முடிந்துவிடாத தேசிய சேவை

ரவி சிங்காரம்

சிங்கப்பூரர்கள் பலரையும் ஒன்றாகப் பிணைப்பது தேசிய சேவை. எனக்கும் தேசிய சேவை அனுபவங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. என் குடும்பத்திலேயே தேசிய சேவை செய்த முதல் ஆள் நான்தான்.

அடிப்படை இராணுவப் பயிற்சிக்கு புலாவ் தெக்கோங் தீவிற்குச் செல்லும் நாள் நெருங்குகையில் பெருமிதம் ஒருபுறம், அச்சம் மறுபுறம். என் சுற்றத்தார் பலரும் தேசிய சேவை மிகவும் கடினம். கல்வி, வேலைப் பயணத்தில் ஈராண்டு தடை ஏற்படும் போன்ற பிரச்சினைகளைக் குறித்து அடிக்கடிக் கூறிவந்தனர். ஆயினும் என் தாய்நாட்டிற்கு நான் ஆற்றவேண்டிய கடமையைச் செவ்வனே செய்து தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற முனைப்போடு தேசிய சேவையைத் தொடங்கினேன்.

துப்பாக்கியை முதன்முதலில் நான் கையில் ஏந்தியபோது – அது உங்கள் மனைவி, ஒருபோதும் கைவிடக்கூடாது என்று அதிகாரிகள் சொல்வர் – உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாப்பேன் என்ற உறுதிமொழியை நெஞ்சை நிமிர்த்தி உரக்கக் கத்தினேன். குறுகியக் காலமானாலும் இராணுவத்தில் பணியாற்றுவதே தலையாயப் பெருமை எனக் கருதினேன்.

தேசிய சேவை சிறுவர்களைப் பொறுப்பான குடிமக்களாக்குகிறது என்பது முற்றிலும் உண்மை. வீட்டிலும் சரி, பள்ளி இணைப்பாட நடவடிக்கைகளிலும் சரி, அவ்வளவு பொறுப்புகளை அதற்குமுன் ஏற்றுக்கொள்ளாதிருந்த எனக்கு இராணுவம் கடினமான, கடுமையான வழியில் பலவற்றையும் கற்றுத்தந்தது. தாமதமாகச் செல்வது என் மிகப்பெரிய குறை. பள்ளிப் பருவத்திலிருந்து இன்றுவரை அக்குறையைத் தீர்க்கப் போராடிவருகிறேன். ஒவ்வொரு வாரமும் இராணுவ முகாமிற்கு தகுந்த நேரத்திற்குள் செல்லத் தலைதெறிக்க ஓடுவேன். எனினும் தாமதமாகத்தான் செல்வேன்.

பொறுப்புகளை அதற்குமுன் ஏற்றுக்கொள்ளாதிருந்த எனக்கு இராணுவம் கடினமான, கடுமையான வழியில் பலவற்றையும் கற்றுத்தந்தது.

பள்ளிக்குச் செல்ல எழுந்திருக்கவே அன்னையின் குரலை நம்பியிருந்த நான், தேசிய சேவையின்போது முதல் நாள் உடற்பயிற்சிக்குச் செல்லும் நேரத்தையும் தாண்டித் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால் ‘தாமதமானவன், பொறுப்பற்றவன்’ போன்ற பட்டங்களை சக தேசிய சேவையாளர்களிடமிருந்து பெற்றேன். குறித்த நேரத்தில் செல்வது, செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அப்போதுதான் நான் உண்மையில் உணர்ந்தேன்.

வீட்டு வேலைகளையும் அவ்வளவாகச் செய்யாத நான், துணி துவைப்பது, சுத்தம் செய்வது, கழிவறை கழுவுவது முதலான வேலைகளைச் செய்ய இராணுவத்தில்தான் கற்றுக்கொண்டேன். அதன்பின்பு, நான் பல நாடுகளில், நண்பர்கள் பலரோடு தங்கும்போதெல்லாம் என் அறை, வீடு அவ்வளவு சுத்தமாக இருப்பதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர். அதற்குக் காரணம் தேசிய சேவை செய்தது என்றே கூறுவேன்.

தேசிய சேவை வாயிலாகப் பின்னணி பாராது பிறருடன் நன்றாகப் பேச, பழகக் கற்றுக்கொண்டேன். இராஃபிள்ஸ் கல்வி நிலையத்திலிருந்து வந்த நான் பெரும்பாலும் என் பள்ளி நண்பர்களுடனும் மட்டுமே பழக்கப்பட்டிருந்தேன். ஆனால் இராணுவ முகாமில் தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்களிலிருந்து வந்த இளையர்கள் அனைவரும் ஒன்றாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு சகோதரர்களாகப் பழகினோம். குறிப்பாக, என் குறைகளைக் காட்டிலும் நிறைகளைப் பார்த்த நல்ல நண்பர்கள் சிலர் கிடைத்தனர்.

அவர்களில் பலரும் எனக்கு நல்ல முன்னுதாரணங்களாக இருந்தனர். சீருடையை அவ்வளவு நேர்த்தியாக உடுத்தி, காலணிகளைப் பளபளக்கும் அளவிற்குச் சுத்தப்படுத்தியவர்கள், எனக்கும் சொல்லிக் கொடுத்தனர். எனக்கு இன்றும் நினைவில் இருக்கும் ஒருவர் யூஜீன், எனக்கு கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். மற்றொருவர் – வெங்வா சதுரங்க விற்பன்னர். சீனச் சதுரங்கம்கூட எனக்குக் கற்றுக்கொடுத்தார். காற்பந்து போன்று எனக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட ஜெஷ்ரீ ஊக்குவித்தார். வாராவாரம் சேம், ஜெரி முதலானோர் எங்களுக்குக் கூடைப்பந்து விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். அந்த வலுவான பந்தங்களினால்தான் குடும்பத்தைப் பிரிந்து ஒவ்வொரு வாரமும் இருக்க முடிந்தது.
தேசிய சேவையில் நான் கற்றுகொண்ட பலவற்றை இன்றுவரை பயன்படுத்துகிறேன். ‘சிக்னல்ஸ்’ பிரிவில் இருந்தபோது கணினி, ‘நெட்வர்க்கிங்’ பற்றி நான் சேகரித்த அறிவு இன்றும் என் ‘ரோபாடிக்ஸ்’ துறையில் பெரிதும் உதவுகிறது.

அனைத்தையும் தாண்டி தேசிய சேவை எனக்கு மிக முக்கியப் பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. இராணுவத்தில் மட்டுமல்ல, வாழ்விலும் வேகத்துடன் விவேகமும் வேண்டும் எனப் புரிந்துகொண்டேன். விவேகத்தில் தளர்ந்து நான் செய்த சில தவறுகள் என் தேசிய சேவைப் பயணத்தை 11 மாதங்களில் பாதியிலேயே முறித்தன.

நான் ஏ’ நிலைத் தேர்வுகளில் எடுத்த குறைவான மதிப்பெண்களாலும் தேசிய சேவைக்காக உடல்பலத்தைக் கூட்டவேண்டும் என எண்ணி உணவுப்பழக்கங்களை மாற்றியதாலும் என் கவனம் சற்று சிதறியது. ‘பொறுப்பற்றவன், தாமதமாகவே வருபவன்’ என்று பிறர் கூறிய வார்த்தைகளாலும் வெட்கப்பட்டு முகாமைவிட்டு வீடு திரும்பியவுடன் பெரும்பாலான நேரம் தனிமையிலேயே இருந்தேன்.

எனக்கு ஏற்பட்ட கஷ்டமான சம்பவங்கள் மனத்திரையில் எந்நேரமும் மிதந்துகொண்டிருக்க, ஒருநாள் திடீரென என்னால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை. அதனால் ஏற்பட்ட பயம், கோபம் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதால் 3 வாரம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்குத் தங்குவதற்கும் மனதளவில் தயாராக இல்லாததால் மேலும் பலவித மன உளைச்சல்கள்களுக்கு உண்டாகி, மனப் போரில் ஏற்பட்ட வடுக்கள் ஆழமாகின.

சில சமயம் உக்கிரமான சம்பவங்கள் நிகழும்போதுதான் நாம் உண்மையிலேயே கற்றுக்கொள்கிறோம். நான் தனிமையைத் தவிர்த்திருந்தால் பல சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.

இருப்பினும், நான் மீண்டும் என் பழைய வாழ்வை மீட்பேன் என்ற ஒரே குறிக்கோளோடு குடும்பம், இராணுவத்தின் உதவியோடு மீண்டுவந்தேன். கஷ்டங்களை மறக்க கூடுதல் ஓய்வு வேண்டும் என எண்ணிய நான் தகுந்த அனுமதி இல்லாது நாள்கடந்து இராணுவத்தில் மீண்டும் சேர்ந்தேன். என் இராணுவத் தலைவர்கள் புரிந்துணர்வோடு பேசி என் சவால்களைக் கண்டறிய முயற்சித்தனர்; அன்று ‘சிக்னல்ஸ்’ பிரிவுக்குத் தலைமைதாங்கிய கர்னல் ராஜகோபால் என்னுடன் பேசி, அவருக்கு உதவியாளராகப் பணிபுரியக்கூட வாய்ப்பு அளித்தார்; அதற்கு நான் நன்றிகூற கடமைப்படிருக்கிறேன். ஆனால், சக தேசிய சேவையாளர்களிடமிருந்து பிரிவினை ஏற்படுமோ என்ற அச்சம் கலந்த பிடிவாதத்தால் வாய்ப்புகளைத் தட்டிவிட்டேன்.

இறுதியில் இராணுவக் கோட்பாடுகளை மேலும் சிலமுறை மீறியதால் என் பணிகளைச் செய்யும் அளவிற்கு நான் மன உளைச்சலிலிருந்து முழுதாக குணமடைந்துவிட்டேன் என என்னால் நிரூபிக்க முடியவில்லை. இராணுவத்தைத் தவிர்த்து வேறு சுற்றுச்சூழலில் இருப்பது எனக்கு சிறப்பாக இருக்கும் எனக் கருதி நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்.

சில சமயம் உக்கிரமான சம்பவங்கள் நிகழும்போதுதான் நாம் உண்மையிலேயே கற்றுக்கொள்கிறோம். நான் தனிமையைத் தவிர்த்திருந்தால் பல சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து அன்றிலிருந்து இன்றுவரை என் வாழ்வில் பொது நடவடிக்கைகளுக்குப் போதிய இடமளித்துள்ளேன். செங்ஹுவா சமூக நிலைய இளையர் மன்றம், சிண்டா, சென்ஜா கேஷ்யூ பொதுமக்கள்-நாடாளுமன்ற உறுப்பினர் அமர்வுகள், முதலானவை எனக்குப் பலவகையான வாய்ப்புகளை அளித்தன. பல்கலைக்கழக வாழ்வும் எனக்குப் புதிய தொடக்கத்தைக் கொடுத்தது.

என் நலனில் அக்கறைகொண்ட உண்மையான நண்பர்களை இந்தக் கடின அனுபவம் வெளிக்காட்டியது. நான் மருத்துவமனையில் இருந்தபோது என் குடும்பத்தினரைத் தவிர்த்து தோழர்கள் தீபன்ராஜ், யங்காங்க், ஹம்சா, சஞ்சனா, ஆகியோர் தொடர்பில் இருந்தனர். நான் வீட்டிற்குத் திரும்பியவுடன் தீபனும் அவரது அண்ணன் கிரனும் என்னைப் பார்க்க வந்ததோடு சமுதாயத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கான நம்பிக்கையை ஊட்டினர். என் குடும்பத்தினர், அண்டைவீட்டார் ஆகியோர் என் மன உளைச்சலையும் கோபத்தையும் சமாளித்து, என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டனர். என் தாத்தா, பாட்டி, சித்திகூட எனக்காக இந்தியாவிலிருந்து சிங்கை வந்தனர்.

ஒருவேளை அனைத்தும் சுமூகமாகச் சென்றிருந்தால் நான் ஒன்றுமே கற்றிருக்காமலும் போயிருக்கலாம்.

என் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி தமிழ் நண்பர்கள் அசார், சின்னா, ராகா, சரவணன், சிட்டீக், மெனாஸ், விஜய், பிரியங்கா முதலானோரும் காற்பந்துத் தோழர்கள் தினேஷ், ஜோவெல், மார்கஸ், மேல்கம், அபி ஆகியோரும் என் ஆசிரியர்கள் கல்யாணி, மீரா, மீனா போன்றோரும் சந்திப்புகள் வாயிலாக என் மனதை இதமாக்கினர். சக தேசிய சேவையாளர்கள் கணேஷ், சீ செங்க், வெங்வா எதையும் பொருட்படுத்தாது என்னுடன் வழக்கம்போல நன்றாகவே பழகினர். சமயகுரு ஜான் பிரிட்டோவின் தலைமையிலான சிட்டி மிஷன்ஸ் இந்தியா இண்டர்னேஷனல் தேவாலயக் குழுவினரும் ஆர்.பி.டி. இயக்கத்தினரும் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு ஓர் அன்பான குடும்பமாகத் திகழ்கின்றனர். கஷ்டகாலத்தில் சக சிங்கப்பூரருக்கு வயது, வகுப்பு, இன, சமய வேறுபாடுகளைத் தாண்டி உதவிய இவர்கள் நம் தேச உணர்வை நடைமுறையில் அழகாகச் சித்திரிக்கின்றனர்.

இந்த அனுபவத்தினால் மனவுளைச்சல், ஆத்திரம், அவமானம் போன்றவற்றுக்கு உள்ளான பலரிடமும் என்னால் உணர்வுபூர்வமான, வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உதவ முடிந்துள்ளது. அதற்கும் நான் என் தேசத்திற்கும் தேசிய சேவைக்கும் நன்றி கூறவேண்டும். ஒருவேளை அனைத்தும் சுமூகமாகச் சென்றிருந்தால் நான் ஒன்றுமே கற்றிருக்காமலும் போயிருக்கலாம். நாம் சந்திக்கும் தோல்விகள் நிரந்தரமல்ல; மேலும் பெரிதான வெற்றிகளுக்கான விதைகளே. எதையும் தாங்கும் துணிவை தேசிய சேவை அனுபவத்தின்மூலம் நான் பெற்றுள்ளேன்.

என் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் பிற சிங்கப்பூரர்களின் கதைகளை அனைவருக்கும் என் எழுத்து, காணொளிகள்மூலம் பகிர்ந்துவருகிறேன். சமுதாயத்தில் ஊனங்களினாலோ வறுமையினாலோ மனவருத்தத்தினாலோ கஷ்டப்படுவோரிடம் செவிசாய்த்துத் தொண்டூழியம் புரிந்துவருகிறேன். சமீபத்தில் என் அருமை நண்பர் கேபிரியல் பெருமாளின் ‘க்ரூசேடர்’ என்ற இயக்கத்தை ஆதரித்துவருகிறேன். மன அழுத்தத்தினால் வாடுவோருக்கு குத்துச்சண்டைமூலம் புதுவாழ்வு அமைக்கும் புத்துணர்ச்சியை இவ்வியக்கம் வழங்குகிறது.

சிங்கையின் 58ஆவது தேசிய தினத்தை நாம் கொண்டாடிவரும் இந்த வேளையில், ஈராண்டு தேசிய சேவையை பிற சிங்கப்பூர் ஆண் குடிமக்களைப் போன்று செவ்வனே முடிக்கவில்லையே என்ற ஆதங்கம், மனவருத்தம் அனைத்தும் இன்றுவரையில் இருந்துதான் வருகிறது. அந்த ஓராண்டுக்கு ஈடுசெய்ய, என் வழியில் என் தேசிய சேவையை வாழ்நாள் முழுதும் தொடர்கிறேன்.