ஒரு பொருளியல் நிபுணரின் தொல்லியல் ஆர்வம்!

கனடா மூர்த்தி

தர்மன் சண்முகரத்தினம் ‘காலச்சக்கரா’ கண்காட்சிக்கு வருகை தந்திருந்தபோது கிட்டிய சில நினைவுகளை இம்முறை பகிரவிரும்புகிறேன். தர்மனின் தந்தை நான் பிறந்த ஈழத்து மண்ணிலிருந்து வந்திருந்தவர். தேசிய நூலக வாரியத்தின் காலச்சக்கரா கண்காட்சியை சிங்கப்பூரின் தலைவர்கள் பலர் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றிருந்தார்கள். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனும் – அவர் அதிபராக இருந்தபோது – வந்திருந்தார்.

தர்மன் சண்முகரத்தினத்தை முதன்முதலில் நான் நேரில் கண்டபோது அவர் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான பொருளியல் வல்லுநர்களில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். அப்போது இந்தியாவின் நிதியமைச்சராகவிருந்த ப.சிதம்பரம் சிங்கப்பூரில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்புப் பார்வையாளர்களில் ஒருவராக தர்மன் வந்து அமர்ந்திருந்தார். அது நடந்து சில வருடங்களுக்குப் பின்னர் தர்மன் கல்வி அமைச்சராகப் பதவியேற்றியிருந்தார்.

அப்போது எனக்கு மேலதிகாரியாக இருந்த மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப்பிரிவுத் தலைவர் கார்மேகம், அமைச்சர் தர்மன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். கார்மேகத்தோடு சென்றிருந்தபடியால் எனக்கும் தர்மனின் கைகுலுக்கல் கிடைத்தது. அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்து வைத்துக் கொண்டேன். அதன்பின் தொலைக்காட்சியில் மட்டுமே அவரைக் காணமுடிந்தது. பிறகு நேரில் கண்டது காலச்சக்கரா கண்காட்சியில்தான்.

தர்மனை வரவேற்க தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.வரப்பிரசாத் தலைமையில் நியான் லெக் சோஹ், புஷ்பலதா நாயுடு, நான் என நால்வர் காத்திருந்தோம். குறித்த நேரத்தில் தர்மனும் கூடவே அவரது மனைவி ஜேன் யுமிகோ ஐதோகியும் வந்தனர். அமைச்சருக்கான வரவேற்பு உபசாரங்களின் பின்னர் கண்காட்சிக்கூடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றோம்.

கண்காட்சியின் முதலாவது பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரிடம் ஒருவகை உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு தொல்கலைப் பொருள்களுக்கு முன்னாலும் ஆறவமர நின்று விபரங்களைக் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். சோழர்களின் தென்கிழக்காசியப் படையெடுப்பு குறித்த அரங்கப் பகுதியில் தர்மன் கேட்ட சந்தேகங்களும் அதையொட்டிய கேள்விகளும் வரலாற்று காலத்துத் தென்கிழக்காசியா குறித்து அவருக்கிருந்த அறிவையும், ஆர்வத்தையும் ஒருசேரப் புலப்படுத்தின. தென்னிந்தியாவிலிருந்து தென்கிழக்காசியாவிற்கான கடல்வழிகள் குறித்தும் பல கேள்விகளைக் கேட்டார்.

சோழர்கள் ஸ்ரீவிஜயப் பேரரசுமீது மேற்கொண்ட ‘தாக்குதல்’ குறித்து நாம் காட்சிப்படுத்தியிருந்த விவரணங்களில் பல அவருக்குப் புதிதாகத் தென்பட்டிருக்க வேண்டும். “சோழப் படையெடுப்புக் குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் தென்கிழக்காசியாவில் கிடைத்திருக்கிறதா?” என்று ஆர்வத்துடன் கேட்டார். “இல்லை…ஒரே ஒரு கல்வெட்டு ஆதாரம்தான் உண்டு. அதுவும் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது”‘ என்றோம். “அந்தக் கல்வெட்டு எங்கிருக்கிறது?” என்றார். தஞ்சாவூர்க் கோயிலில் கல்வெட்டு இருக்கும் பகுதி குறித்த விபரங்களை நாம் காட்டியபோது ஆர்வத்துடன் குறித்துக் கொண்டார்.

செப்பேடுகள் குறித்தும் ஆர்வம் காட்டினார். இந்தக் கண்காட்சியில் ‘செப்பேடுகள்’ என நாம் காட்சிக்கு வைத்திருப்பவை அனைத்துமே மாதிரி வடிவங்கள்தான் என்பதை சொன்னோம். சோழர்க் காலச் செப்பேடுகளை சிங்கப்பூருக்கு எடுத்துவர முடியாது போனதற்கான காரணங்களை புஷ்பலதா அவருக்கு விளக்கினார்.

அதன்பின் தென்கிழக்காசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுக்களைக் குறித்துச் சொல்லும் கண்காட்சிப் பகுதியில் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார். கண்காட்சிக் கூடத்தின் நடுவிலிருந்த ‘லோபோ துவா’ தமிழ்க் கல்வெட்டை இந்தோனேசியாவிலிருந்து விமானத்தில் எடுத்துவந்து காட்சிப்படுத்தியிருக்கிறோம் என்பதை நாம் அவருக்குச் சொன்னபோது அதிசயப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மைமிக்க அந்தக் கல்வெட்டிலிருக்கும் தமிழ் எழுத்துக்களைத் திரும்பத் திரும்பப் பார்வையிட்டார்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திராவில் ‘நெருசு ஆச்சே’ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டைப் பார்வையிடும்போது, தர்மனின் ஆர்வம் இன்னும் அதிகரித்திருந்தது. அந்த ‘நெருசு ஆச்சே’ கல்வெட்டு தமிழர்கள் தென்கிழக்காசியாவோடு வணிகம் செய்ததைச் சொல்லும் சான்று. அந்தக் கல்வெட்டு குறித்த விளக்கக் குறிப்புக்களை ஆழ்ந்து படித்தார். திடீரென “கண்காட்சியின் ஆய்வாளர் யார்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார். குழுவினர் என்னை நோக்கிக் கைகாட்டினர். தோழமையோடு பக்கத்தில் அழைத்தார். “இந்தக் கல்வெட்டு ஆச்சே பிரதேசத்திலிருந்த ஒரு பள்ளிவாசலின் கால்கழுவுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் சொன்னார்கள்” என்றேன்.

கல்வெட்டின் ஒரு பக்கத்தில் செதுக்கப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் படிக்கமுடியாத அளவிற்குத் தேய்ந்துபோய் இருப்பதையும், மறுபக்கத்தில் இருக்கும் ஒரிரு தமிழ்ச் சொற்களை வைத்து ஒரளவிற்கு பல விபரங்களை ஊகிக்க முடிகிறது என்பதையும், கல்வெட்டில் ஆச்சேயின் துறைமுகங்களை அடையும் வணிகக் குழுக்கள் கையாளவேண்டிய நடைமுறைகளைக் குறித்த அறிவுறுத்தல்கள் பதியப்பட்டிருப்பதையும் விவரித்தேன். தங்கம் அவர்களது வியாபாரத்தில் இருந்திருக்கிறது; “நானாதேசி” என்ற தமிழ் வணிகக் குழுவினர் சம்பந்தப்பட்ட செய்தியும் அதிலிருக்கிறது என்பதையெல்லாம் நான் சொல்ல, தர்மன் வியப்பில் ஆழ்ந்தார்.

நாம் பேசிக்கொண்டிருந்தபோது வியட்னாமைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளரின் பெயரைக் தர்மன் குறிப்பிட்டார். அந்த ஆய்வாளர் தற்போது தேசிய நூலகத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார் என்ற விவரத்தை நாம் சொன்னபோது மகிழ்ந்துபோனார். ஆய்வாளரை அழைத்து வந்தோம். அவருடனும் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மீண்டுமொரு முறை கண்காட்சியின் உள்ளே சென்று – முதலில் தான் தவறவிட்ட – பலவற்றையும் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துகொண்டார்.

கண்காட்சி முடிந்து பார்வையாளர் கையேட்டில் தனது வருகையைப் பதிவு செய்துவிட்டு வரும்போது சுவரில் பொறிக்கப்பட்டிருந்த காலச்சக்கரா இலச்சினையை உற்றுக் கவனித்தவர் “லோகோவை வடிவமைத்தது யார்?” என்று டாக்டர் வரப்பிரசாத்திடம் கேட்டார். மேலதிகாரிகள் என்னைக் காட்ட, “அப்படியா…” என்றவர் வடிவமைப்பையும் பாராட்டினார். வாய்ப்பளித்த தேசிய நூலக வாரியத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

கண்காட்சியை அவர் பார்வையிட்டபின் வெளியே வந்தோம். டாக்டர் வரப்பிரசாத் தேசிய நூலகம் குறித்த பல விளக்கங்களைச் சொல்லிக் கொண்ருந்தார். புஷ்பலதா காலச்சக்கராவிற்கான தொல்கலைப் பொருள்களைச் சேகரிப்பதில் நாம் அடைந்த சிரமங்களை விவரித்தார். நான் எனது பங்கிற்குத் தமிழ்மொழியில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் தென்கிழக்காசியக் கல்வெட்டுகள் குறித்து ஜப்பானிய தமிழ் ஆய்வாளர் நெபுரு கரோஷிமா எழுதியிருக்கும் கட்டுரை பற்றிச் சொல்லி முடித்தேன்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள உறவு குறித்து ஜப்பானிய ஆய்வாளர் பேராசிரியர் சுசுமு அஹினோ செய்திருக்கும் ஆய்வு பற்றியும் குறிப்பிட்டேன். தர்மனின் மனைவி ஜப்பானியர் என்பதால் நான் சொன்ன விவரங்கள் இருவருக்கும் வியப்பைக் கொடுத்தன. இவை குறித்து இன்னும் அறியத்தர முடியுமா என்று தர்மன் என்னிடம் கேட்டார். பேராசிரியர் அஹினோவிடம் ஜப்பானில் பயின்ற இலங்கை விரிவுரையாளர் முனைவர் சண்முகதாஸைத் தேடிப்பிடித்து ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று தர்மனிடம் தேசிய நூலகத்தூடாகச் சேர்ப்பித்தேன்.

அந்தக்கணம் வரை தர்மனை ஒரு பொருளியல் வல்லுநராக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரது இன்னொரு பக்கம் தெரியவந்தது. மரபுடைமை, வரலாறு, அகழ்வாராய்ச்சி, தொல்கலைப்பொருள்கள், அகழ்பொருள்கள், தமிழ்க் கல்வெட்டுக்கள் போன்றவற்றைக் குறித்து அவர் கொண்டிருக்கும் அறிவும் ஆர்வமும் தேடலும் பலரும் அறிந்திராதவை.