டிவிட்டருக்குச் சவால்விடும் திரெட்ஸ்

நித்திஷ் செந்தூர்

டிவிட்டருக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ளது ‘திரெட்ஸ்’ (Threads) எனப்படும் புது சமூக ஊடகத் தளம். ‘மெட்டா’ (Meta) நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ (Instragram) குழுவினர் திரெட்ஸ் செயலியை உருவாக்கியுள்ளனர். கடந்தமாதம் (ஜூலை 5 அன்று) வெளியிடப்பட்ட திரெட்ஸ், 5 நாள்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை இணைத்துள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 150 மில்லியனை விஞ்சியுள்ளது. ‘App Store’, ‘Google Play Store’ ஆகிய தளங்களிலிருந்து பயனர்கள் திரெட்ஸ் செயலியை இலவசமாகப் பதிவிறக்கலாம்.

டிவிட்டரைப் போல் எழுத்து என்ணிக்கை அடிப்படையிலான சமூகத் தளமாக திரெட்ஸ் முளைத்துள்ளது. ஆனால் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்துள்ள பயனர்கள் மட்டுமே திரெட்ஸ் செயலியில் இணைய இயலும். அதில் 500 எழுத்துகள் வரையிலான சிறு பதிவுகளைப் பயனர்கள் பதிவுசெய்யலாம். அதோடு இணைப்புகள் (links), படங்கள், 5 நிமிட வரையறைக்குள் அடங்கும் காணொளிகள் ஆகியவற்றையும் பதிவில் சேர்க்கலாம். பிடித்தமான பதிவுக்கு விருப்பம் தெரிவிக்கலாம், கருத்துத் தெரிவிக்கலாம், அதனைப் பகிரலாம். செயலி, இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் திரெட்ஸ் பதிவுகளைப் பயனர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பகிரலாம்.

திரெட்ஸ் செயலி நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது வெளியிடப்படவில்லை. தரவு பகிர்வு, தனியுரிமை ஆகிய அம்சங்களில் கவலை எழுந்ததைத் தொடர்ந்து அங்கு அச்செயலி வெளிவரவில்லை. திரெட்ஸ் செயலியை ஆக அதிகமாக இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். மொத்தமாகச் செய்யப்பட்ட பதிவிறக்கங்களில் அது 33 விழுக்காடு. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில் (22%), அமெரிக்கா (16%), மெக்சிக்கோ (8%), ஜப்பான் (5%) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் திரெட்ஸ் செயலியை ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

‘திரெட்ஸ்’ செயலியின் இலச்சினை

‘கு’ எழுத்தை நினைவுகூரும் வண்ணம் செயலியின் இலச்சினை அமைத்துள்ளது. தமிழ் இணையவாசிகளை அது வெகுவாக ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலிக்குத் தலைவரான ஆடம் மொசாரி (Adam Mosseri) இலச்சினைக்கான விளக்கத்தை திரெட்ஸ் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார். இலச்சினை, ‘@’ குறியீட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்றும் அக்குறியீடு பயனர்ப் பெயர் (username), தனிநபர், குரல் ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் ஆடம் மொசாரி தெரிவித்துள்ளார். திரெட்ஸ் பதிவைத் தொடங்கிய பின், அது சுழற்சியாகத் தொடர்வதால் அக்குறியீட்டை உட்பொருளை இலச்சினை எடுத்துக்காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பு

இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பில் (Updated version) பதிவுகளை மொழிபெயர்க்கலாம். அனைத்துலக சமூக ஊடகத் தளமாகத் திகழும் திரெட்ஸில் மொழிபெயர்க்கும் வசதி, செயலிவாசிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். பயனர்களைக் கவர்ந்த பதிவைப் பின்தொடர்வதற்கான அம்சமும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் ஊறிப்போனர்களுக்கு திரெட்ஸ் தளம் ஊக்கமாக இருக்கும். ஊர்ப்பட்ட ஊடகத் தளங்கள் ஏற்கெனவே உள்ளன. அவை யாவும் நேரத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இன்னொன்றா எனப் புலம்புவோரின் சத்தமும் கேட்கிறது. எது இருப்பினும் ஒரு தளத்தின் வெற்றி அதன் தொடர்ச்சியிலும் அதனைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையிலும்தான் அடங்கியுள்ளது. அதற்குக் காலம்தான் பதில் கூறும்.