என் அலுவலக நண்பர் நவீன் பட் ஒரு சாகசப்பிரியர். அவர் அடிக்கடித் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடன் சேர்ந்து உலகிலுள்ள பல்வேறு மலைகளுக்குப் பயணம் செல்பவர். அவர் ஒவ்வொரு முறையும் மலையேற்றம் சென்று வந்த பிறகு சொல்லும் கதைகள், காட்டும் படங்கள், காணொளிகளைப் பார்க்கும் போது நானும் ஒரு நாள் அவருடன் ஒரு மலையேறவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் பல்லாண்டுகளாக அது ஒரு நிறைவேறாத ஆசையாக மட்டுமே இருந்துவந்தது. என் கனவு சாகசப் பயணம் கடந்த மாதம் (ஆகஸ்ட்’23) நிறைவேறியது.
கடந்த மே மாதம் முதல் வாரத்தில் என் நண்பர் ஜெயகிருஷ்னா அழைத்து ”நான், நவீன் மற்றும் நண்பர்கள் பலர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தோனேசியா லொம்போக் தீவிலுள்ள ரிஞ்சானி மலைக்கு மூன்று நாட்கள், இரண்டு இரவுகள் மலையேற்றப் பயணம் திட்டமிட்டுள்ளோம். வர விருப்பமா?” என்று கேட்டார். உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் “வருகிறேன்” என்று சொல்லி விட்டேன்.”
மலையேற்றப் பயணத்திற்காக மூன்று மாதங்கள் ஞாயிறு காலைப் பொழுதுகளில் புக்கிட் தீமா மலையில் பயிற்சி மேற்கொண்டோம்.
இந்த மலையேற்றப் பயணத்திற்காக மூன்று மாதங்கள் ஞாயிறு காலைப்பொழுதுகளில் புக்கிட் தீமா மலையில் பயிற்சி மேற்கொண்டோம். முதலில் மலையேற்றத்திற்கு தேவையான சப்பாத்துகள், முதுகுச் சுமைப்பை, ஊன்றுகுச்சி போன்றவற்றை வாங்கினேன். ஒவ்வொரு ஞாயிறும் காலை 7 மணிக்கு புக்கிட் தீமா மலைக்குச் சென்று நண்பர்களுடன் இரண்டு, மூன்று மணி நேரம் தொடர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சிசெய்து என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சிக் கூடத்திற்கும் சென்று உடல் வலுகூட்டுப் பயிற்சிகளைச் செய்தேன்.
ஒரு நாளைக்கு மலையேற 300 பேருக்கு மட்டும்தான் அனுமதி. எங்களைப் போல் பலர் மலையேறத் தயாராக இருந்தார்கள்.
அகண்ட அருவியில் ஆனந்தக்குளியல்
எங்கள் மலையேற்றக் குழுவில் மொத்தம் எட்டு உறுப்பினர்கள்; 6 ஆண்கள், 2 பெண்கள். எங்கள் குழுவின் தலைவர் நவீன் பட். பயண ஏற்பாட்டாளர் ஜெய கிருஷ்ணா. ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு பாலி தீவிற்கு பக்கத்து தீவான லொம்பொக் தீவிற்கு இரண்டரை மணி நேரம் பயணத்திற்குப்பின் சென்றுசேர்ந்தோம். விமான நிலையத்திலிருந்து மூன்று மணிநேரம் தரைவழிப் பயணம் செய்து நாங்கள் தங்கவேண்டிய விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
மாலை 5 மணியளவில் எங்கள் வழிகாட்டி வந்து எங்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த இரு அருவிகளைப் பார்க்க அழைத்துச்சென்றார். அரைமணிநேரம் காட்டில் பயணம் செய்து செண்டாங் கீல (Sendang Gile) அருவியைச் சென்றடைந்தோம். உயரமான அருவி. இந்த அருவியில் சற்றுநேரம் குளித்து மகிழ்ந்து, பிறகு மேலும் 20 நிமிடங்கள் பயணித்து தியு கெலெப் (Tiu Kelep) அருவியை அடைந்தோம். இது ஓர் அகண்ட அருவி. அதிலும் ஆனந்தக்குளியல் போட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
மலையின்மீது ‘கடலின் குழந்தை’
எங்கள் குழுவில் இருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. ஒருவருக்குக் காலில் சுளுக்கு, மற்றவருக்குக் கொப்புளங்கள்.
மறுநாள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து ஏழு மணிக்கெல்லாம் காலை உணவு முடித்துத் தயாராகிவிட்டோம். சற்று நேரத்தில் எங்கள் குழுவின் மலையேற்ற வழிகாட்டி சான் வந்து எங்களை ஒரு ‘குட்டி யானை’ போன்ற வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றார். சுமார் முக்கால் மணிநேரம் பயணம் செய்து ரிஞ்சானி மலை தேசியப் பூங்கா வாயிலை வந்தடைந்தோம்.
அங்கு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை முடிந்து, மீண்டும் அரைமணி நேரம் பயணம்செய்து, மலையேற்றப் பயணத்தின் தொடக்கமான டேசா செம்பாலுன் (Desa Sembalun) நுழைவாயிலை வந்தடைந்தோம். அங்கு எங்கள் மலையேற்றத்திற்கு தேவையான கூடாரம், சாப்பாடு, இதர பொருட்களைத் தூக்கிவருவதற்காக 8 சுமையாளர்கள் தயாராக இருந்தார்கள்.
ஒரு நாளைக்கு மலையேற 300 பேருக்கு மட்டும்தான் அனுமதி. எங்களைப் போல் பலர் மலையேறத் தயாராக இருந்தார்கள். பெரும்பாலும் ஐரோப்பியர்கள். நாங்கள் மட்டும்தான் இந்தியர்கள்! சரியாகக் காலை 9.15 மணிக்கு 3,792 அடி உயரத்திலுள்ள டேசா செம்பாலுன் நுழைவாயிலிருந்து எங்கள் மலையேற்றப் பயணத்தை தொடங்கினோம்.
தொடக்கத்தில் மலையேற்றப் பயணம் அவ்வளவு சிரமமாக இல்லை. முதல் இரண்டு ஓய்விடங்களில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு நண்பகலில் மூன்றாம் ஓய்விடத்தை அடைந்தோம். எங்கள் உதவிக் குழு எங்களுக்கு மதிய உணவு சமைத்துப் பரிமாறினார்கள். மதிய உணவுக்குப்பிறகு ஒருமணி நேரத்தில் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.
இப்போது மலையேறுவது கடினமாக ஆனது. எரிமலைப் பாறைகளும் புழுதியும் நிறைந்த மலைப்பகுதி. பல இடங்கள் செங்குத்தாக இருந்தன. மிகவும் செங்குத்தான பகுதிகளில் இரும்பு ஏணிகள் பதிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே இளைப்பாறல்களுடன் 5.30 மணியளவில் 8658 அடி உயரமுள்ள செம்பாலுன் மலைவிளிம்புப் பகுதியை வந்தடைந்தோம். இங்குதான் அனைவரும் இரவில் தங்குவதற்கான முகாம்கள் உள்ளன.
ஒரு பக்கம் சுமார் 12,000 அடி உயரமுள்ள மலை, மறுபக்கம் சுமார் 6000 அடி உயரத்தில் உள்ள செகாரே அனாக் (Segare Anak) எனப்படும் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மிகப் பெரிய ஏரி. அது ‘கடலின் குழந்தை’ என அழைக்கப்படுகிறது. மேகங்கள் நமக்குக் கீழே செல்வது ஓர் அற்புதமான காட்சி! அந்தப் பரவச அனுபவத்தால் பல மணிநேரம் சிரமப்பட்டு மலை ஏறி வந்த வலி மறந்தேபோனது.
ரிஞ்சானி மலையுச்சிக்குப் பக்கத்தில் சூரியனார் மெல்ல மேலேழுந்து வந்தார். அற்புதமான அக்காட்சியை விவரிக்க என்னிடம் சொற்களில்லை!
உச்சிமலை உறக்கம்
எங்கள் குழுவினர் இரவில் உறங்க நான்கு கூடாரங்கள் தயார் செய்யப்பட்டன. கூடாரத்திற்கு இரண்டு பேர். குளிருக்கு இதமாக சுடச் சுட உணவு, காபி, இஞ்சித் தேநீர் பரிமாறினார்கள்.
எங்கள் குழுவில் இருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. ஒருவருக்குக் காலில் சுளுக்கு, மற்றவருக்குக் கொப்புளங்கள். எங்கள் வழிகாட்டி அடுத்தநாள் திட்டத்தை எங்களிடம் விளக்கினார். அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு மூன்று மணிநேரம் மலையேறி மலை உச்சிக்குச் சென்று சூரிய உதயத்தை காணவேண்டும். பிறகு 7 மணிக்கு அங்கிருந்து கிளம்பி இரண்டு மணி நேரம் மலையிறங்கி கீழேவந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு 8 மணி நேரம் தொடர்ந்து மலையேறி பயணித்து மலையின் அடுத்தபக்கம் அமைந்திருக்கும் செனாரு (Senaru, 8622 அடி உயரம்) இராத்தங்கும் முகாமிற்கு செல்ல வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 15 மணிநேரம் மிகமிகக் கடினமான மலை ஏற்றமும் இறக்கமும் கூடிய பயணம். குழுவில் இருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மலை உச்சிக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டோம்.
இரவு 7 மணிக்குமேல் கடுமையான குளிர்காற்று. குளிரைத் தாங்கக்கூடிய வெதுவெதுப்பு உடைகள், அவற்றுக்குமேலே சாதாரண உடுப்புகள், கால், கையுறைகளை அணிந்துகொண்டு கூடாரத்திற்குள் சென்று விட்டோம்.
என் வாழ்க்கையில் ஒரு கூடாரத்தில், அதுவும் 8658 அடி உயரத்தில், இரவு தூங்குவது இதுதான் முதல் அனுபவம். இந்தக் கூடாரம் இரண்டுபேர் படுக்க வசதியான கூடாரம். சிறிய மெத்தை, தலையணை, உறக்கப்பொதி (Sleeping Bag). காலையில் சூர்யோதயம் பார்ப்பதற்காக 6 மணிக்கு எழுப்பொலி வைத்துவிட்டுப் படுத்தேன். நல்ல அசதியில் படுத்தவுடனே தூங்கி விட்டேன்.
செங்குத்து சாகசம்
காலை 6 மணிக்கு எழுந்து சூரிய உதயம் பார்க்கத் தயாரானேன். சரியாக 6.20க்கு மேகக் கூட்டங்களுக்கு மேலே ரிஞ்சானி மலையுச்சிக்குப் பக்கத்தில் சூரியனார் மெல்ல மேலேழுந்து வந்தார். அற்புதமான அக்காட்சியை விவரிக்க என்னிடம் சொற்களில்லை!
பிறகு காலை உணவு முடித்து 8 மணிக்குக் கிளம்பி செகாரே அனாக் ஏரியை நோக்கி இறங்க ஆரம்பித்தோம். எரிமலைப் பாறைகள் மற்றும் புழுதி நிறைந்த பாதையில் இறங்குவது மலை ஏறுவதை விடவும் கடினமாக இருந்தது. நான்கு மணி நேரம் இறங்கி செகாரே அனாக்கை வந்தடைந்தோம். மதிய உணவுக்குப் பிறகு ஏரிக்குப் பக்கத்திலுள்ள வெந்நீரூற்றில் நன்றாகக் குளித்தேன். வலித்த கால்களுக்கு இதமாக இருந்தது.
மதியம் 2 மணிக்கு அனைவரும் கிளம்பி செனாரு மலை உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். அரைமணி நேரத்தில் ஏரியைக் கடந்து மலை உச்சியை நோக்கிச் செல்லும் பாதையை வந்தடைந்தோம். இது மிகவும் செங்குத்தான மலை! எங்களுக்கு முன்பு ஏறி மலையின் விளிம்பில் நடந்து செல்பவர்களை அண்ணாந்து பார்த்தபோது எனக்கு பயம் வந்துவிட்டது. அப்படிப்பட்ட பாதை. சில இடங்களில் விளிம்பில் நடந்து செல்லும்போது… கரணம் தப்பினால் மரணம்! சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்டுவிட்டோமோ என்றும் தோன்றியது.
அடுத்த நான்கு மணிநேர மலையேற்றம் என் கவனம், உடலுறுதி, மனவுறுதிக்கான பரீட்சை. ஒருவழியாக அந்தத் தேர்வில் தேறி 6 மணியளவில் செனாரு மலை உச்சியை வந்தடைந்தோம். மிகவும் செங்குத்தான மலைப்பகுதி என்பதால் பல இடங்களில் இரும்பு ஏணிகளிலும் படிகளிலும் ஏறி வந்தோம். இந்த செனாரு மலை உச்சி மேற்கு பகுதியில் உள்ளதால் சூரியன் மறையப் போகும் தருணத்தில் சரியாக வந்தடைந்து சூரியன் மேற்கில் மறைவதை பார்த்து மகிழ்ந்தோம். எல்லோருக்கும் கடுமையான உடல் உளைச்சல் எடுத்ததால் 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு கூடாரத்திற்குள் புகுந்துவிட்டோம்.
இறங்குவது ஏறுவதைவிடக் கடினம்!
மூன்றாம் நாள் காலை அனைவரும் காலை உணவை முடித்து 7 மணிக்கெல்லாம் தயாராகி செனாருவிலிருந்து வெளியேறும் வாயிலை நோக்கி இறங்கத் தொடங்கினோம். மிகச் சிறிய எரிமலைக் கற்கள் கொண்ட பாதையில், குறிப்பாக முதல் அரைமணி நேரம், இறங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. கால்கள் சறுக்கின. எங்கள் குழுவில் ஒருவர் சறுக்கி விழுந்துவிட்டார். நல்லவேளையாகச் சிறிய காயங்களுடன் தப்பினார்.
இரண்டு மணிநேரம் கழித்து அடர்ந்த காடுகள் வழியே பாதை சென்றது. இது ஈரமான மணல் பாதை. வழியில் மதிய உணவு சாப்பிட்டோம். பிறகு மதியம் மூன்றரை மணியளவில் செனாரு வாயிலை வந்தடைந்தோம். மூன்று நாட்கள், இரண்டு இரவுகள் மலையேற்றப் பயணத்தை முடித்தோம்.
மலைப்பும் களைப்பும் இருந்தாலும் என் முதல் மலையேற்றப் பயணம் வெற்றிகரமாக முடிந்ததில் ஒருவித நிறைவும் மகிழ்ச்சியும் எனக்குள் நிரம்புவதை உணர்ந்தேன். இது ஒரு தொடக்கமே என்று தோன்றியது.