வண்ணங்களும் எண்ணங்களும்

அண்மையில் துபாய் நகரத்திற்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்தேன். அங்கே நான் கண்ட சில சூழல்களும் அவற்றின் வண்ணங்களும் ஒருவிதமான புத்துணர்ச்சியை எனக்களித்தன. அவ்வுணர்ச்சியை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
விமானநிலையத்தை விட்டு வெளியே வந்ததும் என் கணவர் ‘மெட்ரோ’ பயணத்திற்கான கட்டண அட்டையை வாங்கிக் கையில் கொடுத்தார். அது தங்க நிறத்தில் இருந்தது. அதற்குப் பெயரும் ‘தங்க அட்டை’. தங்கத்திற்குப் புகழ்பெற்ற நாட்டில் கால்வைத்ததும் ஏதோ ஒரு வடிவில் தங்கம் கைக்கு வந்துவிட்டதே என மகிழ்ந்தேன். தங்கத்தைப் பெற்றதும் மகிழாதவர் இவ்வுலகில் இருக்கிறாரா என்ன?

இரத்தினமாலா

துபாய் மெட்ரோ ரயில் வண்டி 5 பெட்டிகளைக் கொண்டிருக்கிறது. அதில் முதல் பெட்டித் தங்க அட்டை வைத்திருப்போர் பயணம் செய்வதற்குரியது. அடுத்துள்ள மூன்றும் சாதாரண அட்டை வைத்திருப்போருக்கும் கடைசியில் உள்ள ஐந்தாவது பெட்டி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உரியவை. ஐந்தாவது பெட்டி ‘இளஞ்சிவப்புப் பெட்டி’ என்று குறிப்பிடப்பட்டுகிறது. ரயில் நடைமேடையில் தங்கம், இளஞ்சிவப்பு வண்ணப் பெட்டிகள் வந்து நிற்கும் இடத்திற்கு மேலே சின்னச்சதுரப் பலகைகள் அந்தந்த வண்ணங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிதாக வருபவர்கள் தங்களுக்குரிய பெட்டிகளைக் கண்டறிந்து ஏறிக்கொள்ள வண்ணங்கள் மிகவும் உதவுகின்றன. தவறியோ தெரிந்தோ பெட்டி மாறி ஏறியவர்களுக்கு 100 திராம் அபராதம். ரயில் வண்டிக் கதவுகளில் இந்த அறிவிப்பு பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் அட்டைகளை வாங்கிச் சோதிக்க அவ்வப்போது அதிகாரிகள் வருகிறார்கள்.

‘வாட்டர் ஃபிரண்ட்’ என்னும் ஒரு கடைப்பகுதிக்குச் சென்றேன். அங்கே முதலில் ஒரு பெரிய கூடம் இருந்தது. கூடத்தில் நுழைந்ததும் நீலநிறம் கண்களை ஆக்கிரமித்துக்கொண்டது. திரும்பிய இடத்தில் எல்லாம் நீலநிற டி-சட்டைகள் அணிந்த கடைக்காரர்கள்; அனைவரும் ஆண்கள். கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள். அத்தனையும் மீன், இறால், நண்டு முதலிய கடலுணவு உயிரினங்கள் விற்கும் கடைகள்.

கடைக்காரர்களின் சட்டைகள் மட்டுமல்லாமல் அவர்கள் விற்பனை செய்த பொருள்களைப் போட்டுத்தரும் நெகிழிப் பைகளும் நீலநிறம். ‘நீலநிறம், வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்…’ என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டே கடைகளைச் சுற்றி வந்தேன். நீலநிறத்தைக் கடலுணவோடு இணைத்திருக்கிறார்களே அருமை! பார்க்கவும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அழகாக இருக்கிறது.

அதற்கடுத்து மீன், இறால், நண்டு முதலியவற்றைச் சுத்தம் செய்து வெட்டித் துண்டுபோடும் இடம். சுத்தம் செய்யும் வேலை தனியே ஓரிடத்தில் நடப்பதால்தான் மீன் விற்பனைக்கூடத்தின் தரைப்பகுதி தண்ணீர் ஏதுமில்லாமல் சுத்தமாகவும் சுற்றுப்புறம் மீன்வாடை ஏதும் இல்லாமலும் இருந்தது. மீனை வாங்கியவர்கள் நீலப்பைகளில் மீன்களை அவர்களிடம் சுத்தம் செய்யத் தருகிறார்கள். அதற்கென தனிக் ‘கவுண்ட்டர்கள்’ உள்ளன.

பணியாளர் மீனின் எடையை அளவிட்டுச் சுத்தம் செய்வதற்குரிய கூலியைக் கூறி ‘பில்’ போட்டுத் தந்துவிட்டு மீன்களை வாங்கிக்கொள்கிறார். பணத்தைக் கட்டிவிட்டுக் காத்திருந்தால் சிறிது நேரத்திற்குள் சுத்தம் செய்யப்பட்ட மீன்கள் சிவப்பு நிறப் பைகளில் போடப்பட்டு வேறு ஒரு கவுண்ட்டர் வழியாக வாங்கியவரிடம் வந்து சேர்கின்றன.. நீலத்தில் போய் சிவப்பில் வந்தால் சுத்தம் செய்யும் வேலை முடிந்தது என்று பொருள். வீட்டுக்குப் போய் குழம்பு வைக்க வேண்டியதுதான் பாக்கி.

கடலுணவுக் கூடத்தை ஒட்டி இறைச்சிக் கடைகள் கூடம் அமைந்துள்ளது. இங்கே கடைக்காரர்களின் டி-சட்டை சிவப்பு நிறம். இறைச்சியின் வண்ணம்! இறைச்சி, சட்டை, பை எல்லாம் சிவப்பு மயம். அதன் இன்னொரு புறம் காய்கறி, கீரை, பழக்கூடம். இப்பொழுது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும்… ஆமாம்… பச்சை நிறமே… பச்சை நிறமே… டி-சட்டைகள், பைகள்… அனைத்தும் பசுமை!

வண்ணப் படம் முடிந்ததா? அடுத்துக் கறுப்பு வெள்ளைப் படம். கறுப்பும் வெள்ளையுமாகக் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டடம். ‘மியூசியம் ஆப் த ஃபியூச்சர்’ என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது அது. ‘உலகிலேயே ஆக அழகான கட்டடம்’ என்று அதைக் குறிப்பிடுகிறார்கள். அது உண்மையே என ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளியே இருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான அளவில் கார் டயர் ஒன்றைச் சாலை உயரத்திலிருந்து பற்பல அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி வைத்தது போலுள்ளது.

கட்டத்திற்கு வெளியே நின்று அதைப் பார்க்கும்போது கறுப்பு வெள்ளையில் காட்சியளிக்கிறது. வெள்ளைப் பின்னணியில் கறுப்பு நிறத்தில் அறபு மொழியில் (அறபு கெலிகிராஃபி) நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மொத்தமாக 14,000 மீட்டர் நீளமுடையவை.

வெளியே இருந்து பார்க்கும்போதுதான் வெள்ளையில் கறுப்பு எழுத்துகள். உள்ளே போனதும் ஒரே ஒரு வண்ணம். அப்பழுக்கற்ற வெண்மை… வெள்ளை வெளேர்… எழுத்துகள் அனைத்து வெள்ளையாகவே தெரிகின்றன. வெளியே கறுப்பு, உள்ளே வெள்ளை. கறுப்பு எப்படி வெள்ளையாச்சு? இந்த விடுகதைக்கு விடைகாணத் தகவல்களைப் படிக்க வேண்டும். அந்த எழுத்துகளை எழுதுவதற்குப் பயன்பட்ட முறை, தொழில்நுட்பம், எழுதியர், கால அளவு முதலிய அனைத்துச் செய்திகளும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னதான் சொல்லுங்க… கறுப்பு வெள்ளைக்கு ஒரு தனி வசீகரம் இருக்கிறது. வானவில்லின் வண்ணங்கள் எத்தனை வர்ணஜாலங்களைக் காட்டினாலும் திரைப்படமானாலும் உடையானாலும் பொருள்களானாலும் என் உள்ளம் கொள்ளைபோவது கறுப்பு வெள்ளைக்குத்தான். அந்த வரிசையில் இப்பொழுது இந்தக் கறுப்பு வெள்ளைக் கட்டடமும் சேர்ந்துகொண்டது.

அடுத்தது என் உள்ளத்தைக் கவர்ந்த இன்னொரு வெள்ளைப் பளிங்குக் கட்டடம். அது ‘ஷேக் சயீத் மசூதி’ என்னும் பெயரில் அபுதாபியில் அமைந்துள்ளது. அனல் பறக்கும் கானல் பெருவெளியில் கலையழகு மிளிரும் ஓர் அற்புதக் கலைக்கோவில். அடிப்படையில் இதுவோர் வெள்ளைப் பளிங்கு மாளிகை. அதே சமயம் இதில் அமைந்துள்ள தூண்கள், சுவர்கள், தரைப் பகுதிகள், விளக்குகள், விரிப்புகள் என அனைத்தும் பற்பல வண்ணங்களால் இழைக்கப்பட்டுள்ளன.

வெண்மை நிறப் பின்னணியில் பொன்மை, செம்மை, பசுமை ஆகிய வண்ணங்கள் பளீரெனக் கண்களைக் கவர்கின்றன. பற்பல வண்ணங்களை வாரி இறைக்கும் சரவிளக்குகளும் தரைவிரிப்புகளும் காட்டும் வண்ணக்கோலங்களின் அழகே அழகு. பார்க்க ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

இப்பயணம் எனக்களித்த வண்ணமயமான நினைவுகள் வண்ணம் மங்காமல் நெடுங்காலம் என் மனத்தில் நீடித்திருக்குமென நம்புகிறேன்.