும் ஆழமாகவும் துல்லியமாகவும் புரிந்துகொள்ளும்போது முழுமையான சேவையை ஆத்மார்த்தமாக அளிக்கமுடிகிறது. தமிழ் எனக்கு பலமாகவும் வாடிக்கையாளருடன் பாலமாகவும் அமைகிறது. சிறுவயதிலிருந்தே என் குடும்பத்தினர் என்னைப் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் தமிழ்த் திறனை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்ததே என் தமிழார்வத்துக்குக் காரணம். அது இன்றுவரை தொடர்கிறது.

ஒருமுறை அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் வருமானவரி தொடர்பாகச் சில சேவைகளைப் பெறுவதற்காக என்னைத் தொலைபேசியில் அழைத்தார். எங்கள் உரையாடல் ஆங்கிலத்தில் தொடங்கியது. அவரது பெயரிலிருந்து அவர் தமிழராக இருக்கலாம் என ஊகித்து, “நீங்கள் தமிழ் பேசுவீர்களா?” என்று கேட்டேன். அடுத்தகணம் மலர்ச்சியுடன் அவர், “நீங்க நம்ம ஆளா?” என்று கேட்டார். நம்மில் ஒருவராகப் பார்க்கத் தூண்டுவதுதான் தமிழின் சிறப்பு, அதுவே தமிழ் தரும் ஆழ்ந்த இணைப்பு. தமிழை வாசிப்போம், தமிழை நேசிப்போம்!

தலைமுறைகளாகத் தொடரும் தமிழ்ப்பயணம்

முனைவர் இளவழகன் முருகன்,
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்,
தொழில் முனைவர்

தாய்மொழி தமிழை என் தாய் எனக்குள் இளவயதிலேயே ஆழமாக விதைத்துவிட்டார். தமிழ்ச் செவ்விலக்கியங்களில் கிளைத்த அறவுரைகளும் அறிவுரைகளும் என்னைப் பல்வேறு வழிகளில் செம்மையாக வழிநடத்தி வருகின்றன. இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்வதைக் கைக்கொள்ளவும், இனிய உளவாக இன்னாத கூறாமலிருப்பதையும் தமிழே எனக்குக் கற்பித்து அலுவலக, சமூக உறவாடல்களைச் சுமூகமாக மேற்கொள்ள உதவுகிறது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்துபார்க்கச் சொன்ன குறளால் என் வளமேலாண்மை மேலும் வளம்கொழிக்கிறது.

வழிகாட்ட மட்டுமின்றி மனஅழுத்தம், சோர்வு ஏற்படும்போது ஆறுதலுக்கும் மீண்டெழுதலுக்கும் தமிழிடமே சென்றுசேர்கிறேன். அது உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளச் சொன்ன வள்ளுவரோ, அச்சமில்லை அச்சமில்லை என்று முழங்கிய பாரதியோ, சுடும்வரை நெருப்பு சுற்றும்வரை பூமி போராடும்வரை மனிதன், நீ மனிதன் என ஆற்றலளிக்கும் வைரமுத்துவோ – தமிழே என்னைத் தாங்கிப் பிடிக்கிறது.

தமிழின் அழகும் வளமுமே அறிவியல் துறையிலிருக்கும் என்னைக் கவிதைக்குள்ளும் நாடகத்துக்குள்ளும் ஆற்றுப்படுத்தியது. என் மக்களுக்கு அகரன் இளங்கதிர், ஆதிரன் இனியன் எனப் பெயர்சூட்ட வைத்தது. என் தாய் எனக்கு அளித்ததை அவர்களுக்கு நான் கைமாற்றி விடவேண்டும். தமிழ் என் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல, வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.