மண்ணுமலையில் தமிழ் மணங்கமழும் சாதனை

நித்திஷ் செந்தூர்

ஒரே இடத்தில் 407 பேர் ஒன்றுகூடித் தமிழ்க் கதைப் புத்தகங்களைப் படித்து சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். ‘மண்ணுமலை’ எனத் தமிழர்களால் வழங்கப்படும் பொத்தோங் பாசிர் வட்டாரத்தில் கடந்த மாதம் (ஜூலை 22) தமிழ் மணங்கமழும் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் இதுபோன்ற தமிழ்ச் சாதனை படைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

பொத்தோங் பாசிர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் 34ஆவது பைந்தமிழ் விழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மக்கள் கழக நற்பணிப் பேரவையும் மத்திய சமூக மேம்பாட்டு மன்றமும் நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கின. சாதனைக்குக் கைகொடுக்க தொடக்கப்பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான கதை புத்தகங்களோடு பொத்தோங் பாசிர் சமூக மன்றத்தின் பல்நோக்கு மண்டபத்தில் ஒன்றுகூடினர். புத்தகம் படிக்க சுமார் 20 நிமிடம் வழங்கப்பட்டது.

நூலை வாசித்த பிறகு, கதையின் தலைப்பு, எழுத்தாளரின் பெயர், கதையில் கற்றுக் கொண்ட பண்பு ஆகியவற்றை வழங்கப்பட்ட சிறு தாளில் பங்கேற்பாளர்கள் எழுதினர். நிகழ்ச்சிக்கு தேசிய நூலக வாரியம் சுமார் 200 நூல்களை இலவசமாகக் கொடுத்தது. அதோடு மறைந்த முன்னாள் கவிஞர் முத்துமாணிக்கத்தின் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர். பி.கே.கந்தசாமி முத்துலெட்சுமி குடும்பத்தினரின் ஆதரவில் தமிழ்ப் புத்தகக்குறி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துவந்த பள்ளிகளுக்குச் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாட்டுக்குழுத் தலைவி கமலாதேவியுடன் இளம் தமிழாசிரியர்கள்

“மாணவர்களுக்குப் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் கற்றல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. அதனைத் தாண்டி புதிதாக ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்று சிந்தித்தபோது வாசிப்பை வைத்து ஒரு சாதனையை நிகழ்த்தலாமே என்ற எண்ணம் மலர்ந்தது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து தமிழ்ப் புத்தகங்களை இல்லத்தில் வாசிக்கவேண்டும் என்ற நோக்கமும் எங்களுக்கு இருந்தது. அதற்கு இந்தச் சாதனை முயற்சி ஓர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என நம்புகிறோம். சுமார் 200 பங்கேற்பார்களைத்தான் எதிர்பார்த்தோம். ஆனால் சாதனையில் பங்கேற்றோரின் எண்ணிக்கை அதைவிட இருமடங்கு. இளம் தமிழ் ஆசிரியர்களின் பேராதரவு இச்சாதனைக்கு ஊன்றுகோலாக அமைந்தது. அதோடு, பைந்தமிழ்த் திங்களில் அடிப்படை மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் அங்கங்களும் உள்ளன” என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவி செ.கமலாதேவி மோகன்ராம்.

சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகச் சான்றிதழ்

சிங்கப்பூரில் ஜூலை மாதத்திற்கும் தமிழ்மொழிக்கும் இருந்த நெருங்கிய உறவு குறித்த அரிய விவரங்கள் நிகழ்ச்சியில் பகிரப்பட்டன. தமிழ் முரசு நாளிதழ் 1935ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று மலர்ந்தது. அதே தினத்தில் முதல் தமிழ் நூல் நிலையம், 20 கிள்ளான் சாலையில் தோற்றம் கண்டது. அங்கு கல்வி இலவசமாகக் கற்பிக்கப்பட்டது. சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற 1959ஆம் ஆண்டு, ஜூலை 1 அன்று, முதல் சட்ட சபையில் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லப்பா இராமசாமியும் எஸ்.வி.மாணிக்கமும் தமிழில் உறுதிமொழி எடுத்தனர். அண்ணா சிங்கப்பூருக்கு 1965ஆம் ஆண்டு ஜூலை 1அன்று வருகை புரிந்தார். இப்படிப்பட்ட சிறப்புகளை ஜூலை மாதம் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பைத்தமிழ்த் திங்களை அம்மாதத்தில் ஏற்பாடு செய்து வருகிறது பொத்தோங் பாசிர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.