இலங்கை ஆறுகாவல் துறையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தனது முதலாளி செபஸ்டியானுடன் நீதிமன்றத்தில் நின்றுக்கொண்டிருந்தான் மீரான். சிங்களத்திலும் தமிழிலும் கதைத்துக்கொண்டிருந்த வழக்காடு மன்றம் நீதிபதி சிவபாலன் நுழைந்ததும் அமைதியாகி விட்டது.
‘ எங்க ஊர்ல மீன் இருந்தா ஏன் ஐயா நாங்கள் உங்க பக்கம் வரபோறோம்..’
‘எல்லை தாண்டுவது சட்டப்படி குற்றம்னு தெரியாதா.. ‘
புதிதாக பிடிபட்ட இரண்டு மீனவர்களை நீதிபதி சிவபாலன் முன்பாக நிறுத்தியிருந்தார்கள். கடல் தாண்டி அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து பிடிபட்ட விசைப்படைகிற்காக இப்படி யாரேனும் தமிழகத்தில் இருந்து அந்நிய நாட்டில் வழக்காட இதுவரை வந்திருக்கிறார்களா என்று மீரானுக்குத் தெரியாது. கோட்டையூரிலிருந்து முப்பத்தி மூன்று கிலோ மீட்டரில் தூரத்தில் இருக்கும் ஒரு தேசத்திற்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையம் போய், தலையைச் சுற்றிக்கொண்டு கொழும்பில் இறங்கி, காலையில் வெறும் வயிற்றோடு, ஆறுகாவல் துறையில் வந்து நிற்பான் என்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
சூம்பிய இடது கையுடன் சக்கர நாற்காலியில் வேஷ்டி சட்டை அணிந்து அமர்ந்திருக்கும் செபஸ்டியானைப் பார்க்க மீரானுக்குப் பரிதாபமாக இருந்தது. சுகவீனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் வின்செண்டைப் பார்க்க மனமில்லாமல் அமலியே உதவிக்காக அவனை அனுப்பிவைத்தாள்.
செபஸ்டியான் இலங்கை வருவதற்கு முன்பாக தன் மனைவி அமலியோடு அந்தோனியார்புரம் கடல் மணலில் புதைந்து நகர்ந்த சக்கர நாற்காலியில் புனித தஸ்னேவிஸ் மாதா ஆலயம் திருப்பலிக்குச் சென்றிருந்தார். அங்கு மாதா முன்பாக மண்டியிட்டவர், எப்படியும் தன்னோடு மரியா வந்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் தனக்கு உயிர்வாழவே விருப்பம் இல்லையென்றும் தலையில் பொற்கிரீடம் அணிந்திருந்த மாதாவின் முன்பாக ஒரு குழந்தை தாயிடம் அழுவது போல் அழுதுகொண்டிருந்தார். பின்னர் எப்போதும் போல இரண்டு துண்டு சீட்டில் “ஆமாம்” “இல்லை” என்று தேவாலய வளாகத்தில் சீட்டு குலுக்கிப் போட்டார்.
இவ்வளவிற்கும் அமலி, மத்தியான குத்துவெயிலில் செபஸ்டியான் கண்களிலேயே படாதவாறு தேவாலயத்தின் பின்புற வாசலின் நிலைபடிகளில் கால்களை மடித்த கால்களுக்குள் தலையை புதைத்து மாதா மன்றாட்டு மாலையை வாயில் முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். உண்மையில் அவள் தன்னையும் தன் குடும்பத்தையும் நிலத்தில் குப்புற இழுத்து செல்லும் ஒரு சாபத்தை கருப்பு உருவத்தில் மத்தியான வெயிலுக்குள் சிறுத்துப்போன தேவாலய நிழலைவிடப் பெரிதாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொழும்பில் இறங்கி, காலையில் வெறும் வயிற்றோடு, ஆறுகாவல் துறையில் வந்து நிற்பான் என்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
அதே உருவத்தை அவள் முதன் முதலாக பார்த்தது ஹாஜாவின் வீட்டில் தான். இன்று வரை தனக்கு புத்திரபாக்கியம் இல்லாமல் போனதற்கு தடையாகவும் நினைப்பது அந்த உருவத்தைத்தான். ஆனால் அவளது வறண்டுபோன வாழ்வின் பிராயசித்தமாய் தேவனிடம் முன்வைப்பது எல்லாம் மீரானைத்தான். அவனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டாள்.
தஸ்னேவிஸ் மாதாவின் திரு சொரூபம் கடலில் மிதந்து வந்து அந்தோனியார் புரத்திற்கு வந்து கரைசேர்ந்த பின் முப்பத்தியேழாவது ஆண்டுதான் அந்தோனியார்புரத்தில் அமலி பிறந்தாள். அதன் பிறகு பதினேழு ஆண்டுகள் கழித்து “கன்னி மாதாவே சரணம் .. மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே..” என்று குடிசை ஆலயத்தில் பாடிக்கொண்டிருக்கும்போதுதான் செபஸ்டியான் வள்ளத்திற்கு மானிய டீசல் வாங்க சென்றபோது அவளது எடுப்பான தோற்றத்தில் மயங்கினார்.
அமலி தனது சொந்த கிராமத்தில் எட்டாவது வரை படித்தவள், பின்பு சைக்கிளில் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் கோட்டையூர் பள்ளிகூடத்திற்கு தினசரி செல்லும் போது தான் செபஸ்டியான் கண்ணில் பட்டுத் தொலைந்தாள். பின்பு அவருக்கு மனைவியாகவும் மாறினாள்.
செபஸ்டியான் வேண்டிக்கொண்டது போலவே இலங்கை சென்று மரியாவை மீட்டு வருவதற்கு தஸ்னேவிஸ் மாதா “ஆமாம்” என்று துண்டு சீட்டில் அருள்பாலித்திருந்தாள். வேண்டிவந்த கையோடு வீட்டின் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவர், சிறுநீரகம் பழுதாகி உயிரிழக்க வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் கொடுத்திருந்த பத்தாவது எச்சரிக்கையும் தாண்டி, மரியா கிடைக்கபோகும் சந்தோசத்தில் உற்சாகமாக ஒரு மதுபாட்டிலை செபஸ்டியான் உடைத்து குடித்துக்கொண்டிருந்தார். மகிழ்ச்சி பிரவாகமாகப் பொங்கி வழிந்தது.
ஜோப்புகளில் கரன்சி கட்டுகளை நிறைத்துக்கொண்டு மாலை ஹாஜா வீட்டில் சூதாட்டத்திற்குத் தயாராகி விடுவார்கள்.
கடந்தமாதம் மரியா வழக்கு தொடர்பாக அந்தோணியார்புரம் வந்த வக்கீல் கனகசபை, ஒரு மதுப்புட்டியை வாங்கி கொண்டு வந்து வின்செண்டைப் பார்க்கவந்தார். அமலி அப்போது தான் கோழித்துண்டுகளைப் பொறித்துக்கொண்டு செபஸ்டியான் மேசைக்கு வந்திருந்தார். இலங்கைக்குத் தொலைபேசியில் அழைத்து ஆறுகாவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு குறித்த விவரங்களை சட்டத்தரணி கனகசபையிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அன்று இரவு முழுதும் உறங்காமல் வராந்தாவில் உலாத்திக்கொண்டிருந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பாக மரியாவை இந்தியாவுக்கு வெளிகொணரும் மனுவை ஆறுகாவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது போதுமான ஆவணங்கள் இல்லை என்று மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
[2]
கடலுக்குள்போய் நாள்கணக்கில் மீன்பாடு காத்துக்கிடந்து, நிறைய மீன்களையும் நண்டு சிங்கி இறால்களை அள்ளிக்கொண்டு விசைப்படகுகள் ஊர்திரும்பும் நாளில் கோட்டையூர் முதலாளிமார்கள் வீடுகளுக்குள் புதுவெளிச்சம் பாயும். காலையில் விசைப்படகுகளில் கரைக்கு இறங்கிய சரக்குகளை கைமாற்றிவிட ஜோப்புகளில் கரன்சி கட்டுகளை நிறைத்துக்கொண்டு மாலை ஹாஜா வீட்டில் சூதாட்டத்திற்குத் தயாராகி விடுவார்கள்.
‘மீரான் ஸீஃபுட்ஸ்’ முதலாளி ஹாஜா வீட்டு வாசலில் பூத்துக்கிடக்கும் நித்யமல்லி. மரமாக வளர்ந்து கயிற்றின்மீது மேல்மாடிக்குப் படர்ந்து கிடக்கும் பூக்களின் வாசனைக்கு மத்தியில்தான் மீரான் ஸீஃபுட்ஸ் ஹாஜா, மரியா ஸீஃபுட்ஸ் செபஸ்டியான், ப்ளூ டைமண்ட்ஸ் ரவி பர்னாந்து என்று முதலாளிமார்கள் தங்களது குடும்பத்தோடு ஆஜராகிவிடுவார்கள். கடல் லாபத்தில் மொத்தப் பணத்தையும் சூதாட்டத்திற்குள் கொட்டி ஆடப்படும் ஆட்டத்தில் எதை வேண்டுமானாலும் முதலாளிமார்கள் பணயமாக வைத்து ஆடுவார்கள்.
ஹாஜா வீட்டிற்கு சீட்டாட்டத்திற்கு வரும் முதலாளிமார்களுக்கு கடல்பாடு நன்றாக இருந்தால் கண்மண் தெரிவதில்லை. விடியவிடிய நடக்கும் சீட்டாட்டத்தில் தோற்றுப்போவோருக்கு அணிவிக்கப்படும் வேலிக்கருவை கீரிடத்திற்கு அருகில்தான் பிரபலமான அந்தோணியார்புர கள்ளும் வாவல் மீன் பொரியலும் தட்டில் வைக்கப்பட்டிருக்கும்.
அந்த வீட்டில் கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாத வயதில்தான் பாலகன் மீரான் சேகுமாவுக்கும் அமலிக்கும் நடுவே அமர்ந்துக்கொள்வான். தன் பெயரில் விசைப்படகு வாங்கி விட்ட வாப்பா ஹாஜா சூதாட்ட விடுதியையும் தனது நண்பர்களுடன் குவிந்துகிடக்கும் பணமழைக்கு மத்தியில் விளையாடும் சூதாட்டத்தையும் ஆட்டத்தில் தோற்றுப்போனவர்களுக்கு அணிவிக்கப்படும் கருவேலங் கீரிடத்தையும் தாவாங்கட்டையில் கைவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பான்.
அமலியின் மடியிலும் சேவும்மாவின் மடியிலும் ஏறி விளையாடிக்கொண்டிருப்பவனுக்கு மத்தியில்தான் அன்று சாபத்தின் நிழலை சிறிய குழந்தையாக பார்த்தாள் அமலி. சூதாட்டத்தின் முடிவில் கசப்பாக எஞ்சும் தோற்றுப்போனவர்களின் சாபம். இந்நாட்களில் கருவேலங் கிரீடத்தை தொடர்சியாக அணிந்துக்கொண்டிருந்த ஹாஜாவை, அவரது மனைவி சேவும்மா மீரானை தோளில் தூக்கிக்கொண்டு, தன் மாமானார் சேர்த்துவைத்த பரம்பரைச் சொத்துக்கள் ஒவ்வொன்றாகத் தங்களைவிட்டுச் சிறிதுசிறிதாகப் போகும் தூரநடையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சூதாட்டத்தில் வீழ்த்தமுடியாத ராஜாவாக செபஸ்டியான் வரிசையாக வாகை சூடினார். அசலூரிலிருந்து செபஸ்டியான் வந்திருந்ததால் விசைப்படகு மீனவ சங்கத்தில் எப்போதும் ஹாஜாவே தலைவராக இருந்தார். ஹாஜா ஆர்பருக்குள் இறங்கினால் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் மீது காரைக்காலில் இருந்து கோட்டையூருக்கு பிழைப்பு நிமித்தம் குடியேறிய செபஸ்டியானுக்கு ஏக்கப் பெருமூச்சு.
ஹாஜாவின் வாப்பாவுக்கு சொந்தமான ஈப்போ ஒட்டுகடையை விற்றுவிட்டு ஊர் ஆர்பரில் விசைப்படகு இறக்கப்போவதாக ஹாஜா கூறியபோது மகனின் முடிவுக்கு அவர் குறுக்காக நிற்கவில்லை. அப்போது கோட்டையூர் நீர்ப்பகுதியில் பவளப்பாறைகளுக்கு நடுவே கடல் செல்வங்கள் பொதிந்து கிடந்தன. கிலோ ஆயிரக்கணக்கில் போகும் சிங்கியும் நண்டுகளும் உத்தியோகபூர்வமாக அங்கு தங்கியிருந்தன. இனப்பெருக்க காலத்தில் கடல் செல்வத்தைப் பங்குபோட பல ஊர் முதலாளிமார்களும் தங்களது விசைப் படகைக் கோட்டையூர் துறைமுகத்தில் நிறுத்தி இருந்தார்கள்.
மலேசியா சென்று கடையை விற்றுவிட்டுத் தங்கச்சிமடத்தில் இருந்து ஒரு விசைப்படகைக் கோட்டையூர்த் துறைமுகத்தில் மகனுக்கு அன்புப் பரிசாக இறக்கினார் ஹாஜாவின் வாப்பா. விசைப்படகு என்றால் சாதாரணப் படகு அல்ல. புதிய மரத்திலும் வண்ணப்பூச்சுகளினாலும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் இழைக்கப்பட்டப் படகு. ‘மீரான்’ விசைப்படகை யாரும் கோட்டையூர்த் துறைமுகத்தில் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள்.
மீரானுக்குப் போட்டியாக 'மரியா’ என்று ஒரு விசைப்படகைச் செய்தார். துறைமுகத்தில் மீரானுக்கு அருகில் மரியாவை நிற்கவைத்து அழகுபார்த்தார்.
மீரான் நீருக்குள் சென்ற இடங்கள் எல்லாம் மீன் மழை! செபஸ்டியானுக்கு மீரான் மீது கண் இருந்தது. தொண்டி படையாச்சியைக் கூட்டிவந்து மீரானுக்குப் போட்டியாக ‘மரியா’ என்று ஒரு விசைப்படகைச் செய்தார். துறைமுகத்தில் மீரானுக்கு அருகில் மரியாவை நிற்கவைத்து அழகுபார்த்தார். மரியா முதல்நாளில் வெறும் ஐந்து கிலோ கூனி இறாலும் கரல் சங்காயமுமாக கரைக்குத் திரும்பியது. டீசல் போட்ட காசே திரும்பாமல்போக, செபஸ்டியான் கோட்டையூர் கடல் முதலாளிகளுக்கு மத்தியில் நகைப்பிற்கு உள்ளானார். ஆத்திரத்தில் மரியாவைக் கையோடு கொண்டுபோய்க் குளச்சலில் வந்த விலைக்கு விற்றுவிட்டார்.
கடலின் ஏறுமுகத்தில் கிடைத்த லாபத்தை என்ன செய்யவதென்று தெரியாமல் ஹாஜா தடுமாறினார். தன் பணக்கார நண்பர்களோடு சூதாட்டத்தில் குதித்தார். ஆரம்பத்தில் நூறு, ஆயிரம் என்று போய்க்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தன் வீட்டை முழுநேரச் சூதாட்ட விடுதியாக ஆக்கினார். தட்டிக்கேட்ட தந்தை, உறவினர் திருமணத்தில் வைத்து ஒருமுறை ஹாஜாவால் அடிபட்டபிறகு, வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொண்டார்.
ஹாஜாவைக் கேள்விகேட்கும் திராணியற்ற தன் வகுப்பு தோழியான சேகுமாவை அமலி பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இழுவை மடிபோட்டு வலை நிறைய மீன்களை அள்ளிவரும் படகுபோல் பந்தயங்களின் முடிவில் பணமழையும் குடிபோதையுமாக இருக்கும் செபஸ்டியானைத் தாங்கலாக அமலி தன் வீட்டுக்கு அழைத்துவருவாள்.
[3]
ஆறுகாவல்துறை நீதிபதி முன்னால் நிலுவையில் இருந்த வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நேரம் இழுத்துக்கொண்டேபோனது. நீதிமன்றத்திற்குள் பதட்டமாக எழுந்து நின்ற முதலாளியை, அவ்வப்போது சட்டத்தரணி கையைப்பிடித்து இன்னும் மரியா விசைப்படகு வழக்கின் முறை வரவில்லை என்று இருக்கையில் அமரவைத்தார். மீரான் நீதிமன்றத்திற்கு வெளியே நின்று புகைபிடிப்பது போலவும் தனக்குப் பின்னால் ஆறுகாவல்துறை நீதிமன்றத் தொகுதிப் பலகைக்கு அருகே ஓர் இலங்கை காவலர் நிற்பது போலவும் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தான்.
முதலாளிக்கு ஏழு விசைப்படகுகள் சொந்தமாக இருந்தாலும் இந்தப் படகை மீட்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருப்பது மரியா படகின் மீது வைத்திருந்த நேசம்தான். மரியாதான் அவருக்கு மீதி ஆறு படகுகளையும் கொண்டு வந்தது என்று நம்பினார். வழக்கு ஒருவாறு போய்க்கொண்டிருக்கும்போது, “நீதிமன்றம் விதித்த அபராதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று நீதிபதி சிவபாலன் செபஸ்டியானை பார்த்துக்கேட்டார். செபாஸ்டியனும் ஒப்புக்கொண்டார். வழக்கின் முடிவில் நீதிமன்றம் மரியாவை விடுவிப்பதாகத் தீர்ப்புக் கூறியதும் செபஸ்டியான், மரியாவில் ராஜாவைப்போல் திரும்பப்போகும் ஒரு தருணத்தை நினைத்துப்பார்த்தார்.
காங்கேசன்துறை கடற்கரை, யாழ்ப்பாணக் கோட்டை என்று ஒவ்வொரு இடமாகத் தனது புகைப்படத்தைப் பதிவிட்டுக் கொண்டே வந்த மீரான், இறுதியாக வாகைதீவில் தனது முதலாளியுடன் மரியா விசைபடகுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருந்தான். அதில் அவனுக்குப் பின்னால் மிகவும் பழுதடைந்த நிலையில் மரியா நின்றுகொண்டிருந்தது. கடந்த காலத்தில் மீரானாகவும் இருந்த மரியாவும் அவனோடு சேர்ந்து நின்றுகொண்டது.
ஏதோ நினைவு வந்தவனாய் மீரான் திடீரென்று ஒரேபாய்ச்சலாய் மரியாவில் ஏறிகுதித்தான். படகு ஓட்டுனர் அறைக்குள் சென்று பார்த்தான். இரண்டு பச்சை வண்ண மினாராக்களோடு இருந்த கோட்டையூர் தர்கா காட்சியளித்தது. செபஸ்டியான் அவனைக் கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். அனுமதிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க அதிகாரி வந்தபோதுதான் நிலைமை மோசமாகியது. வாகைத்தீவு மீனவர்கள் ஒன்றாகக்கூடித் தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த படகுகளைத் திருப்பித் தரக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
சுமூகமாகச் செல்லலாம் என்று போராட்டக்காரர்களுடன் செபஸ்டியான் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், வாகைத்தீவு பைரவர் கோயிலுக்கு மூன்று லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதாக ஒப்புக்கொண்டார். மரியாவை அடுத்தநாள் கடலுக்குள் கொண்டுபோக அதிகாரி இசைவு தெரிவித்ததும் அவசரமாக செபஸ்டியான் அறைக்குத் திரும்பினார்.
[4]
கிருஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் வீட்டுவாசலில் நட்சத்திரம் கட்டிய ஒருநாளில்தான் செபஸ்டியான் ஒரு மனக்கணக்கோடு விருந்துக்கு ஹாஜாவைக் குடும்பத்தோடு அழைத்திருந்தார். அன்றுதான் சாபத்தின் கருப்பு உருவத்தை இரண்டாவது முறையாக அமலி பார்த்தாள். உருவம் இப்போது மெல்ல வளர்ந்திருந்தது. ஹாஜா குடும்பத்தோடு மீரானுக்குப் பின்னால் ஒரு கருப்பு உருவம் தன் வீட்டுக்குள் ஏறியதை அமலி பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஹாஜா யாருக்கும் தெரியாமல் வீட்டின்மீது வாங்கிய கடன் வளர்ந்து ஜப்தியில் நின்ற நித்யமல்லி தோட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மீண்டும் ஒரு பெரிய ஆட்டத்திற்குத் தயாரானார். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவு பந்தயத் தொகை. ஆட்டம் பெரிய ஆட்டம்! பண்டிகை ஆட்டம்! எத்தனை பெரிய கைகள் வேண்டும் என்றாலும் சேரலாம் என்ற அறிவிப்போடு தொடங்கியது.
செபஸ்டியான் வீட்டு மாடியில் கிருஸ்துமஸ் அலங்காரங்களுக்கு நடுவே சூதாட்ட மேசை விரிக்கப்பட்டது. செபஸ்டியான் ஏற்பாட்டில் பெரிய ஆடு அறுக்கப்பட்டு முட்டுக்கல் மூன்றில் ஸீஃபுட்ஸ் முதலாளிமார்களுக்காக பிரியாணி. நித்யமல்லி தோட்ட வீட்டை மீட்டு எடுப்பது என்கிற தொனியில் இறங்கினார் ஹாஜா. அதற்குப் பணயத் தொகையாக அவர் வைத்தது மீரான் படகை.
விறுவிறுப்பாக ஆட்டம் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் முதலில் ஹாஜாவிற்கு நம்பிக்கையாக முதல் வெற்றி கணிசமான தொகையுடன் கிடைத்தது. முதல் கருவேல கிரீடம் செபஸ்டியானுக்கு சாத்தப்பட்டது. ஹாஜாவிற்கு உற்சாகமான தொடக்கம்தான் ஆனால் நேரம் செல்லச்செல்ல செபஸ்டியானின் கை ஓங்கியது. மீரானின் ஒவ்வொரு பாகத்திற்கும் மதிப்பான தொகையை செபஸ்டியான் வென்றுகொண்டிருந்தார்.
முதலாளிமார்கள் இரட்டைமடி போட்டுக் கடலில் தரையை வழித்து குஞ்சு குளுவான்களை எல்லாம் விற்றுக் காசாக்கியதில் கடல் கட்டாந்தரையாக மாறியிருந்தது.
அதிகாலையில் ஒரு கருப்பு ஜெபமாலை முறிந்து விழுவதாய் துர்சொப்பனம் கண்டு எழுந்து வந்து பார்த்த அமலி பதறிப்போனாள். ஹாஜாவின் மொத்த குடும்பத்திற்கும் உறுதுணையாய் இருந்த மீரான்மீது சம்மணமிட்டு செபஸ்டியான் அமர்ந்திருந்தார். படகைச் சூதில் பறிகொடுத்துவிட்ட ஹாஜா அதற்கு முன்பாகவே எழுந்து வீட்டுக்குப் போயிருந்தார்.
சேகுமா, செபஸ்டியான் வீட்டு வாசலில் அழுதுக்கொண்டே இரண்டு கைநிறைய தூற்றிய மணல், மிகப்பெரிய உருவமாக செபஸ்டியான் வீட்டின் முன்பாக நின்றது. உருவத்திற்குப் பின்னால் அழுதுகொண்டு நின்றிருந்த அமலியை வைத்தகண் வாங்காமல் மீரான் சேகுமாவின் தோள்களிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
மீரான் கைமாறியதும் தான் தோற்ற பழைய மரியாவின் பெயரை அதற்கு செபஸ்டியான் இட்டார். மீரான் (எ) மரியாவை சுவீகரித்துக்கொண்டதன் மூலம் கோட்டையூர் ஆர்பரில் தன்னை ஒரு ராஜாவாகவே செபஸ்டியான் உணர்ந்தார். தோல்விகளின் கீரிடங்களைச் சுமந்தவாறே ஹாஜா படுக்கையில் வீழ்ந்தார். அவர் இறந்த பிறகு சேகுமா பித்துப்பிடித்தவளாக கோட்டையூர் தெருவுக்குள் திரிந்தாள். ஏர்வாடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் தெருவில் அம்மணமாக ஓடிய உம்மாவை மீரான் கண்டதைப்போல எந்தப் பிள்ளையும் பார்த்திருக்கமாட்டார்கள்.
பரிதவிப்புடன் நின்ற மீரானை அமலி தன்னோடு அழைத்து வைத்துக்கொண்டாள். அவன் வளந்தபின்பு மரியா ஸீஃபுட்ஸ் கணக்கு வழக்குகளையும் செபஸ்டியானுக்கு உதவியாகவும் நின்றுகொண்டான். செபஸ்டியானுக்கு மீரான் ஒரு பிள்ளயைப்போல் தன் வீட்டிற்குள் உலாவுவது பிடிக்கவில்லையென்றாலும் பிள்ளையே இல்லாத அமலியின் வற்புறுத்தலால் செபஸ்டியானின் அந்தோணியார்புர வீட்டில் அவன் வளர்ந்து நின்றான்.
இப்போதெல்லாம் கோட்டையூர் கடல் வளம் முன்பு போல் இல்லை. முதலாளிமார்கள் இரட்டைமடி போட்டுக் கடலில் தரையை வழித்து குஞ்சு குளுவான்களை எல்லாம் விற்றுக் காசாக்கியதில் கடல் கட்டாந்தரையாக மாறியிருந்தது. “இப்படியே போனால் நைஜிரீயாக் கடற்கொள்ளையர்கள் மாதிரிதான் நாமளும் ஆகனும்” என்று மீரான் சொல்லிகொண்டிருந்தார். எல்லையைத் தாண்டினால்தான் கோட்டையூர் மீன்பாடு என்று கிளம்பிய விசைப்படகுகள் துப்பாக்கிச் சூட்டிற்கும் அடிதடிக் கலவரங்கள் விசைப்படகு பறிமுதல் கைதுகளுக்கும் சிறை அனுபவங்களுக்கும் நடுவே பிழைக்கும் பாடாக மாறிப்போயிருந்தது.
செபஸ்டியான் இப்போது மரியாவை வேறொரு தொழிலுக்கு மாற்றினார். கடைசியாக மரியாவை மறுஎல்லையிலிருந்து வரும் ஐந்து கிலோ தங்கத்தைக் கோட்டையூருக்கு கொண்டுவர செபஸ்டியான் நம்பிக்கையுடன் அனுப்பிவைத்தார். துரதிருஷ்டவசமாக இலங்கைக் கப்பற்படையிடம் தன் அன்புக்குரிய மரியா சிக்கிக்கொண்ட செய்தியறிந்து செபஸ்டியான் நோயுற்றார். படகில் இருந்து தப்பித்தவர்கள் சுங்கத்துறைக்கு பயந்து கடத்திய தங்கம் கோட்டையூர் கடல் பகுதியில் இருந்து ஐந்துபாக தூரத்தில் கடலுக்குள் செபஸ்டியான் ஆட்களால் பாதுகாப்பாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்தாலும் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்ட மரியாவைச் சட்டபூர்வமாக மீட்டுவிட பல வருடங்களாக செபஸ்டியான் போராடிக்கொண்டிருந்தார்.
மரியா கிடைத்த உற்சாகத்தில் செபஸ்டியான் தங்கியிருந்த அறையில் விடிய விடிய சட்டத்தரணி கனகசபையுடன் மதுக்கோப்பைகளாக செபஸ்டியான் இறக்கிக்கொண்டிருந்தார். மருத்துவர் அவருக்கு கொடுத்த பன்னிரெண்டாவது எச்சரிக்கையையும் தாண்டி இன்று உற்சாகமாக ஒரு போத்தலை உடைத்திருந்தார்.
மகிழ்ச்சி பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மீரான் நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த விடுதியின் முகப்பில் நின்றுக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டான். அவனுக்கும் செபஸ்டியானுக்கும் பின்னால் நீண்ட கருப்பு உருவம் நிற்பதுபோல் அவனுக்கு பிரமை தோன்றியது. பின்பு கண்ணை கசக்கிவிட்டு பார்த்தான். கனகசபை நின்றுக்கொண்டிருந்தார். பின்பு அறைக்குத் திரும்பி இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கினான்.
மரியா கடலில் சீறிப்பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன்மேலே ஒரு ராஜாவைப்போல் இடுப்பில் கையைக்கொடுத்து மீரான் நின்றுகொண்டிருந்தான். அவனுக்காக அவனது அம்மா அமலி தூரத்தில் கரையில் காத்துக்கொண்டிருந்தாள். அவன் கேசத்தை உப்புக்காற்று கலைத்துக்கொண்டே இருந்தாலும் அவன் தலையில் சூட்டப்பட்டிருந்த கருவேலம் கிரீடம் கம்பீரமாகக் காட்சியளித்தது. உறங்கிகொண்டிருந்த செபஸ்டியான் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை.