சிங்கையில் காரைக்கால் அம்மையார்

முனைவர் ராஜி சீனிவாசன்

இந்த 21ஆம் நூற்றாண்டிலும், பரபரப்பாக இயங்கும் சிங்கப்பூரில், பெருந்தொற்றுக்கால இரண்டு வருடங்கள் தவிர்த்து, கடந்த எட்டு வருடங்களாக, ஒவ்வொரு நாயன்மார் வரலாறாக இசை நாடக வடிவில் அரங்கு நிறைந்த காட்சியாக நடத்த வேண்டுமானால் அதற்கு இறையருளும் அடியார் அருளும் தேவை என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார் அ.கி.வரதராஜன்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சிராங்கூன் ரோடு சீனிவாசப் பெருமாள் கோவிலை ஒட்டிய பி.ஜி.பி. அரங்கில் அரங்கு நிறைந்த காட்சி. சிங்கப்பூரின் திருமுறை மாநாட்டுக் குழுவும் இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு வருட உழைப்பை நல்கி, ‘காரைக்கால் அம்மையார்’ இசை நாடகத்தை அரங்கேற்றினர்.

மொத்தம் 16 காட்சிகள். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு சிறு முன்னுரை. பொருத்தமான ஒப்பனை, உடை, காட்சி அமைப்பு, மேடை அமைப்பு, கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர்கள் தேர்வு போன்றவை ஒருபக்கம், இந்த நாடகத்தின் உயிராக இருந்து அனைத்துக் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளியிட்ட இசை மறுபக்கம். வாய்ப்பாட்டிசைத்த இளையர் குழு சஹானா, அமிர்தா, கைலாஷ், ஆனந்த் இவர்களுடன் வயலின் G.மணிகண்டன், மிருதங்கம் S.தேவராஜன் ஆகியோர் இணைந்தனர்.

முதற்காட்சியில் தனதத்தனுக்குக் காரைக்காலில் புனிதவதி பிறப்பது முதல் இறுதியில் 16 ஆம் காட்சியில் காரைக்கால் அம்மையாராக அவர் திருவாலங்காட்டில் பாடல்கள் பாடி சிவபெருமான் ஆடும் காட்சிவரை அழகியல் உத்திகளோடு வடிவமைக்கப்பட்ட நாடகம் இது. பின்னால் வரப்போவதற்குக் கட்டியம் கூறுவதைப்போல ஒரு முன்னறி உத்தியை (foreshadowing) கடைப்பிடித்துள்ளனர். புனிதவதியின் பக்தி நெறிக்கு முதல் மூன்று காட்சிகளில் அச்சாரம் அளிக்கப்படுகின்றது. நான்காவது காட்சியில் பரமதத்தனோடு புனிதவதிக்குத் திருமணம் நடக்கும்போது உண்மையிலேயே ஒரு திருமணத்திற்குச் சென்றுவந்த திருப்தியை நமக்கு உண்டாக்கிவிட்டனர்.

ஹோமத் தீயிலிருந்து திருமண பட்சணங்கள்வரை சிற்சிறு அம்சங்களும் சிரத்தையோடு காட்டப்பட்டிருந்தன. நாதஸ்வர மேள தாளத்தோடு கல்யாணக் காட்சி தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. ஆறாவது காட்சியில், கணவன் அனுப்பிய இரண்டு மாம்பழங்களைப் புனிதவதி பெற்றுக்கொள்ளும்போது பரமனின் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.

ஒரு மாம்பழத்தைச் சிவனடியாருக்கு அரிந்து கொடுத்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகளில் சிவனடியார் உண்ட மாம்பழத்துக்கு பதிலாக புனிதவதியார் கணவனுக்காக இறைவனிடம் வேண்டி மாம்பழம் பெறும் காட்சி சிறப்பாக அமைந்திருந்தது. உள்ளரங்குச் சுரும்பு (indoor drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாம்பழம் புனிதவதியின் கைகளில் விழும் காட்சியிலும் மீண்டும் இன்னொரு மாம்பழம் வரவழைத்து அது பரமதத்தன் கைகளில் சிக்காமல் மறையும் காட்சியிலும் கைதட்டல்களும் சீழ்க்கையொலியும் அரங்கை நிறைத்தன.

மனைவியை இறைத்திருவுருவாகப் பார்த்ததால் அவளோடு குடித்தனம் நடத்த மனமில்லாமல் அவள் பாதங்களில் குடும்பத்தோடு விழுந்து மன்னிப்பு கேட்கும் பரமதத்தனை மனத்திலிருந்து நகர்த்திவிட்டு, சிவலிங்கத்தின் பின்சென்று மறைந்து முதிய வடிவில் புனிதவதி வரும் காட்சிக்கும் அரங்கு நிறை கரவொலி. சிறு வயது புனிதவதி, திருமணமான புனிதவதி, பேயுருப் பெறும் காரைக்கால் அம்மையார் என்ற மூன்று வேடங்களிலும் நடித்தவர்கள் அற்புதமாக நாடகத்தைத் தோளில் சுமந்திருக்கிறார்கள்.

கைலாயத்திற்குத் தலைகீழாக நகர்ந்து செல்லும் காட்சி தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கைலாயக் காட்சிகளில் கொம்பு, மத்தளம், பேரிகை முழங்க மேடை அல்லோலகல்லோலப்பட்டது. காரைக்கால் அம்மையாராகப் பரவச நிலையில் வாழ்ந்தே விட்டார் உமையாள் ராமனாதன். கதாபாத்திரங்கள், காட்சி அமைப்பு, இசையமைப்பு, தொழில்நுட்பம் அனைத்தையும் நுட்பமாக ஒருங்கிணைத்த அ.கி.வரதராஜன், நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த அனைவருக்கும் மாம்பழமும் காரைக்கால் அம்மையாரின் சித்திரக்கதைப் புத்தகத்தையும் அன்பளிப்பாக அளிக்க ஏற்பாடு செய்தமையும் போற்றுதற்குரியது.

சிங்கப்பூரில் நாயன்மார்கள் வரலாறு மூலமாக மீண்டும் மீண்டும் வேர்கள் பலப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களாக இன்னும் அதிகமான மாணவர்கள் வருமாறு நாம் முயன்றால் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும். இது போன்ற படைப்புகள் இன்னும் அதிகமாக சிங்கப்பூரில் மேடையேறினால் அனைத்துத் தரப்பினரையும் அவை ஊக்குவிக்கும்.

கவிதை

தேன்மொழி அசோக்

அதிகாலைச் சிக்கல்கள்

மூலை முடுக்குகளிலெல்லாம்
குப்பைச் சிக்கலை அவிழ்த்தெறிய
குப்பை வண்டிகள் ஆயத்தம்.
கடலலை கரையைத் தொட்டுவிட்டுப் போவதைப்போல
பெருநகரத்தின் இருமுனைகளையும்
இருப்பூர்திகள் அயராமல் தொடும்.
அதிலமர்ந்தபடியே கைப்பேசிக் குளத்தில்
நீந்தும் மீன்களுக்கு
உறக்கத்தை இரையாக்கும் பயணிகள்.
ஓயாத மழையாய்
உணவங்காடிகளில் விழும் மனிதத் துளிகள்
துயில் பள்ளத்தில் தேங்கிடும்.
இப்படியான மாகாணத்தில்
விடிந்தும் விடியாமலும்கூட
நான்கு வயது குழந்தையும்
அரக்க பரக்க அள்ளிச் சென்று
பாலர் பள்ளியில் பதுக்குகிறது
மிச்சமீதித் தூக்கத்தை!