சிங்கப்பூர் இலக்கிய வெளியீடுகள்

பிப்ரவரி 2022 இதழில், அதற்கு முந்தைய ஆறுமாதங்களில் வெளியான, 13 சிங்கப்பூர்ப் படைப்பிலக்கிய நூல்களின் அறிமுகங்களை தி சிராங்கூன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் தொடங்கி, 2022-2023 காலகட்டத்தில் வெளியான நூல்களின் அறிமுகங்களை வெளியிடவுள்ளது. இம்முறை படைப்பூக்க அபுனைவு (creative non-fiction) நூல்களும் இடம்பெறவுள்ளன.

அறிமுகம் வெளியிட விரும்புவோர் அச்சில் வெளியான கவிதை, புனைவு, படைப்பூக்க அபுனைவு நூல்களின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பாளர், நூலின் முன்னட்டைப்படம், சிங்கப்பூரில் கிடைக்குமிடம், தொடர்பு எண், நூல்குறிப்பு (30 சொற்களுக்கு மிகாமல்) ஆகியவற்றை அனுப்பலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]

  • துமாசிக், பொன் சுந்தரராசு, யாவரும் பதிப்பகம், 2022 (ஆர்யா கிரியேஷன்ஸ், 32 அப்பர் டிக்ஸன் ரோடு, 207491 தொடர்புக்கு: 91696996; தமிழ்ப்புத்தகம் & பூஜை நிலையம், 143 டன்லப் ஸ்திரீட், 209461. தொடர்புக்கு: 98951469)

சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் சவால்களையும் உள்ளடக்கிய பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகளின் காலக்கட்டம் 1990கள் முதல் 2020 வரையிலான சுமார் 30 ஆண்டுகள். ஒவ்வொரு கதையும் தன் சமகால வரலாற்றின் ஒருதுளியைத் தன்னியல்பாகப் பிரதிபலித்துள்ளது. அனைத்துக் கதைகளும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

  • குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு, யாழிசை மணிவண்ணன், யாவரும் பதிப்பகம், 2022 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 83575294)

இக்கவிதைத் தொகுப்பின் பல கவிதைகள் வாழ்க்கையின் முரண்களை இயைக்கும் உள்ளீட்டைக் கொண்டுள்ளன. தத்துவார்த்த அனுபவங்களின் மகத்துவத்தை எளிய காட்சிகளுக்குள் சிறைப்பிடிக்கின்றன. அவ்வெளிய சித்திரங்களும் ஹைக்கூ கவிதைகளின் காட்சிச் செறிவை அடைகின்றன. அவற்றின் வழியாகக் கவிஞர் தன் முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து மாறுபட்ட ஓர் கவியுலகைக் கட்டமைக்கிறார்.

  • ரேடியோ நாயுடு, மஹேஷ் குமார், கோதை பதிப்பகம், 2022 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 81275347)

‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்துள்ள இந்நூலில், ஆசிரியர் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறுபட்ட மனிதர்களுடனான உறவையும், கற்ற பாடங்களையும் சிறுகதைகளாக நகைச்சுவை மிளிரப் படைத்திருக்கிறார்.

வாசிப்பவர்களையும் அவரவர் வாழ்வில் வந்துபோன மனிதர்களை நினைவுகூரச் செய்கின்றன இத்தொகுப்பின் சிறுகதைகள்.

  • காலாழ் களரில் உலகு, வித்யா அருண், சொந்த வெளியீடு, 2022 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 94895848)

சிங்கப்பூரின் வேலைச்சூழல், வீட்டுச்சூழல் சார்ந்த நிதர்சனங்களையும் அவற்றின் நெருக்கடியான தருணங்களையும் அதன்வழி கண்டடையப்பட்ட தரிசனங்களையும் பேசும் சிறுகதைத் தொகுப்பு. சமகால வாழ்க்கையின் நடைமுறைத் தேவைகள் அளிக்கும் உயிரியல், உளவியல் அழுத்தங்களின் புலப்படாத புள்ளிகளையும் இக்கதைகள் தொட்டுச்செல்கின்றன.

  • சீனலட்சுமி, லதா, தமிழினி பதிப்பகம், 2022 (நூல் சிங்கப்பூர் நூலகங்களில் இரவல் கிடைக்கும்)

வரலாற்றுக்களமும் புனைவுமொழியும் யதார்த்தமும் இறுக்கமாகப் பிணைந்திருக்கும் இத்தொகுப்பின் கதைகள், வலுவான கட்டமைப்பும் நுணுக்கமான சித்திரிப்பும் கொண்டவை. பெண்ணியத்தை அறிவுசார் கருத்தாக்கமாக அன்றி அதன் நடைமுறைப் பொருளில் கையாண்டு படைக்கப்பட்டுள்ள புனைவுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அப்பன், அழகுநிலா, நூல்வனம் வெளியீடு, 2023 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 81384749)

அப்பன் கட்டுரைத் தொகுப்பில் நூலாசிரியர் தனது தந்தையைக் குறித்த நினைவுக் குறிப்புகளை பதினாறு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். இத்தொகுப்பு வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு தனிப்பட்ட ஆளுமை அடையும் மாற்றங்களையும் ஒரு காலகட்டத்தின் கனவுகளையும் காட்டிச்செல்வதோடு குடும்ப உறவு நிலைகள், சமூக யதார்த்தங்களையும் பிரதிபலிக்கிறது.

  • மிக்காபெரிசம், சிவானந்தம் நீலகண்டன், யாவரும் வெளியீடு, 2022 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 91820034)

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் கலை, பண்பாடு, அரசியல், எழுத்துச் செயல்பாடுகள், இடர்பாடுகள், அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் என விரியும் இருபத்தி ஐந்து கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்கால வீடடங்கு நிலை முதல் சிங்கப்பூரில் தமிழிலக்கியம் படைத்துவரும் சமகால எழுத்தாளர்கள்வரை இத்தொகுப்பு சில பார்வைகளை முன்வைக்கிறது.

  • காற்றலையில், தமிழ்ச்செல்வி இராஜராஜன், சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு, 2023 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 90622301)

மொத்தம் 12 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டப் பொதுவான சமூகச் சிக்கல்கள் மட்டுமின்றி மட்டுமின்றி, இராணுவத்தில்சேர விரும்பும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற அரிதான விஷயங்களையும் புனைவுக்களத்தில் அமைத்திருக்கிறார் ஆசிரியர். இது ஆசிரியரின் முதல் புத்தகம்.

  • ஒரு புத்த மதியம், மஹேஷ் குமார், யாவரும் பதிப்பகம், 2023 (நூல் ஆசிரியரிடம் கிடைக்கும். தொடர்புக்கு: 81275347)

பல்வேறு கருப்பொருள்களில் படைக்கப்பட்டுள்ள கவிதைகள், பல படிமங்களினூடே தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் விசாரணை செய்கிறது. புதியதொரு நடை அறிமுகமாகியுள்ளதாகக் கவிஞரும் கலை இலக்கிய விமர்சகருமான இந்திரன் தன் அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இது ஆசிரியரின் முதல் தமிழ் கவிதைத் தொகுப்பு.