‘கொடி’கட்டிப் பறக்கும் தமிழர்

நித்திஷ் செந்தூர்

பார்த்தவுடனே பெருமை பொங்கும். நாட்டுப்பற்று நரம்புகளில் பாயும். மதிப்பும் மாண்பும் மேலோங்கும். அனைவரையும் ஓரணியில் நிற்க வைக்கக்கூடிய ஆற்றலும் அதிகாரமும் உண்டு. அது வேறொன்றும் இல்லை, நாட்டின் தேசியக் கொடி. அப்படிப்பட்ட தேசியக் கொடியைப் பல்லாண்டுகளாகப் பாரம்பரிய முறையில் தயாரித்து வருகிறது ‘K Hong’ நிறுவனம். சிங்கப்பூரின் ஆகப் பழமைவாய்ந்த கொடி தயாரிப்பு நிறுவனமும் அதுவே. சிங்கப்பூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே கொடி தயாரிப்பு தொழிலில் எஞ்சி உள்ளன. அதில் விஞ்சி ‘கொடி’கட்டிப் பறக்கும் சித்தார்த்த பிரேம்குமாரை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது.

கொடித் தொழிலில் களமிறங்கக் காரணம்?

ஊழியர்களுடன் உரிமையாளர் சித்தார்த்த பிரேம்குமார்

1995ஆம் ஆண்டில் ‘E.W Liner’ என்னும் நிறுவனத்தை எனது தந்தை தொடங்கினார். அப்போது நாங்கள் கப்பல் துறை சார்ந்த வரைபடங்களையும் பிரசுரங்களையும் தயாரித்துக்கொண்டிருந்தோம். கப்பல்களுக்குக் கொடிகளும் தேவைப்பட்டன. கப்பலுக்குத் தேவைப்படும் கொடிகளை இதர தயாரிப்பாளர்களிடம் வாங்கி விற்பனை செய்தோம். காலப்போக்கில் நாங்களும் கொடிகளைத் தயாரிக்க ஆரம்பித்தோம். ஆனால் அது மிகவும் சிறு அளவில் மட்டுமே இருந்தது.

மின்னிலக்க முறையில் அச்சிடப்படும் கொடி

சிங்கப்பூரின் முன்னோடி கொடி தயாரிப்பு நிறுவனம், ‘K Hong’. 1964ஆம் ஆண்டிலிருந்து அந்நிறுவனம் கொடிகளைத் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் எங். அவர்கள் கைதேர்ந்த தையற்காரர். தொழிலிலிருந்து ஓய்வுபெறும் முன்னர், என் தந்தையை அணுகினார். “தொழிலைத் தொடர எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நீங்கள் எடுத்து நடத்தினால் தொழில் நன்றாகத் தொடரும்” என்றார். தகப்பனாரும் அதற்கு இசைந்தார். நாங்கள் ‘K Hong’ நிறுவனத்தை 2000களில் வாங்கினோம். தொழிலைப் பன்முகப்படுத்தவும் கொடி தயாரிப்பை விரிவுப்படுத்தவும் அது பேருதவியாக இருந்தது.இப்போது ஒரே கூரையின்கீழ் கப்பலுக்குத் தேவையான பல்வேறு பொருள்களை வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து வாங்கிச்செல்ல முடிகிறது.

இதுவரை நாங்கள் 10,000க்கும் மேற்பட்ட
சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளைத்
தயாரித்துள்ளோம்.

கொடிகளை அதிகமாக வாங்கும் வாடிக்கையாளர்கள்…

பெரும்பாலும் கப்பல்துறையைச் சார்ந்தவர்கள். அதனைத் தவிர்த்து, அரசாங்க அமைப்புகள், பள்ளிகள், விடுதிகள் முதலியவை கொடிகளை எங்களிடமிருந்து அதிகமாக வாங்குவர்.

சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளை எவ்வாறு தயாரிக்கிறீர்கள்?

கொடிகள் இங்கு இன்னும் பாரம்பரிய முறையில் கைப்படத் தைக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் இம்முறையே பயன்படுத்தப்பட்டது. தேவையான அளவிற்குச் சிவப்புத் துணியும் வெள்ளைத் துணியும் நீளச் சுருளிலிருந்து வெட்டப்படும். பிறகு, இரண்டும் இணைக்கப்பட்டுத் தைக்கப்படும். அதன்பின் அச்சுகளைக் கொண்டு இளம்பிறையும் ஐந்து நட்சத்திரங்களும் வரையப்படும். அவை கத்திரிக்கப்பட்டு, கொடியின் சிவப்புப் பகுதியில் தைக்கப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் கொடிகள் தற்போது இரண்டு முறைகளில் அச்சிடப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன; முதலாவது மின்னிலக்க அச்சிடுத்தல் (Digital Printing) முறை. கொடியின் படத்தை வைத்துக்கொண்டே அச்சடிக்கும் இயந்திரம் துணியில் கொடியை உருவாக்கிவிடும்.

இரண்டாவது திரையச்சு (Screen Printing) முறை. கொடியில் உள்ள நிறங்களைப் பொறுத்து அதற்கான திரைச் சட்டகங்கள் தேவைப்படும். சிங்கப்பூர்க் கொடியில் இரண்டு நிறங்கள் உள்ளன. ஆனால் ஒரு திரைச் சட்டகம் மட்டுமே தேவைப்படும். சிவப்பு மை திரைச் சட்டகத்தில் போடப்பட்டு வெள்ளை துணியின்மீது அச்சிடப்படும்.

சிங்கப்பூர்த் தேசியக் கொடியைத் தயாரிக்க எவ்வளவு நேரமாகும்?

கொடி எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, அதற்காகும் நேரம் வேறுபடும். மின்னிலக்க முறையில் அச்சிடப்படும் கொடி வெறும் 2 நிமிடத்தில் உயிர்பெற்றுவிடும். கைப்படத் தைக்கப்படும் கொடியை 45 நிமிடத்தில் உருவாக்கிவிடலாம். திரையச்சு முறை சற்று அதிக நேரமாகும். சாயம் உலர்வதற்கு நேரமாகும் என்பதால் அம்முறையில் கொடியைத் தயாரிக்க 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகலாம். சூரிய ஒளி அதிகமாக இருந்தால் கொடியைத் தயாரிப்பதற்கான நேரம் குறையும்.

எங்கள் உழைப்பில் உருவான கொடி
உயர்க்கம்பத்தில் மிடுக்குடன் விண்ணுடன்
விளையாடும் காட்சியைக் காணும்போது
மெய்சிலிர்க்கும்.
கைப்படத் தைக்கப்படும் சிங்கப்பூர்த் தேசியக் கொடி

சிங்கப்பூர்க் கொடிகள் எங்குத் தயாரிக்கப்படுகின்றன?

புக்கிட் பாஞ்சாங்கில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்தில் சிங்கப்பூர்க் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. அதை தவிர்த்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி அருகே எங்களுக்கு ஆலை உள்ளது. அங்குத் திரையச்சு முறையில் சிங்கப்பூர்க் கொடிகள் தயாரிக்கப்பட்டு இங்குத் தருவிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர்க் கொடிகளைத் தவிர்த்து…

நாங்கள் உலக நாட்டுக் கொடிகளையும் தயாரித்து தருகிறோம். அமைப்புக் கொடிகள், மாநிலக் கொடிகள், தனிப்பட்ட கொடிகள் முதலியவற்றையும் உருவாக்கி வழங்கி வருகிறோம். இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொடிகளைத் தயாரித்துள்ளோம்.

எந்தப் பொருளைக் கொண்டு கொடிகள் உருவாக்கப்படுகின்றன?

பாலியஸ்டர் பொருள்களைக் கொண்டு கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. பாலியஸ்டரில் பல்வேறு தரங்கள் உள்ளன. தரமான, அடர்த்தியான பாலியஸ்டர் பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் கொடிகள் அதிகாரபூர்வ நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும். கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாலியஸ்டரின் தரம் சற்றுக் குறைவாக இருக்கும்.

அக்காலத்தில், ‘Bunting’ எனப்படும் உயர்தர பாலியஸ்டரைக் கொண்டு கொடிகள் தயாரிக்கப்பட்டன. ஜப்பானுக்குச் சொந்தமான இப்பொருள், கொடிகளுக்கான ‘நண்பன்’ எனலாம். மிகவும் பொருத்தமாக இருந்தது. எடை குறைவு. தரம் அதிகம். கொடிகள் நனைந்தால், ஈரத்தை அவ்வளவாக உறிஞ்சாது.

காற்று வீசும்போது, கொடி மேல்நோக்கிப் பறக்கும். அப்போது, அது சீக்கிரமாக உலர்ந்துவிடும். ‘Bunting’ பொருளின் விலை அதிகரிப்பால் கொடி தயாரிப்பில் அதனை இப்போது நாங்கள் பயன்படுத்துவதில்லை.

தேசிய தினக் கொண்டாட்டத்தில்…

சிங்கப்பூர்த் தேசியக் கொடியின் உட்பொருள்

சிங்கப்பூர்த் தேசியக் கொடி கிடைநிலை வாக்கில் கீழே வெண்மை மேலே சிவப்பு என இரண்டு சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வட்ட அமைப்பில் உள்ள ஐந்து வெண்மை நட்சத்திரங்களைப் பக்கத்தில் கொண்ட ஓர் இளம்பிறை, கொடியின் ஏற்ற உச்சியில் இடம் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர்த் தேசியக் கொடியின் அகல நீள அளவுகள், இரண்டுக்கு மூன்று என்ற விகிதமாகும்.

சிவப்பு உலகச் சகோதரத்துவத்தையும் மானுடச் சமத்துவத்தையும் குறிக்கிறது. வெண்மை என்றும் அழியாது நீடித்து நிலைத்திருக்கும் தூய்மையையும் அறத்தையும் குறிக்கிறது. இளம்பிறை, வளரும் ஓர் இளைய நாட்டைக் குறிக்கிறது. ஐந்து நட்சத்திரங்கள் ஜனநாயகம், சமாதானம், முன்னேற்றம், நீதி, சமத்துவம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.

கொடிகளின் ஆயுட்காலம்…

அது பருவநிலையைப் பொறுத்தது. நமது உள்ளூர்ப் பருவநிலைக்குக் கொடிகள் 18 மாதத்திற்கு நீடிக்கும். மற்ற இடங்களில் கொடிகளின் ஆயுட்காலம் 4 மாதத்திலிருந்து 12 மாதம் வரை இருக்கும். கப்பல்களில் பயன்படுத்தப்படும் கொடிகள் குறுகியக் காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். கடுமையான பருவநிலையில் கப்பல்கள் செல்லும்போது, கொடிகள் பலத்த காற்றின் பிடியில் சிக்கலாம். அது கொடிகளின் ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்.

சிங்கப்பூர்த் தேசியக் கொடியின் நிறம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதற்கு குறிப்பிட்ட அடையாளமோ பெயரோ உள்ளதா?
‘Pantone’ முறையைக் கொண்டு கொடியின் துல்லியமான நிறம் பயன்படுத்தப்படுகிறது. அது நிறங்களைத் தரப்படுத்தும் பட்டியல். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட நிறங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு, நாம் சிவப்பு எனப் பொதுவாகக் கூறுவோம். ஆனால், அதில் அடர்சிவப்பு, கடுஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆழ்சிவப்பு, செங்கல்மங்கல், செந்தூரச் சிவப்பு எனப் பல்வகை சிவப்புகள் உள்ளன. நிறத்தின் சாயலைப் (Colour shade) பொறுத்து ஒவ்வொரு நிறத்திற்கும் எண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நமது கொடியின் சிவப்பு, ‘Pantone 032’ நிறம். வெள்ளை, ‘Pantone White’ நிறம்.

எத்தனை சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளைத் தயாரித்துள்ளீர்கள்?

இதுவரை நாங்கள் 10,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் சுமார் 4,500 தேசியக் கொடிகளைத் தயாரிக்கிறோம். ஒவ்வொரு மாதமும் சுமார் 500 சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளை விற்போம். கப்பல்கள், நிறுவனங்கள், பள்ளிகள் முதலியவை அவற்றை வாங்கும்.

எப்போது தேசியக் கொடிகளின் விற்பனை அதிகரிக்கும்?

ஜூலை மாதத்தில் கொடிகளின் விற்பனை சூடுபிடிக்கும். அம்மாதத்தில் 2,000க்கும் அதிகமான கொடிகள் விற்கப்படும். சமூக மன்றங்களும் சமூக நிலையங்களும் மட்டுமே தோராயமாக 1,500 கொடிகளை வாங்கும். தேசிய தினம் ஆகஸ்ட் மாதம் வருவதால் பழைய, கிழிந்த, நிறம் மங்கிய கொடிகளை மாற்ற, பெரும்பாலோர் ஒரு மாதம் முன்னரே புதுக் கொடிகளை வாங்கிவிடுவர்.

நீங்கள் தயாரித்த ஆகச் சிறிய, ஆகப் பெரிய சிங்கப்பூர்த் தேசியக் கொடி?

நாங்கள் தயாரித்த ஆகச் சிறிய சிங்கப்பூர்த் தேசியக் கொடி 25×15 செ.மீ அளவுகொண்டது. அது மேசைக்கொடி வகை. ஆகப் பெரிய கொடியின் அளவு 9×6 அடி. அதிகாரபூர்வ, சடங்குபூர்வ நிகழ்வுகளுக்குப்பயன்படுத்தப்படும் சிங்கப்பூர்த் தேசியக் கொடி 4.5×3 அடி கொண்டிருக்கும். ஒருசில வேளைகளில் அந்த அளவு 6×4 அடி அளவிலும் இருக்கலாம்.

சிங்கப்பூர்த் தேசியக் கொடியின் விலை?

சமூக நிலையம், சமூக மன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் வழங்கும் தேசியக் கொடிகளின் விலை 24 வெள்ளி. அவையாவும் கைப்படத் தைக்கப்படும் 6×4 அடி அளவுள்ள கொடிகள். மக்கள் கழகம் அவற்றை மொத்தமாக வாங்குவதால் அந்த விலையில் தருகிறோம். வாடிக்கையாளர்கள் நேரடியாக எங்கள் நிறுவனத்திற்கு வந்து கொடிகளை வாங்குவர். அவ்வாறு வாங்கும்போது, விலை சற்று அதிகமாக இருக்கும். சுமார் 40 வெள்ளி வரை இருக்கும்.


தேசியக் கொடியைத் தயாரிக்கும் உணர்வு…

சிங்கப்பூரராக நிச்சயம் பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது. தொழிலில் நீடித்திருக்கவும் நிலைத்திருக்கவும், அதில் ஆதாயம் பார்ப்பது முக்கியம்தான். ஆனால் அவற்றைத் தாண்டி தேசியக் கொடிகளை உருவாக்கும்போது உண்டாகும் உணர்வு உயர்வானது. வார்த்தைகளால் வருணிக்க முடியாதது. விலைமதிக்கதக்கது. தேசிய அடையாளத்திற்குப் பங்காற்றும் மதிப்பு மேன்மையானது.

அரசாங்க அமைப்புகளோ தேசிய தின நிகழ்வுகளுக்காகவோ கொடிகளைத் தயாரிக்க என்னை நாடும்போது, பணத்தை மட்டுமே கருத்தில் கொள்ள மாட்டேன். சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன். இச்சேவையை சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் வழங்குவது பெரும் பேறு.

பாரம்பரியமாகத் தைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும்
சிங்கப்பூர்த் தேசியக் கொடிகள் நம் மண்ணிலிருந்து
காலப்போக்கில் மறையக்கூடும். அப்போது அச்சிடப்படும்
கொடிகள் மட்டுமே கோலோச்சும்.

நீங்கள் பெருமையடைந்த ஒரு குறிப்பிடத்தக்கத் தருணம்…

நாங்கள் வெளியுறவு அமைச்சுக்கு சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளைத் தயாரித்து வழங்கி வருகிறோம். அக்கொடிகள் வெளிநாடுகளில் அமைந்திருக்கும் சிங்கப்பூர்த் தூதரகங்களுக்கு அனுப்பப்படும். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எங்கள் தயாரிப்பில் உருவான சிங்கப்பூர்த் தேசியக் கொடிகளைப் பார்த்துள்ளேன். அதனைப் பார்க்கும்போது புல்லரிக்கும். எங்கள் உழைப்பில் உருவான கொடி உயர்க் கம்பத்தில் மிடுக்குடன் விண்ணுடன் விளையாடும் காட்சியைக் காணும்போது மெய்சிலிர்க்கும்.

இத்தொழிலின் சவால்கள்…

அண்மையில் கொடி தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும், அதன் காரணமாக கொடியின் விலையை நாங்கள் உயர்த்த முடியாது. வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து கொடிகளை வாங்கமாட்டார்கள். நாங்கள் பெரும்பாலான மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து தருவிக்கிறோம்.

கைப்படத் தைக்கப்படும் கொடிகள், மறைந்துவரும் தொழிலாகும். இளம் சிங்கப்பூரர்கள் தையலைக் கற்கத் தயங்குகின்றனர். அவர்கள் தையலில் ஈடுபட முன்வருவதில்லை. ஒரு கட்டத்தில், எங்களுக்குத் தேவைப்படும் தையல் திறனாளர்கள் கிடைக்கமாட்டார்கள். இது எங்களுக்கு இருக்கும் பெரும் சவால், அச்சமும் கூட. பாரம்பரியமாகத் தைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் சிங்கப்பூர்த் தேசியக் கொடிகள் நம் மண்ணிலிருந்து காலப்போக்கில் மறையக்கூடும். அப்போது அச்சிடப்படும் கொடிகள் மட்டுமே கோலோச்சும்.

இளம் சிங்கப்பூரர்களை இத்தொழிலுக்கு எப்படி ஈர்க்கலாம்?

ஆடை, அலங்காரத் தொழிலில் இருப்போர் ஓரளவிற்குத் தையற்கலையைத் தெரிந்திருப்பர் என நம்புகிறேன். கொடிகளைத் தைப்பது எப்படி என்பதை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். ஆடை, அலங்காரத் தொழிலைவிட கொடிகளைத் தைப்பது மிகவும் சுலபம். கொடிகளுக்கு தரப்படுத்தப்பட்ட மாதிரி வடிவங்கள் (Standard Templates) இருப்பதால் அவற்றை வைத்து கொடிகளை எளிதாகத் தைத்துவிடலாம்.

கல்வி நிலையங்களும் கைகொடுக்கலாம். தையல் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு வழங்கலாம். அதன்மூலம் தையற்கலையைப் பலரும் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடியும். அதேநேரத்தில் கொடி தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே அதிகரிக்கலாம். அவர்கள் பயில்நிலைப் பயிற்சிக்கு (Internship) இங்கு வரலாம்.

கைதேர்ந்தவர்களுக்குக் கைகொடுப்போம்! அவர்களைக் கரைசேர்த்து கைப்படத் தைக்கப்படும் கொடிகளை நம் மண்ணில் தொடரவைப்போம்!