இணை

உமா கதிர்

எல்லோரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பிக்கொண்டிருந்தனர். என் கோப்பையில் இன்னும் கொஞ்சம் மது இருந்தது. நான் பொறுமையாகக் குடித்து கடைசியில் விடைபெறலாம் என எண்ணியிருந்தேன். ரிச்சர்ட், வாசலில் நின்று செல்பவர்களிடம் கைகுலுக்கி விடைகொடுத்தார். முக்கால்வாசிப் பேர் சென்றுவிட்டனர். சாவகாசமாக வந்தவர் எனக்கு இன்னொரு கோப்பையில் மது கொண்டுவந்தார்.

“ஆல்பர்ட், விடியப்போகும் புது ஆண்டுக்காக” என்று சொல்லிக் கோப்பையை உயர்த்தினார்.

ரிச்சர்ட் தென்கொரியாவின் பிரபலமான கார் நிறுவனத்தில் வடிவமைப்ப் பிரிவின் முதன்மைப் பொறியாளர். என்னைப் போலவே அவரும் ஒரு பொறியாளர்தான் என்றாலும் ஆசிய பசிபிக் பகுதி அவரது குடையின் கீழ் வரும். அதில் வரும் சிங்கப்பூர்க் கிளையின் சிறிய குடை என் வசம் இருக்கிறது. சொந்தக் காரணங்களுக்காகவும் குடும்பத்தோடு புத்தாண்டை இங்கு கொண்டாடவும் மீதமுள்ள நேரத்தில் கொஞ்சம் அலுவலக வேலை எனவும் வகுத்துக்கொண்டார். அதையொட்டிய சிறியதொரு புத்தாண்டு விருந்து அளித்தார்.

ஸோஜு எனப்படும் இந்த மது, அரிசியில் செய்யப்படும். கட்டைவிரல் உயரமுள்ள சிறிய கண்ணாடிக் குப்பியில் ஊற்றி ஊற்றி வாயில் சரித்துக்கொண்டே இருந்தார். நானும் ஒரு ஏழெட்டு முறை சரித்துவிட்டேன். இன்னும் குடித்தால் மிதமிஞ்சிய போதையாகிவிடும். வீடு போய்ச் சேருவதில் சிக்கல் உண்டாகலாம். முன்னர் விடைபெற்றவர்களுக்கு வீட்டில் அவர்கள் வருகையை எதிர்நோக்கி எவரும் காத்துக்கொண்டிருக்கலாம். எனக்கு அப்படி இல்லை.

இரு விரல்களால் ஏந்தி ஒரே சமயத்தில் சரித்துக்கொண்டோம். நீர் போன்றிருக்கும் இந்த மது உள்ளே செல்லச் செல்ல துக்கங்களை வெளியே அனுப்பிக்கொண்டே இருந்தது.

இப்போது நானும் ரிச்சர்டும் மட்டும் தனித்திருந்தோம்.

“ஆல்பர்ட், உங்கள் தனிப்பட்ட விவகாரத்தைக் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம், நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? நான் கவனித்தவரை சிங்கப்பூரர்கள் திருமண பந்தத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதது போல உணர்கிறேன்” என்றார்.

இதே கேள்வியை நான் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்வேன். இவரிடம் உண்மையைச் சொல்வதில் பிழையில்லை. எனக்கு அனேக வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏதோ ஒன்று தடுத்து எல்லா வாய்ப்புகளையும் நானே பாழாக்கிவிட்டேன். என் நாற்பத்தி எட்டாவது வயதில் கூட ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் தனித்திருத்தலின் சுகத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தவிர்த்துவிட்டேன். இப்போது 57 வயது நடக்கிறது. இனிமேல் ஒரு துணைக்கான வாய்ப்பு முற்றிலும் அடைபட்டு விட்டது.

என் நாற்பத்தி எட்டாவது வயதில் கூட ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் தனித்திருத்தலின் சுகத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தவிர்த்துவிட்டேன்.

“ரிச்சர்ட், இதுவரை யாரிடமும் பகிர்ந்ததில்லை. இந்த மது என்னை மிகவும் இலகுவாக்கி மனதை துள்ளச் செய்கிறது.. நீச்சல் குளங்களில் மிதக்கும் பலூன்களில் அமர்ந்திருப்பார்களே அப்படி மேகக்கூட்டங்களுக்கிடையே மிதந்துகொண்டிருக்கிறேன். இப்போதுகூட நான் பொய் சொல்வது நியாயமாக இருக்காது.

பால்யத்தில் எனக்குப் பெரும் பொறுப்புகள் இருந்தன. எனக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி, என் பத்தாவது வயதிலேயே என் தந்தை இறந்துவிட்டார். அவர் இரண்டாம்தரக் காரியங்களை செய்துகொடுக்கும் கேங் ஒன்றில் இருந்தார். மாத்திரைகள், போதை வஸ்துகள் போன்றவை. அவர் இறந்ததும் அது தொடர்பான பிரச்சினை ஒன்றில்தான். பிள்ளைகள் அந்தப்பாதையில் சென்றுவிடக்கூடாது என அம்மா எங்களை வளர்த்தார். ஆனால் அண்ணன்கள் இருவரும் அப்பாதையிலே சென்று அப்பாவின் பெயரை எடுத்தனர். நான் படிப்பில் ஓரளவு தேறி பொறியியல் படிப்புக்குத் தேர்வானேன். அண்ணன்கள் இருவருமே எனக்கு உதவினார்கள்.

மூத்த அண்ணன் ஒருமுறை வேலை விஷயமாக மலேசியா சென்றவர் திரும்பவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரண்டாவது அண்ணன் அவரைத் தேடிச் சென்றபோது நிறைய பிரச்சனைகள். சிறை செல்வதும் மீள்வதுமாகவே இருந்தார். சில வருடங்களில் அவர்கள் குழுக்களுக்கு இடையேயான அடிதடியில் சிக்கியவர் பதினைந்து வருடமாக நினைவு திரும்பாமலேயே இருக்கிறார். நினைவு திரும்புவது அனேகமாகச் சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அவரை ஒரு நர்சிங் ஹோமில் வைத்துப் பராமரித்து வருகிறேன்.

அக்காலகட்டத்தில் நிறைய பாடுகள். இன்றிருப்பது போல் அல்ல. இந்த தேசம் உருப்பெற்றபோது சமூகங்கள் இப்படி இல்லை. கொஞ்சம் மூர்க்கத்தனதுடன் இருந்தது. இவர்கள் குறித்த விசாரணை ஒரு பக்கம், எங்கு திரும்பினாலும், என்ன வேலை செய்தாலும் குடும்பத்தின் பின்புலம் என்னை வெகுவாக பாதித்தது. உடன் பிறந்தவள் அவள் காதலனோடு ஆஸ்திரேலியா சென்றுவிட்டாள், என் பிறந்தநாள் அன்று மட்டும் இரண்டொரு வார்த்தைகள் பேசுவாள். இடையில் அம்மாவின் மறைவு.

இத்தனை பிரச்சனைகளுக்கு இடையில் எனக்கு வந்த வாய்ப்புகளை நான் நிராகரித்ததும், அவர்கள் என்னை நிராகரித்ததுமாகத் தொடர்ந்தது. அண்ணன்கள் வாங்கிய கடன்கள், மருத்துவச் செலவுகள் என என் நாற்பது வயதுவரை கடன்களை அடைக்கவே போராட்டமாக இருந்தது. இப்போதும்கூட எங்காவது கடன் சுறாக்களைக் காண நேர்ந்தால் உடைந்து போவேன். அவ்வளவு துன்பங்களை அனுபவித்துவிட்டேன். அண்மைய ஆண்டுகள்தான் எனக்கு ஆரோக்கியமாக அமைந்தது. என் இளம் வயதில் குடும்பம் என்ற அமைப்பின் மீது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் என்னைத் தனித்திருப்பவனாக மாற்றியிருக்கும் என இப்போது யூகிக்கிறேன்.”

ரிச்சர்டின் முகம் கவலைக்குள்ளானது போலத் தெரிந்தது. உள்ளே சென்று புதிதான இரண்டு குப்பிகள் எடுத்து வந்து குப்பியில் ஊற்றினார்.

“சிலருக்கு வாழ்க்கை அப்படி எழுதப்பட்டுவிடும் ஆல்பர்ட், ஆனால் இத்தனை பயங்கரமான சூழலையும் கடந்து இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா இது பெரிய காரியம். என்னைப் பொறுத்தவரை குடும்பத்தின் பாவப் பின்புலத்தை உங்கள் உழைப்பின் மூலம் வென்றெடுத்துவிட்டீர்கள், அதற்காக கொண்டாடுவோம்!” மறுபடியும் கோப்பைகள் உயர்ந்தன.

பின்னர் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆத்மார்த்தமாக விடைகொடுத்தார். ஓய்வு பெற்றுவிட்டால் அவரது ஊருக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஏற்றுக்கொண்டேன். பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்தேன். நடையில் லேசான தள்ளாட்டம் ஆனால் மோசமில்லை. மணி பதினொன்றரை ஆகியிருந்தது. டாக்சியில் போகலாம் ஆனால் டாக்சிகளுக்கென்று ஒரு மணம் உள்ளது. அது எனக்கு ஆகாத ஒன்று. பேருந்துதான் எப்போதும் என் விருப்பம்.

குடியிருப்பின் அருகே உள்ள நிறுத்தத்தில் இறங்கி நடந்துகொண்டிருந்தேன். மின்தூக்கியில் ஏறும் முன்பு கடிதப்பெட்டியை சோதிக்கவேண்டும். மறக்கக்கூடாது என மனதில் குறித்துக்கொண்டேன். கடிதப்பெட்டியில் வங்கிப்பரிவர்த்தனை, விளம்பரக் காகிதங்கள், மருத்துவமனை கடிதங்கள், சஞ்சிகைகள் என நிறைய இருந்தன. நெடுநாட்களாகச் சோதிக்கவில்லை. முக்கால்வாசிக் கடுதாசிகளை பிரிக்காமலேயே தோம்பில் இட்டேன். உள்ளே என்ன இருக்கும் என நன்றாக அறிவேன். பல வருடங்களாக அவை வருகின்றன. நான் இறந்துபோனாலும்கூட வரும் போலும். முக்கியமான கடிதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பூட்டினேன். எங்கோ ஒரு கிளி கத்தும் சத்தம் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சுற்றிலும் தேடினேன். எங்கிருந்து வருகிறது என அறியமுடியவில்லை. ஆள் அரவமில்லாமல் இருந்தது. அருகில் உள்ள ஈரச்சந்தையை ஒட்டிய உணவங்காடியில் பலர் பியர் போத்தலை உயர்த்தித் தம் புத்தாண்டு வாழ்த்துகளை உலகுக்கு அறிவித்தார்கள்.

அங்கே ஒரு சிறு கிளி அமர்ந்திருந்தது. அதன் உடல் வெடவெடப்புடன் நடுங்கிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் அது சப்தமெழுப்புவதை நிறுத்திவிட்டது.

மின்தூக்கி பக்கம் நான் நெருங்கியபோது கிளி இன்னும் உக்கிரமாகக் கத்தியது. நான் திரும்பச் சென்று சுற்றிச் சுற்றி அலைபாய்ந்தேன். அது என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. அதன் சமிக்ஞைகள் என்னிடம் முழுமையாய் வந்துசேர்வதை மதுமயக்கம் தடுத்தது. கண்ணாடியை அணிந்து பார்வையைக் கூராக்கி, காதினைத் திறந்து கவனித்தபோது கட்டடத்தின் கீழ்த்தளத்தில் சிறிய சத்தம் கூட நான்கு மூலைகளிலும் எதிரொலித்தது.

இங்குதான் எங்கோ இருக்கவேண்டும். அது மீண்டும் மீண்டும் சப்தமெழுப்பியது. ஒருவழியாக ஒலியினைப் பின்தொடர்ந்து சென்று, வழக்கமாக வயதானவர்கள் அமர்ந்து அரட்டை பேசும் இருக்கைக்கு அடியில் இருந்து சத்தம் வருவதைக் கண்டுகொண்டேன். தரையில் அமர்ந்து குனிந்து பார்த்தபோது, அங்கே ஒரு சிறு கிளி அமர்ந்திருந்தது. அதன் உடல் வெடவெடப்புடன் நடுங்கிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் அது சப்தமெழுப்புவதை நிறுத்திவிட்டது.

உள்ளங்கை அளவே உள்ள சிறிய வகைப் பறவை. கிளியைப் போல உருவம், ஒலியும் கிளிப்பிள்ளை போலவே. இறக்கை பச்சை நிறத்திலும், தலையின் மேல்பகுதி ஆரஞ்சு நிறத்திலும், அலகுகள் மென்மஞ்சள் நிறத்திலும் இருந்தன. துவரம்பருப்பின் நடுவில் கரும்புள்ளி வைத்ததுபோல இரு சிறிய கண்கள். கழுத்தில் பென்சில் கோடு போல ஒரு வட்டம். ஒருகால் சற்றுத் தளர்ந்திருந்தது.

நான் மெதுவாக வலதுகையை அதனிடம் நீட்டினேன். தலைசாய்த்து இரு நொடிகள் யோசித்தது. பிறகு ஒருகாலை மெதுவாக ஊன்றி மெல்ல நடந்து வந்து கையில் ஏறி அமர்ந்துகொண்டது. அதிகம்போனால் ஐம்பது கிராம் இருக்கும். அதற்குள் ஓர் உயிரும் சப்தமும் வெம்மையும் நிறங்களும் இருப்பதை நினைத்து மாய்ந்தது மனது.

பின்புறம் கரவொலி எழ புத்தாண்டு பிறந்தது. வானில் வெடி வெளிச்சம் பரவியது.

அதை கைகளில் ஏந்திக்கொண்டு சாலையைக் கடந்து உணவங்காடியில் அமர்ந்திருந்த ஓரிருவரிடம் பறவையைக் காட்டிக் கேட்டேன். இல்லையென்றனர். எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் கேட்டுச் சலித்துப்போனது. எல்லோரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். பெரும்பாலான சாப்பாட்டுக்கடைகள் அடைபட்டிருந்தன. ஓரிரு தினக்குடியர்கள் இருந்தனர். அவர்கள் எவரும் பறவை வளர்ப்பவரில்லை.

எடுத்த இடத்திலேயே விட்டுவிடலாம். தொலைத்தவர் காணக்கூடும். ஆனால் விடியும்வரை அது உயிரோடு இருக்கவேண்டும். வெளிச்சம் வந்த பிறகு இந்த பூஞ்சைப் பறவை பெரிய பறவைகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம். இது கூண்டுக்குள் பிரசவிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பறவையாக இருக்கலாம். வான்வெளியை இச்சிறகுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அளவாகப் பறக்கக்கூடிய அளவிலேயே அதன் சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன.

கையில் ஏந்திக்கொண்டே வீட்டைத் திறந்து சாப்பாட்டு மேசையில் சிறிய துணி விரிப்பை விரித்து அதிலே விட்டேன். நான் சமைப்பதில்லை. அதனால் சமையலறையில் ஒன்றுமே இருக்காது. குளிர்பதனப் பெட்டியில் எப்போதோ வாங்கிய திராட்சை இருந்தது. கழுவி இரண்டாகப் பிளந்து அதனிடம் வைத்தேன். ஒரு சிறிய கிண்ணத்தில் நீரும் வைத்துவிட்டு அருகில் அமர்ந்தேன்.

மெதுவாக வந்து திராட்சையைத் தன் சிறிய அலகால் கொத்தித்தின்றது. மேசையிலேயே சற்று நேரம் அமர்ந்திருந்து அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்புறத்தை ஆட்டியவாறு மெல்ல மேசையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வரை நடை பயின்றது. இடையிடையே திராட்சையில் ஒரு கடி, பிறகு நடை, பிறகு சிறிய சத்தம். என்னைத்தவிரக் கடைசியாக இந்த வீட்டிற்குள் வந்தது ‘ஏர்கான்’ சரிசெய்ய வந்தவர்தான். இப்போது இந்தக்கிளி.

யாருடையது என்று விசாரிக்கவேண்டும். யோசனையில் சாப்பாட்டு மேசையிலே அமர்ந்தநிலையில் உறங்கியிருந்தேன்.

விடிந்து பார்க்கையில் மேசையெங்கும் நகங்களால் கிள்ளி எறிந்ததைப் போல காய்ந்த திராட்சைத் தோல்கள் சிதறிக்கிடந்தன. கிளியைக் காணவில்லை. தலையை அசைக்கும்போதுதான் அது என் தலையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். அலுங்காமல் அதைக் கீழிறக்கி மேசையின் மீது விட்டேன். முந்திய இரவைவிட அதன் சத்தம் உற்சாகமாக இருந்தது. அங்கும் இங்கும் தாவிப் பறந்தோடியது.

பலநாள் பழகியதைப் போலத் தோளில் வந்து அமர்ந்தது. வளர்ப்பவருக்கென்றால் அதன் செய்கைகளில் அர்த்தம் புரிந்துபோகும், பசிக்கிறதா, நீர் வேண்டுமா, என்ன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

குளித்து வெளிவரும்போது ஒய்யாரமாகச் சமையலறை பாத்திரம் கழுவும் குழாயில் அமர்ந்திருந்தது. வெளியே சென்று பழங்கள் வாங்கி வந்தேன். அப்போதும் என் தோளிலேயே அமர்ந்திருந்தது. ஆப்பிள், கொய்யா, திராட்சைகள் வாங்கி வந்தேன். ஆப்பிளின் சிறுபகுதியை வெட்டி அதற்கு வைத்தேன். கொறிக்க ஆரம்பித்தது. இரவு சரியாக உறங்காததால் தூக்கம் வரவே கிளிக்கு தேவையான நீரையும் உணவையும் வைத்துவிட்டு உறங்கச்சென்றேன்.

தலையை அசைக்கும்போதுதான் அது என் தலையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். அலுங்காமல் அதைக் கீழிறக்கி மேசையின் மீது விட்டேன்.

மனதில் ஏதேதோ எண்ணங்கள். இப்பறவையின் சிறிய வயிற்றுக்குள் இந்த முழு ஆப்பிளும் செல்ல வேண்டும் என்றால் எத்தனை துண்டுகளாக அதை வெட்ட வேண்டும்? எத்தனை நாளைக்கு வரும்? மிகச்சிறிய செலவுதான் இது. ஏன் நாம் ஒரு வீட்டுப்பிராணியை வளர்க்கக் கூடாது? பயணங்களில் யார் அதைப் பார்த்துக்கொள்ள முடியும்? பின்வாங்கினேன். வீட்டைச் சுத்தம் செய்வது பெரிய வேலையாகும். மேசையில் ஆங்காங்கே மழைத்துளி போலக் கழிந்து வைத்திருக்கிறது. இது நமக்கு ஒத்துவராது.

மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும். அன்றே யாரும் உரிமை கோராவிட்டால் பணிமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். தனியாக நாள் முழுதும் இருக்குமா என்று தெரியவில்லை. பணிமனையில் ராட்சத மின்விசிறிகள் உண்டு. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே உறங்கிப்போனேன்.

உறக்கத்தின் இடையிலும் அவ்வப்போது கிளியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. கனவா நனவா என்பதை பிரித்தறியாத நிலையில் இருந்தது.

சிறிய தட்டில் வைத்த தண்ணீர் கவிழ்ந்து கிடக்க, ஆப்பிளைச் சிறிய துகள்களாக அலகால் வெட்டி வைத்திருந்தது. மேசையைத் துடைத்துவிட்டு அதனைப் பார்த்தேன். சீக்கிரம் முடித்து எனக்கு உணவிடு என்பதைப் போல இருந்தது. முன்பிருந்ததைப் போல அல்லாமல் இப்போது தயக்கமில்லாமல் நடந்தது. அதன் கால்கள் ஓரளவு பலமடைந்திருக்கவேண்டும்.

இரவு பியர் குடித்துக்கொண்டே நான் அதனோடு பேசிக்கொண்டிருந்தேன். அது பொறுமையாக தலைசாய்த்து நடந்துகொண்டே சுவாரஸ்யமாகக் கேட்டதைப்போலதான் இருந்தது. இடையில் அது சத்தம்போட்ட போது அதன் மொழி எனக்குப் புரியவில்லை.

மறுநாள் காரில் என்னோடு அலுவலகத்திற்கு வந்தது. இதற்கொரு கூண்டு வாங்கினால் நல்லது இல்லையென்றால் அமரும் இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும். குழந்தைகளுக்கு இருப்பதுபோல பறவைகளுக்கு ‘பாம்பர்ஸ்’ இருக்குமா? இருந்தால் சுதந்திரமாக வீடு முழுக்கப் பறக்க விடலாம். நாய்களைக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியே அழைத்துச் சென்று கழிக்க விடுவார்களே அதைப்போல இப்பறவையைப் பழக்க முடியுமா? நான் எதற்காக இவற்றையெல்லாம் யோசிக்கிறேன் என்பது விளங்கவில்லை.

இணையத்தில் பிராணிகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களுக்கென்று ஒரு குழு இருக்கிறதாக சொன்னார்கள். அங்கே பதிந்தால் ஒருவேளை உரிமையாளர் விஷயம் அறிந்து வந்து பெற்றுக்கொள்ளலாம். அலுவலகத்தில் மெர்சியிடம் கேட்டுப்பார்க்கலாம். அவள் ஒரு பூனையை வளர்க்கிறாள். அவள் காதலன் பரிசளித்தது. அப்பூனையோடு காணொளி அழைப்பில் பேசுவாள். அதுவும் பதிலுக்கு மியாவ் என்று குழையும்.

வெகுசீக்கிரமாகப் புதிய மனிதர்களோடு ஒட்டிக்கொள்ளும். இதைத் தவறவிட்டவர்கள் தேடிக் கொடுப்பவர்களுக்குப் பெரிய சன்மானங்களை வழங்குவார்கள்.

மெர்சிக்கு நான் நினைத்ததைவிட அதிகம் தெரிந்திருந்தது. பறவையைப் பார்த்த உடனேயே இதுவொரு சிறிய வகை ஆப்பிரிக்க லவ்பேர்ட்ஸ். செல்லப்பிராணியாக வளர்க்க இதைவிட எளிதான பறவை கிடையாது. வெகுசீக்கிரமாகப் புதிய மனிதர்களோடு ஒட்டிக்கொள்ளும். நடுத்தரமான விலைகொண்டவை. ஆனால் இதைத் தவறவிட்டவர்கள் தேடிக் கொடுப்பவர்களுக்குப் பெரிய சன்மானங்களை வழங்குவார்கள். பத்தாயிரம் வெள்ளிவரை கூட குடுப்பார்கள்.

ஃபேரர் கார்டனில் ஒரு ஃப்ரெஞ்ச் பெண்மணி தன் பூனைக்காக 25,000 வெள்ளி சன்மானம் அறிவித்தார். ஈரச்சந்தையில் மீன் வெட்டும் வியட்நாம்காரர் அதனைக் கண்டெடுத்துத் திரும்பக்கொடுத்தார். ஆனால் அவர் சன்மானம் வாங்கவில்லை. அது தலைப்புச்செய்தியாக வந்து அவர் புகழ்பெற்றார். அவர் வேலை செய்யும் கடையில் மீன் வாங்க கூட்டம் அலைமோதுகிறதாம். அவருக்கு வேலை கொடுத்த முதலாளியைக்கூட பேட்டி எடுத்தனர். கொஞ்சகாலம் அனைவரின் நினைவிலும் அவர்கள் இருந்தார்கள்.

“இதனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இறைவன் புத்தாண்டுப் பரிசாக இதனை அனுப்பியிருக்கலாம். இப்பறவை உங்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வரலாம்” என்று மெர்சி சிரித்தாள்.

எனக்கு இதற்குமேல் அதிர்ஷம் வந்து என்ன ஆகப்போகிறது? என மனம் யோசித்தது.

“வெறும் பழங்களை மட்டுமே கொடுக்காதீர்கள். பறவைகள் புழு பூச்சிதான் முக்கியமான உணவு.?நான் புழு பூச்சிக்கு எங்கு செல்வது?

“உங்கள் வீடருகே எதாவது வீட்டுப்பிராணிகள் கடை இருக்கிறதா என்று பாருங்கள் பறவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே புழுக்கள் வளர்ப்பார்கள்.” இணையத்தில் தேடி என் வீட்டருகே உள்ள கடையொன்றைச் சொன்னாள். குறித்துக்கொண்டேன்.

பறவை கிடைத்த வட்டாரம். இந்தப் பகுதியில் யாராவது பறவையைத் தொலைத்திருந்தால் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் என அக்குழுவில் பதிந்தாள் மெர்சி.

பறவையின் புகைப்படத்தையும் போடலாமே மெர்சி என்றேன்.

“அங்கேதான் பிரச்சினை இருக்கிறது. நிஜத்தில் தொலைத்தவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளும்போது அடையாளம் சொன்னால்தான் உண்மையான உரிமையாளர் என்று தெரியும். புகைப்படம் பதிந்தால் எளிதாக அடையாளம் சொல்வார்கள். தவறான நபர் கையில் சென்றால் அவர் அதை நல்ல விலைவைத்து விற்றுவிடுவார். நீங்களே தெரிந்துகொள்வீர்கள்” என்றாள்.

அவள் சொன்னது போலவே குழுவில் பதிந்த அன்று மாலை என்னை ஒரு பெண்மணி தொடர்புகொண்டார். நான் அடையாளம் கேட்டவுடன் மஞ்சள் நிறப்பறவை என்றாள். அதைத்தொடர்ந்து மேலும் இருவர் போலி அடையாளங்கள் சொல்லி பறவை தங்களுடையதுதான் என்றனர். என்ன மனிதர்கள் இவர்கள்! ஒருவேளை இவர்களுடைய பறவைகளும் நிஜமாகவே தொலைந்து போயிருக்குமோ?

முதலில் அழைத்த பெண்மணியே வேறு எண்ணிலிருந்து அழைத்து இம்முறை பச்சை நிறம் என்று சரியாகச் சொன்னாள். எந்தக்காலில் வளையம் கட்டியிருக்கிறது என்றேன். இடதுகால் என்றாள். அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.

புழு வாங்கலாம் என்று பிராணிகளுக்கான உணவுக்கடைக்குச் சென்றேன். கிளியைப் பார்த்த அவர்கள் ஒரு புழுப்பெட்டியைக் கொடுத்தார்கள். உள்ளே தவிட்டு நிற புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. 30 புழுக்களாவது இருக்கும், ஒன்றன் மேல் ஒன்று அவசரமாகப் புரண்டுகொண்டேயிருந்தது. நூடுல்ஸ் உயிர்பெற்றது போல ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருந்தது.

மூன்றரை வெள்ளி வாங்கிய பெண்மணி, புழுவை இரண்டாக வெட்டி ஊட்டும்படி அறிவுறுத்தினாள். புழுவை எப்படி இரண்டாக வெட்டுவது என்று வினவினேன். ஆறு வெள்ளி வாங்கிக்கொண்டு சிறிய கத்தரிக்கோலும், ஒரு இடுக்கியும் கொடுத்தாள். பெட்டியைத் திறந்து உத்தேசமாக ஒரு புழுவைப் பிடித்து ஒருநொடி கூட யோசிக்காமல் அதனை இரண்டாக வெட்டினால் பச்சையும் மஞ்சளும் கலந்த திரவம் வழிந்தது. கிளி அதனை விருப்பத்தோடு உடனே தின்றது.

இவ்வளவு அழகிய பறவை எப்படி இந்த அருவருப்பான புழுவை விரும்பி உண்கிறது என்பதுதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“வெட்டாமல் முழுதாகக் கொடுக்கலாமா?”

மீண்டும் கிளியைக் கண்டவள், “தொண்டையில் சிக்கிக்கொள்ளும், ரிஸ்க்” என்றாள்.

இதன் உண்மையான உரிமையாளர் என்னைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று மனம் வேண்டிக்கொண்டது.

“பெட்டியின் மீது நீர் படக்கூடாது. பட்டால் புழுக்கள் செத்துவிடும்” என்றாள்.

ஓரிருமுறைதான் அதற்குப் புழுவை வெட்டிக்கொடுத்தேன் பிறகு அது முழுப்புழுவையும் உண்ணப் பழகிக்கொண்டது. எனக்கு வேலை மிச்சம். வெட்டும்போது வழியும் திரவம்தான் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது.

மூன்றுநாட்களில் அப்பெட்டியில் இருந்த புழுக்கள் காலியானது. வீடெங்கும் எச்சங்கள் வேறு படுத்தியது. அவற்றின் வாடை நிரந்தரமாக வரவேற்பறையில் தங்கிவிட்டது.இப்பறவைக்கு மோசமான உரிமையாளர் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் தேடி வரவில்லை. இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது.

அடையாளங்களை சரியாகச் சொன்னார். ஃபேஸ்புக்கில் பார்த்து அழைத்ததாகக் கூறினாள். பயணத்தில் இருப்பதாகவும் மறுநாள் வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொன்னாள். சரியென்று சொல்லி அழைப்பைத் துண்டித்தபிறகுதான் யோசித்தேன். வெளிநாட்டில் இருப்பவர் இங்கு எப்படி தொலைத்தார்? நாளை தெரிந்துவிடும்.

அப்பெண்மணியைக் கண்டதும் என் தோளில் அமர்ந்திருந்த கிளி ஒருநொடி கூட யோசிக்காமல் உடனே பறந்து அவரிடத்தில் அமர்ந்தது. அக்கிளிக்கு மிரா என்ற பெயரையும் அறிந்துகொண்டேன்.

புகைப்படம் பதிந்தால் எளிதாக அடையாளம் சொல்வார்கள். தவறான நபர் கையில் சென்றால் அவர் அதை நல்ல விலைவைத்து விற்றுவிடுவார்.

தோளின் இடதுபுறமும், வலதுபுறமும் சென்று திரும்பி அவளை முகர்ந்துகொண்டே இருந்தது. பூனை உரசுவதுபோல உரசியது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. விரல்களில் ஏந்தி அதற்கு கணக்கற்ற முத்தங்கள் இட்டாள். சிறிதுநேரம் நான் அங்கிருப்பதையே மறந்துவிட்டாள். உரிமையாளர் இவர்தான் என்பது உறுதி. இப்படியே கிளம்பிவிடலாம் என அவளைப் பார்த்தேன். அவள் ஒவ்வொரு இறக்கையாக பிரித்து எதாவது காயங்கள் உள்ளதா என ஆராய்ந்துகொண்டிருந்தாள். கிளம்ப எத்தனிக்கையில் அவள் இயல்புநிலை மீண்டு அழைத்தாள்.

சீனப்பெண். வயது நாற்பதை ஒட்டி இருக்கலாம். உடல் பராமரிப்பில் அக்கறை கொண்டவள். நேர்த்தியான உடை. கூந்தலுக்கு நிறமிடவில்லை. உதட்டுக்கும் அலங்காரமில்லை. எளிமையாக, வார்த்தைகளில் தடுமாற்றமில்லாமல் தெளிவாகப் பேசினாள்.

ஆண்டிறுதி விடுமுறை, புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட குழுவாக நேபாளம் சென்றிருக்கிறார்கள். எவரெஸ்ட் ஏறுவதற்கான பயிற்சியில் இருக்கிறாராம். மிராவைத் தன் தங்கையின் வசம் விட்டுச் சென்றிருக்கிறாள். டிசம்பர் 31 காலையில் இருந்தே காணவில்லையாம். அக்காவுக்குத் தெரியாமலேயே எப்படியாவது மீட்டு விடலாம் என்ற எண்ணத்தில் அவள் தெரிவிக்கவில்லை. பிறகு காணொளி அழைப்பில் தொலைந்துபோனது தெரிந்து பயணத்திலிருந்து பாதியில் திரும்பிவிட்டதாகச் சொன்னாள்.

“ஃபேஸ்புக்கில் நானும் அறிக்கையிட்டிருந்தேன். எப்படியோ உங்கள் பதிவு எனக்குத் தெரியவில்லை. தினம் தினம் நிறைய பிராணிகள் தொலைந்துபோகின்றன. உங்கள் பதிவு கண்ணில் படாமல் தாழச்சென்றுவிட்டதுபோல.”

மன்னிப்புக் கோரினாள். அவளும் தனித்திருப்பவள் என்று தெரிந்தது. இப்பறவை தவிர ஓரிரண்டு செல்லப் பிராணிகள் அவளிடம் உள்ளன. சொந்தப்பிள்ளையைப்போல அக்கிளிப்பிள்ளையின்மீது பாசம் கனிந்திருந்தாள். தங்கை பணிப்பெண்ணிடம் வேலையை ஒப்படைக்க, அவள் கூண்டைத் திறந்து வீட்டைச் சுத்தம் செய்கையில், இது அவளைத் தேடி வெளியில் வந்து தொலைந்துபோயிருக்கிறது.

அவள் வசிக்கும் புளோக்கின் இலக்கம் என் இலக்கத்திலிருந்து இருபது எண்ணிக்கை தள்ளி இருந்தது. அதுவும் எட்டாவது மாடியில் இருந்து இது எப்படி கீழே பறந்தது என்று எனக்கு ஆச்சரியம். அதுவுமில்லாமல் இரு கட்டடங்களுக்கு இடையில் பெரிய சாலை ஒன்றும் பலமாடிக் கார்நிறுத்தக்கூடம் ஒன்றும் இருக்கிறது இதையெல்லாம் தாண்டி அடிபட்ட காலுடன் இத்தனை தூரம் பத்திரமாக வந்தது ஆச்சரியம்தான். அவள் வியந்து பேசிக்கொண்டிருந்தாள்

.தலைதாழ்த்தி பலமுறை நன்றி அறிவித்தாள். ஆச்சரியமாக அக்கிளி திடிரென்று என்மீது வந்து அமர்ந்துகொண்டது. அவள் செல்லமாக மிராவைக் கோபித்துக்கொண்டாள்.

ஒருவழியாக அவளிடமிருந்து விடைபெற்று திரும்புகையில் போனில் குறுஞ்செய்தி விழுந்தது. நான்கு வரிகளில் மீண்டும் நன்றி அறிவித்தாள். கூடவே எனக்கு முந்நூறு வெள்ளி அனுப்பியிருந்தாள். உடனே அழைத்து எதற்கு என்று கேட்டேன். அது தான் அறிவித்த சன்மானம் என்றும் மேலும் தருவதாகவும் சொன்னாள். நான் திரும்ப அவள் எண்ணுக்கே அதை அனுப்பினேன்.

அவள் உடனே எனக்கு அழைத்து மன்னிப்புக் கோரினாள். நான் ஏற்றுக்கொண்டேன். வார இறுதியில் சந்திக்கலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். பிறகு ஒவ்வொரு வார இறுதியிலும் சந்தித்துக்கொண்டோம். இப்போதெல்லாம் தினமும் நேரில் பார்த்துக்கொள்கிறோம்.