சை. பீர் முகம்மது

ஓர் ஐக்கிய சக்தி

‘கனடா’ மூர்த்தி

அவுஸ்த்ரேலியாவிலிருந்து எழுத்தாளர் எஸ்.பொ. அழைத்தார். “எனது மலேசிய நண்பர் சை.பீர் முகம்மது ஒரு தொகுப்பை வெளியிடவிருக்கிறார். அதற்கு உன்னாலும் ஒரு காரியம் ஆகவேண்டும்” என்றார். எனக்குப் புதுமையாக இருந்தது.

எஸ்.பொ. தொடர்ந்தார். “புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொகுத்து ‘பனியும் பனையும்’ என்று ஒரு தொகுப்பு கொண்டுவந்தேனல்லவா.. அதைவிடச் சிறப்பாக மலேசிய எழுத்தாளரான பீர் முகம்மது ஒரு வேலை செய்திருக்கிறார். மலேசியாவின் 50 ஆண்டுகால இலக்கியப் படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். பதிப்பு வேலைகளுக்கு நான் உதவுகிறேன். தொகுப்பிற்கு ‘வேரும் வாழ்வும்’ என்று பெயரிட்டிருக்கிறோம். அந்தத் தலைப்புகூட நான் திட்டமிட்டிருக்கும் வேறொரு தொகுப்பிற்காக நான் யோசித்து வைத்திருந்த பெயர். இப்போது பீர் முகம்மதுக்காக அந்தத் தலைப்பை விட்டுத் தந்திருக்கிறேன்.”

“நான் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கோ.”

“பீர் முகம்மதுவின் இந்தத் தொகுப்பு ‘மலேசியாவை வளப்படுத்திய வேர்களின் வாழ்வு இது’ எனச் சொல்லும் படைப்புகளைக் கொண்டிருக்கிறது. அந்தப் பெருமையோடு வரும் இந்தத் தொகுப்பை வெளியிடுவதற்கு ஏற்றவர் யார் என்று யோசித்துப் பார்த்தோம். ஜெயகாந்தன் ஒருத்தர்தான் அதற்குப் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது. ஆனால் ஜெயகாந்தன் சம்மதிப்பாரா? சம்மதித்தாலும் மலேசியாவிற்கு வருவாரா? என்றெல்லாம் குழப்பமாக இருக்கிறது. ஆகவே எதற்கும் முதலில் ஒரு முறை நீ ஜெயகாந்தனைக் கேட்டுப்பார். ஆழம் பார். அவன் மறுக்க மாட்டான்..” என்றார். எஸ்.பொ. எப்போதுமே ஜெயகாந்தனை ஒருமையில்தான் குறிப்பிடுவார்.

பீர் முகம்மதுவின் இந்தத் தொகுப்பு ‘மலேசியாவை வளப்படுத்திய வேர்களின் வாழ்வு இது’ எனச் சொல்லும் படைப்புகளைக் கொண்டிருக்கிறது.

எஸ்.பொ. துணிச்சலாக தனித்துவமான கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்லும் தலைசிறந்த ஈழத்துப் படைப்பிலக்கியவாதி என்ற பெரும் மரியாதை உண்டு. தமிழகத்தில் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’போல எஸ்.பொ. எழுதிய ‘தீ’ ஈழ இலக்கியத்தில் ஒரு பிரளயத்தை உருவாக்கியது.

“இனிவரும் காலங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்தான் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பார்கள்” என்று எஸ்.பொ. ஒருமுறை சிங்கப்பூரில் வைத்துப் பிரகடனப்படுத்தியமை தமிழ் இலக்கிய உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. அவர் அதைப் பேசிய அதே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழக எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அம்பை, சிங்கப்பூரின் இலக்கிய விமர்சகர் அரவிந்தன் ஆகியோர் ஆட்சேபித்து எஸ்.பொ.வுடன் நேரடியாக மோதிக்கொண்ட நிகழ்ச்சியில் பார்வையாளனாக நானும் இருந்திருந்தேன்.

காலப்போக்கில் எஸ்.பொ. தனது அந்தக் கருத்தில் நெகிழ்வு கொண்டவராயிருந்தார். தனது அந்த அவதானத்தை எளிமைப்படுத்திப் புரியவைக்க அதை சினிமாவோடு இணைத்து உதாரணமாக்கி “தமிழகத்தின் இலக்கியப் போக்கானது – ஹாலிவூட் படங்கள்போல – பிரமாண்டமானதாகத் தெரியும். ஆனால் அதன் தரம் உலகப்பார்வையற்று கேள்விக்குறியாக இருக்கும். மாறாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உருவாகும் இலக்கியங்கள் – ஈரானிய படங்கள்போல – உள்ளார்ந்த தரத்துடனும், உலக தரிசனத்துடனும் அமையும்” என்று அதிரடியாக விளக்கினார். பெரும் விவாதத்துக்குரிய அவரது கருத்து ஒருபுறமிருக்க…

மலேசியா வருவதற்கு ஜே.கே. சம்மதிப்பாரா? என்ற குழப்பத்துடன் சரியான நேரம் பார்த்து ஜே.கே.வை அழைத்தேன். எஸ்.பொ. தெரிவித்தவற்றைத் தயங்கித் தயங்கிச் சொன்னேன். ஜே.கே. சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். எஸ்.பொ. கேட்கிறார் என்பதும் மலேசிய எழுத்தாளர்களின் தொகுப்பு என்பதும் அவரை நெகிழ வைத்திருக்கவேண்டும். “வருகிறேன் என்று சொல்லிவிடுங்கள். இன்ஷா அல்லா. ஆனால் எனக்கு மலேசியாவில் யாரையும் தெரியாது. அதனாலென்ன.. என்னை அவர்களுக்குத் தெரியும்தானே….” என்றவர் என்னிடம் “நீங்களும் வருவீர்கள்தானே..” என்றார். என்ன கேள்வி இது… கரும்பு தின்னக் கசக்குமா?

பீர் முகம்மதுவின் அழைப்பையேற்று 2000ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய மண்ணில் கால் வைத்தார் ஜே.கே. “வேரும் வாழ்வும்” தொகுப்பினை மலேசியாவின் பல பகுதிகளிலும் வெளியிட்டார். பீர் முகம்மது தனது காரை ஓட்ட நால்வர் அணியாக (ஜே.கே., ரெ.சண்முகம் கூடவே நான்) செல்வோம். காரில் பயணிக்கும்போதே பாட்டு, அரட்டை பின்னியெடுக்கும். நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் நாம் தங்கியிருந்த ஹோட்டலிலேயே ஜே.கே.யின் ‘சபை’ கூடும். மலேசியாவின் எழுத்தாளர்களில் பலரும் தேடி வந்து குழுமிவிடுவார்கள். உற்சாகப் பொழுது அதிகாலைவரை நீளும்.

பீர் முகம்மதுவின் அழைப்பையேற்று 2000ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய மண்ணில் கால் வைத்தார் ஜே.கே.

இரண்டு வருடங்களுக்கு முன்பு…

எனது கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. அழைத்தவர் நா.கோ. “ரொட்டி பரோட்டா கடைக்கு வருகிறீர்களா?” என்றார்.

அக்காலகட்டத்தில் ‘வாசகர் வட்டம்’ அமைப்பை சிங்கப்பூர் கவிஞர் ராஜசேகர் இலக்கிய விமர்சகர் அரவிந்தனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். வாசகர் வட்டத்தில் ஒருமுறை ஜெயகாந்தன் குறித்த ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். அதை கேள்விப்பட்டதும் எனது அந்தக் கட்டுரையை நா.கோ. கேட்டு வாங்கிக் கொண்டார்.

ரொட்டிப் பரோட்டா சந்திப்பின்போது கட்டுரையைப் படித்துவிட்டு வந்திருந்தார். “உங்கள் கட்டுரையை ஜே.கே.யிடம் காட்டினீர்களா?” என்றார். “அட.. போங்க ஸார்.. காட்டுவதற்குக் கூச்சமாக இருக்கிறது” என நான் நழுவ, “அடுத்த மாதம் சென்னை செல்லவிருக்கிறேன். ஜே.கே.யை சந்திக்கலாம் என்றிருக்கிறேன். அந்தக் கட்டுரையை தாருங்கள். நானே அதை ஜே.கே.யிடம் தந்துவிடப்போகிறேன்.” என்று அடம் பிடித்து..

அவர் சென்னை கிளம்புவதற்கு முதல்நாள் இருவரும் சந்தித்தோம். நான் அச்சிட்டு வைத்திருந்த கட்டுரையை மறக்காமல் வாங்கிக் கொண்டார். சென்னையிலிருந்து திரும்பிய பின்னர், பல திட்டங்களைப் பேசினோம். ஜே.கே.யை சிங்கப்பூருக்கு அழைப்பது அதில் ஒன்று. ஆனால் எதிர்பாராதவிதமாக மே 26 1999 நா.கோ. தனது 52ஆம் வயதில் மறைந்து போனார்.

ஒரு வருடம் கழித்து…

இப்போது உதுமான் கனியோடு அமர்ந்திருக்கிறேன். “தலைவரே.. இன்னும் இரண்டு வாரத்தில் நா.கோ. மறைந்து ஓராண்டு நிறைகிறது. அவர் மறைந்த முதலாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் ஏதாவது செய்வோமா?” என்றேன். கனி திகைத்துப் போனார். ஒரு வருடம் ஒடிவிட்டதா?

குறைந்தபட்சம் ஒரு நினைவுக் கூட்டத்தையாவது ஒழுங்கமைப்போம் என்ற ஒருமித்த முடிவுக்கு இருவரும் வந்தோம். சிறப்புரை ஆற்ற ஜெயகாந்தனை அழைக்கலாமே என்றும் தீர்மானித்தோம். ஜெயகாந்தனை அழைத்தேன். எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடனே ‘சரி’ என்று சொல்லிவிட்டார்.

பயண ஒழுங்குகளை உதுமான் கனி செய்தார். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் அந்த நிகழ்வை நடத்த அதன் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் ஒப்புதல் தந்தார். நா.கோ. நினைவரங்கில் தான் பேசப்போகும் உரைக்கான தலைப்பினை எங்களையே முடிவு செய்து தரச்சொல்லி விட்டார் ஜே.கே. தலைப்பினை இறுதி செய்ய ஒருமுறை அழைத்தபோது ஜே.கே., அவராகவே “மலேசியாவிலிருந்து பீர் முகம்மதுவையும் அழையுங்களேன்.. அவரும் வரட்டுமே.. பேசட்டுமே..” என்று வினயமாக வேண்டிக் கொண்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டோம்.

ஜே.கே., அவராகவே “மலேசியாவிலிருந்து
பீர் முகம்மதுவையும் அழையுங்களேன்..
அவரும் வரட்டுமே.. பேசட்டுமே..” என்று வினயமாக வேண்டிக் கொண்டார்.

அது 2000ஆம் ஆண்டு, மே 27. நா.கோ. அரங்கு. உதுமான் கனி நிகழ்ச்சியை தொகுத்துத் தந்தார். வரவேற்புரை ஹரிகிருஷ்ணன் ஆற்றினார். பீர் முகம்மது உணர்ச்சி மயமாகி நா.கோ.வின் பணிகளைப் புகழ்ந்து, “மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் கலாச்சாரப் பாலம் அமைத்திட வேண்டும்” என்றார். அருண் மகிழ்நன் – எப்போதும் பேசுவதுபோல – தனது இனிய தமிழில் தெளிவாக நம் முன்னேயிருக்கும் கடமைகளை நினைவூட்டி, நா.கோ. எப்படி நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்தார் என்பதை விதந்துரைத்தார்.

ஓர் இலக்கிய அத்தியாயத்தின் நிறைவு

பொன் சுந்தரராசு

மலேசியாவின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகிய சை.பீர் முகம்மது கடந்த 26.09.23 செவ்வாய்க்கிழமை காலையில் மலேசியாவில் தமது 82ஆவது அகவையில் காலமானார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தது பலரும் அறிந்தது என்றாலும் அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகில் பேரதிர்வை ஏற்படுத்தியது.

‘‘இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மலேசிய இலக்கியத்திற்குத் தமது படைப்புகள் மூலம் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தவர்,’’ என்று ‘வணக்கம் மலேசியா’ தனது இரங்கலைத் தெரிவித்தது.‘‘தொண்ணூறுகளுக்குப் பின்னர் மலேசியாவில் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் பீர் முகம்மது, சிங்கப்பூர் – மலேசிய இலக்கிய உறவுகளை வளர்ப்பதில் 1990களில் துடிப்போடு செயலாற்றியவர்’’ என்றது தமிழ்முரசு.

‘‘மிக வலுவான கதைக்களம், கதாபாத்திரங்கள்வழி எழுத்தாளர் சை.பீர்முகம்மது எளிய மக்களின் பார்வையிலிருந்து மலாயா வரலாற்றில் சில முக்கியமான தருணங்களையும் அதில் ஊடாடிய அவர்தம் வாழ்வையும் காட்டியிருக்கிறார். ஊடே, மானுட வாழ்வு குறித்த தரிசனத்தையும் வாசகனுக்கு சாத்தியமாக்கியிருப்பது இந்நாவலின் வெற்றி.’’ – ஒலிப்பேழை விஜயலட்சுமி (அக்கினி வளையங்கள் புதினத்தின் முன்னுரையிலிருந்து)

பீர் முகம்மது சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், பிற படைப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பயணம் செய்தவர். அப்படைப்புகளுக்காகப் பரிசுசுகளும் பட்டங்களும் பெற்றவர். அவரை ஒருமுறை சிங்கப்பூரில் சந்தித்திருக்கிறேன். ‘‘நிறையப் படியுங்கள். ஆய்ந்து சிந்தனை செய்யுங்கள். அயராமல் எழுதுங்கள். சமூகத்திற்கும் உங்களால் ஆன பங்களிப்பைச் செய்யுங்கள்,’’ என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார். அதனை ஆக்கப்பூர்வமான அறிவுரையாக நான் ஏற்றுக் கொண்டேன்.

கனத்த இதயத்தோடு சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சார்பாகவும் தமிழ் மக்களின் சார்பாகவும் அன்னார் ஆன்மா நிறைவுபெற அஞ்சலி செலுத்துகிறேன்.

பின்னர் ‘உலகப் பொது மனிதன்’ என்ற தலைப்பில் ஜே.கே. பேசினார். நா.கோ.விற்கான அஞ்சலியாக தனது பேச்சை ஆரம்பித்து ஆழ்ந்த கருத்துக்களை முத்துக்கள் சிதறுவதுபோல சிந்தினார். அந்த உரை பல கோணங்களில் மனதுக்கு நெருக்கமானதாய் அமைந்திருந்தது.

மேலும் இரண்டு தினங்கள் ஜே.கே., பீர் முகம்மது இருவரும் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்கள். ரெ.சண்முகமும் இணைந்துகொண்டார். நானும் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு அவர்களோடே தங்கிக் கொண்டேன். இடையிடையே உதுமான் கனி வருவார். வேறு யாரையும் சந்திப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒருமுறை அருண் மகிழ்நன் அழைப்பின்பேரில் அவரது வீட்டிற்கு இரவு விருந்துக்குச் சென்று திரும்பினார்கள். மற்றபடி ஒரே கும்மாளம்தான். இடையிடையே மூவரும் பாடுவார்கள். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். அற்புதமான நினைவுகள் அவை.

அனுமாஸ்ய சக்தி, மந்திரம் போன்றவற்றில் பீர் முகமதுவிற்கு நம்பிக்கை உண்டுபோலும். இதுகுறித்து பேச்சுக்கள் தொடர்ந்தன. ‘அண்டம்’, ‘பிரபஞ்சம்’, அந்தப் பிரபஞ்சத்தில் ‘மனிதர்களான நமது வகிபாகம்’ என பலவற்றையும் தத்துவஞானி நிலை கொண்டு ஜே.கே. ‘பிரசங்கம்’ செய்ய ஆரம்பித்தார். நாம் மூவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

அனுமாஸ்ய சக்தி, மந்திரம் போன்றவற்றில்
பீர் முகமதுவிற்கு நம்பிக்கை உண்டுபோலும். இதுகுறித்து பேச்சுக்கள் தொடர்ந்தன.

சஹ்ருதயருக்கான சபையில் ஜே.கே. ‘பிரசங்கம்’ செய்யும்போது நான் வேண்டுமென்றே இடக்கு முடக்காக சில கேள்விளை எடுத்துவிடுவேன். அன்று அப்படி கேட்ட ஒன்றை இப்போது சொல்லவேண்டும். “பீர் முகம்மது ஸாரே… யாரையுமே தனிப்பட்டு புகழாத ஜே.கே. அன்று நா.கோ. குறித்த உரையில் உங்களையும் பகிரங்கமாக மேடையில் வைத்துப் புகழ்ந்தாரே… என்ன மாயம் அது?” என்றேன். அது தன்னிடம் கேட்கப்பட்டதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, “காரணத்தை எனது பேச்சில் தெளிவாகச் சொல்லியிருந்தேனே..” என்று சிரித்தார் ஜே.கே.


இதுவரை நான் ‘நா.கோ.’ என்ற நா.கோவிந்தசாமி (சிங்கை), ‘எஸ்.பொ.’ என்ற எஸ்.பொன்னுத்துரை (ஈழம்), ‘ஜே.கே.’ என்ற ஜெயகாந்தன் (தமிழகம்) இவர்களைத்தான் ‘ஐக்கியப்படுத்துகிற சக்தி’ வாய்க்கப்பெற்ற உலகப் பொது மனிதர்களாக நினைப்பதுண்டு. ஆனால் நா.கோ. அரங்கில் அன்று ‘மலேசியர்’ ஒருவரையும் நமக்கு ஜெயகாந்தன் அடையாளம் காட்டிச் சென்றார். அந்த மலேசியர் பீர் முகம்மது.

சிந்தித்துப் பார்க்கும்போது, 50 ஆண்டுகால மலேசிய இலக்கியப் பயணத்தைச் சொல்லும் ‘வேரும் வாழ்வும்’ தொகுப்பு மட்டுமல்ல, பீர் முகம்மதுவின் ‘வேரும்’ அவரது ‘வாழ்வும்’தான் அந்த அங்கீகாரத்தை ஜே.கே.யிடமிருந்து அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அன்று ஜே.கே. பேசி அடையாளம் காட்டிய அந்தப் பகுதியை மட்டும் கீழே தருகிறேன்:

‘வேரும் வாழ்வும்’ தொகுப்பு மட்டுமல்ல, பீர் முகம்மதுவின் ‘வேரும்’ அவரது ‘வாழ்வும்’தான் அந்த அங்கீகாரத்தை ஜே.கே.யிடமிருந்து அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

“அந்த முயற்சி எனக்கு நான் செய்ய வேண்டியதுபோல இருந்தது… இந்தமாதிரி ஒரு முயற்சியை செய்கிறவர் காலத்தை ஒன்றுபடுத்துகிறார்கள். நம் காலத்தில் இருப்பவர்களை மட்டுமல்ல… நமக்கு முன்னால் இருந்தவர்களையும், இப்போது இருப்பவர்களையும், ஏன் அடுத்து வருகிற எதிர்கால இளைஞர்களையும் ஒன்றுபடுத்துகிற ஒரு பெரும் முயற்சி இது என்ற எண்ணம் எனக்கு அவர்பால் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் பீர் முகம்மதுவுடைய கதைகளை விடவும் அவரது கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அவரின் உள்ளம் அதிலே தெரிகிறது. இவர் ஒரு ஐக்கியப்படுத்துகிற சக்தி!”