பெருநாள்

ஹேமா

மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை நீரில் கூட அவை செத்து மிதந்தன.

எறும்புகளின் வரிசையை வீட்டிற்குள் பார்த்த முதல் நாளிலேயே ஜப்பானியர்கள் நாட்டுக்குள் வந்துவிடுவார்கள் என்று சுங் ஜிங்கிற்குத் தெரிந்துவிட்டது. இதைப் பன்றிகளுக்குக் காய்க் கழிவுகளைக் கொண்டு வரும் ஹுவாங்கிடம் சொன்ன போது அவர்களால் சிங்கப்பூருக்குள் நுழையவே முடியாது என்று அவன் உதட்டைச் சுழித்தபடி சொன்னான். பல்லாயிரம் துப்பாக்கிகளைக் கொண்ட பெரிய பெரிய கப்பல்கள் லண்டனிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனவாம். பெரிய பீரங்கிகள் கடலுக்கருகில் நிற்கின்றனவாம். அது கொண்டு ஜப்பானியர்களின் கப்பல்களைச் சுட்டால் ஒரே குண்டில் கப்பல் மூழ்கிவிடுமாம்.

ஹூவாங் வெள்ளைக்கார துவான்களின் வீடுகளில் வேலை செய்கிறான். அவர்கள் வீட்டு நாயைக் குளிப்பாட்டுவது, அவற்றின் முடிகளில் சிக்கிக் கிடக்கும் பூச்சிகளை அவற்றுக்கு வலிக்காமல் எடுத்து விடுவது, அவற்றை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகள் அவனுடையவை. செய்தித்தாள்களை ஓரெழுத்து விடாமல் படிக்கும் பெரியப்பா அவனிடம் பேச்சு வாக்கில் பரவும் விஷயங்களைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்வார். நள்ளிரவில் ஊட்ரம் சாலையில் குண்டு விழுந்ததாமே என்று கேட்டால் அது விழுந்த இடத்திற்கு அருகில் இருக்கும் தன் பாட்டியின் வீட்டைப் பற்றியும் அதன் வாசலில் வெடிக்காமல் விழுந்து கிடந்த குண்டைப் பாட்டி எப்படிப் பெருக்கி வாரித் தூர வீசினார் என்பதைப் பற்றியும் தத்ரூபமாய் சொல்வான்.

சமையலறையில் காய்களை நறுக்கிக் கொண்டிருந்த ஜென்னியிடம் அதைச் சொன்னதற்கு வாய் மேல் போட்டுக்கொள் என்றாள். அவளது ஒரே மகன் ஆங்கிலேயப் படையில் தன்னார்வலனாய்ச் சேர்ந்து ஜூரோங் ஆற்றங்கரையோரம் காவல் காக்கிறான்.

அவனைப் பற்றி அவள் எப்போதும் கவலை பட்டுக் கொண்டிருந்தாள். ஜப்பானியர்கள் மலாயாவுக்குள் வந்து விட்டார்கள் என்பதைச் சுங் ஜிங்கிற்குச் சொன்னவள் இவள் தான். அங்கு நுழைந்துவிட்ட அவர்கள் சிங்கப்பூருக்குள் வரமாட்டார்கள் என்று ஏனோ தீவிரமாய் நம்பினாள். ஆனால் எறும்புகள் பொய் சொல்வதில்லை என்று சுங் ஜிங்கிற்குத் தெரியும்.

எறும்புகளின் வரிசையொன்று கண்காணாத இடுக்கில் தொடங்கி சங்கிலித் தையலாய் சுவரின் குறுக்குவாட்டாய் நகர்ந்து மரக்கதவின் வழியாகக் கீழிறங்கி வெளியேறி மறைந்தது. மறந்து விட்ட எதையோ தேடி வருவதைப் போலச் சில எறும்புகள் அந்த வரிசைக்கு எதிர் திசையில் பயணித்தன. எப்படித் தான் இவ்வளவு எறும்புகள் வருகின்றனவோ என்று சலித்துக் கொண்டாள் பெரியம்மா. மரச் சாமான்கள் எல்லாம் பழசாகி விட்டன அவற்றின் மீது மருந்து பூசி வார்னிஷ் அடிக்க வேண்டும் என்று அவள் சொன்னதற்கு சீனப் பெருநாளுக்குப் பிறகு அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்று பெரியப்பா சொல்லிவிட்டார். அவருக்குத் திடீரென நிறைய வேலைகள் வந்துவிட்டன. ஒன்று அவர் நண்பர்களைச் சந்திக்க வெளியே சென்று விடுகிறார் இல்லை அவர்கள் இங்கே வந்து விடுகிறார்கள். தொழிற்சாலையைக் கூட ஜெரால்டும் சைமனும் தான் இப்போது பார்த்துக் கொள்கிறார்கள்.

இன்று காலை லிம் ஷியாவ்செங்கும் வாங் லாவ்ஷூவும் வந்திருந்தார்கள். எப்போதும் போலக் கூடத்தில் அமர முயன்ற அவர்களைப் பெரியப்பா தன் அறைக்குள் அழைத்துச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார். இவள் தேநீர்க் கோப்பைகளுடன் அங்குப் போன போது வானொலி மட்டுமே அவளுக்குப் புரியாத ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது. எப்போதும் இவளிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா சுங் ஜிங் என்று கேட்டு விட்டு பகபகவென சிரிக்கும் லாவ்ஷூ ஜன்னலுக்கு வெளியில் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவர்கள் கிளம்பிய போது பெரியப்பாவும் உடன் சென்றுவிட்டார்.

நினைவு தெரிந்த நாள் முதலாக எறும்புகளைச் சுங் ஜிங் கவனித்து வந்தாள். பொதுவாய் இனிப்புகளை நோக்கியே ஈர்க்கப்படும் அவை மற்ற இடங்களிலும் பரவ ஆரம்பித்தால் ஏதோவொரு அசம்பவம் நடக்கவிருக்கிறது என்பது அவளுக்குத் தெரிந்துவிடும்.

அவளது அப்பா இறப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பு இதே போலத்தான் எறும்புகள் இவளது அம்மாவின் வீட்டை முற்றுகையிட்டிருந்தன. கடல் நீரூறி உப்பிய அவரின் உடலை வீட்டிற்குத் தூக்கி வந்த நாளில் அவரைக் கிடத்தியிருந்த கூடத்தின் சுவரோரம் எறும்புகள். ஒருவர் மாற்றி ஒருவர் அவற்றைப் பெருக்கி வாரித் தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒன்றிரண்டு பெரியம்மாவைக் கடிக்க, அந்த வீட்டை முழுக்க இடித்துக் கட்டினால் மட்டுமே அவை போகும் என்று எரிச்சலுடன் அவள் அப்போது சொன்னாள்.

பெரியம்மாவுக்குப் பெண்குழந்தைகளைப் பிடிக்கும், அவளுக்குப் பிறந்த மூன்றும் ஆண்கள். சமையலில் உதவி செய்ய ஆட்கள் இருந்தாலும் கைவாகாய் எடுத்துக் கொடுக்கக் கொள்ள ஒரு பெண் குழந்தையில்லை என்ற ஏக்கம் அவளுக்கு இருந்தது. அப்பா இறந்ததும் சுங் ஜிங்கை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய அம்மா வீட்டில், பெரியம்மா வீட்டில் இருப்பதைப் போல, அமர்ந்து சாப்பிடும் உணவு மேசை இல்லை, இறகுகளைப் போல மெத்தென்ற வெண்விரிப்புப் படுக்கையில்லை, அழகான பீங்கான் தட்டுகள் இல்லை. ஆனாலும் சுங் ஜிங்கிற்குத் தன் வீட்டில் இருப்பது தான் பிடித்திருந்தது.

வாசலில் வெடிக்காமல் விழுந்து கிடந்த குண்டைப் பாட்டி எப்படிப் பெருக்கி வாரித் தூர வீசினார் என்பதைப் பற்றியும் தத்ரூபமாய் சொல்வான்.

வேலைக்குப் போய்க் கொண்டே இரண்டு பெண்களை வளர்ப்பது சிரமமாயிருக்கும் என்று சொல்லி இவளை ரொம்பவும் சமாதானப் படுத்தித் தான் அம்மா பெரியம்மாவோடு அனுப்பி வைத்தாள். சுங் ஜிங்கிற்குத் தைக்கப் பிடிக்கும் என்பதை அறிந்திருந்த பெரியம்மா அவளுக்கு நிறைய வண்ண நூல் கண்டுகளையும், ஊசி குத்தி வைக்கவென்று பட்டுத் துணிப்பந்தையும் வாங்கிக் கொடுத்தாள். இங்குக் கடகடவென்ற சத்தமெழுப்பாமல் தைக்கக் கூடிய ஒரு தையல் இயந்திரம் கூட இருந்தது. வந்த சில நாட்களில் திரைச்சீலைகளிலும் தலையணை உறைகளிலும் தாமரைகள் கொக்குகள் மீன்கள் கொடிகள் எனப் பூந்தையலிட்டாள் சுங் ஜிங். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஆனாலும் செய்ய வேலைகளின்றி சலனமற்றிருக்கும் இரவுகளில் அவளுக்கு அம்மாவின் நினைவு வரும்.

அம்மா வீட்டில், பெரியம்மா வீட்டில் இருப்பதைப் போல, அமர்ந்து சாப்பிடும் உணவு மேசை இல்லை, இறகுகளைப் போல மெத்தென்ற வெண்விரிப்புப் படுக்கையில்லை.

இருட்டில் மெல்லிய கோடுகளாய் தட்டுப்படும் மேற்கூரையின் குறுக்குக் கட்டைகளைப் பார்த்தபடி சத்தமின்றி அழுவாள். எறும்புகள் மட்டுமே பெரியம்மா வீட்டுக்கும் அம்மா வீட்டுக்கும் இப்போது பாலமாய் இருந்தன. ஜப்பானியர்களைப் பற்றி எச்சரிக்க முயன்ற எறும்புகள் தான் இவளை அங்குக் காணாமல் இங்கு வந்து விட்டதாக அவள் நம்பினாள்.

எறும்புகள் பெருகப் பெருக வீட்டில் சத்தம் குறைந்து வந்ததை சுங் ஜிங் கவனித்தாள். பகற்சந்தையில் குண்டு விழுந்து கறிக்கடைக்கார தமீம் செத்துப் போன தினம் அவளுக்கு நன்கு நினைவில் இருந்தது. தமீம் பெரியப்பாவுக்கு நல்ல பழக்கம். அவர் ஏனோ வீட்டிற்குள் வருவதில்லை. வாசலிலேயே நாற்காலியில் அமர்ந்து பேசுவார். பெரியப்பாவும் அவரை உள்ளே வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தியது கிடையாது. பெரியம்மா வாசலுக்குப் போய் அவரை விசாரித்துவிட்டு வருவாள்.

அவர் இறந்து விட்டதாய் தகவல் வந்த போது வீட்டில் யாருமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பெரியப்பா மட்டும் அவரது இறுதிச் சடங்கிற்குப் போய் வந்தார். அதன் பின்னர் பெரியப்பா பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. எப்போதும் எதையாவது யோசித்தபடியே இருந்தார். மூத்த மகன் ஜெரால்டிடமும் அடுத்தவனான சைமனிடமும் ஒன்றிரண்டு வாக்கியங்களில் தொழிற்சாலையில் என்ன நடக்கிறதென்று கேட்டுவிட்டோ இல்லை என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டோ நகர்ந்தார். ஜோநத்தன் படிக்காமல் நண்பர்களுடன் சுற்றுகிறான் என்று கூட விசாரிப்பதில்லை. பெரியம்மாதான் கவலையோடு அவன் வீடு வரும்வரை மூங்கில் படலையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

பெரியம்மாகூட முன்பு அளவிற்குப் பேசுவதில்லை. பெருநாளுக்கு நியான் காவ் செய்ய வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த வாழையிலைகளை வட்டமாக இவள் வெட்டிக் கொண்டிருந்த போது, “உன் அப்பா அபினுக்கு அடிமை என்று பார்த்தவுடனேயே நான் கண்டுபிடித்துவிட்டேன், உன் அம்மா ஏன் அவனைக் காதலித்தாள் என்று எனக்குப் புரியவேயில்லை” என்று சொல்லவில்லை. ‘கடலுக்குள் போகும் போது அபினை உட்கொண்டு சென்றதால்தான் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தான்’ என்று சொல்லவில்லை.

அமைதியாகவே, இவள் வெட்டித் தந்த இலைகளைப் பீங்கான் குவளைகளுக்குள் வைத்து அதன் மீது காய்ச்சிய இனிப்பு அரிசிக் கூழை ஊற்றினாள். சுங் ஜிங்கிற்கு நிம்மதியாக இருந்தது. நியான் காவ் செய்யும் போது எதிர்மறையாகப் பேசினால் பதம் தவறிவிடும் என்று அவளது அம்மா சொல்லியிருக்கிறாள். அதோடு தன் தந்தையைப் பற்றி யார் பேசினாலும் அவளுக்கு அழுகை வரும். அவர் கடலுக்குள்ளிருந்து பிடித்து வரும் பெரிய மீன்களைப் பிளந்து இஞ்சியும், சோயா சாறும் சேர்த்து வேக வைத்து, வெங்காயத் தாள் தூவி அம்மா சமைப்பதும் உண் குச்சிகளால் முள்நீக்கிய வெள்ளைச் சதையினை எடுத்து இவளது குவளையில் வைப்பதும் நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இப்போது மீன் சமைக்க நேரம் இருக்காது.

அவள் மலையில் கல்லுடைக்கப் போகிறாள். அம்மாவும் மெய்மெய்யும் சிரமப்பட, தான் இங்கே மீனும் பன்றிக்கறியுமாய் சாப்பிடுவது அவளுக்குக் குற்றவுணர்ச்சியை உண்டாக்கியது.

சென்ற மாதம் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையின் போது இவளைப் பார்க்க அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். அம்மா மிகவும் மெலிந்திருந்தாள். இவளுக்குத் தேங்காய் துருவல் தூவிய ஒண்டே ஒண்டேவை வாங்கி வந்திருந்தாள். இவளைப் பார்த்ததும் ஓடி வந்து இவளை ஒட்டி நின்று கொண்டாள் மெய்மெய். சுங் ஜிங் அவளை வீட்டுக்குப் பின்னாலிருந்த தோட்டத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் பன்றிக் குட்டிகளையும் வாழைக் குலைகளையும் காட்டினாள். மரமேறி மாங்காய் பறித்துக் கொடுத்தாள். போகும் போது பெரியம்மா தான் பயன்படுத்தாத ஆடைகளை அம்மாவிற்குக் கொடுத்தனுப்பினாள்.

இன்று மாலை ஒன்றுகூடல் விருந்துக்கு அவர்கள் இருவரும் வருவார்கள். மெய்மெய்க்கென்று ஒரு அரைப் பாவாடை தைத்து அதில் அவளுக்குப் பிடித்த மஞ்சள் வாத்துகளைப் பூந்தையலிட்டிருந்தாள் சுங் ஜிங். இவளும் பெரியம்மாவும் தான் சமையல் வேலைகளை முழுவதுமாய் பார்த்தார்கள். ஒரு வாரமாய் ஜென்னி வேலைக்கு வரவில்லை. அவளது மகனுக்கு அடிபட்டிருந்ததாய் சொன்னாள் பெரியம்மா.

“உன் அப்பா அபினுக்கு அடிமை என்று பார்த்தவுடனேயே நான் கண்டுபிடித்துவிட்டேன், உன் அம்மா ஏன் அவனைக் காதலித்தாள் என்று எனக்குப் புரியவேயில்லை”

ஜோநத்தன் நேற்று கறுப்பு மை கொண்டு எழுதிய சிவப்புச் சன்லியன் தாள்களைத் தன் அறையிலிருந்த மேசையின் மீது அடுக்கி வைத்திருந்தான். அவன் அவற்றை எழுதிக் கொண்டிருந்த போதே எதை எங்கு ஒட்ட வேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தாள் சுங் ஜிங். குதிரை ஒன்றை வரைந்து வைக்கும்படியும் அவனைக் கேட்டிருந்தாள். நீளமாய் ஒரே அளவில் இருந்த சிவப்புத் தாள்களில் இரண்டை நாற்காலியில் ஏறி வாயிற்கதவின் இரண்டு பக்கங்களிலும் தொங்க விட்டாள். அவன் வரைந்த குதிரையின் முகம் சற்றே கூம்பி, பார்க்க எலியைப் போல இருந்தது.

குதிரைப் புத்தாண்டை வரவேற்க அதைக் கதவின் மேல்புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த போது பெரியப்பா பரபரப்பாய் வாயிற்படலைத் திறந்து நுழைந்தார். இவள் சட்டென இறங்கி நாற்காலியை ஓரம் தள்ளி அவருக்கு வழியை விட்டாள். கொஞ்சம் நேரத்தில் பெரியம்மா இவளை அழைத்து அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வேகமாய் பெரியப்பாவின் அறைக்குள் போனாள்.

சமையலறையில் அசைவ வாசம் நிரம்பியிருந்தது. தயாராகியிருந்த நியான் காவ்கள் அங்கிருந்த மேசையின் ஒருபுறம் அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு எதிர்புறம் சமைத்த உணவுகள் அழகான பீங்கான் கிண்ணங்களில் வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன. இவள் காய்களைக் கழுவி நறுக்கிக் கொடுக்க, அசைவ உணவுகளை ஜோநத்தன் வெட்டிக் கொடுத்திருந்தான். பெரியம்மாவே அவற்றைச் சுத்தம் செய்து சமைத்துவிட்டிருந்தாள். அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த விறகுகளில் இரண்டை வெளியே இழுத்து நெருப்பைத் தணித்த சுங் ஜிங் உலை அரிசியை அகப்பையால் கிளறினாள்.

கொஞ்சம் நேரத்தில் பெரியம்மா சமையலறைக்குள் அவசரமாய் வந்தாள். அவளது முகம் வியர்த்திருந்தது. பதை பதைப்போடு வலை அலமாரியைத் திறந்து மேலடுக்கிலிருந்த பீங்கான் ஜாடிகளுக்குப் பின்னால் கையை விட்டு ஒரு சிறிய பெட்டியை வெளியே எடுத்தாள். சுங் ஜிங்கிடம் அடுப்பில் எரிந்துகொண்டிருந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்னால் போனாள்.

சுங் ஜிங் தோட்டத்துக்குப் போன போது அங்குப் பயன்படுத்தாமல் காய்ந்து கிடந்த நீர்த்தொட்டிக்குள் அரசாங்க முத்திரையிட்ட காகிதத் தாள்களைக் கொண்டு வந்து கொட்டியிருந்தான் ஜெரால்ட். பெரியப்பா மூங்கில் கூடையில் இன்னும் சில தாள் கட்டுகளை அள்ளி வந்து அதன் மீது போட்டார். அவர் கொட்டியவற்றில் சான்றிதழ்களும் தலைவர்களுடன் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருந்தன. பெரியம்மா தன் கையிலிருந்த பெட்டியைப் பிரிக்காமலேயே தொட்டிக்குள் போட்டாள். பெரியப்பா அவற்றின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்ற, பெரியம்மா சுங் ஜிங்கின் கையிலிருந்த கட்டை நெருப்பை வாங்கி அவற்றைக் கொளுத்தினாள். ஜெரால்ட் தொட்டிக்கு வெளியில் சிதறிக் கிடந்த தாள்களையெல்லாம் பொறுக்கி எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டான். மொத்தத் தாள்களும் எரிந்த பின்னர் சுங் ஜிங்கும் பெரியம்மாவும் கரிந்த தாள் எச்சங்களை வாரித் தண்ணீரில் கரைத்து வீட்டிற்குப் பின்னாலிருந்த மரத்தோப்பிற்குள் சென்று ஊற்றிவிட்டு வந்தார்கள்.

சுங் ஜிங்கிடம் அடுப்பில் எரிந்துகொண்டிருந்த ஒரு விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்னால் போனாள்.

அன்று மாலை அம்மாவும் மெய்மெய்யும் வரவில்லை. இருட்டிய பின்னரும் வாயிலையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுங் ஜிங். வருவதாகச் சொல்லியிருந்த பெரியப்பாவின் தம்பிகள் கூட வரவில்லை. வாங்கி வைத்த பட்டாசுகள் கட்டவிழ்க்கப்படாமல் கூடத்து அலமாரியில் இருந்தன. மேசையில் பொரித்த வாத்து, பன்றி வறுவல், கோழிச் சாறு, அவித்த மீன், பிரட்டிய மீ இவையெல்லாம் அழகிய வட்டமாய் அடுக்கியிருந்ததை யாருமே கவனிக்கவில்லை. ஏதோ யோசனையில் அவசரமாய் சாப்பிட்டார்கள். பெரியம்மா காலியான பெரியப்பாவின் தட்டில் வாத்துத் துண்டுகளை வைக்கப் போன கையசைவில் தடுத்துவிட்டு எழுந்தார்.

மறுநாள் காலை பட்டாசு வெடிக்கும் சத்தமே எங்கும் கேட்கவில்லை. தைத்து வைத்திருந்த புதுத் துணிகளை இவர்கள் வீட்டில் யாரும் உடுத்தவில்லை. வாங்கி வந்த ஆரஞ்சு பழங்கள் தொட ஆளின்றி கிடந்தன. பெரியப்பா அன்று முழுவதும் தன் அறைக்குள்ளேயே மெல்லிய சத்தத்தில் வானொலியை ஒலிக்க விட்டு ஆங்கிலச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஜோநத்தன் கூட அன்று நண்பர்களைப் பார்க்கப் போகவில்லை. பெரியம்மாவும் இவளும் அன்று மிக எளிமையாகத் தான் சமைத்தார்கள். பின் மதியம் சுங் ஜிங் மெய்மெய்க்குத் தைத்திருந்த பாவாடையைத் தடவிப் பார்த்தபடி இருந்தாள். தன் மிதிவண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த ஜோநத்தனைத் தவிர்த்து மற்ற அனைவரும் பெரியப்பாவின் அறைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.

மாலை விளக்குகளை ஏற்றிய சிறிது நேரத்தில் பெரியம்மா கையில் ஒரு வெள்ளைப் படுக்கை விரிப்போடு சுங் ஜிங் இருந்த அறைக்குள் வந்தாள். அந்த விரிப்பை மூன்றாய் வெட்டச் சொல்லி இவளிடம் கொடுத்து விட்டுப் போனாள். படுக்கை விரிப்பைப் பிரித்த போது காய்ந்த சாமந்தி வாசமடித்தது. தனது பழைய சிவப்பு சியோங் சாமுடன் திரும்பி வந்த பெரியம்மா அதன் மீது வடிதட்டைக் கவிழ்த்துப் போட்டு வட்டங்களை வெட்டி எடுத்தாள். செவ்வகமாய் கிழித்த வெள்ளைத் துணிக்கு நடுவில் அந்த சிவப்பு வட்டங்களில் ஒன்றை வைத்துத் தைத்தாள் சுங் ஜிங்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மூன்று ஜப்பானியக் கொடிகள் தயாராகியிருந்தன. அவற்றில் ஒன்றை சைமன் வாயிற்புறமிருந்த ஜன்னலை மறைத்துக் கட்டினான். கம்புகளின் முனையில் மற்ற இரண்டைக் கட்டி வாயிற்படலை ஒட்டி அவற்றை நட்டான் ஜெரால்ட். ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் சரணடைந்து விட்டதாகவும் அடுத்து ஆங்கிலேயர்கள் வந்து சண்டை போட்டு அவர்களை விரட்டும்வரை நண்பர்களுடன் வெளியே சுற்றாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் ஜோநத்தனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பெரியப்பா. புதிதாய் எறும்புகளின் வரிசையொன்று படலுக்கு வெளியிலிருந்து புறப்பட்டு வீட்டுக்குள் வருவதை அப்போது தான் கவனித்தாள் சுங் ஜிங்.