ஓராங் சிலேத்தார்:சிங்கப்பூரின் படகுவாழ் பூர்வகுடிகள்

இல்யா கத்ரீனாடா

“சிறுமியாக இருந்தபோது அதோ அங்கே விளையாடியது நினைவிருக்கிறது!” எனக் கடலை நோக்கிக் கைகாட்டி, குதூகலக் குரலெழுப்பினார் ஏத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நாற்பது வயதைத் தொடவிருக்கும் அந்த மீனவப்பெண்ணின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டது. எங்களைச் சுற்றியிருந்த சுமார் 15 பேரும் அதே உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

சிவானந்தம் நீலகண்டன்

நாங்கள் சென்றுகொண்டிருந்த சிறுபேருந்தின் சாளரங்களுக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்த அவர்கள், தமக்குள் தம் தாய்மொழியான கொன் சிலேத்தாரில் (Kon Seletar) பேசிக்கொண்டனர். யீஷூன் அணைக்கட்டை ஒட்டி வாகனம் சென்றபோது சிலேத்தார் சிறுதீவைக் குறித்த பல கதைகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். ‘ஓராங் சிலேத்தார்’ மக்களான அவர்களின் பூர்வீகம் சிலேத்தார் சிறுதீவுடன் இறுக்கமாகப் பிணைந்திருக்கிறது.

அங்கூக் என அழைக்கப்படும் விசுவாசமான நாய்களுடன் ஓர் ஓராங் சிலேத்தார், 2018

ஏத்தி சிறுமியாக இருந்த எண்பதுகள், தொண்ணூறுகளில் சிலேத்தார் சிறுதீவைச் சுற்றியிருக்கும் நீர்ப்பரப்பில் சுதந்திரமாக நீந்தித் திரிந்திருக்கிறார். மலேசியாவையும் சிங்கப்பூரையும் பிரிக்கும் ஜொகூர் நீரிணையில் அப்போது ஓராங் சிலேத்தார் மக்கள் தம் படகுகளில் வாழ்ந்துவந்தனர். ஜொகூர் நீரிணையை கொன் சிலேத்தார் மொழியில் ‘தெப்ராவ்’ நீரிணை என்று அழைக்கின்றனர். தெப்ராவ் என்றால் பெரும் மீன்.

இருபதாண்டுகள் கழித்து ஏத்தியும் சக ஓராங் சிலேத்தார் மக்கள் சிலரும் இன்று சிங்கப்பூரைக் காணவந்துள்ளனர்; ஆனால் படகுகளில் அல்லாமல் தரைமார்க்கமாக. மண்ணின் மைந்தர்களாக அல்லாமல் சுற்றுப்பயணிகளாக. ஜொகூர் பாருவின் சுங்கை திமோன் கம்பமே (Kampung Sungai Temon) இப்போது அவர்களின் வசிப்பிடம். என் குழுவின் சான் கா மெய்யும் நானும் அவர்களை விருந்தாளிகளாக சிங்கப்பூருக்கு அழைத்திருந்தோம்.

மலேசியாவையும் சிங்கப்பூரையும் பிரிக்கும் ஜொகூர் நீரிணையில் அப்போது ஓராங் சிலேத்தார் மக்கள் தம் படகுகளில் வாழ்ந்துவந்தனர்.

சிங்கப்பூரில் காலங்காலமாகத் தாம் வாழ்ந்த பல இடங்களை ஒருநாள் முழுதும் அவர்கள் சுற்றிப்பார்த்தனர். ஓராங் சிலேத்தாரின் வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்ய, ருஸ்லினா அஃபண்டியுடன் இணைந்து, நாங்கள் ஆராய்ச்சியில் இறங்கியபோது (2018) அம்மக்கள் எங்களை ஆரத்தழுவி வரவேற்று உபசரித்து ஒத்துழைத்ததற்கு எங்களின் சிறு கைமாறாக அந்நாள் அமைந்தது. அந்நாள் அவர்களின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதி. ஓராங் சிலேத்தார் சிங்கப்பூரிலிருந்து இடம்பெயர்ந்தது குறித்த ஒரு நாடகத்தையும் அவர்கள் அப்பயணத்தில் கண்டனர்.

ஜொகூர் பாரு சுங்கை தெமோன் கம்பத்தில் சிப்பி சேகரிக்கும் ஓராங் சிலேத்தார். பின்னணியில் வானுயர்ந்த குடியிருப்புக் கட்டடங்களைக் காணலாம், 2018.

ஓராங் சிலேத்தார்

மலாக்கா நீரிணைப் பகுதிகளில் வசிக்கும், கடல்வாசிகள் எனப்பொதுவாக அழைக்கப்படும் ஓராங் லாவூட் (Orang Laut) மக்களுள் ஒரு பிரிவினரே ஓராங் சிலேத்தார். இவ்வட்டாரத்தின் 18 பூர்வகுடிகளுள் இவர்களும் அடங்குவர். அவர்கள் தம்மை ‘கொன்’ எனக் குறிப்பிட்டுக்கொள்கின்றனர். கொன் சிலேத்தார் மொழி பேசுகின்றனர். ஜொகூர் நீரிணையே பல நூற்றாண்டுகளாக அவர்களின் இல்லம். சிங்கப்பூரின் வடபகுதி, மலேசியாவின் தென்பகுதி இவற்றை ஒட்டிய அலையாத்திக் காடுகளிலும் கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வாழ்ந்தனர்.

பாவ் காஜாங் (pau kajang) என அழைக்கப்படும் மரப்படகுதான் அவர்களின் வீடு. அதில் ஆறுபேர்வரை வசிக்கலாம். போக்குவரத்து மட்டுமின்றி அவர்கள் தூங்குவது, சமைப்பது, விளையாடுவது எல்லாம் அந்தப்படகில்தான். பாண்டான் இலைகளால் வேயப்பட்ட கூரை கடும் மழை, சுடும் வெயில் இரண்டையும் தாக்குப்பிடிக்கும். படகுக்கூரை வேயப்பட்டிருக்கும் விதத்தை வைத்தே கடல்வாசிப் பூர்வகுடிகள் அவர்களுக்குள் அடையாளம் கண்டுகொண்டனர். சிங்கப்பூர் ஆற்றில் புழங்கிய ஓராங் கிளாம், காலாங் ஆற்றின் ஓராங் காலாங், தென்பகுதித் தீவுகளின் ஓராங் சிலாட் என ஒவ்வொருவரும் தனித்துவமிக்கப் படகுக்கூரை கொண்டவர்கள்.

காட்டுக் கிழங்குகள், பழங்கள், நண்டுகள் ஆகியவற்றைச் சேகரித்து உண்பர். தம்முடைய நாய்களின் உதவியுடன் காட்டுப்பன்றியையும் வேட்டையாடுவர்.

அவ்வப்போது கரையோரமாகப் படகுகளை நிறுத்திவிடுவர். ஜொகூர் நீரிணையில் சிங்கப்பூரின் வடகரைக்கு வெளியே அமைந்திருக்கும் சிலேத்தார் தீவைத்தவிர, ஜூரோங், சுவா சூ காங், பொங்கோல், புலாவ் உபின் பகுதிகளிலும் நிறுத்துவர். கரையில் ஒரு கூடாரத்தை அமைத்து அங்கே குழுவாகத் திரள்வர். தம் தேவைக்கேற்ப எப்போது எங்கே செல்லவேண்டும் என்பது அவர்களுக்கு அத்துபடியாக இருந்தது. காலங்காலமாக அவர்களது முன்னோரிடமிருந்து கையளிக்கப்பட்டுவந்த அறிவுச்சேகரம் அது. அலைகடலானாலும் சரி, அலையாத்திக் காடானாலும் சரி புகுந்து புறப்பட்டுவிடுவர்.

காட்டுக் கிழங்குகள், பழங்கள், நண்டுகள் ஆகியவற்றைச் சேகரித்து உண்பர். தம்முடைய நாய்களின் உதவியுடன் காட்டுப்பன்றியையும் வேட்டையாடுவர். கைக்கழி போன்ற குத்தீட்டியைக் கொண்டே மீன்களைப் பிடித்துவிடுவர். உணவுக்குப்போக எஞ்சியவற்றை விற்று, அரிசி, சவ்வரிசி, துணிமணி போன்றவற்றை வாங்கிக்கொள்வர்.

இன்று ஜொகூர் பாருவில் மொத்தமாகச் சுமார் 2000 பேர்கொண்ட ஒன்பது ஓராங் சிலேத்தார் குடியிருப்புகள் உள்ளன. பலர் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைத் தழுவியுள்ளனர். தம் சமூகத்துக்கு வெளியே அமையும் திருமண உறவுகளும் பரவலாகக் காணப்படுகின்றன. சிங்கப்பூரின் ஓராங் சிலேத்தார் சமூகம் கிட்டத்தட்ட மொத்தமாகவே மலாய்ச் சமூகத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கிராஞ்சி, காடுட் ஆறுகளின் முகத்துவாரக் கரைகளிலும் சிலேத்தார் தீவிலும் வாழ்ந்து வந்த இவர்கள், அப்பகுதிகள் தேச வளர்ச்சிக்கு வழிவிட்டதும், அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.

சிங்கப்பூரின் பூர்வகுடிகள்

தோக் பத்தின் புரூக்கின் மகன் எண்டெல், அவரது மனைவியுடன். பாசிர் பூத்தே கம்பம், ஜொகூர் பாரு, 2018

மெர்லயன் பார்க்கை ஒட்டிய சாலையில் எங்களின் சிறுபேருந்து நின்றது. சிங்கப்பூர் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் மெர்லயனுடன் நாங்கள் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது எங்கள் விருந்தாளிகள் தங்கள் தனித்துவ அடையாளமான கைப்பின்னல் ஓலைக்கிரீடத்தை எடுத்து அணிந்துகொண்டனர். ஆற்றை ஒட்டி நடந்துபோனோம். எம்ப்ரஸ் ப்ளேஸில் இருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் சிலைவரை சென்றோம்.

ராஃபிள்ஸ் 1819 ஜனவரியில் சிங்கப்பூரில் முதலில் நுழைந்தபோது இங்கு வசித்த சுமார் 1000 பேரில் சுமார் 200 பேர் ஓராங் சிலேத்தார் பிரிவினர். அப்போது தெமெங்கோங்கின் பரிவாரத்தில் சுமார் 30 மலாய்க்காரர்கள் இருந்தனர் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக இருந்தாலும் தனித்தனியாகப் பதிவாயிருப்பதிலிருந்தே ஓராங் சிலேத்தாரும் மலாய்க்காரர்களும் தனித்தனி இனக்குழுக்களாகப் பார்க்கப்பட்டது புலனாகிறது. அது இன்றும் அப்படியே தொடர்கிறது.

காஸ்வே பாலம் 1923இல் முடிக்கப்பட்டபோதும் அக்கம்பக்கத்தில் தொடர்ந்து எழுந்த பெரும் கட்டடங்களைக்கண்டு மிரண்டு ஓராங் சிலேத்தார் ஒதுங்கியே இருந்துள்ளனர்.

ஓராங் சிலேத்தார் தம்மை கொன் என்றும் கொன் சிலேத்தார் என்றும்தான் குறிப்பிடுகின்றனர். மலாய்க்காரர்களே “ஓராங் சிலேத்தார்” என்ற பெயரை அவர்களுக்கு இட்டதாக நாங்கள் நேர்கண்ட கொன் மக்கள் குறிப்பிட்டனர். பண்பாட்டுப் புவியியலாளர் டேவிட் ஸோஃபர் (David Sopher) சிலேத்தார் என்னும் சொல் டச்சு மொழியின் ‘செலத்தெ’ரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். அச்சொல் டச்சுமொழிக்கு போர்த்துக்கீசிய ‘செலாட்’டிலிருந்து வந்தது. நீரிணைவாசிகள் எனப்பொருள்படும் அச்சொல் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே மலாக்கா நீரிணைப்பகுதிக் கடல்வாசிகளைக் குறிக்கப் புழங்கப்பட்டு வருகிறது. ஆகவே 1500களின் தொடக்கத்திலிருந்தே இவர்களின் வரலாறு பதிவாகியுள்ளது.

ஜெஃப்ரி தன் ஒளிப்படக்கலையின் உதவியுடன் ஓராங் சிலேத்தார் சமூகத்தின் ஒன்பது கிராமங்களையும் ஆவணப்படுத்திவருகிறார். இவர் தம் மக்களின் உரிமைக்குக் குரல்கொடுப்பதில் முன்னணியில் உள்ளார்.

சிங்கப்புரா என்ற பெயர் வந்ததற்கு ஓராங் சிலேத்தார் ஒரு கதை வைத்துள்ளனர். அவர்களுடைய முன்னோர்கள் காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்றபோது சிங்கத்தைப்போலத் தோற்றமளித்த ஒரு வினோத விலங்கைக் கண்டனராம். சங் நீல உத்தமன் 13ஆம் நூற்றாண்டில் இங்கு வந்தபோது இந்தத் தீவின் பெயரென்னவென்று ஓராங் சிலேத்தாரிடம்தான் கேட்டாராம். அவர்கள் சிங்கத் தீவு என்ற பொருளில் ‘சிங்க புலாவ்’ (Singa Pulau) என்று கூறினராம். அதுவே மருவி சிங்கப்புரா ஆனது என்கின்றனர்.

கட்டடங்களைக் கண்டால் கலக்கம்

அடுத்ததாக நாங்கள் சென்றது செம்பவாங் பார்க். கடற்கரையை ஒட்டி நாங்கள் நடந்தபோது ஜொகூரின் தெற்குமுனை வளைவாகத் தெரிந்தது. “அதுதான் கீலோ கம்பம்” என்றனர் எங்கள் விருந்தாளிகள். அவர்கள் கைகாட்டிய திசையில் ஓராங் சிலேத்தார் வசிக்கும் கோலா மாசாய் கம்பம் இருந்தது. அவர்களின் கிராமத்திற்கும் நாங்கள் நின்றிருந்த கடற்கரைக்கும் இடையே இப்போது நீர்ப்பரப்பு மட்டுமல்ல, குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.

சிங்கப்பூரை மலேசியாவுடன் இனைக்கும் காஸ்வே பாலம் 1923இல் கட்டி முடிக்கப்பட்டது. அதன் கட்டுமானத்தில் பணியாற்றியவர்களுள் ஓராங் சிலேத்தாரும் இருந்தனர். காஸ்வே பாலத்தைக் குறித்துப் பல செவிவழிக் கதைகள் உண்டு; இவர்களிடமும் இருக்கின்றன.

மெர்லயனுடன் ஓராங் சிலேத்தார். சிலர் கைப்பின்னல் ஓலைக்கிரீடத்தை அணிந்துள்ளனர்.

கீலோ என அழைக்கப்படும் மீனவர், கோலா மாசாய் கம்பத்தில் மதிப்புமிக்க ஒருவர். கீலோவின் தாத்தா, காஸ்வே பாலம் கட்டப்படும்போது அதற்கு இளம்பிள்ளைகளைப் பலிகொடுத்ததைப் பார்த்தவராம். அவ்வாறு பலிகொடுத்தால் அஸ்திவாரம் வலுவாக இருக்கும் என ஒரு நம்பிக்கை இருந்ததாம். அதனால் தம் குடும்பத்தின் பிள்ளைகளைக் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்வாராம். தம் குடும்பத்தினருக்கும் அதையே வலியுறுத்தினாராம்.

காஸ்வே பாலம் 1923இல் முடிக்கப்பட்டபோதும் அக்கம்பக்கத்தில் தொடர்ந்து எழுந்த பெரும் கட்டடங்களைக்கண்டு மிரண்டு ஓராங் சிலேத்தார் ஒதுங்கியே இருந்துள்ளனர். காஸ்வே பாலத்தின் அடியில் இருக்கும் நீர்ப்பாதைகளின் வழியாக இருபுறமும் வழக்கம்போலப் பயணித்துத் தமது படகுகளிலேயே வாழ்ந்துவந்தனர்.

ஜூரோங், யீஷூன் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டி அலையாத்திக்காடுகள் நீக்கப்படுவதற்கு ஓராங் சிலேத்தார் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கீலோவின் உறவினர் லேல் பின் ஜந்தான், 1960களில், ஐந்து ஆண்டு சிங்கப்பூரில் கேலாங் செராய், ஜாலான் காயூ, பாசிர் பாஞ்சாங் வட்டாரங்களில் கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். அவர் 1970களில் சிலேத்தார் தீவில்தான் நான்கு ஆண்டு வசித்தார். பிறகு அங்கு அணைக்கட்டு வேலைகள் தொடங்கவிருந்தபோது அங்கிருந்து இடம்பெயர்ந்தார்.

ஜொகூர் பாருவுக்கு இடம்பெயர்தல்

கீழ்ச்சிலேத்தார் நீர்த்தேக்கத்தை ஒட்டி எங்கள் பேருந்து நின்றது. சான் கா மெய்யும் நானும் எங்கள் விருந்தாளிகளை நீர்த்தேக்கத்தின் கரையை ஒட்டி அழைத்துச்சென்றோம். நேர்த்தியாகக் கருங்கல் பாவப்பட்ட கரைகள். எங்களின் வலதுபுறம் ஆழமற்ற, ஓடைபோன்ற சிறார் விளையாட்டுக்கான இடம், செயற்கை நீரூற்றுகள், நீள்படிக்கட்டுகள் – வார இறுதி நாள்களில் சிறார்கள் குதூகலிக்கும் இடமாக இருக்கவேண்டும். இடதுபுறத்தில் ஒரு பெரிய குழிப்பந்து மைதானம்.

நீர்த்தேக்கத்தின் உள்ளே செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கும் மரப்பாலத்தில் நடந்தோம். எங்கள் காலுக்குக்கீழே இருந்த நீர்ப்பரப்பில் நீந்திய மீன்களைக் குறித்து அவர்கள் தமக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். வழியில் பற்பல தகவல் பதாகைகள் எங்களை எதிர்கொண்டன. அவ்வட்டாரத்தின் வரலாற்றைக் குறித்த சுருக்கமான் அறிமுகங்கள் அவற்றில் இருந்தன. ஓராங் சிலேத்தார் உள்ளிட்ட பூர்வகுடிச் சமூகங்களுக்கு முதல் பதாகை மரியாதை செலுத்தியிருந்தது.

“இவர்தான் தோக் பத்தின் புரூக்”, ஜெஃப்ரி பின் சலீம் அந்தப் பதாகையிலிருந்த ஒரு கருப்பு-வெள்ளைப் படத்தைக் காட்டினார். ஜெஃப்ரி தன் ஒளிப்படக்கலையின் உதவியுடன் ஓராங் சிலேத்தார் சமூகத்தின் ஒன்பது கிராமங்களையும் ஆவணப்படுத்திவருகிறார். சுங்கை தெமோன் கம்பத் தலைவரின் மகனான இவர் தம் மக்களின் உரிமைக்குக் குரல்கொடுப்பதில் முன்னணியில் உள்ளார். அவர்களின் கிராம நிலங்கள் பறிபோகாமல் தடுப்பதற்கான பல வழக்குகளில் இவரது படங்கள் நீதிமன்றத்தில் பயன்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் ஓராங் சிலேத்தார் மக்களின் படகு நிறுத்தங்களாக இருந்த இடங்களும் இன்று ஜொகூர் பாருவில் ஓராங் சிலேத்தார் கம்பங்கள் அமைந்துள்ள இடங்கள்

இவான் பொலுனின் என்பவரால் 1950களில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஓராங் சிலேத்தார் சிலர் தம் படகு வீடுகளில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அதில் இருந்த தோக் பத்தின் புரூக், ஜெஃப்ரி குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவர். அன்றைய கிராமத்தலைவர். அவருக்குப் பலவித சக்திகள் இருந்ததாகவும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஜொகூர் சுல்தானுக்கு கிளாந்தான் இளவரசியின் மனங்கவரும் முயற்சியில் தன் மாயசக்தியை ஒரு கைக்குட்டையில் வைத்தளித்து பத்தின் புரூக் உதவியதாக ஜெஃப்ரியின் தாய் லீய்த் எங்களிடம் சொன்னார்.

இக்கதை ஓராங் சிலேத்தாருக்கும் சுல்தான்களுக்கும் இருந்த நெருங்கிய உறவைக் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்குமுன் சுல்தான்களிடம் வேலைசெய்த இவர்கள், சுல்தான்களின் கடலுணவுத் தேவைகளை நிறைவேற்றினர். சுல்தான்களின் வேட்டைப் பயணங்களுக்கும் உடன்சென்றனர்.

காலப்போக்கில் ஓராங் சிலேத்தார் மக்கள் தம் கடல்வாசி வாழ்முறையைக் கைவிட்டு ஜொகூர் பாருவில் கரையொதுங்கவேண்டியக் கட்டாயம் உண்டாகிவிட்டது.

தோக் பத்தின் புரூக்கின் மகன் எண்டெல் தற்போது பாசிர் பூத்தே கம்பத்தின் தலைவராக உள்ளார். எழுபது வயது தாண்டிய அவர், தான் 18 வயதாக இருந்தபோது சிலேத்தார் தீவில் சில மாதங்கள் வசித்ததை நினைவுகூர்ந்தார். அவருடைய பெற்றோர் அலையாத்தி மரங்களை வெட்டி அடுப்புக்கரி தயாரிப்பதை வாழ்வாதாரமாகக்கொண்டு சிலேத்தார் தீவில் வாழ்ந்தனர். தானும் அத்தீவில் வாழவிரும்பி அனுமதிகோரி விண்ணப்பித்தார், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

கீழ்ச்சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் ஓராங் சிலேத்தார். இந்த நீர்த்தேக்கம் ஒருகாலத்தில் சிலேத்தார் ஆறாக இருந்தது.

எண்டெலின் தங்கை மினாவுக்கு வயது அறுபது தாண்டிவிட்டது. பாசிர் பூத்தே கம்பத்தில் 20 ஆண்டுகளுக்குமேல் வசித்துவருகிறார். அவருடைய கணவருடனும் மகள் குடும்பத்தினருடனும் கடலோரமாக ஒரு சிறு காங்கிரீட் வீட்டில் வசிக்கிறார். சிப்பி பொறுக்கி விற்று வாழ்க்கைப்பாட்டைச் சமாளித்துக்கொள்கிறார். ருஸ்லினா, கா மெய், நான் ஆகிய மூவரும் 2018இல் அவர்களைச் சென்று பார்த்தோம். அவர்கள் வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்தபோது, மேற்கே பெரும் கப்பல்கள் தெரிந்தன. தெற்கே சிங்கப்பூரின் வீவக வீடுகள் தென்பட்டன. தென்கிழக்கே கல்லெறி தொலைவில் புலாவ் உபின் தீவு.

“மரப்படகில் அங்கெல்லாம் முன்பு செல்வது வழக்கம்” என்றார் மினா. சுங்கை பூலோ, கெத்தாம் தீவு, தெக்கோங் தீவு போன்ற பகுதிகளில் புழங்கியதை எங்களிடம் பகிர்ந்துகொண்ட அவர், சிலேத்தார் தீவுக்குச் சென்றதில்லை என்றும் தன் பெற்றோரைக் குறித்த கதைகளின் வழியாகவே அத்தீவை அறிந்ததாகவும் கூறினார்.

வாழும் வரலாறுகள்

எண்டெலும் மினாவும் தம் வாழ்நாளிலேயே தம் சமூகத்தின் வாழ்முறையில் பெருத்த மாற்றங்களைக் கண்டுவிட்டனர். தெப்ராவ் நீரிணைக்குச் சொந்தக்காரர்களாக அவர்களின் மூத்தோர் வாழ்ந்தனர். தம் படகுவீடுகளில் எங்கேயும் பயணிக்கவும் நிறுத்திக்கொள்ளவும் அவர்களுக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. துரதிருஷ்டவசமாகக் காலப்போக்கில் ஓராங் சிலேத்தார் மக்கள் தம் கடல்வாசி வாழ்முறையைக் கைவிட்டு ஜொகூர் பாருவில் கரையொதுங்கவேண்டியக் கட்டாயம் உண்டாகிவிட்டது.

மாற்றம் முதலில் தொடங்கியது 1948 மலாயா அவசரகாலத்தின்போதுதான். நீரிணை நடமாட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் பிரிட்டிஷார் கடல்வாசிகளைக் கரையோரத்தில் நிரந்தரத் தங்குமிடம் அமைத்துக்கொள்ள வற்புறுத்தினர். மானுடவியலாளர் க்ளிஃபோர்ட் சேத்தரின் கூற்றுப்படி, அதன்பிறகு பல குடும்பங்கள், ஜொகூரின் கோலா ரேடானில் தாமே அமைத்துக்கொண்ட தற்காலிக மரவீடுகளில் இரவிலும் படகுவீடுகளில் பகலிலும் வசிக்கத்தொடங்கின. பகார் பத்துவில் அத்தகைய இன்னொரு குடியிருப்பு 1950களில் உருவானது.

கரையில் அறவே வசிக்கவிரும்பாத குடும்பங்களும் இருந்தன. மானுடவியலாளர் மரியம் அலி, 1963-65 காலகட்டத்தில் முழுமையாகப் படகுவீடுகளிலேயே வசித்த ஓராங் சிலேத்தாரை அறிந்த சிலரிடம் தான் பேசியதாகத் தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபிறகு பலர் கரைகளுக்குச் சென்றுவிட்டனர். குடியுரிமை, கடப்பிதழ், அடையாள அட்டை என எதுவுமற்ற அவர்கள் கைதுசெய்யப்படலாம் என அஞ்சினர். அதன்பிறகும் சுமார் இருபதாண்டுகளாக சிலேத்தார் வட்டாரத்தில் வசித்தவர்கள் 1986இல் அங்குவந்த முன்னேற்றத் திட்டங்களால் இடம்பெயர்ந்தனர்.

மலேசியக் குடியுரிமை பெற்றபின்னரும் 1987வரை ஓராங் சிலேத்தாருக்கு தெப்ராவ் நீரிணையில் சுதந்திரமாகப் பயணிக்கும் அனுமதி இருந்தது. அது அதிகாரபூர்வமானதல்ல என்றாலும் நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் சட்டவிரோதமான பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கடத்தமுயன்று ஓர் ஓராங் சிலேத்தார் கைதானபிறகு சிங்கப்பூர் நீர்ப்பரப்பிற்குள் அனுமதி மறுக்கப்பட்டது என்றார் ஜெஃப்ரி. அச்சம்பவம் 80களில் நடந்தது.

இருப்பினும் ஜெஃப்ரி 1990களில் இளையராக இருந்தபோது லிம் சு காங், உட்லண்ட்ஸ் பகுதிகளில் ஓராங் சிலேத்தாரின் மீன்பிடிப் பயணங்களின்போது உடன் சென்றதுண்டு எனத்தெரிவித்தார். அண்மையில் ஜெஃப்ரியின் உறவினர் ஒருவர், அவரது மலேசிய அடையாள அட்டையை ரோந்துப்படையினரிடம் கொடுத்துவிட்டு, சிங்கப்பூர் நீர்ப்பரப்பிற்குள் சென்று மீன்பிடித்து மீண்டும் அட்டையைப் பெற்றுக்கொண்டு தன் கம்பத்திற்குப் போய்விட்டதாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் கேள்விப்பட்டோம்.

கீழ்ச்சிலேத்தாரின் மரப்பாலத்தில் நின்றுகொண்டு, எங்கள் விருந்தினர்களில் சிலரும் அவர்களின் முன்னோர்களும் அங்குதான் கடலோடி வாழ்ந்தனர் என்பதை நினைத்துப்பார்த்தபோது சிலிர்ப்பாக இருந்தது. அப்போது அந்த நீர்த்தேக்கம், நீரோட்டமுள்ள சிலேத்தார் ஆறாக இருந்தது. தெப்ராவ் நீரிணையில் சென்று கலந்தது. அந்த நினைவுகளுடன் எங்கள் விருந்தினர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.