மொழிகளின் அதிசய உலகில் திளைத்திருப்போம்

சைனப்

தாய்மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படும் ஒன்றல்ல. அது நமது அடையாளம். நம் சிந்தையில் விந்தையை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டது நமது தாய்மொழி. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘தாய்மொழிகள் கருத்தரங்கு’ இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தாய்மொழிகளில் கற்றல் அனுபவத்தை வகுப்பறைகளுக்கு அப்பாலும் கொண்டுபோய்ச் சேர்க்கும் எண்ணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது இக்கருத்தரங்கு. பிள்ளைகளிடையே வாழ்நாள் தாய்மொழிக் கற்றலை ஊக்குவிப்பதும் தாய்மொழியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோர்களாக உருவாக்குவதும் இந்தத் தாய்மொழிகள் கருத்தரங்கின் நோக்கங்களாகும்.

இதில் சமூகப் பங்காளிகளாகப் பல்வேறு பள்ளிகளும் அமைப்புகளும் கலந்துகொண்டன. சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. புத்தாக்க முறைகளைக் கற்பித்தலில் கையாண்டு, மாணவர்களிடம் அதீத அக்கறை காட்டும் ஆசிரியர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 12ஆவது முறையாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தேசிய நூலக வாரியமும் கலந்துகொண்டது. தாய்மொழி சார்ந்த 45 கண்காட்சிக் கூடங்களில் ஒன்றாக தேசிய நூலக வாரியத்தின் காட்சிக் கூடம் இடம்பெற்றது. இந்தக் காட்சிக் கூடத்திற்குப் பொதுமக்கள் திரளாக வருகைபுரிந்து சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நூல்களை உடனுக்குடன் இரவல் பெற்றனர்.

எட்டு நூல்களோ அதற்கும் மேலோ இரவல் பெற்றவர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. தங்களுக்குப் பிடித்தத் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவினர். பிள்ளைகள் நூல்களை இரவல் பெறுவதில் காட்டிய ஈடுபாட்டையும் அதற்குப் பெற்றோர்கள் கொடுத்த ஆதரவையும் காண மகிழ்ச்சியாக இருந்தது.

“தாய்மொழியை சுவாசியுங்கள், பிறமொழியை நேசியுங்கள்” என்கிறார் கவிஞர் குவென்பு. பிற மொழிகளைக் கற்பதினால் மற்ற இனத்தவரின் கலாசாரங்களைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள முடிகின்றது. அதை மனதில் வைத்துக்கொண்டு ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளிலும் மாணவர்களுக்காக ஒரு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர்த்து மற்ற மொழிகளிலும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகள் பிள்ளைகளின் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு மற்ற மொழிகளின் மீதான ஆர்வத்தையும் தூண்ட உதவுகின்றன. மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க 50க்கும் மேற்பட்ட நூல் பரிந்துரைகளைக் கொண்ட பட்டியல்களும் வழங்கப்பட்டன. இந்தப் பரிந்துரைகள் எங்கள் நூலகர்களால் தேர்வு செய்யப்பட்டவை.

தாய்மொழிகள் கருத்தரங்கின் ஓர் அம்சமாகப் பகிர்வு அங்கங்கள் நடத்தப்பட்டன. இதில் கல்வியாளர்கள், ஊடக நிபுணர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்கள் என வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு தலைப்புகளையொட்டி உரையாற்றினர். இந்த நிகழ்வில் தேசிய நூலக வாரியத்தின் நூலகரான ரேணு சிவா குழந்தைகளுக்கும் பாலர்களுக்கும் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல் குறித்த உத்திகளைப் பகிர்ந்துகொண்டார். இளம் வயதிலிருந்தே தாய்மொழிப் புழக்கத்தை வீட்டில் ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

‘நம் மொழிகளின் அதிசய உலகில் திளைத்திருப்போம்’ எனும் இவ்வாண்டு கருப்பொருளுக்கு ஏற்ப ஒரு சுவாரசியமான கதையைக் கூறி பிள்ளைகளை மகிழ்வித்தனர் Indian.sg குழுவினரின் கதை சொல்லிகள். ‘தீவைச் சுற்றிய கதைகள்’ எனும் தலைப்பை ஒட்டி ஆடலுடனும் பாடலுடனும் பார்வையாளர்கள் கண்முன் தத்ரூபமாக கதையைக் கொண்டு வந்து, சி​ங்கப்பூரின் மூலை முடுக்குகளுக்கும் அழைத்துச் சென்றனர் கதை சொல்லிகள்.

தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காண மிகவும் உற்சாகமாக இருந்தது. தமிழில் வாசிப்பது பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதோடு நமது அடுத்த தலைமுறையைச் சுயமாக சிந்திக்கின்றவர்களாக உருவாக்கவும் உதவும் என நம்புகிறேன்.

தமிழில் வாசிப்பது பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதோடு நமது அடுத்த தலைமுறையைச் சுயமாக சிந்திக்கின்றவர்களாக உருவாக்கவும் உதவும் என நம்புகிறேன்.