சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல (இறுதிப்பகுதி)

பெற்றுப்போட்டவர் ராஃபிள்ஸ், பாராட்டி வளர்த்தவர் ஃபார்க்குவார்

பாலபாஸ்கரன்

‘சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல’ தொடர் டிசம்பர் 2022 இதழிலிருந்து வெளியாகத் தொடங்கியது. இவ்விதழில் நிறைவுகாண்கிறது. பாலபாஸ்கரனின் புதிய தொடர் என்றதும் சிங்கப்பூரில் பலர் ஆர்வத்துடன் தி சிராங்கூன் டைம்ஸ் வாசிப்பதைக் காணமுடிந்தது. அவருக்கே உரித்தான அபாரமான வீச்சுள்ள மொழியும் இதுவரை அதிகம் அறியப்படாத தகவல்களுமாகச் செறிந்துள்ள இத்தொடர், பொது வாசகர்களையும் ஆய்வாளர்களையும் ஒருங்கே ஈர்த்துள்ளது. ஆய்வுலகில் பாலபாஸ்கரன் தொடர்ந்து கவனிக்கப்படும் ஓர் ஆளுமை என்பதையும் மீளுறுதி செய்துள்ளது. இத்தொடர் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே பாலபாஸ்கரன் மறைந்தாலும் (பிப்ரவரி 2023) அவரது அருங்குரல் இத்தொடரின் வழியாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அரிய வாய்ப்பை தி சிராங்கூன் டைம்ஸுக்கு வழங்கிய அவருக்கு ஆசிரியர் குழுவின் நன்றி! மனமார்ந்த அஞ்சலி!

அந்தத் திருப்புமுனை இதுதான். நெதர்லந்தும் பிரிட்டனும் 1824 மார்ச் 17 அன்று செய்துகொண்ட லண்டன் சமரச ஒப்பந்தத்தின்படி நெதர்லந்து பென்கூலினை எடுத்துக்கொண்டு மலாக்காவைவிட்டு வெளியேறியது. சிங்கப்பூருக்குக் காட்டிய எதிர்ப்பையும் அது கைவிட்டது. இந்தோனேசிய வட்டாரத்தில் நெதர்லந்தும் மலாயா வட்டாரத்தில் பிரிட்டனும் ஆதிக்கம் செலுத்த வகைசெய்யும் ஒப்பந்தம் அது. ஒருவர் பிரதேசத்தில் மற்றவர் தலையிடக்கூடாது.

பிரிட்டிஷ் மக்களவையில் 1824 ஜுன் மாதம் பேசிய வெளியுறவு அமைச்சர் க்கேனிங் பிரபு, “மலாக்கா நீரிணையை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே சிங்கப்பூரைப் பிடித்தோம்; சிங்கப்பூர் எங்கள் கைக்கு வந்தவுடன் இந்தியாவின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முழுமை பெற்றது” என்றார் பெருமிதத்துடன். அவர்தாம், பலவீனத்தில் உழன்ற நெதர்லந்துடன் ஒப்பந்த விதிகளை பிரிட்டனுக்குச் சாதகமாகப் பேசி முடித்தவர்.

வில்லியம் ஃபார்க்குவார்

டச்சு அரசாங்கம் பழவேற்காடு, நாகப்பட்டினம் முதலான அதன் இந்தியக் குடியேற்றப்பகுதிகளையும் எதிரியாகிய பிரான்சின் கைக்குப் போகவிடாமல் நட்பு நாடான பிரிட்டனிடம் நிரந்தரமாக ஒப்படைத்துவிட்டது. சிங்கப்பூரின் எதிர்காலமும் சந்தேகத்திற்கிடமின்றி போட்டி பூசல் எதுவும் வராமல் பிரிட்டிஷாரின் பிடியில்சிக்கியது.

ஸ்காட்லந்துக்காரர் டாக்டர் ஜான் கிராஃபர்ட் (1783 – 1868) சிங்கப்பூரின் இரண்டாவது தலைமை நிர்வாகியாக (Resident) 1823 ஜுன் 9 அன்று பதவியேற்று மூன்றாண்டு அப்பணியில் நீடித்தார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த அவர், தென்கிழக்காசிய நாடுகளில் நல்லெண்ண, தூதுப்பயணம் மேற்கொண்டு மூன்று பகுதிகள் கொண்ட பெரும் வரலாற்று நூல் எழுதி இந்திய கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸின் நன்மதிப்பைப் பெற்றவர்.

ராஃபிள்ஸ் மலாய்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஆரம்பகால ஒப்பந்தங்களைக் கல்விமான் கிராஃபர்ட் ஆராய்ந்து பார்த்து அவற்றில் குறைகள் இருப்பதாக உணர்ந்தார். எனவே தெளிவான உடன்பாடு அவசியம் என்பதை வலியுறுத்திக் கல்கத்தாவுக்கு எழுதினார். ஆகவேண்டியதைச் செய்யும்படி உத்தரவு வந்தது. சுல்தான் உசேன், தெமெங்கோங் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் 1824இல் இறுதி உடன்பாடு காணப்பட்டது. நட்புறவு கூட்டணி ஒப்பந்தம் (Treaty of Friendship and Alliance) என்பது அதன் பெயர்.

சிங்கப்பூர்த் தீவு முழுவதையும், கரையை ஒட்டிய சின்னச் சின்னத் தீவுகளையும், பத்து மைல் சுற்றளவுக் கடல் பிரேதசம் முழுவதையும் மலாய்த் தலைவர்கள் இருவரும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் அதன் வாரிசுகளுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டனர். எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அவர்கள் எந்தச் சிறப்பு உரிமையும் சலுகையும் இல்லாமல் சாதாரணக் குடிமக்கள்போல வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். அளவுக்கு மீறிக் கடன் வாங்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்த சுல்தான் பணத்துக்காகவே சிங்கப்பூரைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக மலாக்காவில் பிறந்த முன்ஷி அப்துல்லா தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார்.

ராஃபிள்ஸ் மலாய்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஆரம்பகால ஒப்பந்தங்களைக் கல்விமான் கிராஃபர்ட் ஆராய்ந்து பார்த்து அவற்றில் குறைகள் இருப்பதாக உணர்ந்தார்.

கடைசி உடன்பாட்டின்படி சுல்தான் $33,200 முன்தொகை பெற்றார். ஆயுள்வரை அவருக்கு மாதம் $1,300 உதவித்தொகை. தெமெங்கோங் $26,800 முன்பணம் பெற்றார். ஆயுள்வரை அவருக்கு மாதம் $700 உதவிப்பணம். அவர்கள் ஏற்கனவே வாங்கிய கடன்களை எல்லாம் கழித்துவிட்டுத்தான் ஜான் கிராஃபர்ட் மீதித் தொகையைக் கொடுத்தார். கல்கத்தாவின் உத்தரவுக்கிணங்க கிராஃபர்ட் மலபார் கப்பலில் ஏறித் தீவைச் சுற்றிப் பத்து நாள் வலம் வந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் அசைக்கமுடியாத மேலாண்மை உரிமையாக சிங்கப்பூரை நிலைநாட்டினார் கிராஃபர்ட். சிங்கப்பூரின் ஆக உயரமான 530 அடி புக்கிட் தீமா மலையிலும் அவர் முதன்முறையாக ஏறி இறங்கினார்.

சுல்தான் உசேன் கம்போங் கிளாம் பகுதியில் இரண்டு ஆண்டுக் கட்டுமானத்திற்குப் பிறகு 1826ல் ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்தார். இவ்வட்டார மலாய்ப் பாணியில், நான்கு பக்கமும் கூரியமுனைகள் கொண்ட மூன்று அடுக்குக் கூரை வாய்ந்த அழகிய கல் கட்டடம் அது. பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கு ராஃபிள்ஸ் ஏற்கனவே மூவாயிரம் வெள்ளி வழங்கியிருந்தார். நூறாண்டு கழித்து 1924இல்தான் அந்தப் பள்ளிவாசலை முற்றாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிய பள்ளிவாசல் எழுப்பத் தொடங்கினர் முஸ்லிம் சமூகத்தினர். அது 1929இல் முற்றுப்பெற்றது.

சுல்தான் உசேன் 1834 வரை கம்போங் கிளாம் இஸ்தானாவில் இருந்துவிட்டு மலாக்கா சென்று மறு ஆண்டே 59 வயதில் காலமானார். சுல்தானின் துணைவியாரும் அரசகுடும்பத்தில் செல்வாக்குடன் விளங்கிய தமிழ் முஸ்லிம் இமாம் அப்துல் காதர் ஆகியோரும் செய்த முடிவுக்கிணங்க, சுல்தான் உசேன் மலாக்கா டிரான்க்குவேரா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டார். சுல்தானின் குடும்ப விவகாரங்கள், வரவு செலவுக் கணக்குகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்ட இமாம் அப்துல் காதர் சுல்தானாவுடன் கள்ள உறவு கொண்டிருந்தார் என்பது போன்ற அவதூறுகளும் பரவின.

தெமெங்கோங் அப்துல் ரஹ்மான் 1825இல் காலமானார். அவருடைய மகன் டாயிங் இப்ராஹிம் வளர்ந்து நாளடைவில் பிரிட்டிஷ் ஆட்சியில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார்.

சிங்கப்பூரின் ஏழு கவர்னர்களுடன் அவருடைய தொடர்பு நீடித்தது. ஒப்பந்தப்படி, பிரிட்டிஷாரின் ஏற்பாட்டிற்கிணங்க காலஞ்சென்ற சிங்கப்பூரின் முதல் சுல்தான் உசேனின் புதல்வராகிய சுல்தான் அலி, முன் தொகையாக ஐயாயிரம் வெள்ளியும் மேலும் மாதத் தவணையாகத் தொடர்ந்து ஐந்நூறு வெள்ளியும் வாங்கிக்கொள்ள முடிவுசெய்து, மூவார் பிரதேசம் தவிர ஏனைய ஜொகூர் ராஜ்யம் முழுவதையும் டாயிங் இப்ராஹிமுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்.

ராஃபிள்ஸ் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டார். அதனைப் பக்கத்திலிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்தவர் ஃபார்க்குவார் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்ராஹிமின் மகன் அபு பாக்கார் 1862இல் ஜொகூரின் நிர்வாகத்தை ஏற்று ஸ்ரீ மகாராஜா என்ற அந்தஸ்துடன் ஆட்சிபுரிந்து 1885இல் ஜொகூரின் சுல்தானாக சிம்மாசனம் ஏறினார். சாதுரியமும் சாமர்த்தியமும் வாய்ந்த சுல்தான் அபு பாக்கார், சிங்கப்பூர் கவர்னரை அதிகம் கண்டுகொள்ளாமல், லண்டன் சென்று விக்டோரியா மகாராணியுடனும் காலனி அமைச்சருடனும் நேரடித் தொடர்புகொண்டு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் பயணம் புரிந்து பெரும் புகழுடன் விளங்கினார்.

சொந்த செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி FMS (Federated Malay States) எனப்படும் ஐக்கிய மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பில் ஜொகூர் சேர்வதைத் தள்ளிப்போட்டு, 1913இல்தான் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் ஆலோசகரை (Resident) ஏற்க அவர் முடிவு செய்தார். அபு பாக்காரின் வாரிசுகளே இன்றும் ஜொகூரை ஆட்சி செய்கிறார்கள்.

மலாய்த் தலைவர்களின் தலையீடில்லாமல் சிங்கப்பூர் தங்கு தடையின்றி முன்னேறத் தொடங்கியது. கல்கத்தாவுக்கு அடுத்த துறைமுகமாய் சிங்கப்பூர் வளரும் என்று சூளுரைத்தார் ராஃபிள்ஸ். போகப்போகக் கல்கத்தாவையும் மிஞ்சிவிட்டது. அதையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை ராஃபிள்சுக்கு.

சிங்கப்பூருக்கு எட்டு மாத மூன்றாவது பயணத்தை முடித்துக்கொண்டு, பார்க்குவாரைப் பதவியிலிருந்து இறக்கி டாக்டர் ஜான் கிராஃபர்டைப் பதவியில் அமர்த்தியபின், இங்கிருந்து புறப்பட்டு பட்டேவியா வழியாக பென்கூலின் திரும்பினார் ராஃபிள்ஸ்.

சிங்கப்பூரில் அவருடைய கடைசி வார்த்தைகளை மீண்டும் நினைவுகூரலாம், “சிங்கப்பூர் தொடர்ந்து தீர்வையற்ற துறைமுகமாகவே நீடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” இதைப் புலப்படுத்தும் வகையில், “இந்தத் துறைமுகத்தில் இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்களுக்குத் தீர்வை கிடையாது, எல்லா நாட்டுக் கப்பல்களுக்கும் எந்தவிதமான சேவைக் கட்டணமும் கிடையாது” என்று 1842 அக்டோபரில் சிங்கப்பூர் ஃபிரீ பிரஸ் பத்திரிகை தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருந்தது.

ஓயாத உடல்நலத் தொல்லையால் ராஃபிள்ஸ் பென்கூலின் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பல்வேறு பிரச்சினைகள் சூழ இங்கிலாந்து திரும்புவதற்கு 1824 பிப்ரவரி 2 அன்று கப்பலேறினார். அவர் சிரமப்பட்டுச் சேகரித்து வைத்திருந்த அரிய கலைப்பொருள்கள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், வரைபடங்கள், செடிகள், விலங்குகளின் மாதிரிகள் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட Fame என்ற கப்பல் இரண்டாவது நாள் காலை எட்டே கால் மணிக்குத் திடீரெனத் தீப்பற்றிக்கொண்டது. ஐந்தே நிமிடத்தில் கப்பல் முழுதும் தீ பரவியது. பொருள்கள் எல்லாம் எரிந்து நாசமாகின.

ராஃபிள்சுக்கு இழப்பு 30 ஆயிரம் பவுன். பணப் பற்றாக்குறையால் எதையும் காப்புறுதி செய்யாமல் விட்டுவிட்டார் ராஃபிள்ஸ். வாழ்நாள் சேமிப்பெல்லொம் எரிந்து கரிந்துபோனதைப் படகிலிருந்து பார்த்து வேதனைப்பட்டார். அவரடைந்த மனத்துயரம் கொஞ்சநஞ்சமல்ல. பயணிகளும் ஊழியர்களும் படகில் இறங்கிப் பாதுகாப்பாக பென்கூலின் திரும்பி உயிர் தப்பியதே பெரிய விஷயம். ஆறு மாதம் கழித்து மற்றொரு கப்பல் பிடித்து 1824 ஆகஸ்ட் 22 அன்று இங்கிலாந்து திரும்பினார் ராஃபிள்ஸ். ஆயிரம் விலங்குகள் செடிகள் ஆகியவற்றின் மாதிரிகளை ராஃபிள்ஸ் 200 பெட்டிகளில் போட்டுத் தயார் செய்வதற்குத் தாங்களும் உதவியதாக முன்ஷி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

லண்டனில் 43 வயதில் ராஃபிள்சின் ஓய்வுக்காலம் தொடங்கியது. உடல் நலம், பணம், வேலைப்பிரச்னை என்று கவலைகள் அரித்தெடுத்தன. அதிகமாகச் செலவழித்த தொகையை ராஃபிள்ஸ் திருப்பித்தர வேண்டுமென்று கிழக்கிந்தியக் கம்பெனியும் அதே நேரத்தில் வழக்குப் போட்டு நெருக்க ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையிலும் ஆறாயிரம் பவுன் கடன்பட்டிருந்தார் அவர். சாதாரண அதிகாரிகள் விஷயத்தில்கூடத் தாராளமாக நடந்து கொண்ட கம்பெனி ராஃபிள்ஸ் விவகாரத்தில் இவ்வளவு விடாப்பிடியாக இருந்தது சற்று வியப்புத்தான். இந்த நிலையிலும் லண்டனில் விலங்கியல் தோட்டம் நிறுவவேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றி முடித்த ராஃபிள்ஸ் 1826 ஏப்ரல் மாதம் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஃபார்க்குவார் பிரியாவிடை பெற்றபோது அளிக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க மேசை அலங்கார வெள்ளிப்பொருள்

அன்று புதன்கிழமை, 1826 ஜுலை 5. அதிகாலை நேரத்தில் வீட்டில் மாடிக்கு ஏறும் சுழல் படிக்கட்டின் கீழ்ப்படியில் ராஃபிள்ஸ் பேச்சு மூச்சின்றி விழுந்து கிடந்ததை சோஃபியா கண்டு அதிர்ச்சியுற்றார். பக்கவாதம் தாக்கி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதென்று மருத்துவர் அறிவித்தார். அடுத்தநாள் அவருடைய 45 ஆவது பிறந்த தினம். ஒரு நாள் முன்னதாகப் பக்கத்தில் யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் அவருடைய உயிர் பிரிந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்கைக் கடைசிக் கட்டத்தில் ராஃபிள்ஸ் இழந்துவிட்டதால் அவருடைய பிரிவை லண்டன் சமூகம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாரடைப்பு, திடீர்ப் பக்கவாதம், மூளையில் கட்டி என்று பல்வேறு காரணங்களால் அவருக்கு மரணம் ஏற்பட்டதென அப்போது கருதப்பட்டது. ஆயினும் சிங்கப்பூரின் வரலாற்றாளர் குவா ச்சோங் குவான் (Kwa Chong Guan), நரம்பியல் மருத்துவர் ஜேம்ஸ் கூ (James Khoo) இருவரும் ராஃபிள்சின் பழைய மருத்துவ ஆவணங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் ஆராய்ந்து அவருடைய சாவுக்கு, இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயும் இருதயத்திலிருந்து வெளியேறும் இரத்தக்குழாயும் பிறவிமுதல் குறைபாடு கொண்டவை (arteriovenous malformation) என்பதே காரணம் என்று 1998 டிசம்பரில் அறிவித்தனர்.

ஜெமைக்காவில் துறைமுகத்துக்கு அப்பால் ஒரு கப்பலில் 1781 ஜுலை 6 அன்று பிறந்த ராஃபிள்சின் வாழ்க்கையில் இனிப்பும் கசப்பும், களிப்பும் சலிப்பும், எழுச்சியும் ஏமாற்றமும் நிரம்பிய பலதரப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும் சிங்கப்பூரை நிறுவியவர் என்பதே அவருடைய தலையாய சாதனையாக, இன்றளவும் மறக்காமல், நேற்றுத்தான் நடந்ததைப் போல இன்னமும் பசுமையாகப் போற்றப்படுகிறது.

சிங்கப்பூரை நிறுவியதில் தனக்கும் கணிசமான பங்குண்டு என்று கம்பெனி அதிகாரிகளிடம் வலியுறுத்தி அங்கீகாரம் பெற முடியாமல் தோற்றுப்போன அதிருப்தியாளர் கர்னல் ஃபார்க்குவாரை வரலாற்றாசிரியர் சிலர் நியாயமான அனுதாபத்தோடும் பரிவோடும் பார்ப்பதுண்டு என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். ராஃபிள்ஸ் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டார். அதனைப் பக்கத்திலிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்தவர் ஃபார்க்குவார் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆரம்ப சிங்கப்பூரின் நிர்மாணத்திலும் புதிய குடியேற்றத்தை ஒழுங்குபடுத்திப் பலஇன மக்களை அனுசரித்து நிர்வாகம் நடத்திய முறையிலும் ஃபார்க்குவாரின் பங்கு கணிசமானதே என்பது பலருடைய கருத்து. சிங்கப்பூரில் துறைமுகம் அமைத்துக்கொள்ள 1818லேயே ரியோ சுல்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர் ஃபார்க்குவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையாக டச்சுக்காரர் திரும்பி வந்து திட்டத்தைக் குலைத்துவிட்டனர்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, ஒன்பது மாதமே சிங்கப்பூரில் தங்கியிருந்த ராஃபிள்ஸ் உன்னதமானவரா? நான்கு வருஷம் சிங்கப்பூரில் பெயர்போட்டு ஒரு கொலைகாரனின் கத்திக்குத்திலிருந்தும் தப்பிய ஃபார்க்குவார் உன்னதமானவரா? யாருக்கு சிங்கப்பூர் நிறுவனர் எனும் தகுதி உள்ளது? இருவருக்கும் சமஅளவில் அந்தத் தகுதி இருக்கிறதா என்பதில் உள்ள மயக்கத்தை இன்றுவரை ஆய்வாளர்கள் தொட்டுப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஃபார்க்குவார் மேற்கொண்ட நற்பணிகளின் பயனை ராஃபிள்ஸ் அனுபவித்துக்கொண்டது அநீதியின் உச்சக்கட்டம் (very height of injustice) என்று தலையாய கல்கத்தா வணிகர் ஜான் பாமர் உள்ளிட்ட கணிசமானோர் இந்தியாவிலும் பினாங்கிலும் வெளிப்படையாகவே குறைகூறினர். ஃபார்க்குவாரின் அனுபவங்களும் தொடர்புகளும் வீண்போகக்கூடாது என்பதற்காகவே அவரை சிங்கப்பூரின் முதல் தலைமை நிர்வாகியாக நியமிக்கும்படி கல்கத்தா அரசாங்கமே உத்தரவிட்டது. அந்த உத்தரவை ராஃபிள்சால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒருவேளை ராஃபிள்சே பென்கூலின் பதவியை விட்டுவிட்டு சிங்கப்பூரின் முதல் ஆளுநராக வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! அப்படித்தான் செய்திருக்க வேண்டும். அதை ஏன் ராஃபிள்ஸ் செய்யாமல் போனார்? ஆனால் பிறகு பினாங்குக்கு வரவிரும்பினார். அந்த வாய்ப்பு நழுவிப்போனது. மலாக்காவை 1818 செப்டம்பர் 21 அன்று மீண்டும் டச்சுக்காரர் வசம் ஒப்படைத்தபோது ஃபார்க்குவாரின் பணி அங்கு முடிந்துபோகவே, மூன்று ஆண்டு விடுப்பில் தாயகம்திரும்ப பினாங்கில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில்தான், இப்பகுதியில் புதிய குடியேற்றம் அமைந்தால் அதற்கு ஃபார்க்குவாரையே நிர்வாகியாக அமர்த்தும்படி கல்கத்தா தலைமையகம் ராஃபிள்சுக்கு ஆணையிட்டது.

களம் பல கண்ட ராணுவப் பொறியாளரும் போர் வீரருமான 50 வயது கர்னல் ஃபார்க்குவாரை 1823 ஏப்ரல் 23ஆம் தேதி, அவரைவிட எட்டு வயது குறைந்த அரசாங்க அதிகாரி ராஃபிள்ஸ் தன்மூப்பாக வேலையைவிட்டு நீக்கியது மிகவும் ஆணவத்தனமானது. கடமை முடிந்து ஊர் திரும்பிய ஃபார்க்குவாருக்கு சிங்கப்பூர் மக்கள் தமிழ், சீனம், மலாய் மொழிகளில் அன்பு கனிய வாழ்த்துப் பத்திரம் வரைந்து கொடுத்தும் பரிசுப் பொருள்களை வழங்கிக் குவித்தும் வழியனுப்பி வைத்தனர். சிங்கப்பூரின் தலையாய இந்து, முஸ்லிம் வணிகர்கள் 128 பேர் கையெழுத்திட்ட வாழ்த்து மடல் 1823 டிசம்பர் 27 அன்று ஃபார்க்குவாரிடம் பணிவுடன் வழங்கப்பட்டது.

ஒரு தந்தை தன் பிள்ளையின் நலனில் எவ்வளவு அக்கறை செலுத்துவாரோ அதேபோன்ற பரிவையும் பாசத்தையும் ஃபார்க்குவார் இந்தியர்களிடம் செலுத்தியதாக அந்தப் பாராட்டுப் பத்திரம் புகழ்ந்து பேசியது. வாய்ப்புக் கிடைத்தால் ஃபார்க்குவாரை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென இங்குள்ள இந்தியர்களின் சார்பில் கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரலுக்குத் தனிக் கடிதமும் அனுப்பப்பட்டது.

ஆய்வாளர் நாடியா ரைட் (Nadia H Wright)

சீனர் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் 95 பேர் வாழ்த்து மடல் வழங்கியதுடன் மூவாயிரம் ஸ்பானிஷ் டாலர் பெறுமான அழகிய வெள்ளிப்பூக்கூடையும் அன்பளிப்பாகக் கொடுத்தனர். மலாய் பூகிஸ் இனத்தவரும் ஃபார்க்குவாரின் ஆதரவான நிர்வாக முறையைப் பாராட்டி அன்புடன் வாழ்த்துக் கூறிப் பிரியாவிடை பெற்றனர். பிரிட்டிஷ் சமூகத்தினரும் வணிகர்களும் ஃபார்க்குவாரின் பாரபட்சமற்ற, திறமையான நிர்வாகத்தையும் கனிவான உபசரிப்பையும்பாராட்டி மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அலங்காரத் தட்டு வழங்கினார்கள்.

மலாக்காவின் ராஜா என்று அன்புகனிய அழைக்கப்பட்ட ஃபார்க்குவாரின் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டே மலாக்காவிலிருந்து வணிகத் துறையினரும் குடியேற்றவாசிகளுமாக ஐயாயிரம் சீனரும் மலாயரும் ஆள் அரவமின்றிக் காடுமேடாகக் கிடந்த சிங்கப்பூருக்குத் துணிச்சலாகக் குடியேறி அதனை வளப்படுத்தினர். ஃபார்க்குவார் விலங்கு, தாவரங்களில் பரந்த ஆர்வமுள்ளவர். புதிய செடி வகைகள் சிலவற்றை அடையாளம் கண்டுள்ளார். மலாக்காவில் சில குரங்குகள், பறவைகள், ஒரு சிறுத்தை, ஒரு புலி ஆகியவை அடங்கிய விலங்குப் பண்ணையையும் வீட்டுத் தோட்டத்திலேயே அவர் வைத்திருந்தார்.

மலாயா, சிங்கப்பூர்வட்டாரத்தின் 477 விலங்குகளையும் தாவரங்களையும் இரண்டு சீனக் கலைஞர்களைக் கொண்டு நீர்வண்ண ஓவியங்களாக வரையச் செய்தார் ஃபார்க்குவார். தேசிய அருங்காட்சியகமும் டிடியர் மில்லே பதிப்பகமும் சேர்ந்து அந்தக் கண்கவர் அழகோவியங்களை 2010ல் அற்புதமான நூலாக வெளியிட்டன.

ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு 1822இல் ஒரு நகர வடிவமைப்புத் திட்டம் வரையச் செய்தார். கிட்டத்தட்ட நகரின் மையப்பகுதியில் அதுவே இன்றுவரை நீடிக்கிறது. இங்கிலாந்துவாசியான ராஃபிள்சின் பெயர் இங்கே பள்ளிகள், வீதிகள், சிலைகள், சதுக்கம், அருங்காட்சியகம், நூலகம், தங்குவிடுதி, கலங்கரைவிளக்கம் என்று 308 இடங்களில் பல வகையில் பல சந்தர்ப்பங்களில் பளிச்சிட்ட போதிலும் ஸ்காட்லந்துவாசியான மேஜர் வில்லியம் ஃபார்க்குவாரின் பெயர் அப்படி நிலைபெறவில்லை என்று ஆஸ்திரேலிய ஆசிரியை நாடியா எச். ரைட் (Nadia H. Wright) தெரிவித்துள்ளார்.

கம்போங் கிளாம் பகுதியில் ஃபார்க்குவாரின் பெயரில் முன்பு ஒரு வீதி இருந்தது. நகரச் சீரமைப்பின் விளைவாக வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டபோது 1994இல் அந்தத் தெருவும் மறைந்துவிட்டது. 1965 ஆகஸ்ட் 9 அன்று சிங்கப்பூர் சுதந்தரம் பெற்றபோது ராஃபிள்சா ஃபார்க்குவாரா யார் முக்கியமானவர் என்ற கேள்வி முகிழ்த்தது. அன்றைய கலாசார அமைச்சர் எஸ். ராஜரத்தினம் அரசாங்கப் பார்வையில் அதிகாரபூர்வ நிறுவனர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராஃபிள்சே என்பதை அழுத்தமாக எடுத்துச்சொல்லி அந்த மயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாடியா ரைட் அசல் ஆவணங்களைத் தேடிப் பிடித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்து ஓர் அரிய நூலை (William Farquhar and Singapore: Stepping Out from Raffles’ Shadow) 2017இல் வெளியிட்டு ஃபார்க்குவாரின் ஆற்றலையும் பங்கினையும் விரிவாக எடுத்தோதியுள்ளார். அந்நூலுக்குமுன்னுரை வழங்கிய பேராசிரியர் டாமி க்கோ, ராஃபிள்ஸ் ஒரு தொலைநோக்காளர் என்றபோதிலும் சிரமமான எல்லாப் பணிகளையும் அடிமட்டத்திலிருந்துசெய்து முடித்தவர் ஃபார்க்குவாரே என்று கருத்துரைத்தார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசியத் தலைவர்கள் (national heroes) தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் ராஃபிள்ஸ் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் இலக்கிய நயத்துடன் உணர்த்தியிருக்கிறார் டாமிக்கோ. சிங்கப்பூரில் ஒரு சீனரோ, மலாயரோ, இந்தியரோ தேசியக் கதாநாயகன் என்ற இடத்துக்கு உரியவராக இல்லாமல், சிங்கப்பூர் சுதந்தரம் வாங்கிஐம்பது ஆண்டைக் கடந்துவிட்டபோதும், ஒரு பிரிட்டிஷ் பெருமகன் அந்த இடத்தில் இன்றுவரை நீக்கமற நிறைந்துநிற்கிறார்.

ராஃபிள்ஸ் திடீரென மரணமுற்றதால் குடும்பத்தின் நிதி நிலை மோசமடைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி நிச்சயம் ஓய்வூதியம் வழங்கும் என்று ராஃபிள்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார். அவருக்குப் பென்ஷன் கிடைக்கவேயில்லை. அதோடு அவர் பல வருஷமாகத் தாக்கல் செய்த ஆண்டறிக்கைகளில் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து, கம்பெனிக்கு 22 ஆயிரத்து 272 பவுன் ராஃபிள்ஸ் கடன்பட்டிருக்கிறார் என்றும் ஐந்து விழுக்காட்டு வட்டியுடன் அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வந்தது.

ராஃபிள்ஸ் பணம் போட்டு வைத்திருந்த கல்கத்தா வங்கியும் திவாலாகியதால் 16 ஆயிரம் பவுன் சேமிப்பு பறிபோனது. அவருடைய வீடு, சொத்து என்று பார்த்தால் எல்லாம் பத்தாயிரம் பவுன் தேறியது. வீடு விற்கப்பட்டது. பெரிய மனது வைத்து அந்தப் பத்தாயிரம் பவுனை மட்டும் கம்பெனி வசூல் செய்துகொண்டு ராஃபிள்ஸின் கணக்கை முடித்துக்கொண்டது. பென்கூலினில் லெஃப்டன்ன்ட் கவர்னர் பதவியின் கடைசிக் கட்டத்தில் சம்பளம், உதவிப்படி எல்லாம் சேர்த்து 7,576 ரூபாய் (2,900 வெள்ளி) வருமானம் பெற்றவர் ராஃபிள்ஸ். பெரிய சம்பளந்தான் அது. ஒப்புநோக்க அந்த நேரத்தில் சிங்கப்பூர்த் தலைமை நிர்வாகி டாக்டர் ஜான் கிராஃபர்ட் சம்பளம், உதவிப்படி, வாடகை எல்லாம் சேர்த்து 1,400 வெள்ளி வருமானம் வாங்கினார்.

ராஃபிள்சின் மரணச் செய்தியைச் சரியாக ஆறு மாதம் கழித்து 1827 ஜனவரி 4ஆம் தேதி சிங்கப்பூர் கிரானிக்கல் (The Singapore Chronicle) என்ற சிங்கப்பூரின் முதல் செய்திப் பத்திரிகையான மாதமிருமுறை ஆங்கில இதழ் ஆழ்ந்த துயரத்துடன் அறிவித்தது. சிங்கப்பூரை நிறுவியது மட்டுமன்றி, அதன் செழிப்பான வளர்ச்சிக்கு உதவக்கூடிய தாராள வணிகமயத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் அறிவார்ந்த ராஃபிள்ஸ் என்று அப்பத்திரிகை மனதாரப் பாராட்டியது.

ராஃபிள்ஸ் பன்னிரண்டு மாதத்திற்கு முன், லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் வீதியில் நடந்து சென்றபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்; அதே உடல் உபாதை மறுபடியும் ஏற்பட்டு அவருடைய உயிரைப் பறித்துவிட்டதென கிரானிக்கல் தெரிவித்தது. 45 முடிந்து 46 வயது ஆரம்பிக்கும் தருணத்தில் ராஃபிள்ஸ் காலமானார். சராசரி ஆயுள் 1826இல் 40 வயதுதான் என்று சொல்லி அவருடைய மரணத்தில் அமைதியும் ஆறுதலும் அடைந்தனர் சிலர்.

1827 ஜனவரி 30 அன்று சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி ஜே. பிரின்ஸ் (Resident Councillor J. Prince) உள்ளிட்ட நகரின் முக்கியப் பெருமக்கள் கூடி ராஃபிள்சின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தார்கள். ராஃபிள்சுக்குப் பொருத்தமான நினைவுச்சின்னம் எழுப்பி ஆங்கிலம், லத்தீன், சீனம், மலாய் மொழிகளில் (தமிழைச் சேர்க்கவில்லை) அவர் அருமை, பெருமைகளைத் தகுந்த வார்த்தைகளில் பொறிக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அப்போதே 24 பேர் மொத்தம் $1,610 வெள்ளி வழங்க வாக்குறுதி அளித்தனர். அதிக பட்சமாக $150 வழங்கியவர் ஜே. பிரின்ஸ்.

பின்னர் சாதாரண இந்தியரும் சீனரும் தனியாகக் கொஞ்சம் நன்கொடை வசூலித்தனர். இந்தியர் 36 பேர் ஆளுக்கு 1 வெள்ளி முதல் 25 வெள்ளி வரை மொத்தம் $109 கொடுத்தனர். அதிக பட்சமாக மீரா உசேன் 25 வெள்ளி கொடுத்தார். கைலிக்கடை வைத்து வட்டித் தொழில் செய்தவருமான அன்சார் சாகிப் 20 வெள்ளியும் காமாட்சிப் பிள்ளை 10 வெள்ளியும் வழங்கினர். பல சந்தர்ப்பங்களில் ராஃபிள்சின் பேருதவி பெற்று முன்னுக்கு வந்ததாகக் கூறப்படும் நாராயணப் பிள்ளையின் பெயரை இந்தப் பட்டியலில் பார்க்க முடியவில்லை. ஒரு வேளை அவர் அச்சமயம் சிங்கப்பூரில் இல்லாமற் போயிருக்கலாம்.

சீனர் 50 பேர் ஆளுக்கு ஒரு வெள்ளி முதல் 60 வெள்ளி வரை மொத்தம் 308 வெள்ளி வழங்கினர். அதிக பட்சமாக அறுபது வெள்ளி வழங்கியவர் அன்றைய சிங்கப்பூரின் ஆகப்பெரிய சீனப் பணக்காரர் டான் செ சாங். மலாக்காவிலிருந்து வந்த டான் வணிகத்திலும் சூதாட்டத்திலும் நிறைய சம்பாதித்து லட்சாதிபதியாகிப் பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி அதைக் கட்டிக்கொண்டு இரவில் தூங்குவார் என்று சொல்வதுண்டு.

ராஃபிள்ஸ் நினைவுச் சின்ன நிதிக்கு மூவாயிரம் வெள்ளி சேர்ந்தது. புதிய நினைவுச் சின்னம் எழுப்புவதைவிட அவர் ஆசையோடு நிறுவிய சிங்கப்பூர் இன்ஸ்டிட்யூட் கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்கு அந்த நிதியைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்று கடைசியில் தீர்மானிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலுள்ள ஒரு கட்டடத்தின் கதையைச் சொல்ல இரண்டு புத்தகம், ஒரு தெருவின் கதையைச் சொல்ல இரண்டு மூன்று புத்தகம், பல இனக் குடியிருப்பு வட்டாரங்களின் கதையைச் சொல்ல பல புத்தகம், பழைய மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்றைப் பேசப் பலப்பல புத்தகம், பொருளியல் செழிப்பின் புதினங்களையும் அரசியல் வளர்ச்சியின் அதிசயங்களையும் எடுத்துச் சொல்ல அநேக புத்தகம் என்று ஓர் ஊரைப் பற்றி இத்தனை படைப்புகளை உருவாக்க முடியுமா?

இவ்வளவு வெளியாகியும் சிங்கப்பூரின் கதை இன்னும் முழுமையாகச் சொல்லி முடியவில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை. அதிலும் இந்தியரின் கோணத்தில், குறிப்பாகத் தமிழரின் கோணத்தில் இருநூறு ஆண்டுச் சிங்கப்பூரின் சிங்காரக் கதையைச் சொல்ல இன்றுவரை தமிழில், ஏன் ஆங்கிலத்திலும்கூட முழுமையான ஒரு புத்தகம் இல்லை என்பது விந்தை மட்டுமல்ல பரிதாபமும்கூட. ஒரு வகை நீண்ட, நெடிய அலட்சியத்தின் வெளிப்பாடு இது!

சிங்கப்பூர் என்பது உழைக்கும் மனிதக் கூட்டமும் உயர்ந்த கான்கிரீட் கட்டடமும் முளைத்த நகரம் மட்டுமல்ல. இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து மடிந்த மக்களின் இதயத்துடிப்பு இன்னும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் இன்ப பூமி. அன்று வந்து அல்லற்பட்டவர்கள் எந்தக் கனவுகளையும் ஆசைகளையும் நம்பிக்கையோடு சுமந்து வந்தார்களோ அதே நம்பிக்கையும் ஆசையும் கனவும் இன்று வந்துசேரும் குதூகலமான குடியேறிகளுக்கும் இருப்பதுதான் இந்த மண்ணின் மகத்தான மர்மம்.
(முற்றும்)