ஆப்பிளின் புதுவரவு

நித்திஷ் செந்தூர்

பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவான ஐபோன் 15 ரக திறன்பேசிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 12ஆம் தேதியன்று அறிமுகம் கண்டது. தரணியெங்கும் உள்ள ஐபோன் திறன்பேசிப் பிரியர்களின் கவனத்தை அது சுண்டியிழுத்தது. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் உட்பட உயர்நிலை ஐபோன் 15 பிரோ, ஐபோன் 15 பிரோ மெக்ஸ் ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டன.

புதுரகத் திறன்பேசிகளில் சில சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. USB-C வகை மின்னூட்டக் கம்பிவடம், துல்லியமான ஒளிப்படங்களை எடுக்கும் 48 மெகா பிக்சல் கேமரா, பிரகாசமான திரை, iOS 17 இயங்குதளம், டைட்டானியம் சட்டம், அழைப்புகளை அமைதிப்படுத்தும் ‘Mute’ பொத்தானுக்குப் பதிலாக ‘Action’ பொத்தான் முதலியவை அவற்றுள் சில. ரகத்தைப் பொறுத்து சிறப்பம்சங்கள் வேறுபடும். இதில் முக்கியமான மாற்றமாக USB-C வகை மின்னூட்டக் கம்பிவடங்கள் கருதப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம், இதற்கு முன்னர் அதன் திறன்பேசிகளை மின்னேற்றுவதற்கு தனித்துவமான Lightning கம்பிவடத்தைப் பயன்படுத்தியது.

முக்கியமான மாற்றமாக USB-C வகை மின்னூட்டக் கம்பிவடங்கள் கருதப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் 2024ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்துக் கைபேசித் தயாரிப்பாளர்களும் USB-C வகை மின்னேற்றக் கருவிக்கு மாறிவிடவேண்டும் என்ற விதிமுறையை விதித்துள்ளது. மற்ற பெரிய நிறுவனங்களான சாம்சங் (Samsung), மைகிரோசவ்ட் (Microsoft) முதலியவை USB-C வகை மின்னூட்டத்தை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் சேர்ந்துள்ளது.

தகவல்களை அனுப்பவும் திறன்பேசிக்கு மின்னேற்றவும் ஒரே கம்பிவடமாக USB-C திகழும். அதுமட்டுமின்றி, திறன்பேசிகளை இன்னும் வேகமாக மின்னேற்றலாம். ஒரே மாதிரியான மின்னேற்றக் கம்பிவடங்கள் வாயிலாக மின்னியல் பயன்பாட்டைச் சுலபமாக்குவது நோக்கம். வாடிக்கையாளர்கள் பணத்தைச் சேமிக்க முடிவதோடு அவர்களின் வாழ்க்கையும் எளிதாகும். மின்னேற்றக் கருவிகளின் மறுபயன்பாட்டை ஊக்குவிப்போடு மின்கழிவுகளையும் அது குறைக்க உதவும்.

முக்கியமான மாற்றமாக
USB-C வகை மின்னூட்டக் கம்பிவடங்கள் கருதப்படுகின்றன.

சிங்கப்பூரில் ஐபோன் 15 திறன்பேசிகளுக்கான முன்பதிவு சென்ற மாதம் 15 தேதியன்று தொடங்கியது. முன்பதிவிலேயே திறன்பேசிகள் விற்றுத்தீர்ந்தன. கடைகளில் விற்பனை செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஆரம்பித்தது. திறன்பேசிகளை வாங்குவதற்காக மட்டுமே பலர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர். குறிப்பாக வியட்நாம் நாட்டினர். அதில் ஒருசிலர் 30 விழுக்காடு ஆதாயத்தோடு திறன்பேசிகளைத் தாய்நாட்டில் விற்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

சூடுபிடித்துள்ள ஐபோன் 15 ரக திறன்பேசிகளின் விற்பனையில், திறன்பேசிகள் மிகவும் சூடாகிவிடுகின்றன என்ற பிரச்சினை அண்மையில் எழுந்துள்ளது. மின்னூட்டும்போது, இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஐபோன் 15 பிரோ பயனீட்டாளர்கள் இந்தக் குறைபாட்டை முன்வைக்கின்றனர். அதோடு டைட்டானியம் சட்டத்தில் கைரேகை, தூசி முதலியவை எளிதாகப் படிகிறது என்றும் இயங்குதளம் மெதுவாகச் செயல்படுகிறது என்றும் பயனீட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களை விரைவில் சீர்செய்யும் என நம்பலாம். என்னதான் இருந்தாலும் ஐபோன் ரகத் திறன்பேசிகளுக்கான மோகம் தணியவில்லை எனத் துணிந்து சொல்லலாம்.

உசாத்துணை

https://www.bbc.com/tamil/articles/ce7wpzz51jno
​​https://mothership.sg/2023/09/apples-iphone-15-spore-prices/
https://mothership.sg/2023/09/iphone-15-orchard/
https://www.bbc.com/news/technology-66778528
https://sea.mashable.com/tech/27227/iphone-15-reported-issues-are-piling-up-5-common-problems-were-hearing