‘இருநூற்றுவர்’ அமைக்கும் வரலாற்று அடித்தளங்கள்

பேராசிரியர் அ.வீரமணி

கடந்த மாதம் (22 ஜூலை 2023) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற வெளியீடாக வந்துள்ள இந்நூலின் முதன்மைத் தொகுப்பாசிரியர் பேராசிரியர் அ.வீரமணி அந்நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

வணக்கம். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மூத்த அமைச்சர், சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம், மூத்த துணை அமைச்சர் திரு டான் கியாட் ஹாவ்; மாண்புமிகு புரவலர்கள் திரு ஜாலில், திருவாட்டி பானுமதி இராமச்சந்திரா ஆகியோரை வரவேற்கிறேன். சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூல் வரிசையின் இரண்டாம் தொகுதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் நாட்டில் தமிழரின் பங்களிப்பைப் பதிவுசெய்வது குறித்த வரலாறு ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இருநூற்றுவர் தொகுப்புகள் உருவானதற்குக் காரணமும் அவ்வரலாற்றில் அடங்கியுள்ளது.

ஏறக்குறைய 104 ஆண்டுகளுக்கு முன், 1919இல், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையின்கீழ் சிங்கப்பூர் வந்து 100 ஆண்டு ஆகியிருந்தது. சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் தொடங்கிவைத்த சிங்கப்பூரின் நவீன வரலாற்றுக்கு அது முதல் நூற்றாண்டு. அதையொட்டி வால்டர் மேக்பீஸ், முனைவர் கில்பர்ட் ப்ரூக், ரோலண்ட் பிரேடல் (Walter Makepeace, Dr Gilbert Brooke, and Roland Bradell) ஆகிய மூவரும் இணைந்து “One hundred years of Singapore from 6th February 1819 to 6th February 1919” என்ற நூலை வெளியிட்டனர். சிங்கப்பூரில் மூன்று சாலைகளுக்கு இவர்கள் மூவரின் பெயர்களும் இடப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டனர்.

அந்நூலில் சிங்கப்பூரில் அறிவுஜீவிகள் அதிகமில்லாமை குறித்து அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். “எழுதும் அளவுக்குப் போதிய ஓய்வு நேரமுள்ள, போதிய அளவுக்குப் பண்பட்ட அறிவுஜீவி வகுப்பினர் இல்லை” என்பது அவர்களின் கருத்து. இன்று நாம் வெளியிடும் இரண்டாம் தொகுதியைப்போல அவர்களும் ஓர் இரண்டாம் தொகுதியை வெளியிட்டனர். அதில் திரு சோங் ஓங் சியாங் (Song Ong Siang) என்பவர் சிங்கப்பூர்ச் சீனர் சமூகத்தைக்குறித்து ஓர் அத்தியாயம் எழுதியிருந்தார். அவர் சிங்கப்பூரில் 1871 முதல் 1941 வரை வாழ்ந்தவர். அவருக்குப் பின்னாளில் ‘சர்’ பட்டம் அளிக்கப்பட்டது. சர் சோங் ஓங் சியாங் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குச் சீனர் சமூகம் ஆற்றிய பங்களிப்புகளைப் பதிவுசெய்து ஒரு நூலை வெளியிட்டார். அம்மூன்று நூல்களும் சிங்கப்பூர் வரலாற்றின் அரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் தொகுதிகளுக்கு அவையே முன்னோடிகள்.

சிங்கப்பூரின் முதல் நூற்றாண்டு முடிந்தபோது வெளியிடப்பட்ட வரலாறுகளில் சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாறு குறித்த பதிவுகள் இல்லையே என நம் சமூகத் தலைவர்கள் சிலர் கவலைப்பட்டனர். இந்தியச் சிப்பாய்கள், சீக்கியர், பியாதாக்கள் என அழைக்கப்பட்ட காவலர்த் தமிழர்கள், வியாபாரிகள், உடலுழைப்புத் தொழிலாளர்கள் என இந்தியச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இணைந்து சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டிருந்தனர். ஆனால் அதைக்குறித்த எவ்விதமான குறிப்பிடத்தக்கப் பதிவுகளும் அந்நூல்களில் இடம்பெறவில்லை.

அ.சி.சுப்பையா, ஆர்.பி.கிருஷ்ணன், சரவண முத்துத்தம்பி பிள்ளை ஆகிய மூவரும் அதுகுறித்து விசனப்பட்டு, சிங்கப்பூர் இந்தியர் வரலாற்றைப் பதிவுசெய்யும் நூல்களை உருவாக்க முனைந்தனர். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறிவர். மூவருமே எழுதத்தொடங்கினர். ஆர்.பி.கிருஷ்ணனின் நூல் 1936இல் வெளியானது. “Indians in Malaya: a pageant of greater India: a rapid survey of over 2,000 years of maritime and colonising activities across the Bay of Bengal. With a foreword by Hon. Mr. S.N. Veerasamy” என்பது அந்நூலின் பெயர்.

அ.சி.சுப்பையாவின் கைப்பிரதி தொலைந்துபோனது. சரவண முத்துத்தம்பி பிள்ளை ‘மலாயா மான்மியம்’ என்ற பெயரில் தன் நூலை இரு தொகுதிகளாக 1936, 1937ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். அவ்விரு தொகுதிகளும் இரண்டாம் உலகப்போரின்போது காணாமற்போயின. அவற்றின் ஒருசில பக்கங்கள் மட்டுமே சிங்கப்பூரில் எஞ்சின. பிரிட்டிஷ் நூலகத்தில் முதல் தொகுதியையும் மலாயாப் பல்கலைக்கழக ஆவணக்காப்பகத்தில் இரண்டாம் தொகுதியையும் நான் கண்டெடுத்தேன். அவற்றைச் செப்பனிட்டு ஒரே தொகுதியாக்கி சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் 2019இல் வெளியிட்டது.

சிங்கப்பூர் தன் 200ஆம் ஆண்டை நிறைவுசெய்த அதே 2019இல்தான் சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூலின் முதல் தொகுதி வெளியானது. இதோ இன்று இரண்டாம் தொகுதி வெளியீடு காண்கிறது. இன்னும் 96 ஆண்டுகளில், 2119இல், சிங்கப்பூர் தன் 300ஆம் ஆண்டு நிறைவை எட்டும்போது சிங்கப்பூர்த் தமிழரின் 300 ஆண்டுகால வரலாற்றைப் பதிவுசெய்யும் ஒரு நூல் வெளியாகும் என நிச்சயமாக நம்புகிறேன். அதற்கான அடித்தளங்களையே இருநூற்றுவர் தொகுதிகள் அமைத்துள்ளன.

காலவோட்டத்தில் “யார் சிங்கப்பூர்த் தமிழர்?” என்பதற்கான வரையறை தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். சீனர், இதர சமூகத்தினரும் மெல்லத் தமிழ்ச் சமூகத்திற்குள் கலந்துவிடுவர். பிறப்பால் சீனர்களான சிலர் அருமையான தமிழாசிரியர்களாக உருவெடுத்திருப்பதை நம் காலத்திலேயே கண்டுவிட்டோம். இருநூற்றுவர் முதல் தொகுதியில் மூன்று சீனர்களைத் தமிழர்களாகவே அடையாளம் கண்டு இணைத்திருந்தோம். அவர்களுள் டாக்டர் லீ கொங் சியானும் (Dr Lee Kong Chian) ஒருவர். தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அவர் அளப்பரிய உதவிகளைச் செய்திருக்கிறார்.

இன்று நீங்கள் கண்டுகளித்த இரண்டு நடனங்களும் சிங்கப்பூரில் தமிழ்ச் சமூக வரலாற்றின் செழுமையைக் காட்டும் குறியீடுகள். நம் பிள்ளைகள் தம் நடனத்தின் வழியாக வரலாற்றைக் கண்முன் கொண்டுவந்தனர். முதல் பாடல், அசாத்திய உழைப்பின்மீது உருவான நம் சமூகத்தின் அடித்தளத்தைக் காட்டியது. அவ்வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் நாம் தீவிரமாகச் செயல்படவேண்டியிருப்பதை இரண்டாம் கவிதை வலியுறுத்தியது. சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் இரு தொகுதிகளும்கூட அவற்றையே காட்டுகின்றன, வலியுறுத்துகின்றன.

இந்நூல் வெளிவரப் பலர் ஈடுபட்டனர். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றச் செயலவை, எனக்குக் கடந்த ஆறு ஆண்டுகளாக உதவிவரும் திருமதி மாலதி பாலா, புரவலர்கள், சமுதாயப் பிரதிநிதிகள் அனைவருக்கும் என் நன்றி. இந்த நூலில் இடம் பெற்றுள்ள மாமனிதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மறக்கப்படக்கூடாது. ஒவ்வொரு மாமனிதரும் தியாகம் செய்துள்ளார். அந்தத் தியாகம் அவர்தம் குடும்பத்தினரை உயர்த்தி இருக்கலாம். அதே சமயத்தில் பாதித்தும் இருக்கலாம். குடும்ப உறுப்பினர் அனைவரும் சமுதாயப் பங்களிப்பில் பல நிலைகளில் ஈடுபட்டு இருக்கலாம்.

இந்நூலில் என்னுடன் எழுத முன்வந்த 67 எழுத்தாளர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் எழுத்தினால் எனது வேலை சற்று குறைந்தது. இது இரண்டாவது தொகுதி. முதல் தொகுதியில் 200, இந்த இரண்டாம் தொகுதியில் 180 என இதுவரை மொத்தம் 380 மாமனிதர்களின் வாழ்க்கையை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன. எதிர்காலத்தில் நமது வரலாறு முழுமை எய்த இவை உதவும் என்று நான் நம்புகிறேன்.

இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி! ஓய்வுநேரத்தில் இருநூற்றுவர் நூலை வாசித்துப் பாருங்கள். ஒரு சமூகமாகத் தொடர்ந்து முன்னேறுவோம்.