செவ்வெளிச் சிறுநடை

ரமா சுரேஷ்

சிங்கப்பூர் மிகச்சிறியதுதான். ஆனாலும் சிங்கப்பூரில் வசிக்கத் தொடங்கிப் பதினெட்டு ஆண்டு ஓடிவிட்ட நிலையில் சிங்கப்பூரை முழுமையாகப் பார்த்துவிட்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மற்றவர்களைவிடப் பொதுவாக எழுத்தாளர்களுக்குத் தேடல் முனைப்பு சற்று அதிகம்.

நானும் எழுதத் துவங்கியதிலிருந்து நண்பர்களுடன் காடு, கல்லறை, கடல், வாழ்விடங்கள், வரலாற்று நினைவிடங்கள் எனச் சுற்றிவருகிறேன். கேலாங் சிவப்பு விளக்கு வட்டாரத்தையும் சுற்றிப்பார்க்கவேண்டும் என்று பேசிக்கொள்வோம். ஆனால் அது வெறும் பேச்சாகவே இருந்துவந்தது. படாதபாடு படுத்திய கொவிட் தொற்று விலகியபிறகு இவ்வாண்டின் தொடக்கத்தில் ஒரு வாய்ப்பு அமைந்தது.

கேலாங் சிவப்பு விளக்கு வட்டாரத்திற்கு ‘அங்கிள் க்ரிஸ்’ (Uncle Chris Walking Tours) வழிகாட்டு நடைப்பயணம் ஒன்று உள்ளது என அறிந்து நானும் தோழியும் பதிவு செய்துகொண்டோம். ஒரு வியாழன் இரவு ஏழு மணிக்கு அல்ஜூனிட் பெருவிரைவு நிலைய வாசலில் 32 பேர் கொண்ட குழு அங்கிள் க்ரிஸ்ஸின் வழிகாட்டுதலுடன் கேலாங் லோராங் 9க்குள் நுழைந்தபோது அங்கு ஆண்கள் கூட்டத்தின் சலசலப்பு அவ்வளவாக இல்லை. அது வாரநாள் என்பதாலோ?

நடைச் சுற்றுப்பயணத்தைப் பற்றிச் சொல்வதற்குமுன் எங்களுடைய வழிகாட்டி அங்கிள் க்ரிஸ் பற்றிச் சொல்லியாகவேண்டும். அங்கிள் கிரிஸுக்கு சிங்கப்பூரின் வரலாறும் சரி சந்துபொந்துகளும் சரி, அத்துபடி. சம்சுயி பெண்கள் முதல் சமகால சைனாடவுன் வரை அவர் நிறுவனத்தில் சுமார் இரண்டு மணிநேர சுற்றுப்பயணங்கள் பல உண்டு. நம் கன்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் சிங்கப்பூர்களைக் காட்டுவதில் அங்கிள் வல்லவர். இடத்துக்குத் தக்கபடி ஆள் மாறிவிடுவார் போலும். அன்று மன்மதனே இறங்கி நேரில் வந்ததைப்போல இருந்தார். ஒரு கண்ணில் சிரிப்பு, மறு கண்ணில் கிறக்கம்!

எண்பது வயது என்கிறார்; அவருடைய உரையாடல் கூர்மையைப் பார்த்தால் அப்படி நம்பமுடியவில்லை. கேலாங் லோராங் 9இல், தவளைக்கஞ்சியைக் காட்டி (frog porridge), “ருசித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்” என்றார் அங்கிள் க்ரிஸ். ஓர் இளையர் குசும்பாக, “தவளைக் கஞ்சிக்கும் தாதுவிருத்திக்கும் ஏதாவது தொடர்புண்டா?” என்றார். அங்கிள் கண்ணடித்தபடி, “தொடர்பிருந்தாலும் பலனில்லை. நீதான் கன்னிப்பையன் என்று ஆரம்பத்திலேயே கையைத் தூக்கிவிட்டாயே” என்றவுடன் அனைவரின் வெடிச்சிரிப்புடன் நடைப்பயணம் களைகட்டத் துவங்கியது.

தெரு முகப்பினில் ஒரு சிறு மேசையில் விதவிதமான மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்தனர். அம்மேசை சட்டத்தின் விளிம்புகளுக்கு உள்பக்கம் நிற்கிறதா வெளிப்பக்கம் நிற்கிறதா என்று தெரியவில்லை. அங்கிள் எங்களை அந்த மேசையின்முன் நிறுத்தி, “இந்த மாத்திரைகள் எல்லாம் ஆண்களுக்கு. முன்னேற்பாடு இல்லாமல் இவற்றைச் சாப்பிட்டால் பின்விளைவுகளைச் சந்திப்பீர்கள்” என்றார்.

பிறகு எங்கள் பக்கம் திரும்பிக் கண்சிமிட்டிச் சிரித்து, “உங்களுக்கும் உண்டு” என்று ஒரு சொட்டுமருந்து போத்தலைத் திறந்து காட்டி, “பயம் வேண்டாம். துணைக்கு நான் இருக்கிறேன்” என்று குழந்தையைப்போலக் கேவிக்கேவிச் சிரித்தார். இந்த மாத்திரைகளைப் பேரம் பேசினால் மிகக் குறைவான விலையில் வாங்கலாம் என்றவர், மேசைக்காரரிடம் ஒரு சொட்டுமருந்து போத்தலை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டார்.

கேலாங் சிவப்பு விளக்கு வட்டாரத்தையும் சுற்றிப்பார்க்கவேண்டும் என்று பேசிக்கொள்வோம். ஆனால் அது வெறும் பேச்சாகவே இருந்துவந்தது.

அடுத்ததாக, அழகும் இளமையும் ததும்பி வழிந்துக்கொண்டிருந்த பெண்ணுருவ பொம்மைகளின் கடையில் எங்களை நிறுத்தினார். அத்தனை பொம்மைகளும் பேரழகிகள். ஆனால் கடைக்காரர்கள் அந்தப் பொம்மைகளை தொட்டுப்பார்க்க அனுமதிக்கவில்லை. விலைபேசினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். நாங்கள் ஏமாற்றத்துடன் நகர்ந்து வந்தோம்.

நாங்கள் கும்பலாகப் பேசிச் சிரித்துக்கொண்டு நடந்துவருவதைப் பார்த்த அங்கிள், எங்களை நிறுத்தி, “இங்குள்ள உணவுக் கடைகளையும் பியர் கடைகளையும் ஊன்றிக் கவனித்தபடி வாருங்கள். பிறகு நான் கேள்வி கேட்பேன்” என்று சொல்லிவிட்டு முன்னே சென்றார். நாங்களும் அக்கடைகளை நோட்டமிட்டப்படி அவரைப் பின்தொடர்ந்தோம்.

“ம்.. சொல்லுங்கள் என்னவெல்லாம் பார்த்தீர்கள்?”

ஒரு குரல், “ஒரு தாத்தா மடியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்”. இன்னொரு குரல், “ஒரு தாத்தா ஒரு பெண்ணை அரவணைத்து அமர்ந்திருந்தார். மூன்றாம் குரல், “நாலைந்து தாத்தாக்களுக்கு நடுவே இரண்டு பெண்கள் இருந்தார்கள்”.

“குட்.. நன்றாகவே கவனித்து இருக்கிறீர்கள். ஆம், இந்தக் கடைக்கு முதியவர்கள்தான் அதிகம் வருவார்கள்” என்றவர், மற்றொரு ‘பியர் கார்டனு’க்கு அழைத்துச் சென்றார். அங்கே பலதரப்பட்ட வயதினரையும் பார்க்கமுடிந்தது. அப்போது அங்கிள் எங்களிடம், “இங்கு பியருடன் ‘மோட்டார்போட்டிங்’கும் உண்டு. தனிக்கட்டணம்” என்றார். நாங்கள் சுற்றும்முற்றும் பார்க்க, “நீங்கள் நினைப்பதுபோல இல்லை” என்று கண்சிமிட்டினார். கண்சிமிட்டிச் சிரிப்பதை அவர் முகம் இயல்பான ஒன்றாகவே வைத்திருந்தது.

‘ஹோட்டல் 81’ வழியாக வரும்போது அந்தச் சாலையில் நாங்கள் மட்டுமே இருந்தோம். பல விடுதிகளின் முகப்பு விளக்குகூட எரியவில்லை. பேய் பங்களாக்களைப்போல் காட்சியளித்தன. “எல்லோரும் உறங்கச் சென்றுவிட்டார்களோ?” என நான் தோழியின் காதைக்கடிக்க, அவள் கொவிட் காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை நினைவூட்டினாள். விடுதிகளுக்கு நடுவே குடியிருப்புகள் இருப்பதையும் ஆச்சரியமாகச் சுட்டிக்காட்டினாள்.

லோரோங் 12ஐ கடப்பதற்குமுன், “பாலியல் தொழிலுக்கு வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இருந்து பெண்கள் வருகின்றனர். இருபத்தியொரு வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ‘மஞ்சள் அட்டை’ என அழைக்கப்படும் அடையாள அட்டை உண்டு.

மாதம் ஒருமுறை பாலியல் நோய்த் தொற்றுக்கான மருத்துவச் சோதனையை செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் வசிப்பிடத்தை விட்டு அனுமதியில்லாமல் வெளியேறினால் அபராதம் விதிக்கப்படும். வாரத்தில் ஒருநாள் விடுப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்பாலியல் தொழிலாளர்கள் சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்ய அனுமதியில்லை” என்று கேள்விப்பட்டிராத பல தகவல்களை அடுக்கினார்.

தொடர்ந்த அங்கிள், “லோரோங் 4க்கும் 20க்கும் இடையிலுள்ள விடுதிகள் முன்கூறிய நாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் முகப்பில் CYGON என்று எழுதி இருந்தால் வியட்நாம், SAWADEE என்றால் தாய்லாந்து. இங்குள்ள விடுதிகள் மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றின் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல தொண்டூழிய அமைப்புகளும் இவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். இதே சாலையில்கூட அத்தகைய அமைப்புகள் உண்டு” என்று கோவையாகச் சொல்லிமுடித்தார்.

அத்தனை பொம்மைகளும் பேரழகிகள். ஆனால் கடைக்காரர்கள் அந்தப் பொம்மைகளை தொட்டுப்பார்க்க அனுமதிக்கவில்லை.

“நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனி நாம் தொடர்ந்து நடக்கலாம். பயணம் என்பது வெறுமே நடப்பது அல்ல. உங்களைச் சுற்றி கவனித்தபடி வாருங்கள். கல்லைப் பார்ப்பவனுக்கு நாய் தெரியாது, நாயைக் கண்டவனுக்குக் கல் தெரியாது. நான் சொல்வது புரிகிறதா பசங்களா?” என்று மீண்டும் கண்ணடித்துச் சிரித்தார்.

சிறிது தூரம் முன்னே சென்றவர் ஒருகணம் நின்று, “முக்கியமான ஒன்றைச் சொல்லத் தவறிவிட்டேன். இங்குள்ள விடுதிகளின் வரவேற்பு அறையில் மீன் தொட்டிகள் இருக்கும். அத்தொட்டிகளுக்குப் பின்னால்தான் பாலியல் தொழிலாளர்கள் நிற்பார்கள். வாடிக்கையாளர்கள் அவர்களை அங்கேதான் தேர்ந்தெடுப்பார்கள், பேரம் பேசுவார்கள். கவனித்தபடி வாருங்கள்” என்றவர் நடக்க ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்டிருந்த அவ்விடுதிகளில் பரபரப்பு இல்லை. சாலையிலும் மயான அமைதி. வண்ண விளக்குகள் அழுது வடிந்துகொண்டிருந்தன. காவல்துறை வண்டிகள் கடமை தவறாது சாலையில் குறுக்கும் நெடுக்குமாகத் தனித்து ஓடிக்கொண்டிருந்தன. விடுதிகளின் வாசலில் உடலோடு ஒட்டிய கறுப்பு பனியன் அணிந்த பாதுகாவலர்கள் அமர்ந்திருந்தனர். நல்ல உயரம், அதற்கேற்ற உடல்வாகு, உணர்ச்சிகாட்டா முகத்தோற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு விடுதியின்முன் பெண் காப்பாளர்கள் இருவர் இருந்தனர். நாங்கள் அச்சாலைகளில் பார்த்த பெண்கள் அவர்கள் மட்டுமே.

மீன் தொட்டிகளுக்குப் பின்னால் இருந்த பெண் தொழிலாளர்களை எங்களால் அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியவில்லை. எட்டிப் பார்க்க நினைத்தாலும் கறுப்பு பனியன்களின் பார்வைகள் பயமுறுத்தவே அமைதியாக நடையைக்கட்டினோம். வாடிக்கையாளர்கள் சிலர் ஒவ்வொரு விடுதியாகச் சென்று மீன் தொட்டிமுன் பேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேரம் படியாததாலோ என்னவோ அடுத்தடுத்த விடுதிகளுக்குச் சென்றனர்.

சுற்றுப்பயணம் முடிவுக்கு வருவதை நினைவூட்டும் வகையில் அங்கிள் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி 9:45 ஆகியிருந்தது. கண்களைப் படபடக்க விட்டவர், “இத்தனை விசயங்களைப் பார்த்து, கேட்டு, தெரிந்துகொண்டபின் நாம் வீட்டுக்குத்தான் போகவேண்டும் என்பதில்லை” என்றபோது அனைவரும் கைத்தட்டி நன்றி சொல்லி விடைபெற்றோம்.

உடற்சேர்க்கையின் இயற்கையான முக்கியத்துவம், பங்குகொள்வோரின் பரஸ்பரத் தூண்டல்கள், உடற்கலவி நிலைகள், தேவையான கவனங்கள் எனப் பல்வேறு அம்சங்களை இந்தச் சுற்றுலாவில் அங்கிள் பேசிக்கொண்டே இருந்தார். “ஆணும் பெண்ணும் தம் உடலைக்கொண்டு சொர்க்கத்தை பூமிக்கு இழுத்து வரலாம்” என்று ஒரு முத்தாய்ப்பு வைத்தார். அந்தக் கூட்டத்தில் முக்கால்வாசிப்பேர் இளையர்கள். பலர் தம் இணையரோடு வந்திருந்தனர். அங்கிள் பேசப்பேச அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர், சமயங்களில் முறைத்தும் பழிப்பு காட்டிக்கொண்டும் இருந்தனர்.

சுற்றுப்பயணம் முடித்து மீண்டும் பெருவிரைவு நிலையத்துக்குள் நுழைந்தபோது சிரிப்புகள் அடங்கி, வேடிக்கை மனநிலை மாறி, மனம் சற்றுக் கனத்திருந்தது.

சுற்றுப்பயணம் முடித்து மீண்டும் பெருவிரைவு நிலையத்துக்குள் நுழைந்தபோது சிரிப்புகள் அடங்கி, வேடிக்கை மனநிலை மாறி, மனம் சற்றுக் கனத்திருந்தது. ஏதேதோ எண்ணங்கள். “வேறுவழியின்றி சதைப்பிழைப்பைச் சரணடைந்து, துயரமான இப்பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கையும் வரலாறும் கவனிப்பாரின்றிக் காணாமற்போயின” என்ற ஏடலீன் ஃபூவின் சொற்கள் நினைவுக்கு வந்தன. ஏடலீன் சிங்கப்பூர் வரலாற்றில் பாலியல் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்த ஆய்வாளர்.

ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுத்தாளர்கள் பலர் புனைவாகவும் எழுதியிருக்கின்றனர். சமுதாயத்தின் இருள்மிக்க பகுதிகளுக்குள் உறைந்திருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வின்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் சக்தி எழுத்துக்கு இருக்கிறது. அவ்வெளிச்சம் அத்தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவுகிறதோ இல்லையோ, நிச்சயம் அவர்களைக் குறித்த நம் கண்ணோட்டங்களையாவது சற்று மாற்றக்கூடும்.