மொழிபெயர்ப்புக் கவிதை

0
220
மஹேஷ்

ஒரு துளி

மேகத்தின் மடியிலிருந்து துளி ஒன்று மலர்ந்தது
மெல்ல மெல்ல நகர்ந்தது
அன்னையின் மடியை மீண்டும் மீண்டும் ஓர்ந்தது
நான் ஏன் வீட்டை விட்டு வந்தேன் என அயர்ந்தது
என் விதியில் உள்ளது என்ன? ஓ! தேவனே!
பிழைப்பேனோஅல்லது வெயிலில் கரைவேனோ?
எங்கேனும் நெருப்பில் வீழ்ந்து மாய்வேனோ?
ஓர் அல்லிப் பூவின் இதழ்களில் சாய்வேனோ?
வீசிய காற்று இங்கு விரைந்தது
துளியிடம் கேட்காமல் கடலிடம் கொணர்ந்தது
அழகிய சிப்பி ஒன்றின் வாய் திறந்திருந்தது
சென்றமர்ந்தது ஒரு வெண்முத்தாய்ப் பிறந்தது
மனிதரும் கலங்குகிறார்; மனதில் ஏமாற்றம்
எவர்க்கும் உண்டு வீட்டை விட்டு விலகும் காலம்
நிகழ்ந்தே தீரும் அந்த வெளியேற்றம்
அவர்கள் வாழ்வில் தருவதோ பெரும் மாற்றம்.

கவிஞர் பற்றிய குறிப்பு

ஹரிவன்ஷ்ராய் பச்சன்

1907ல் ஆங்கிலேய ஆட்சியில் ஆக்ராவுக்கு அருகில் இருந்த பாபுபட்டியில் பிறந்த ஹரிவன்ஷ்ராய் பச்சன் நவீன கவிதை உலகில் மென்மையான காதல் கவிதைகளை வடித்ததற்காக போற்றப்படுகிறார். அவ்தி மொழியில் சிறந்தவரான இவர், பிற்காலத்தில் இந்திக் கவிதைகளிலும் சிறந்து விளங்கினார். பத்மபூஷன் விருது பெற்றவர். இவருடைய “மதுசாலா” கவிதையே இவரின் ஆகச்சிறந்த படைப்பாகப் பேசப்படுகிறது. புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை இவரே.