காலந்தோறும் கச்சாங் புத்தே

நித்திஷ் செந்தூர்
தோ பாயோ பேருந்து முனையத்தில் மூர்த்தியின் புது கடை

‘கச்சாங் புத்தே’ காலங்காலமாய்த் தன் சுவையால் மக்களைக் கட்டிப்போட்டு வருகிறது. சிங்கப்பூர்வாசிகளுக்குப் பரிச்சயமான பதார்த்தம். அதனைக் கண்டால் கண்களுக்குக் களிப்பு. சுவைத்தால் நாவிற்கு சிலிர்ப்பு. ஒருகாலத்தில் கச்சாங் புத்தே கடைகள் தீவெங்கும் மலிந்திருந்தன. ஆனால் காலமாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் வியாபாரம் நலிவடைந்தது.

இன்று சிங்கப்பூரில் ஒரே ஒரு கச்சாங் புத்தே கடைதான் எஞ்சியுள்ளது. அது தற்போது தோ பாயோ பேருந்து முனையத்தில் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் கடைசி கச்சாங் புத்தே கடையைக் கைவிடாமல் நடத்திவரும் 57 வயது நிரம்பிய அமிர்தலங்காரம் மூர்த்தியைச் சந்தித்து விவரங்களைக் கண்டறிந்தது ‘தி சிராங்கூன் டைம்ஸ்’.

கச்சாங் புத்தே என்ற பெயர் எதனால் வந்தது?

60 ஆண்டு காலம் கச்சாங் புத்தே
தொழிலை நடத்தி வந்த நாகப்பன்

‘கச்சாங்’ என்றால் மலாய்மொழியில் கடலை. ‘புத்தே’ என்றால் வெள்ளை. கடலையை வறுத்து சீனிப் பாகு சேர்க்கும்போது, அது வெள்ளையாக மாறுகிறது. எனவே கச்சாங் புத்தே என அழைக்கப்படுகிறது. நம்மவர்கள் அதனை ‘கச்சான்’ என்றும் கூறுவர். தமிழில் நிலக்கடலை அல்லது வேர்க்கடலை எனலாம். மணிலாக் கொட்டை, அது மருவி மல்லாட்டை. கடலைக்காய், அது மருவி கல்லக்கா. இதுபோன்ற வட்டார வழக்குப் பெயர்களும் உண்டு.

சிங்கப்பூரில் கச்சாங் புத்தே தொழில் எப்போது தொடங்கியது?

அக்கால கச்சாங் புத்தே வியாபாரியைச் சித்திரிக்கும் சுவரோவியம்

சிங்கப்பூரில் கச்சாங் புத்தே தொழில் 1940களில் தொடங்கியது என்கின்றனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தொழிலை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாகப் பேய்க்கரும்பன்கோட்டை, கக்கரை, புலவன்காடு, பூவத்தூர், தெலுங்கன்குடிகாடு, திருமங்கலக்கோட்டை கீழையூர், ஒக்கநாடு கீழையூர் முதலிய ஊர்களிலிருந்து வந்தவர்கள் கச்சாங் புத்தே தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

அக்காலத்தில் கச்சாங் புத்தே தொழில் எப்படி நடந்தது?

ஆரம்பகாலத்தில் நான்கைந்து கச்சாங் புத்தே வகைகள்தான் விற்கப்பட்டன. வக்குலில் (கூடையில்) கச்சாங் புத்தே வகைகள் நிரப்பப்படும். தலையில் அவற்றைச் சுமந்து, நடந்துசென்று அவற்றை விற்று வந்தனர். தலைப்பாகையின்மேல் மனைக்கட்டை போன்ற பலகை ஒன்றை வைத்து அதில் வறுகடலை வகைகளைச் சுமந்து சென்றனர். பிறகு, சைக்கிளில் சென்றனர். பல்வேறு இடங்களுக்குப் பொடிநடையாய்ச் செல்வதைவிட சைக்கிளில் செல்வது வசதியாகவும் விரைவாகவும் இருந்தது. வியாபாரிகள் மணியடித்து, ‘கச்சாங் புத்தே…கச்சாங் புத்தே…’ எனக் கூவிக்கூவி, தீவெங்கும் விற்று வந்தனர்.

சிங்கப்பூரில் கச்சாங் புத்தே தொழில் 1940களில் தொடங்கியது என்கின்றனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தொழிலை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
திரையரங்கில் விற்கப்படும் கச்சாங் புத்தே சித்திரிக்கும் சுவரரோவியம்

எங்கெல்லாம் கச்சாங் புத்தே விற்கப்பட்டது?

தொடக்கத்தில் கம்பங்கள், பள்ளிகள், சாலையமைப்புப் பகுதிகள் ஆகியவற்றில் கச்சாங் புத்தே விற்கப்பட்டது. படமேடைகள் வந்த பிறகு கச்சாங் புத்தே அங்குக் கோலோச்சத் தொடங்கியது. திரையரங்கு அக்காலத்தில் படமேடை என அழைக்கப்பட்டது. சிலர் படக்கொட்டாய் எனவும் கூறுவர்.

தற்போது சோளப்பொரி (Popcorn) வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்வதுபோல் அப்போது கடலையைக் கொறித்துக்கொண்டு படத்தை ரசித்தனர். ஒருவேளை திரைப்பட நுழைவுச்சீட்டு கிடைக்காமல் போனாலும், கச்சானை வாங்கித் தங்களின் கவலையை ரசிகர்கள் தீர்த்துக்கொள்வர். அதன் பிறகு, கடைத்தொகுதிகளின் வெளியே ‘கச்சான் புத்தே’ கடைகள் முளைக்கத் தொடங்கின. வேர்க்கடலை வியாபாரம் சிங்கப்பூர் எங்கும் வேர்விட்டு வளர்ந்தது. ஊரெங்கும் கடைகள் பரவின.

தற்போது சோளப்பொரி (Popcorn) வாங்கிக்கொண்டு
படம் பார்க்கச் செல்வதுபோல் அப்போது கடலையைக்
கொறித்துக்கொண்டு படத்தை ரசித்தனர்.

எத்தனைப் பேர் இதில் ஈடுபட்டிருந்தனர்?

அதிகபட்சமாக சுமார் 200 பேர்வரை கச்சாங் புத்தே தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கலாம். வியாபாரிகளின் எண்ணிக்கை 1990களின் மத்தியிலிருந்து கணிசமாகக் குறையத் தொடங்கியது. வயதான வியாபாரிகள் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றனர். அடுத்த தலைமுறையினர் இத்தொழிலில் ஆர்வம் காட்டவில்லை. நாளடைவில் தொழில் நலிந்தது. தற்போது சிங்கப்பூரின் கடைசி கச்சாங் புத்தே கடை என்னுடைய கடைதான்.

எப்போது ‘கச்சாங்கில்’ காலெடுத்து வைத்தீர்கள்?

எனது சித்தப்பா நாகப்பனிடமிருந்து நான் இத்தொழிலைக் கற்றுக்கொண்டேன். சுமார் 60 ஆண்டு அவர் கச்சாங் புத்தே விற்றுவந்தார். அவரது எட்டாம் வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர், 15 வயதில் கச்சாங் புத்தே விற்க ஆரம்பித்தார்.
ஹவ்காங் கம்பத்தில் அவர் முதன்முதலாகத் தொழிலைத் தொடங்கினார். அதன் பின்னர் ‘ஹூவர்’ (Hoover), ‘நியூ கெப்பிட்டல்’ (New Capital), ‘நியூ ஹேப்பி’ (New Happy) முதலிய திரையரங்குகளில் விற்றார். இரவு நேரத்தில் பல பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்தார். இறுதியாக பீஸ் செண்டர் (Peace Centre) வெளியே கச்சாங் புத்தே வகைகளை விற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் மேலத்தெருவில் நான் பிறந்தேன். சிங்கப்பூருக்கு 2004இல் வந்தேன். ஆரம்பத்தில் சித்தப்பாவின் வியாபாரத்திற்கு உதவிசெய்து வந்தேன். அவரது பழுத்த அனுபவத்திலிருந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன். 2013இல் நான் கச்சாங் புத்தே தொழிலில் காலெடுத்து வைத்தேன். அவருடன் இணைந்து கச்சாங் புத்தே வியாபாரத்தைத் தொடர்ந்தேன். வயது காரணமாக சித்தப்பா தொழிலைக் கைவிட வேண்டியிருந்தபோது கடையை நான் கையில் எடுத்தேன். சுமார் 10 ஆண்டு பீஸ் செண்டர் வெளியே கச்சாங் புத்தே வியாபாரத்தை நடத்தி வந்தேன்.

தோ பாயோவிற்கு இடம் மாறக் காரணம்?

பீஸ் செண்டர் கடைத்தொகுதி 2021இல் ஒட்டுமொத்த விற்பனைக்கு (en-bloc) விடப்பட்டது. புதுப்பிப்புப் பணிகள் காரணமாகக் கடைக்காரர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பொருளாதார இழப்பைச் சமாளிக்க பீஸ் செண்டர் கடைத்தொகுதியின் புது நிர்வாகம் 6 மாதத்திற்கு இடத்தை இலசவமாக வழங்கியது. ஆனால் கடைக்காரர்கள் ஒவ்வொருவராக வெளியேற, பீஸ் செண்டர் வெளியே ஆள்நடமாட்டம் குறையத் தொடங்கியது. வாடகை செலுத்த வேண்டியதில்லை என்றாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம், ‘SBS Transit’ நிறுவனம் என்னை அணுகியது. தோ பாயோ பேருந்து முனையத்தில் வாடகையற்ற ஓர் இடத்தை வழங்குவதாகக் கூறியது. இரண்டு இடங்கள் காட்டப்பட்டன. ‘மெக்டொனால்ட்ஸ்’ விரைவு உணவகத்திற்கு முன்னர் இருந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. எனவே அவ்விடத்தை நிராகரித்துவிட்டேன். தற்போது உள்ள இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. மின்சார வசதியும் உள்ளது. ஆகையால் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் பெற ஒருமாதக் காலம் ஆகும் என ‘SBS Transit’ நிறுவனம் தெரிவித்தது. ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்ற மாதம் (ஆகஸ்ட் 2023) முதல் தேதி, இங்கு இடமாறினேன். இந்த வண்ணமிகு தள்ளுவண்டியில் தொழில் தொய்வின்றித் தொடர்கிறது.

இந்த வண்ணமிகு தள்ளுவண்டியில் தொழில் தொய்வின்றித் தொடர்கிறது.

கச்சாங் புத்தே எனக் கொட்டை எழுத்துகளில் இடம்பெற்ற தள்ளுவண்டிக் கடை கண்களைக் கவர்ந்தது. வறுகடலை வகைகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் எழிலாகக் காட்சியளித்தன. பாரம்பரியத்திற்கு உரித்தான தோற்றம் தள்ளுவண்டியில் தராளமாகத் தென்பட்டது. நீண்ட வரிசை கடையின் முன்பு வளைந்து நெளிந்து சென்றது. காகிதங்களைக் கூம்புச் சுருள்களாகச் சுருட்டி, அதில் கடலைகளை நிரப்பும் காட்சி பழைய நினைவுகளை அசைபோட்டது. சில கணம் நினைவுகளில் மூழ்கிய பிறகு, நேர்காணலைத் தொடர்ந்தேன்.

சீட்டுகிழிச்சான் கொட்டை

‘சீட்டுகிழிச்சான் கொட்டை’ என்ற பெயர் நிலக்கடலைக்கு இருந்தது. நிலக்கடலையைச் சாகுபடி செய்து கிடைத்த ஆதாயத்தில், வாங்கிய கடனை விவசாயிகள் அடைத்தனர். அவர்கள் அதற்கான கடன் பத்திரங்களைக் கிழித்து போட்டார்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலக்கடலைக்கு ‘சீட்டுகிழிச்சான் கொட்டை’ என்ற பெயர் வந்தது.

மல்லாட்டை

நிலக்கடலைகள் ‘பெரு’ நாட்டினைத் தாயகமாகக் கொண்டவை. அவை கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருவில் உணவாகப் பயன்படுத்தப்பட்டன. பிலிப்பீன்ஸ் நாட்டினரின் தாக்கத்தால் தமிழ்நாட்டிற்குள் நிலக்கடலைகள் நுழைந்தன. அந்நாட்டின் தலைநகர் மணிலா. அங்கு நிலக்கடலைகள் விளைந்து தமிழ்நாட்டிற்கு வந்ததால் மக்கள் அதனை ‘மணிலா கொட்டை’ என அழைத்தனர். நாளடைவில் அது ‘மல்லாட்டை’ என மருவியது.

புது இடத்தில் விற்பனை…

பழைய இடத்தைக் காட்டிலும் புது இடத்தில் விற்பனை அமோகமாக உள்ளது. இங்கு அன்றாடம் சுமார் 400 கச்சாங் புத்தே கூம்புச் சுருள்கள் விற்பனையாகின்றன. பழைய இடத்தில் அந்த எண்ணிக்கை சுமார் 300ஆக இருந்தது. வியாபாரம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு உயர்ந்துள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். கூட்டத்தைச் சமாளிக்க எனது கூட்டாளி உதவி வருகிறார். என் துணைவியார் தொழிலுக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார்.

பீஸ் செண்டரில் மாணவர்களும் வெளிநாட்டினரும் எனது முக்கிய வாடிக்கையாளர்களாகத் திகழ்ந்தனர். தோ பாயோவில் உள்ளூர்வாசிகள்தான் அதிகமாக கச்சாங் புத்தே வகைகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, 60 வயதைக் கண்டவர்கள் கடலையைப் பெரிதும் விரும்புகின்றனர். கடை, திங்கள் முதல் சனி வரை, காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

பழைய இடத்திற்கும் புது இடத்திற்கும் என்ன வித்தியாசம்?

அங்கு வெயிலும் மழையிலும் கச்சானை விற்கவேண்டும். இங்கு குளிர்சாதன வசதி உள்ளது. பீஸ் செண்டர் பழைய நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டபோது, மாத வாடகை 650 வெள்ளியாக இருந்தது. இங்கு வாடகை இல்லை. மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.

சூடான சுண்டல்தான் அதிகமானோரைச் சுண்டியிழுக்கிறது.

எத்தனை கச்சாங் புத்தே வகைகளை விற்பனை செய்கிறீர்கள்?

மொத்தம் 25 வகைகளை விற்கிறோம். அதில் 10 வகைகளை வீட்டிலேயே சொந்தமாகத் தயார் செய்கிறோம். மற்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கி விற்கிறோம். கேலாங் பாருவில் ஞாயிறுதோறும் ஒரு வாரத்திற்குத் தேவையான கச்சாங் புத்தே வகைகளைத் தயாரிப்போம். அன்று கடைக்கு விடுமுறை. இனிப்புக் கடலை, உப்புக் கடலை, வறுத்த கடலை, முந்திரி, மரவள்ளிக் கிழங்கு, சுண்டல் ஆகியவற்றின் விற்பனை சூடாக இருக்கும்.

சூடான சுண்டல்தான் அதிகமானோரைச் சுண்டியிழுக்கிறது.

கடலையின் விலை…

முந்திரியைத் தவிர மற்ற கச்சாங் புத்தே வகைகள் ஒரு வெள்ளி 50 காசுக்கு விற்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் ஐந்து காசுக்கு விற்கப்பட்ட கச்சாங் புத்தே படிப்படியாக விலை உயர்ந்தது. அண்மைய விலை ஏற்றத்திற்கு முன்னர் ஒரு வெள்ளி 20 காசுக்கு விற்கப்பட்டன. முந்திரி இரண்டு வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

மின்னிலக்கக் கட்டண முறையை அறிமுகம் செய்ய திட்டமுள்ளதா?

இது பெரிய அளவில் பணம் புரளும் வியாபாரம் இல்லை. சிறு அளவில் சில்லறையாகப் புழங்கும் வியாபாரம். வாடிக்கையாளர்கள் சிலர் ‘PayNow’, ‘PayLah’ மூலம் பணம் செலுத்தும் முன்னரே, இங்கிருந்து நகர்ந்து விடுகின்றனர். நான் வியாபாரத்தைப் பார்ப்பேனா? பணத்தைச் செலுத்தி விட்டதைச் சரிபார்ப்பேனா? அது ஒத்துவராததால் கைவிட்டேன். எதிர்காலத்தில் பார்ப்போம்.

கச்சாங் புத்தே அஞ்சல்தலை

கச்சாங் புத்தே அஞ்சல்தலை

கச்சாங் புத்தே வியாபாரியைக் குறிக்கும் அஞ்சல்தலையை சிங்கப்பூர் அஞ்சலகம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று வெளியிட்டது. சிங்கப்பூரில் ‘மறைந்துவரும் தொழில்கள்’ தொகுப்பின் ஓர் அங்கமாக கச்சாங் புத்தே அஞ்சல்தலை இடம்பெற்றது. அத்தொகுப்பில் மொத்தம் 10 அஞ்சல்தலைகள் இடம்பெற்றிருந்தன. கச்சாங் புத்தே அஞ்சல்தலையை வடிவமைத்தவர் லிம் ஆன்-லிங். அதன் மதிப்பு 5 காசு.

மறைந்துவரும் தொழில்கள் சிங்கப்பூரின் செழிப்பான பண்பாட்டு மரபுடைமையின் ஓர் அங்கமாகத் திகழ்ந்தன. அவற்றை அஞ்சல்தலைகளின்மூலம் நினைவுகூர விரும்புவதாக சிங்கப்பூர் அஞ்சலகம் தெரிவித்தது.

சவால்கள்…

உடலுழைப்பு அதிகம் தேவை. காகிதங்களைக் கூம்புகளாகச் சுருட்டவேண்டும். விற்பனை நின்றுகொண்டேதான் நடக்கும். பசியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். கடையை மூடியபிறகு, அடுத்த நாளுக்கான சுண்டலை வீட்டில் தயார் செய்யவேண்டும். இரவில் ஊற வைத்து, மறுநாள் காலை அலசி, அவித்து, பக்குவமாக உப்பு போடவேண்டும். பொறுமையுடன் ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்தால்தான் போட்ட பணத்தை எடுத்து கொஞ்சம் ஆதாயமும் பார்க்க முடியும்.

வியாபாரத்திற்கு இடையே நேர்காணல் நடைபெற்று கொண்டிருக்கும்போது, ‘பச்சை’, ‘வெள்ளை’, ‘மஞ்சள்’ என நிறங்களுடன் வறுகடலை வகைகளை அழைத்தனர். அது எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. அதுகுறித்து கடையில் வேலைசெய்து கொண்டிருந்த திருநாவுக்கரசுவிடம் கேட்டேன்.

சில குழூஉக்குறிச் சொற்கள் காதில் விழுந்தன. அவற்றுக்கு என்ன அர்த்தம்?

இங்கு இருக்கும் அனைத்துமே கச்சாங் புத்தே தான். வாடிக்கையாளர்கள் கச்சான் வகைகளைக் கேட்கும்போது, அவற்றை வேறுபடுத்த எங்களுக்குளே சில சொற்களைப் பயன்படுத்துவோம். சுண்டல் என்பதை ‘மஞ்சள்’ என்கிறோம். ‘Prawn cracker’க்கு பட்டை. அந்த வடிவில் இது இருப்பதால் அதற்கு அப்பெயர். கச்சாங் புத்தேக்கு வெள்ளை. பச்சை கொண்டைக்கடலைக்கு ‘பச்சை’.
தோலோடு இருக்கும் நிலக்கடலைக்கு ‘உப்பு தோலோட’ என்கிறோம். தோலற்ற நிலக்கடலைக்கு ‘உப்புத் தோலிலாதது’ எனச் சொல்கிறோம். உப்பும் இனிப்பும் சேர்க்காமல் மணலில் வறுக்கப்படும் கடலையை ‘வறுத்த கடலை’ எனக் குறிப்பிடுகிறோம்.
திருநாவுக்கரசுவிடமிருந்து அரிய தகவல்களைப் பெற்ற பிறகு, மூர்த்தியிடம் மீண்டும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிதேன்.

பேருந்து முனையத்தில் கச்சானை வாங்கிச் செல்லும்போது, பரபரப்பிற்கு இடையிலும் பழமையை உணரலாம். பாரம்பரியத்தைச் சுவைக்கலாம்.

காலத்தினால் கச்சாங் புத்தே வியாபாரம் கண்டுள்ள மாற்றங்கள் யாவை?

அக்காலத்தில் கூடையைச் சுமந்து கூவிக்கூவி கச்சாங் புத்தே விற்றார்கள். இன்று கடையின் முன்பு கூட்டம் கூடி நிற்கிறது. அப்போது நாங்கள் மக்களைத் தேடிச் சென்றோம். இப்போது மக்கள் கச்சானை நாடி வருகின்றனர்.

அப்போது நாங்கள் மக்களைத் தேடிச் சென்றோம். இப்போது மக்கள் கச்சானை நாடி வருகின்றனர்.

அக்காலத்தில் காலியாட்கள் கச்சாங் புத்தே தொழிலில் ஈடுப்பட்டிருந்தனர். ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் திருமணம் ஆகாத ஆட்கள் ‘காலியாட்கள்’ என அழைக்கப்பட்டனர். தனிநபர் வருமானத்திற்குக் கடலைத் தொழில் கைகொடுத்தது. காலபோக்கில், குடும்பங்களாக கச்சாங் புத்தே தொழிலைப் புரிந்தனர். குடும்பத்தினரின் செலவுகளைச் சமாளிக்கச் சிரமமாக இருந்ததால் கச்சாங் புத்தே தொழிலைக் கைவிட்டனர்.

கச்சாங் புத்தே தொழில் சிங்கப்பூரில் தொடருமா?

சிங்கப்பூரில் இட வாடகை அதிகம். இதுபோன்ற சிறுதொழில்களுக்கு வாடகையற்ற இடம் கிடைத்தால் பேருதவியாக இருக்கும். மேலும் அது மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியாகவும் இருக்கவேண்டும். ‘SBS Transit’ நிறுவனம் எனக்கு உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால் கச்சாங் புத்தே கடை பீஸ் செண்டருடன் மூடுவிழா கண்டிருக்கும்.

தற்போது இருக்கும் விலைவாசிக்குப் பொருள்களை வாங்கி, வாடகை செலுத்தினால் கையில் எதுவும் மிஞ்சாது. எனது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு இந்தத் தொழிலைக் கற்றுக்கொடுத்துள்ளேன். வருங்காலத்தில் வாய்ப்பு கைகூடி வந்தால் ஓரிரு புது வேர்க்கடலைக் கடைகள் சிங்கப்பூரில் வேர்விடலாம்.

சிறுவயதினர் முதல் மூத்தோர் வரை கச்சாங் புத்தே வகைகளைப் பிரியமாக வாங்கிச் சென்றனர். மூர்த்தி கச்சானின் கீர்த்தியைப் பிடித்துவைத்துள்ளார் என்பதைக் கூடிய கூட்டம் நிரூபித்தது. பேருந்து முனையத்தில் கச்சானை வாங்கிச் செல்லும்போது, பரபரப்பிற்கு இடையிலும் பழமையை உணரலாம். பாரம்பரியத்தைச் சுவைக்கலாம்.

சிலர் சிறு நெகிழிப் பைகளில் போட்டுத் தருமாறு கேட்டனர். ஒருசிலர் தங்களின் சொந்த பாத்திரங்களைக் கொண்டுவந்து அவர்களுக்குப் பிடித்தமான கச்சானை நிரப்பிச் சென்றனர். சீனர் ஒருவர் இருகரம் கூப்பி மூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் காட்சி மனத்திற்கு இதமாக இருந்தது. சிங்கப்பூரின் சூழல் மாறியபோதிலும் கடலையின் சுவை மாறவில்லை எனப் பல்லாண்டு காலமாக மூர்த்தியிடம் கச்சாங் புத்தேவை வாங்கிவரும் சிவானந்தன் தெரிவித்தார்.

மூன்று தலைமுறைகளாக கச்சாங் புத்தே தொழிலைக் கைவிடாமல் தொடரும் மூர்த்தி போன்றவர்களுக்குக் கைகொடுத்தால் இத்தொழில் தழைத்தோங்கும்.