கவிதை-காண்-காதை-17

0
249

வெளியில் ஒருவர்

கணேஷ் பாபு

சிவப்பிரகாசம் சாரைப் பார்த்தாலே மனதில் இன்னதென்று தெரியாததொரு மகிழ்ச்சி மலரும். மற்ற ஆசிரியர்களைப் போல இல்லை அவர். பாகற்காயின் ஒரு துண்டை வாயில் அதக்கிக் கொண்டவர்களைப் போலத்தான் பிற ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவார்கள். முகத்தை அவ்வளவு இறுக்கமாக வைத்திருக்க எங்கிருந்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டார்களோ தெரியாது.

செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைவதைப் போல சிரிப்பைக் கழற்றிவைத்து விட்டுத்தான் வகுப்பறைக்குள் நுழைவார்கள். சிறுவர்கள் நிறைந்திருக்கும் வகுப்பறையை ஒரு ராணுவ முகாமாக மாற்றி வைக்கத் தெரிந்தவர்கள் இவர்கள். துளையில்லாத மூங்கிலில் இசை பிறக்க வாய்ப்பில்லை என்பது போல, இப்படிப்பட்டவர்களின் வாயிலாக அறிவு எங்கே மலரப்போகிறது என்று இன்றும் நினைக்க வைக்கிறார்கள்.

ஆனாலும், உலகம் முற்றிலுமாக இருண்டு விடாது. எங்கேனும் ஒரு புள்ளியிலாவது வெளிச்சம் இருந்தே தீரவேண்டும். அப்படியொரு வெளிச்சத்தை ஏந்தி வந்தவர்தான் சிவப்பிரகாசம் சார். பிற ஆசிரியர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டுவது இவரது சிரிப்பில் ஊறிய முகம்தான். எப்போதுமே பசுமையைச் சுமந்திருக்கும் இலையைப் போல இவரது முகத்தில் நிரந்தரமாக சிரிப்பு தங்கியிருக்கும். இவர் வந்துவிட்டால் ராணுவ முகாம் மீண்டும் வகுப்பாகி விடும். கோயில் கருவறையின் முன்னே கூட்டத்தில் புழுங்கித் தவிக்கும்போது, எங்கிருந்தோ ஒரு சிறு இடைவெளியின் வழியே குளிர்ந்த காற்று வீசுவதைப் போல, எங்களுக்கு மாபெரும் நிம்மதியை வழங்குபவர் சிவப்பிரகாசம் சார்.

கூட்டத்தில் புழுங்கித் தவிக்கும்போது, எங்கிருந்தோ ஒரு சிறு இடைவெளியின் வழியே குளிர்ந்த காற்று வீசுவதைப் போல, எங்களுக்கு மாபெரும் நிம்மதியை வழங்குபவர் சிவப்பிரகாசம் சார்.

உயரமும் அகலமும் சரிசமமாக உள்ள வலிமையான தோற்றம். கண்களில் ததும்பி நிற்கும் அன்பின் ஈரம். வெள்ளை நிறச் சட்டையும் வேட்டியும் மட்டுமே அணிபவர். ஒருநாளும் அவர் கைகளில் மணிப்பிரம்பை நாங்கள் பார்த்ததில்லை. மாணவர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்து வைத்திருப்பார். அறிவியல் ஆசிரியர் அவர். ஆனால், ஏதாவது ஒரு கதையில் இருந்தோ அல்லது திருக்குறளில் இருந்தோ வகுப்பைத் துவங்குவார். அல்லது அவரது வாழ்வில் நேர்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்வார். அதுவரை எங்கள் முகத்தில் அப்பியிருந்த சவக்களை மறைந்து மெல்ல உயிர் ஊறத் துவங்கும். சதுரங்கக் காய்களாய் உறைந்திருந்த நாங்கள், கேரம் போர்டு காய்களாக மாறத் துவங்கி விடுவோம்.

ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் விமானம், சட்டென வேகமெடுத்து வானில் பறப்பதைப் போல, அறியமுடியாததொரு வினாடியில் கதையிலிருந்து பாடத்துக்கு தாவிவிடுவார். அந்த மாயம் மிக இயல்பாக நடந்து முடிந்துவிடும். கேள்விகளைக் கேட்டு பதில்களை எங்களிடமிருந்து எப்படியாவது உருவிவிடுவார். ஒவ்வொருவரும் தோராயமாக எதையாவது சொல்லத் துவங்குவோம். நாங்கள் சொன்ன பதில்களில் இருந்து மீண்டும் கேள்விகள் கேட்பார். அதற்கு பதில் சொல்லத் துவங்குவோம்.

கால்பந்து வீரன் பந்தை மெதுவாக தட்டித் தட்டிச் சென்று சட்டென ஒரு கணத்தில் கோல்கம்பத்துக்குள் செலுத்திவிடுவதைப் போல, குறுக்குக் கேள்விகள் வழியாகவே எங்களை நகர்த்தி ஒரு கட்டத்தில் சரியான பதிலைச் சொல்ல வைத்து விடுவார். இந்த முறையில் அவர் கற்பிக்கும் எதுவும் எங்கள் நினைவை விட்டு நீங்காது. பள்ளிக்கு வெளியேயுள்ள உலகத்தையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அவர். பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள் என ஆர்வமுள்ள மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளுக்கும் அழைத்துச் செல்வார்.
மாணவர்கள் மனதில் நிறைந்திருந்த சிவப்பிரகாசம் சாரின் செல்வாக்கைச் சக ஆசிரியப் பெருந்தகைகளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. காற்றில்லாத இடத்திலும் அரசியல் நுழைந்துவிடும். பள்ளியில் அது நுழைவது வியப்புக்குரியதல்ல. அவருக்கும் சக ஆசிரியர்களுக்கும் இடையே எழுந்த இந்த இடைவெளி மாணவர்களாகிய நாங்களே உணர்ந்து கொள்ளுமளவு விரிந்திருந்தது. ஆனால், விரைவுப் பேருந்தின் சாளரத்தின் வழியே விரைந்து மறையும் மரங்கள் போல நாட்கள் மறைந்து போயின. நாங்களும் பள்ளிப்பருவம் கடந்து வெவ்வேறு நீர்நிலைகளில் எங்களுக்கான மீனைத் தேடும் பயணத்தில் கடந்த காலத்தை மறந்துவிட்டோம்.

எனக்கே சிவப்பிரகாசம் சாரின் வயது வந்த பின்னர்தான் மீண்டும் அவரைப் பார்க்க முடிந்தது. சமீபத்தில் சந்தித்த பள்ளி நண்பனின் மூலமாகத்தான் அவரது தற்போதைய நிலையை அறிய முடிந்தது. நானும் நண்பனும் அவரைச் சந்திக்கக் கிளம்பினோம். அவர் இப்போது வசிப்பது எங்கள் ஊரில் அல்ல. திருவண்ணாமலையில். அலைந்து திரியும் துறவியாக மாறிவிட்ட அவரை, கிரிவலம் செல்வதற்காக எங்கள் ஊரில் இருந்து சென்றவர்கள் தற்செயலாகப் பார்த்திருக்கிறார்கள். துறவியாக இருந்தாலும், தெரிந்தவர்கள், நண்பர்கள் வந்து சந்திக்கும்போது அவர் தனது அடையாளத்தை மறைப்பதில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சட்டென நகர்ந்துவிடுவார் என்றான் நண்பன்.

பிற ஆசிரியர்கள் அவரைத் திட்டமிட்டு கட்டம் கட்டி வெளியேற்றிவிட்டனர் என்றான் நண்பன். அடுத்த தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கவிருந்த சிவப்பிரகாசம் சாரை, பள்ளிக்கு வந்த நிதியை சொந்தச் செலவிற்கு உபயோகித்து கையாடல் செய்து விட்டார் என்ற களங்கத்தைக் கற்பித்து விட்டார்கள். மாணவர்கள் அவருக்குத் துணையாக நின்றபோதும், அவர்களின் ஆதரவைப் பெற மறுத்துவிட்டார்.

தனது பிரச்சனையில் மாணவர்கள் தலையிடக்கூடாது என்று ஆணையிட்டு விட்டார். தொடர்ந்த போராட்டத்துக்குப் பின்னர் தன்னை நிரபராதி என்று நிரூபித்து விட்டாலும், ஊரில் அவர் மீது விழுந்த கெட்ட பெயர் முழுக்க மறையவில்லை. ஊர் வாயை மூடுவது எவருக்கும் சாத்தியமானதில்லை என்பதால், மெல்ல மெல்ல அவர் தனக்குள் ஒடுங்கிக் கொண்டார். விருப்ப ஓய்வும் பெற்றுக்கொண்டார். வீட்டிலும் பல குழப்பங்கள், தொடர் மரணங்கள். எது அவரைத் துறவு பூணத் துரத்தியது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.

ஊர் வாயை மூடுவது எவருக்கும் சாத்தியமானதில்லை என்பதால், மெல்ல மெல்ல அவர் தனக்குள் ஒடுங்கிக் கொண்டார். விருப்ப ஓய்வும் பெற்றுக்கொண்டார்.

மாலை மங்கி வரும் சாம்பல் நிற வெளிச்சத்தில் இப்போது சிவப்பிரகாசம் சாரைப் பார்க்கிறோம். சற்றே கூன் விழுந்த தோற்றம். நரை முடியும், தாடியும். காவி நிற வேட்டி அணிந்திருந்தார். மேலுடம்பில் காவித் துண்டைச் சுற்றியிருந்தார். என்ன பேசுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.

“நான் சாமியார் இல்லப்பா. அதெல்லாம் பெரிய வார்த்தை. நான் ஏதோ இந்த இடத்துக்கு வந்து எம்பாட்டில அமைதியா இருக்கேன். என்ன நானே உள்முகமாப் பாத்துக்குறதுக்கு இந்த இடமும், சூழலும் உதவி செய்யுது. சில விஷயங்களப் புரிஞ்சுக்குறதுக்கு அதுக்கு வெளில வர வேண்டியிருக்கு. அதுக்குள்ளேயே இருந்தா மேலும் மேலும் குழப்பம்தான் மிஞ்சும். இங்கிருந்து பார்த்தா லௌகீக வாழ்க்கையும் உலகமும் சின்னச் சின்னப் புள்ளிகளாத் தெரியுது. அந்தப் பக்கம் இருந்தப்போ இந்த புள்ளி ஒவ்வொன்ணும் உலக உருண்டை மாதிரி பெருசா தெரிஞ்சுது. இந்தப் பக்கமிருந்து யோசிச்சுப் பார்த்தா மீண்டும் அந்தப் பக்கத்துக்கு வந்து, நாலு சுவத்துக்குள்ள அடைபட வேண்டாம்னு தோணுது” என்றார். அவர் பேசப் பேச அவரையே வியந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

“டீ சாப்பிடுறீங்களா சார்?” என்றேன். “சாப்பிடலாமே” என்றபடி எங்களுடன் டீக்கடைக்கு வந்தார். சட்டென தெருமுக்கில் பக்தர்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வந்தது. எதிர்பாராததொரு தருணத்தில் சிவப்பிரகாசம் சார், அவர்களுடன் கலந்து மறைந்து விட்டிருந்தார். “எங்கடா அவர?” என்று நான் அலைபாய்ந்தபடியே அவரைத் தேடப் புறப்பட்டேன். என் தோள் பிடித்து நிறுத்தினான் நண்பன். “பறவ பறந்திருச்சு, தேடிப் பிரயோஜனமில்ல, சரி வா. நாம டீ சாப்பிடுவோம்” என்றான்.

ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

தேவதேவன்

தேவதேவனின் இக்கவிதையை வாசிக்கையில் சிவப்பிரகாசம் சாரின் நினைவு மனதில் எழும்பியது. என் வாழ்வில் நான் பார்த்த குருவி அவர். மரணமற்ற பெருவெளிக் கடலின் ருசியை அறிந்துவிட்டவரால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பி, ஓட்டுக் கூரையின் கீழ் உள் அறைகளெங்கும் நிரம்பியிருக்கும் சிரிப்பிலும் அழுகையிலும் மரணத்திலும் பங்கு கொள்ள முடியாதுதான் போலும்.