கவிதை காண் காதை (15)

0
248

மரணக்கூத்து

கணேஷ் பாபு

“குரூர யதார்த்தம்” என்ற சொல்லை வாசிக்கும்போது அதன் வீரியம் சிலசமயம் மனதை ஆழமாகத் தைப்பதில்லை. ஆனால், குரூர யதார்த்தத்தை கண்முன் ரத்தமும் சதையுமாகப் பார்க்க நேர்கிறபோது அது நினைவை விட்டு எளிதாக அகல்வதில்லை. அதிலும், இளமை கொப்பளிக்கும் கல்லூரிக் காலங்களில் பார்க்க நேர்கிற குரூர யதார்த்தங்கள் மனதில் கல்வெட்டைப் போல நிலைத்து விடுகின்றன.

அதுவரை புகைமூட்டமாகத் தென்பட்டிருந்த வாழ்வும் மனித உறவுகளும் துலக்கமாகத் தென்படத் துவங்குகின்றன. பேதமையை யதார்த்தம் சந்திக்கிறது. கேக்கை வெட்டிச்செல்லும் கத்தியைப் போல, மனதின் மென்மையான பகுதிகளை வாழ்வு வெட்டிச்செல்லும் பருவம் இது. எனக்கும் அப்படியான குரூர யதார்த்தத்தைக் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விடுதி நண்பனின் பாட்டி இறந்துவிட்டத் தகவல் கிடைத்தது. மங்கல நிகழ்வு, அமங்கல நிகழ்வு என்ற வித்தியாசம் கல்லூரிப் பருவத்தில் இல்லை. முடிந்தவரை, நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று கலந்து கொள்வோம். வகுப்பிலிருந்து வெளியேறக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தவற விடுவதில்லை. நண்பனின் வீட்டுக்குக் குழுவாகச் சென்று இறங்கினோம்.

எவரும் பெரிதாக அழவில்லை.
சப்தத்திற்குப் பதிலாக நிசப்தம்
பெருகிக் கொண்டிருந்தது.

குடவாசல் அருகே இருக்கும் ஒரு குக்கிராமம் அது. கோவி. மணிசேகரனின் குடவாயில் கோட்டம் என்ற நாவலை பள்ளியிறுதியில் வாசித்திருக்கிறேன். “குழவி இறப்பினும் ஊன்தடிப் பிறப்பினும்” என்ற சங்கப் பாடலை மையமாக வைத்து குடவாயில் கோட்டத்தின் கதையை எழுதியிருப்பார். நாவலில் இடம்பெற்ற குடவாயிலைப் பார்க்க இதுவொரு சந்தர்ப்பம்.

வீட்டின் முகப்பில் இறந்த பாட்டியை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள். பெட்டியைச் சுற்றிலும் பத்திருபது பெண்கள் அமர்ந்திருந்தார்கள். இழவு வீட்டிற்கேயுரிய ஒருவித முடைநாற்றம். எவரும் பெரிதாக அழவில்லை. சப்தத்திற்குப் பதிலாக நிசப்தம் பெருகிக் கொண்டிருந்தது. உடன்வந்த நண்பர்கள் ஊரைச் சுற்றக் கிளம்பியிருந்தார்கள். நண்பனுக்கு அருகில் எவரும் இல்லாததால் நான் அவனுடன் இருக்கலாம் என்றெண்ணினேன்.

பாட்டியின் மூத்த மகனான நண்பனின் அப்பா, சப்தமாகக் கூச்சலிட்டபடியே வந்தார்.

“விடிஞ்சதிலிருந்து தொங்கிப் பாத்துட்டேன். வண்டியத் தரமாட்டானுங்களாம்.. வண்டிய எப்படித் தராம போறானுங்கன்னு நானும் பாக்குறேன். முத்தையனோட வெவகாரம் தெரியாம பேசிட்டிருக்கானுங்க..” என்று கூவினார். அவர் எங்களைக் கடந்து சென்றபோது, திரவ நெடி அடித்தது.

வாசற்படியிலிருந்த அவரது மனைவி, “வருசா வருசம் சங்கத்துக்கு ஒழுங்கா பணம் கட்டியிருந்தா இந்தப் பிரச்சன வருமா. சங்கத்துக்கு சந்தா கட்டினாத்தானே அமயஞ்சமயத்துக்கு ஒத்தாச பண்ணுவாங்க” என்றார்.

“அடி..போடி.. எவனுக்கு வேணும் இவனுங்க ஒத்தாச? இன்னிக்கு நானா அவனுங்களான்னு பாத்துர்றேன்” என்றார்.

சாதி அமைப்புகள் வலிமையாக வேரூன்றியிருந்த கிராமம் அது. பொதுவாக, சாதிச் சங்கங்களில் இருந்து இறப்பு வீடுகளுக்கு இலவசமாக அமரர் ஊர்தி அனுப்புவார்கள். அவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்துக்கு நண்பனின் தந்தை பணம் கட்டுவதில்லை. எந்தவொரு சங்கக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. அதனால், சங்கத்தினர் அவருக்கு இலவசமாக ஊர்தியை அனுப்பவில்லை எனத் தெரிந்தது.

மீண்டும் சிலரைத் திரட்டிக்கொண்டு நண்பனின் தந்தை வெளியே கிளம்பினார். நண்பனும் உடன் கிளம்பினான். நான் வீட்டின் முகப்புப் பந்தலின் அடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். பந்தலின் அடியில் மஞ்சள் நாணயங்களாய்ச் சொட்டியிருந்த வெயில் வளையங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர்கள் பேசிய வார்த்தைகளின் விதவிதமான வர்ணபேதங்கள்
கண்களைக் கூசச் செய்தன. காதுகளைப் பற்றிச்
சொல்லத் தேவையேயில்லை.

நண்பன் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். சங்கக் கட்டிதத்தில் பெரிய சண்டை நடக்கிறது என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா அவன் கையில் ஒரு ஏடிஎம் அட்டையைத் திணித்தார்.

“இத எடுத்துக்கிட்டு குடவாசல் போய் பணத்த எடுத்துரு. எவ்வளவு இருந்தாலும் எடுத்திரு” என்றார். அவன் காதுக்கருகில் குனிந்து ஏதோ சொன்னார். பாஸ்வேர்ட்டாக இருக்கலாம்.

அடுத்த சில நிமிடங்களில், எங்கிருந்தோ வந்த ஒரு பெண், நண்பனின் அம்மாவிடம் சண்டையிடத் துவங்கினாள். வார்த்தைகளுக்கென்று சில வண்ணங்கள் இருக்கின்றன என்று அன்றுதான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் பேசிய வார்த்தைகளின் விதவிதமான வர்ணபேதங்கள் கண்களைக் கூசச் செய்தன. காதுகளைப் பற்றிச் சொல்லத் தேவையேயில்லை. அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டு இறந்த பாட்டி கூட எழுந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால், அங்கேயிருந்த பெண்கள் அனைவரும் சண்டையை விலக்காமல் பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள்.

ஒருசிலர் சண்டையின் ஸ்ருதி குறையும்போது சில சம்பவங்களை நினைவுகூர்ந்து இரு பெண்களிடமும் சொல்ல, சண்டை மீண்டும் வலுப்பெற்றது. கடைசியில், ஆண்கள் வந்து அவர்கள் இருவரையும் விலக்கிவிட வேண்டியிருந்தது. நண்பனின் அம்மாவோடு சண்டையிட்டவள் இறந்துபோன பாட்டியின் மகள். பாட்டி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது ஓய்வூதியப் பணத்தை நண்பனின் குடும்பம் பங்கு போட்டுக்கொண்டதால், பாட்டியின் மகள் இப்போது வந்து அதையெல்லாம் நினைவுகூர்ந்து சண்டையிடுகிறாள். சண்டைக்கு இதுவே மையக் காரணம். மையத்தில் இருந்து விரிந்த பல கிளைக்காரணங்களும் உடன் சேர்ந்து கொண்டன.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்த பாட்டியின் மகள், திடீரென்று பெருத்த ஓலமிட்டு, பாட்டியைத் தழுவிக்கொண்டாள். அதன்பின், பாட்டி அணிந்திருந்த வளையல்களை உருவி எடுத்தாள். “எனக்குப் பிறகு இதெல்லாம் உனக்குத்தேன்னு எங்கம்மா சொல்லிட்டே இருப்பாங்க” என்றாள். “அதெப்படி நீயெடுப்ப..” என்று நண்பனின் அம்மா மீண்டும் சண்டையிடத் துவங்கினார். இருவரின் கைகளுக்கும் இடையே இருந்த சவம் “என்னை யாராவது உடனே இங்கிருந்து தூக்கிச் செல்லமாட்டீர்களா?” என்று கெஞ்சுவது போல இருந்தது.

அங்கே இருக்கப் பிடிக்காமல், அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்றேன். கல்லூரியிலாவது இருந்திருக்கலாம், எதற்காக இங்கே வந்தோம் என்று எரிச்சலாக இருந்தது. டீக்கடையிலிருந்தவர்கள் என்னைப் பற்றிக் கேட்கவும், நான் நண்பனுக்குத் துணையாக வந்தவன் என்று சொன்னேன். டீக்கடைக்காரர் மட்டும் “எதுக்குப்பா படிக்கிறத விட்டுட்டு நீயெல்லாம் இங்க வர்ற. இவனுங்க கததான் ஊருக்குத் தெரியுமே., வெளங்காதவனுங்கப்பா இவனுங்கெல்லாம்.. பாத்துட்டே இரு.. கடைசி வரைக்கும் தேரு கெடைக்காம ஆளுக தோளுலதேன் பொணத்தத் தூக்கிட்டுப் போவப் போறானுக” என்றார்.

அவர் சொன்னதுபோலத்தான் ஆனது. மாலை வரை சண்டை ஓயவில்லை. நண்பனின் அப்பாவும் அவருடன் சென்றவர்களும் சோர்ந்து போய்த் திரும்பினார்கள். சட்டென எவரோ முடிவெடுத்து, பாட்டியின் சவத்தை பாடையில் கட்டி நான்கு பேர் தோளில் சுமந்து சென்றார்கள். ஒரு சிறிய குழு மட்டுமே அவர்களுக்குப் பின்னால் சென்றது. “கோவிந்தா, கோவிந்தா” என்றபடி ரோஜாப் பூக்களை வானத்தில் எறிந்தபடி சென்றார்கள். இந்த ஊரில் பூக்களும் மலர்கிறதா என்று வியந்தபடி நானும் பின்தொடர்ந்தேன்.

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று
பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான்.
நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான்.
அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான்.
அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான்.
இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி
நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்

-ஞானக்கூத்தன்

மரணம் என்பது மிகப் புனிதமானது. மரணமானவர்களும் புனிதமானவர்கள். அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்னும் என்னுடைய புரிதலை தலைகீழாக்கியது இந்தச் சம்பவம். மரணத்தின் அபத்தத்தை, அல்லது மரணத்தின் முன் வாழ்வின் அபத்தத்தைச் சுட்டும் ஞானக்கூத்தனின் கவிதை இது.

“உலகம் அபத்தமானது. சமூகமும் அபத்தமானது. அபத்தமானவர்கள் சேர்ந்து அபத்தமானவர்களைப் பெறுகிறார்கள். அபத்தமாய் வாழ்கிறார்கள். பின் அபத்தமாய்ச் சாகிறார்கள்” என்பார்கள் இருத்தலியல்வாதிகள். கண்முன்னே அதைக் காணும்போது நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.