கவிதை காண் காதை (16)

0
213

பால்யத்தின் கண்கள்

கணேஷ் பாபு

ஊரின் ஓரத்தில் இருந்தது அந்த மதுக்கடை. ‘ராயல் ஒயின்ஸ்’ என்று பொன்னிற எழுத்துகளில் எழுதப்பட்ட முகப்புப் பலகை தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய வகையில், விளக்குகளால் எல்லை கட்டப்பட்டு, பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. உடம்புக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கும் எல்லாமே ஏன் பெரிதாகவும், பிரகாசமாகவும், ஜொலித்துக் கொண்டேயிருக்கின்றன? அப்போதெல்லாம் மதுக்கடைகள் தனியார் வசமிருந்தன. சல்லிசான விலையில் மதுவை விளம்பி விளம்பி ஊரை விளங்காமல் ஆக்கி வைத்திருந்தது அந்தக் கடை. அதற்குள் போனவர்கள் யாரும் மீண்டதில்லை. ஊரில் இருந்த பேர்பாதி ஆண்களின் செம்பாதி உயிர் அந்தக் கடைக்குள் இருந்தது. மறுபாதி முன்னரே சுடுகாட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தது.

கொடுங்கூற்றத்தின் பிரதிநிதியைப் போல கடையின் முகப்பில் அதன் முதலாளி அமர்ந்திருந்தான். வெண்ணிறத்தில் வேட்டியும் சட்டையும், தங்க நிறத்தில் கைக்கடிகாரமுமாக, கல்லாவில் காசை அள்ளிப்போட்டுக்கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். சிரிக்கவே தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வாயின் எல்லாப் பற்களும் வெளித்தெரியப் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தான். போலிச் சிரிப்பு தேவைக்கதிகமான ஒளியும் ஒலியும் கொண்டிருக்கும். அப்போது இதெல்லாம் எனக்குப் புரிந்திருக்கவில்லை.

மதுக்கடைக்குள் எப்படிச் செல்வது என்று புரியவில்லை. ஆனால், நான் அதற்குள் சென்றேயாகவேண்டும். அந்தக் கடையின் உள்ளே என் பெரியப்பா இருக்கிறார். அவரைப் பார்த்து உடனே கடையை விட்டு வெளியே அழைத்து வர வேண்டும். இதுதான் என் தாத்தா எனக்கிட்டிருந்த கட்டளை.

பல வருடங்களாகவே பெரியப்பா மதுவருந்திக் கொண்டிருந்தவர்தான். ஆனால், சமீப காலமாக அவரது குடிப்பழக்கம் எல்லை மீறிவிட்டது. குடி மட்டுமல்ல, போதை வஸ்துக்கள் எந்த வடிவத்திலிருந்தாலும் அதை மிதமிஞ்சி உபயோகிக்கத் துவங்கிவிட்டார். உச்சகட்டமாக, பெதடின் போதை ஊசியும் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார். பெதடின் ஊசியை அந்தக் காலத்தில் பிரபலங்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பயன்படுத்தியபின் அழிந்துபோயுமிருக்கிறார்கள். கண்ணதாசன் அதனால் கெட்டழிந்ததை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் எழுதியிருக்கிறார். சந்திரபாபு அந்த ஊசியை வாங்குவதற்காகத் தெருநாய் போல அலைந்தேன் என்று ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியப்பாவின் பெதடின் ஊசிப் பழக்கம் குடும்பத்துக்குள் ஒரு இடியைப் போல இறங்கியது. தீப்பட்ட பசுஞ்செடிபோல குடும்பம் கருகத் துவங்கியது. அதனால், வீட்டுப் பெரியவர்கள், பெரியப்பாவைக் கடும் வீட்டுக் காவலில் வைத்தார்கள். தாத்தாவின் அனுமதியின்றி அவர் எங்கேயும் வெளியே செல்ல முடியாது. ஊரிலுள்ள மருந்துக் கடைகளுக்கெல்லாம் சென்று, “என் மகன் வந்து கேட்டால் பெதடின் கொடுக்காதீர்கள்” என்று தாத்தா மிரட்டிவிட்டு வந்தார். பெரியம்மா உள்ளிட்ட வீட்டுப் பெண்கள் பெரியப்பாவுக்கு கண்ணீரால் வேலி கட்டினார்கள். குழந்தைகளைக் காட்டிக் காட்டி அவருக்குப் புத்தி சொன்னார்கள்.

பெரியப்பா நன்றாகப் படித்தவர். பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வாங்கியவர். ஆடிட்டராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனாலும், இந்த போதைப் பழக்கம் மெல்ல மெல்ல அவரை ஆட்கொண்டு அவரது மேன்மைகளையெல்லாம் அழித்துச் சிதைத்து விட்டிருந்தது. “உருமாற்றம்” என்ற சொல்லின் பொருளைக் கண்களால் காண வேண்டுமென்று விரும்பினால், போதை அடிமைகளைப் பார்க்கலாம். அவர்கள்தாம் அந்தச் சொல்லுக்கான நடமாடும் அர்த்தங்கள்.
“மற்றொன்று சூழினும் தான் முந்துறும்” என்று ஊழைப் பற்றி வள்ளுவர் எழுதியதை குடிப்பழக்கத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

எப்படித்தான் காவல் காத்தாலும், நூலிழையில் தப்பிச் சென்று விடுவார் பெரியப்பா. மதுவருந்திவிட்டு தெருவில் கிடப்பார். மீண்டும் வீட்டிலுள்ளவர்கள்தாம் சென்று அவரைத் தூக்கி வரவேண்டும். வீட்டை விட்டு எப்படி வெளியேறுகிறார் என்பது இன்றுவரை எவராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகத்தான் இருக்கிறது. வெளியில் அவரைப் பார்த்தவர்கள் வீட்டுக்கு அழைத்தாலும் வரமாட்டார். வீட்டில் உள்ளவர்களே அழைத்தாலும் அவர் வரமாட்டார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது என்பது மிகுந்த சவாலான காரியமாக இருந்தது.

அன்றைக்கும் அப்படித்தான் ஆனது. வீட்டை விட்டு எப்படியோ தப்பிச் சென்றுவிட்ட பெரியப்பா, ராயல் ஒயின்ஸில் மதுவருந்திக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. தாத்தா அன்று புதுமையான ஒரு காரியம் செய்தார். பெரியப்பாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக, வீட்டுப் பெரியவர்களை அனுப்பாமல், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னை அனுப்பினார். வீட்டிலுள்ளோரின் மறுப்பை அவர் கண்டுகொள்ளவில்லை.

மதுக்கடையின் முன் சென்று, என்ன சொன்னால் பெரியப்பாவை அனுப்புவார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் கடை முதலாளி குழம்பினான்.

“உனக்கென்னடா இங்க வேல?” என்று உறுமினான்.

“பெரியப்பாவ பார்க்கணும்” என்றேன்.

“யார்றா உங்க பெரீய அப்பா? என்று அவன் கேட்டதும், நான் விவரத்தைச் சொன்னேன். உடனே அவனது வாய்மொழியும் உடல்மொழியும் மாறியது. “உக்காருப்பா” என்று அவனது இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன், “அவரு வரமாட்டீங்குறாருப்பா, என்ன செய்யலாம்?” என்றான்.

நான் உடனே கடைக்குள் சென்றேன். அது ஒரு பெரிய கூடம். ஆனால், விளக்கு வெளிச்சத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். மெல்லிய இருளும் ஒளியும் நிரம்பிய அந்தக் கூடத்தில் திசைக்கொருவராக அமர்ந்து சிலர் மதுவருந்திக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தரையில் விழுந்து கிடந்தார்கள். தரையெங்கும் வறுத்த கோழி மற்றும் மீன்கறிக் குப்பை. கிழிந்த காகிதங்கள், துணிகள், பிளாஸ்டிக் தாள், உடைந்த கண்ணாடிக் கோப்பைச் சில்லுகள் என தரையில் கால் வைக்க முடியவில்லை. சுற்றிலும் துர்நாற்றம். அருகில் எங்கோ பாத்திரம் செம்மை செய்யும் கடை இருக்கிறது போலும். “நொட், நொட்” என்று வெண்கலத்தில் சுத்தியல் இறங்கும் சத்தம் காதைத் துளைத்தது. விபரம் தெரியாத அந்தச் சிறுவயதிலேயே ஒன்று மட்டும் அப்போது தெளிவாகத் தெரிந்தது, “இந்த இடம் மனிதர்கள் இருப்பதற்கான இடமே அல்ல”.

ஆனால், பத்து வயதுச் சிறுவன் ஒருவனை அந்தக் கடைக்குள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லோரும் எழுந்து வந்து என்னை யாரென்று விசாரிக்கத் துவங்கினார்கள். சுவர்மூலையில் தனியாக ஒரு மடக்குச் சேரில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார் பெரியப்பா. என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென எழுந்துகொண்டார். கையில் இருந்த கோப்பையை தன் பின்னால் மறைத்துக் கொண்டார். எனக்கு சிறிது சந்தோசமாகவும் சங்கடமாகவும் இருந்தது.

“கடக்காரன் வந்து சொன்னப்ப, சும்மா சொல்றான்னு நெனச்சேன்யா, நீயேன்யா இங்கல்லாம் வந்த” என்று சொன்னபடி என் பெரியப்பா என் தோள்மேல் தன் கையைப் போட்டுக் கொண்டார். சக குடிகாரர்கள் “சீக்கிரம் பையனக் கூப்பிட்டுப் போங்க சார்” என்றனர். முதன்முதலாக, சற்றே தெளிவான நிலையில், ஒரு சிறுவனின் தோள்மேல் கைபோட்டபடி வீட்டுக்குள் வந்த பெரியப்பாவை வீடு அமைதியாக உள்வாங்கிக் கொண்டது.

மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்

குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லரை
கை நழுவி விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப் பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக் குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருப்பவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.

-யூமா வாசுகி

யூமா வாசுகியின் இக்கவிதை வாசிப்பவர்களின் மனத்தில், ரயிலோடிய தண்டவாள அதிர்வை உண்டாக்குகிறது. இதை வாசிக்கும்போதெல்லாம் குடிக்காதவர்களுக்கும் கண்ணீரும் குற்றவுணர்வும் சுரக்கிறது.

பால்யம் குறித்த நினைவுகள் எந்தக் கிழவனையும் சிறுவனாக்கி விடுகின்றன. எந்தச் சுமையையும் லேசாக்கி விடுகின்றன. ஒருபோதும் சென்றடைய முடியாத கடந்த காலத்தின் கண்களைப் போல இக்கவிதையில் கோலிக்குண்டுகள் தரையில் சிதறிப் பாய்கின்றன. மதுமயக்கத்தையும் மீறி மனிதர்களை அவரவரது கடந்த காலத்தில் ஒரு நொடி கொண்டுபோய் நிறுத்துகின்றன.

பால்யத்தின் கோலிக்குண்டுகள் நம்மைச் சுற்றியும் இருக்கின்றன. கைகளுக்கு எட்டியும் எட்டாமலும் நமக்குப் போக்கு காட்டுகின்றன. அவற்றைப் பிடித்து உள்ளங்கைக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ளத்தான் நமக்குத் தெரியவில்லை.