உதிரிப்பூக்கள்

0
291
மஹேஷ்

சாந்தியின் தங்க வேட்டை

சிங்கையின் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் 200மீ ஓட்டத்தை 22.7 விநாடிகளிலும், 100மீ ஓட்டத்தை 11.20 விநாடிகளிலும் ஓடிமுடித்துத் தங்கங்களை வென்று, 42 ஆண்டு கால தங்கப்பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். பல போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்துள்ள சாந்தியின் பயணத்தில் இந்த 2023ஆம் ஆண்டு ஒரு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சிகாணும் ஏற்றுமதி

கடந்த 9 மாதங்களாக வீழ்ச்சி கண்டுவரும் சிங்கையின் எண்ணெய்சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 15.5 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதில் மின்னணுவியல், வேதியியல், மருத்துவத்துறை சார்ந்த ஏற்றுமதிகளும் அடக்கம். வழமையாக அதிக ஏற்றுமதித் தேவையுள்ள மலேசியா, இந்தோனீசியா, தென்கொரியா போன்ற நாடுகளும்கூடத் தேவைகளைக் குறைத்துக்கொண்டுள்ளன. ஹாங்காங், சீனாவுக்கான ஏற்றுமதியில் சிறிது வளர்ச்சி காணப்பட்டது.

புவிவெப்பத்திலிருந்து மின்சாரம்

முறைசாரா மின் உற்பத்திக்கான வழிவகைகளைத் தேடும் முயற்சியின் ஓர் அங்கமாக சிங்கையின் செம்பவாங்கில் உள்ள இயற்கை வெந்நீர் ஊற்றுப் பகுதியில் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான முதல்நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலையும் சுர்பானா ஜுரோங் நிறுவனமும் ஆய்வில் இணைந்துள்ளன. சுமார் 4 முதல் 5 கிமீ ஆழத்தில் 200 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றாலை, சூரியத் தகடுகள் போன்றவை அமைக்க பரந்த நிலப்பரப்பு தேவை. மேலும் அவை தொடர்ச்சியாக மின்சாரம் தயாரிக்கத் தேவையான பருவநிலை அமைவதில்லை. ஆனால் புவிவெப்பத்தில் இந்த இடர்பாடுகள் இல்லை. மின்சாரம் மட்டுமல்லாது வேறுபல பயன்பாடுகளுக்கும் புவிவெப்பம் உதவமுடியும். எனவே தற்போதைய ஆய்வின் முடிவு மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடிய ஒரு செய்தி.

பெருமைமிகு பெண்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக (Chief Finance Officer) ஜோஅன் டான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துறையின் மூத்த அதிகாரியாக, பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுவனம் மீண்டு வருவதற்கான வழிமுறைகளைத் தலைமையேற்றுச் செயல்படுத்தினார். ஒரு மெண்மணி இந்த உயர் பதவியை அடைந்திருப்பது இதுவே முதல் முறை.