சிங்கப்பூரில் சிப்பாய்க்கிளர்ச்சி

0
197

சிங்கப்பூரிலிருந்த சிப்பாய்கள் 1915இல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நடத்திய கிளர்ச்சி குருதியில் தோய்ந்தது. அதற்காக ஒரு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருந்த கிளர்ச்சிக்காரர்களின் இறுதிக் கணங்கள் பற்றிய கட்டுரை. கடந்த இதழில் (செப்டம்பர் 2023) முதல் பகுதி வெளியானது, இறுதிப்பகுதி இங்கே.

மஹேஷ் குமார்

ஒரு படைப்பிரிவில் உள்ளவர்களின் எண்ணங்கள் தாறுமாறாக ஓடி, சிப்பாய்கள் சிலர் தாங்களாகவே சதி இப்படி நடந்திருக்கலாம்; அப்படி நடந்திருக்கலாம் என்று கற்பனை செய்துகொண்டனர். அப்படிக் கற்பனை செய்ய ஏதுவாகச் சில நிகழ்வுகளும் நடந்தன. கட்டுப்பாடே தலையாயது என்றிருந்த அவர்கள் மனங்களில் குழப்பங்கள் மிகுந்து அயற்சியை அளித்தன. அவர்கள் சிங்கப்பூரிலிருந்து, துருக்கியர்களை – சக முஸ்லீம்களை – கொல்வதற்காக அனுப்பப்பட்டனர். உண்மை ஒன்றேதான் என்னும் நம்பிக்கையோடு இது மிகவும் முரண்பட்டது. தாங்கள் பயணம் செய்யப்போகும் கப்பல் போகும் வழியில் மூழ்கடிக்கப்படும் என்றெல்லாம்கூட அஞ்சினர். சிப்பாய் ஷேக் முகம்மது, தன் குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில், ராஜபுதன இந்துக்களின் மறுபிறவி, புத்துயிர்ப்பு போன்ற எண்ணங்கள் வெளிப்பட்டன.

“பிப்ரவரி 20 அன்று படைப்பிரிவு இடமாற்றம் என்பது உறுதியானது என்பதை பெருமூச்சுடனும், அழுகையுடனும், துக்கத்துடனும், துயரத்துடனும் சொல்கிறேன். அது ஹாங்காங் செல்லும். ஆனால் இது போருக்குப் போகிறதா என்று தெரியவில்லை. என்ன விதமான இன்னல்களை நாங்கள் சந்திக்கவேண்டியிருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இது எதற்கான போர்? உயிரோடு திரும்பும் சாத்தியமே இல்லாத இது கடவுளின் தண்டனை. போய் உயிருடன் திரும்பினால் கடவுள் நமக்கு மறுபிறவி கொடுத்தாற்போலத்தான். மிகவும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மொத்தப் படையுமே சோகத்தில் மூழ்கியுள்ளது”

முன்னாள் அதிகரிகளான இரு கான்களும் இப்போது சிறைச்சுவருக்கு முதுகைக் காட்டி நின்றபடி தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். சம்பிரதாயமான உரைகள் தொடர்ந்தன. வைஸ்ராயால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளான கான் போன்றவர்களுக்கு தேசத் துரோகப் பேச்சுக்களை அனுமதிக்கக்கூடாது என்பது நன்றாகவே தெரிந்திருக்கவேண்டும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்கும் பணியில் அவர்கள் தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள். சிப்பாய்களாகப் படையில் சேர்ந்து, நன்கு பணியாற்றி, பதவி உயர்வுகள் பெற்ற அவர்களுக்குக் கேள்வி கேட்பதற்காகப் பயிற்சி அளிக்கப்படவில்லை; செய்யவேண்டும் அல்லது செத்து மடியவேண்டும்.

அவர்களுக்குக் கேள்வி கேட்பதற்காகப் பயிற்சி அளிக்கப்படவில்லை; செய்யவேண்டும் அல்லது செத்து மடியவேண்டும்.

பருமனாக இருந்த டுண்டே ஒரு ஆட்சேர்ப்பு அதிகாரி போலவே இல்லை. ஒரு ராஜபுதன வீரனைப் போல காதில் வளையங்கள் அணிந்து ஒரு உல்லாசப் பேர்வழி போலத் தோற்றமளித்தார். போலவே ஓர் அதிகாரியிடம் எதிர்பார்க்காத சில வித்தியாசமான திறமைகளும் கொண்டிருந்தார். அன்றைய பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த குர்காவ்ன் நகருக்கு அருகில் இருந்த அவரது ஊரான பஜ்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டவர்.

ஊட்ரம் ரோடு சிறைச்சாலையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பகிரங்கமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர் (மார்ச், 1915)

டுண்டே பாடல்கள் பாடியும் இசைக் கருவிகள் இசைத்தும் தனது படையினருக்கு உற்சாகமூட்டி மகிழ்வித்து வந்தவர். அவரது ஊர் யமுனை நதிக்கரையில் மாடுகள் மேய்த்ததாகக் கருதப்படும் கிருஷ்ணரின் ஊரான மதுராவுக்கும் தில்லிக்கும் இடையில் இருந்தது. அங்கே எல்லோருமே பாடல், கவிதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். அடோடு ‘பாங்’ எனப்படும் ஒருவகை போதை அளிக்கும் தாவரத்தின் இலைகளையும் பாவிப்பவர்கள். இந்தியாவின் ஹிப்பிக்கள் என்றும் சொல்லலாம்.

சிங்கப்பூரில் டுண்டேவை வேறு சில விஷயங்களும் ஈர்த்தன. ச்சிஸ்தே கானுடன் சேர்ந்து, சிங்கப்பூரில் இருந்த செல்வந்தரான வியாபாரி காசிம் இஸ்மாயில் மன்ஸூருடன் தொடர்பில் இருந்தார். மும்பையிலிருந்து வந்திருந்த குஜராத் முஸ்லீமான காசிம், தேசத்துரோக செயல்களில் ஆழ்ந்திருந்தவர். 65 வயது காசிம், அதிகாரிகளும் சிப்பாய்களும் கூடுவதற்காக பாசிர் பஞ்சாங்கிலிருந்த தனது பங்களாவை வார இறுதிகளில் திறந்து வைத்திருந்தார்.

நூர் ஆலம் ஷா என்ற ஒரு புதிரான நபரின் சீடராக விளங்கியவர் ச்சிஸ்தே கான். இந்த நூர் ஆலம் ஒரு சூஃபியைப் போன்ற ஆனால் மர்மமான பரப்புரையாளராக தன்னைப் பின்பற்றி வழிபடும் ஓர் இந்திய, மலாய் முஸ்லீம்களின் குழுவை வைத்திருந்தவர். கம்புங் ஜாவா ரோட்டில் இருந்த தனது மசூதியில் இருந்துகொண்டு பொறிபறக்கும் தீவிர உரைகளை ஆற்றியவர். இதே தெருவில் இருந்த ஒரு வீட்டில்தான் சில வருடங்களுக்குப் பிறகு லீ குவான் யூ பிறந்தார்.

முதல் உலகப்போர் ஒரு மூர்க்கத்தனமான மோதலாக மாறி, பலரின் மரணங்களைக் கண்டபோது நூர் ஆலம் ஷா சில உறுத்தும் கேள்விகளை சிப்பாய்களின் மனத்தில் விதைத்தார். அவர்களின் நன்றியுணர்வு யாருக்கானது? எந்த கைஸருக்கு அல்லது எந்த பேரரசருக்கானது? (அதாவது ஜெர்மனிக்கா அல்லது பிரிட்டிஷாருக்கா?) கவர்ச்சியான பேச்சுத்திறன் கொண்ட ச்சிஸ்தேவும் தன் பங்குக்கு தன்னவர்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு அலை எழுவதாக நம்பும் வகையில் பேசினார்.

முதல் உலகப்போர் ஒரு மூர்க்கத்தனமான மோதலாக மாறி, பலரின் மரணங்களைக் கண்டபோது நூர் ஆலம் ஷா சில உறுத்தும் கேள்விகளை சிப்பாய்களின் மனத்தில் விதைத்தார்.
சிப்பாய்களிடம் அனுதாபம் கொண்டவர் என்று சக பிரிட்டிஷ் அதிகாரிகளால் கருதப்பட்ட அதிகாரி கேப்டன் மொய்ரா ஃபிரான்சிஸ் ஆலன் (வலமிருந்து 7வது). கிளர்ச்சியில் படையின் தளபதிகளுடன் மொய்ராவும் கொல்லப்பட்டார்.

பெரும்பாலும் படிப்பறிவற்ற சிப்பாய்களால் குழப்பத்துடன் புரிந்துகொள்ளப்பட்ட அந்தச் செய்தி, கிளர்ச்சி தொடங்கிய அன்று அபாயகரமான பொய்ச்செய்திகளை லான்ஸ் நாயக் ஃபதேஹ் முஹமது தன் தந்தையோடு பகிர்ந்துகொள்ளும் எல்லை வரை சென்றது.

“நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரிக்கிறது. ஜெர்மானியர்கள் முகமதியர்களாக மாறிவிட்டனர். ஹாஜி முகமது வில்லியம் கைஸரின் மகள் துருக்கியின் சுல்தானுக்கு அடுத்து ஆளவிருக்கும் பட்டத்து இளவரசுக்கு மணமுடித்து வைக்கப்பட்டுள்ளார். பல ஜெர்மானியக் குடிமக்களும் இஸ்லாமைத் தழுவியுள்ளனர். ஜெர்மானியர்களின் மதம் கடவுள் அருளால் உயர்ந்து நிற்கட்டும்” என்றெல்லாம் எழுதினார்.

ஒரே ஒரு சிறு பொறிதான் தேவையாயிருந்தது… அது பின்னர் பற்றி எரிந்தது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு இடையே துப்பாக்கிகளும் வெடித்தன. கிளர்ச்சியாளர்களின் சிறு குழு ஒன்று படைக்குள் எழுந்தது. விரைவில் தீவு முழுதும் பெருங்குழப்பமும் சலசலப்பும் பரவியது. கூடவே துரோகங்கள் வெளிவந்தன.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு இடையே துப்பாக்கிகளும் வெடித்தன. கிளர்ச்சியாளர்களின் சிறு குழு ஒன்று படைக்குள் எழுந்தது.

கிளர்ச்சியாளர்களிடையே ரகசிய ‘ஏஜண்டு’களும் இருந்தனர். கிளர்ந்தெழுந்தவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். பிடிபட்டு, அடிபட்டுக் கிடந்த ச்சிஸ்தே குரான் ஓதுவதைக் கேட்கமுடிந்தது. அதன் வாக்கியங்கள் அவருக்கு துணையாகவும் மருந்தாகவும் இருந்தன. தொடர்ந்த விசாரணைகளும் மூடி மறைக்கப்பட்ட ஆவணங்களும் அடுத்த அரைநூற்றாண்டாக ஆவணக்காப்பகங்களில் கரையான்களுக்கு உணவாகவோ தீக்கிரையாகவோ காணாமலோ போயின.

இப்போது 1915இல் ஊட்ரம் சிறைக்கு வெளியில் நடக்கும் நிகழ்வுக்குத் திரும்புவோம். பாசி படர்ந்த அந்த சிறைச்சாலைச் சுவரோடு முன்று புறங்களில் வரிசையாக நின்ற காக்கி உடை தரித்த சிப்பாய்கள் பச்சைப் புல்வெளியில் சதுரமாக நின்றனர். பார்வையாளர்களையும் அவர்களையும் ஒரு செம்மண் சாலை பிரித்தது. அந்த ஆறு வயதுச் சிறுவன் கண்களை அகல விரித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறான். இரு கான்களும் இன்னும் மூவரும் சில நிமிடங்களில் தங்களது முடிவை எதிர்நோக்கியபடி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் அவர்கள் கடந்து வந்த பெருங்கடலில் அமைந்திருக்கும் காலா பானி என்ற இருள் நிறைந்த சிறைக்குச் செல்லப்போவதில்லை. பதிலாக மற்றொரு காரிருள் நிறைந்த இடத்துக்குச் செல்லவிருக்கிறார்கள்; சக்ரத்-உல்-மௌத் என்ற உணர்வுகளற்றதோர் நிலைக்கு.

அந்தப் பெருமிதமிக்க ராங்கர்களுக்கு – கான் முகமது கானின் மகனான டுண்டே கான், முஸல்லம் கானின் மகனான ச்சிஸ்தே கான், கூட நின்ற இரண்டு ஹவில்தார்கள், ஒரு சிப்பாய் – தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு, தங்கள் எதிரில் உள்ள அந்த மரக்கம்பங்களைப் போலத் தலையையும் நெஞ்சையும் நிமிர்த்தி நின்று தங்களது ‘இஸ்ஸத்’ மாண்பை ஆண்மையுடன் காக்க வேண்டியதுதான்.

காக்கி உடை தரித்த அதிகாரிகள் அந்தப் பச்சை சதுரத்துக்குள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். குடிமை அதிகாரிகள் சிலரும் சிறை அதிகாரிகளும் அவர்களுடன் இருக்கிறார்கள். குடிமை அதிகாரிகள் அப்பழுக்கற்ற வெள்ளை உடையுடனும் தலையில் வெயிலை மறைக்கும் அகலமான விளிம்புத் தொப்பிகளையும் அணிந்திருக்கிறார்கள். கோல்ஃப் மலையின் உச்சியில் அமர்ந்து இவற்றைப் பார்ப்பவர்களுக்கு பழுப்பும் வெண்மையுமான எறும்புகள் மேலும் கீழும் தீவிரமாக ஊர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிகிறது. அந்த ஐவரும் தங்களின் மரணத்தலத்திற்குச் அழைத்துச் செல்லப்படும்வரை அங்கிருந்த உயர் அதிகாரிகளும் அங்குமிங்குமாகப் பரபரத்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாவது லெஃப்டினன்ட் ஃபிராங்க் வைனரின் தலைமையில் ராயல் கேரிசன் பீரங்கிப் படையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட துப்பாக்கிசுடும் அணி, பெரிய காக்கி தலைக்கவசங்கள் அணிந்து, ‘பாம்பே ப்ளூமர்ஸ்’ என்றழைக்கப்பட்ட, கால் சராய்க்கும் நீண்ட காலுறைகளுக்குமிடையே குமிழ் போன்ற தங்கள் முழங்கால் தெரியும் வகையில், உடையணிந்திருந்தனர். பார்வைக்குப் பள்ளி மாணவர்களைப் போல இருந்த அவர்கள் உண்மையில் பீரங்கிப் படை வீரர்கள். பீரங்கிக்குப் பதிலாக கைகளில் துப்பாக்கி ஏந்தியுள்ளனர்.

பார்வைக்குப் பள்ளி மாணவர்களைப் போல இருந்த அவர்கள் உண்மையில் பீரங்கிப் படை வீரர்கள். பீரங்கிக்குப் பதிலாக கைகளில் துப்பாக்கி ஏந்தியுள்ளனர்.

அதிக ஆரவாரம் இல்லாமல் அந்த ஐவரும் சிறைச் சுவற்றில் மரணத்தின் நிழலைப் பரப்பியிருந்த ஐந்தடி மூங்கில் கட்டைகளோடு சேர்த்துக் கட்டப்படுகின்றனர். அவர்களின் பழுப்புநிற வெற்றுக் கால்கள் துணிகளால் கட்டையோடு இறுக்கிக் கட்டப்படுகின்றன. கூட்டத்தில் அதுவரை நிலவிய சிறு முணுமுணுப்புகூட சுத்தமாக அடங்கிப் பேரமைதி நிலவுகிறது. மேஜர் ஹாக்கின்ஸ் இரண்டடி முன்னே வந்து நின்று அறிக்கையை வாசிக்கிறார்:

“இந்த ஐவரும் – சுபேதார் டுண்டே கான், ஜமேடார் ச்சிஸ்தே கான், 1890 ஹவில்தார் ரஹ்மத் அலி, 2311 சிப்பாய் ஹகீம் அலி, 2184 ஹவில்தார் அப்துல் கனி – கிளர்ச்சியைத் தூண்டிய குற்றத்திற்காக சுட்டு வீழ்த்தப்பட்டு மரணிப்பதற்கான தண்டனை வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இவர்கள் மாட்சிமை தங்கிய அரசரின் பெயரில் எடுத்துக்கொண்ட பிரமாணத்தை மீறியவர்கள்.இவ்வாறாக நீதி வழங்கப்பட்டுவிட்டது”