‘அப்பா’ என்பதற்கும் ‘அப்பன்’ என்பதற்குமான வேறுபாடு அதன் தொனியிலிருந்து நாம் அறிகிறோம். அப்பன் என அழைப்பதை மரியாதைக் குறைவாக நாம் எண்ணலாம். மாறாக, பல தலைமுறைகளாக மேன்மைப்படுத்திப் பார்க்கப்படும் ‘அப்பா’ எனும் ‘பதவி’யை, அல்லது அப்பதவிக்குரிய எதிர்பார்ப்புகளை விலக்கி, ஓர் எளிமையான மனிதராக தம் அப்பாவை ‘அப்பன்’ எனும் தமது நூலில் சித்திரித்துள்ளார் எழுத்தாளர் அழகுநிலா. ஒரு குடும்பத் தலைவராக மட்டுமின்றி, குறைநிறைகள் உள்ள மனிதராகவும், சமூக அழுத்தங்களை எதிர்கொள்பவராகவும், வேறுபட்ட பரிமாணங்களில் தம் தந்தையை யதார்த்தமுறையில் காட்டியது இந்நூலை மறக்கமுடியாததாக ஆக்கியுள்ளது.
காலஞ்சென்ற தமது அப்பாவுடனான அனுபவங்களையும் நினைவுகளையும் தமது பார்வையில் படைத்துள்ளார் எழுத்தாளர். அத்தியாயங்களின் தலைப்புகள் எல்லாம் அவரின் தந்தையை வர்ணிக்கும் பெயர்ச் சொற்களாய் அமைகின்றன. முதல் அத்தியாயமான ‘குருதி குடித்த குலசாமி’யில் தொடங்கி, ‘தோற்று வென்ற பெத்தவன்’ஆக முழுமையடைகிறார் எழுத்தாளரின் அப்பா. வாசகரிடம் மனம்விட்டு பேசுவதுபோல அமைந்துள்ளது இந்நூல்.
‘குருதி குடித்த குலசாமி’யில் தொடங்கி, ‘தோற்று வென்ற பெத்தவன்’ஆக முழுமையடைகிறார் எழுத்தாளரின் அப்பா. வாசகரிடம் மனம்விட்டு பேசுவதுபோல அமைந்துள்ளது இந்நூல்.
தமிழகத்தில், 1980களில், மாறுபட்ட நம்பிக்கைகளுடன், கிராமத்து சூழலில் எழுத்தாளர் அனுபவித்த வளர்ப்புமுறைக்கும், இன்றைய நகர்ப்புற இளையரின் வளர்ப்புமுறைக்கும் என்ன ஒற்றுமைகள் இருந்துவிட முடியும் என தொடக்கத்தில் எண்ணினேன். ஆனால் காலக்கட்டம், தேச எல்லைகள், உலகமயமாக்கத்தின் தாக்கம் என அனைத்தையும் தாண்டிப் பல வகைகளில் நமது தமிழர் வளர்ப்புமுறை ஒரு கலாசார இழையாகத் தொன்றுதொட்டு இன்றும் அவர்கள் பரவிய இடங்களிலெல்லாம் நீடிக்கிறது என இந்நூல் உணர்த்தியது.
தெரிந்தோ தெரியாமலோ, பெற்றோருக்கு நாம் என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம் என்று நாம் உணர்வதும், பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள் என்பதால் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று பெரியோர் உணர்வதும் பெற்றோர்-பிள்ளைகள் உறவை பாதித்துள்ளது. கன்ஃபூசியஸ், குடும்ப உறுப்பினர்கள் பெரியோருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதை (filial piety) மூன்று படிநிலைகளாகக் கூறுகிறார்; பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பது, அவர்களுக்கு அவமானம் இழைக்காமல் இருப்பது, அவர்களுக்கு அடிப்படை நிலையில் ஆதரவளிப்பது.
அப்படிநிலைகள் எழுத்தாளரின் சிறுவயதிலிருந்தே நாசூக்கான வழிகளில் புகுத்தப்படுகின்றன. எப்போதெல்லாம் அவை புலப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் தந்தை-மகள் உறவில் சிறு விரிசல் ஏற்படுவதை நயமாகக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் சிறுமி அழகுநிலாவை சுவர்களைப் போலக் கட்டுப்படுத்துவதை அவர் படிப்படியாக உணர்கிறார். அச்சுவர்கள் என்னதான் பெண்களைப் பாதுகாப்பதற்கெனப் பெற்றோர்களால் பிரத்தியேகமாக எழுப்பப்பட்டிருந்தாலும், அவை இயல்பாகவே அவற்றைத் தாண்டி எட்டிப்பார்க்கவேண்டும் எனும் கட்டுக்கடங்கா ஆர்வத்தையும், பின்னர் உடைத்தெறிந்தே ஆகவேண்டும் எனும் கோபத்தையுமே உண்டாக்கிவிடுகின்றன.
ஒரு சிறுமியாக இப்பயணத்தில் என்னுள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லையே எனும் குறையை இந்நூலை வாசித்தது நிறைவேற்றி வைத்தது. குறிப்பாக, பேசாப்பொருள் (taboo) எனக் கருதப்படும் வரையறைகளை எதிர்நோக்கும் எழுத்தாளர் அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகக் காட்டியிருந்தது மனதைக் கவர்ந்தது. கண்ணுக்குத் தென்படாத இந்த ‘சுவர்களின்’, ‘தவறு’ எனும் அடையாளம் இல்லாத எதிர்பார்ப்புகளின், எல்லைகளில் மெல்ல நாம் கால்வைக்கும்போதுதான் அவை இருப்பதே சிலசமயம் தெரிய வருகிறது.
இந்த எல்லைகளை அறியாமல் வருடும்போது பிள்ளைகளின்மீது பெற்றோர் கொள்ளும் இனம்புரியாக் கோபமே சிறு சிறு துரோகங்களாக மனதில் உருவெடுக்கின்றன. ‘அடிக்கின்ற கரமே அணைக்கும்’ எனும் எரிச்சலூட்டும் விளக்கம் அக்காலத்திலிருந்தே நெருடல்களை ஏற்படுத்தி வருவதை எழுத்தாளர் வெளிப்படுத்திய எண்ணங்கள் புலப்படுத்துகின்றன. மெல்ல ‘பிம்பமிழந்த பிதா’வாகவும், ‘பளிங்கி விழுங்கிய பூதம்’ஆகவும் அத்தகைய கட்டங்களில் எழுத்தாளரின் கண்களில் அப்பா முரண்பாடாகத் தென்படுகிறார்.
அழுத்தங்களுக்கு உட்பட்ட ஒரு கட்டமைப்பில் பெற்றோர்-பிள்ளை உறவு வளர்ந்து முதிர்ச்சியடைவதை இந்நூலில் காணமுடிகின்றது. பிரமிக்கத்தக்க நாயகனாகத் தெரியும் அப்பா எதிரியாகி பின்னர் எழுத்தாளரின் வாழ்வில் அன்புக்குரியவராக, நல்ல மனிதராக முற்றுபெறுகிறார். முழு நம்பிக்கை வைப்பது, சந்தேகங்களால் சூழப்படுவது, இறுதியில் குறைகளை ஏற்றுக்கொண்டு அன்பு கொள்வது என மூன்று நிலைகளில் காலவாரியாக தந்தை-மகள் உறவுப் பயணம் செல்கின்றது.
முழு நம்பிக்கை வைப்பது, சந்தேகங்களால் சூழப்படுவது, இறுதியில் குறைகளை ஏற்றுக்கொண்டு அன்பு கொள்வது என மூன்று நிலைகளில் காலவாரியாக தந்தை-மகள் உறவுப் பயணம் செல்கின்றது.
சிறு வயதில் அப்பாவையோ அம்மாவையோ நமது நாயகராக (ஹீரோ) முழுக்க முழுக்க நம்புவது வழக்கம். அவர்கள் சொல்வது நிதர்சனம், அவர்களின் வழிகாட்டுதலே சிறந்தது, என்றெல்லாம் பிள்ளைகள் பூரிக்கலாம். கண்டிக்காமல், அன்பாகப் பேசி, செயலில் அன்பைக் காட்டும் தந்தையை தமது அம்மாவைவிட அதிகமாக பிடித்திருந்தது சிறுமி அழகுநிலாவுக்கு. ஆனால், மெல்ல வேறுபாடுகள் ஏற்பட்டு எதிர்பாரா முறையில் அப்பா நடந்துகொள்ளும்போது, அவர் தூக்கி வைக்கப்பட்ட மனபீடத்திலிருந்து இறக்கப்படுகிறார். மிகவும் பிடித்த பொருளைக் கோபத்தில் அப்பா தூக்கி எறியும்போதும் தமது நண்பர்களை அவமதிக்கும்போதும் எழுத்தாளரின் கண்களில் தந்தை எதிரியாக உருவெடுப்பதை நூல் காட்டுகிறது.
என் மனதை மிக நெகிழ வைத்த பகுதி, இறுதிக் கட்டமே. இக்கட்டம் எல்லோரின் வாழ்விலும், எல்லா உறவுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லை. கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அப்பாவின் தனிமனித குறைகள் வெளிப்பட்டு எழுத்தாளரின் நம்பிக்கையும், அவர்மீது வைத்திருந்த பயபக்தியும் தளரவே செய்கின்றது. ஆனால், பெரியவளாகி அக்குறைகளை ஏற்றுக்கொண்டு, அதன் பின்னணியில் அப்பா தம்மீது காட்டியது அளவுகடந்த அன்பே எனும் புரிதலில் நிலைக்கிறார் எழுத்தாளர். இரண்டுங்கெட்டான் வயது எனக் கூறப்படும் பதின்ம வயதில் உள்ள ஓர் இளையராக, இந்த உறவுப் பயணம் முழுமையடைந்ததைக் கண்டது நம்பிக்கை அளித்தது. மிக நிதர்சனமான, பெரும்பாலும் ஒளிவுமறைவற்ற, எழுத்து இதற்குப் பெரிதும் உதவியுள்ளது.
எழுத்தாளரின் தந்தை-மகள் உறவில் ஏற்பட்ட விரிசலைப் படித்துணரும்போது மனம் கலங்கியது. குறிப்பாக, ஓர் அத்தியாயத்தில், சிறுவயதில் பள்ளியில் விடவந்ததைப் போலவே அலுவலகத்திலும் சேர்க்க எழுத்தாளரின் அப்பா துணை வருகிறார். மகள் வளர்ந்துவிட்டாள்; இனி தான் இல்லாமலும் அவள் இருந்துவிடுவாள் என்பது அப்பாவுக்குப் புலப்படுகிறது. சற்று வருத்தத்துடன் அவர் அலுவலகத்திலிருந்து விலகும்போது, ஒரு சிறுமிபோல ஓடிப்போய் அப்பாவின் கையைப் பற்றிக்கொள்ளவேண்டும் எனும் ஏக்கத்தை எழுத்தாளர் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்வதாய் எழுதுகிறார். இக்காட்சி மனதை உருக்கியது.
வளரும்போதும், வளர்ந்த பின்னரும், பெற்றோர்-பிள்ளை உறவுப் பயணத்தில் நாம் பல வகைகளில் தனிமையாக உணர்கிறோம். அத்தனிமையை வெளிப்படுத்துவது குறைகூறுவதுபோல் ஆகிவிடுமோ எனும் அச்சத்தில் அவ்வெளிப்பாடுகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். அந்த அனுபவத்தை எழுத்தாளர் அழகாகக் காட்டியிருந்தது நூலுக்கு வலுசேர்த்தது.
தனிமையை வெளிப்படுத்துவது குறைகூறுவதுபோல் ஆகிவிடுமோ எனும் அச்சத்தில் அவ்வெளிப்பாடுகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம்.
முடியை வெட்டிக்கொண்டு, காது நிறைய காதுகுத்திக்கொண்டபோது என்னை ‘கலகக்காரி’ என்றனர் குடும்பத்தார். அப்படி தமக்கே உரிய வழிகளில் பல சுவர்களை உடைத்து தமது வாழ்க்கைப் பாதையை வகுத்துக்கொள்ளும் திடமானவராக எழுத்தாளர் நூலில் விளங்குகிறார். தமது காதலுக்காகப் போராடுகிறார்; சமூக எதிர்பார்ப்புகளால் குழம்பிப்போய் முரண்பாடாக நடந்துகொள்ளும் அப்பாவைக் கேள்வி கேட்கிறார். காலங்காலமாகவே நம் கலாசாரத்தில் இத்தகைய வளர்ப்புமுறை ‘கலகக்காரி’களை உருவாக்கி வருகிறது என அறிந்தது மனதை சாந்தப்படுத்தியது.
மகனாய்ப் பிறக்கவேண்டியவள் மகளாய்ப் பிறந்துவிட்டாள், அதிகமாகப் பேசுகிறாள், வயதுக்கு வந்தவள் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என எழுத்தாளரைச் சுற்றி வலம்வரும் கருத்துகள் இன்றைய இளம் பெண்களிடம் நேரடியாகப் பேசுகின்றன. பெற்றோரின் கசப்பான நடத்தையை இந்நூல் இயல்பாக்குகிறதோ எனும் கேள்வி சில இடங்களில் எழவே செய்தது. பெரும்பாலான கட்டங்களில் இத்தகைய நெருடல்களை நயமாகவே கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்.
பெற்றோர்-பிள்ளை உறவு ஒரு கலாச்சார அச்சில் வார்க்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறை எனக் கருதி பலர் அதனை வெளிப்படையாகக் கேள்வி கேட்பதில்லை. அதற்கு மாறாக, பல இளம் பெண்கள் இரு வாழ்வுகளை அமைத்துக்கொள்கின்றனர். விரிசல்களைப் பெருகவிட்டு மனதுக்குள்ளேயே இக்கேள்விகளுக்குப் பதில்களைத் தேடிக்கொள்கிறோம். நமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் எதையோ இழக்கிறோம் அல்லது நமது பலவீனங்களைப் பகிரங்கப்படுத்துகிறோம். அந்த அல்லாட்டமிக்க இருமை மனநிலைக்கும் தயக்கத்துக்கும் ஆறுதல் அளிக்கின்றது ‘அப்பன்’ நூல்.
பெற்றோர்-பிள்ளை உறவு ஒரு கலாச்சார அச்சில் வார்க்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறை எனக் கருதி பலர் அதனை வெளிப்படையாகக் கேள்வி கேட்பதில்லை.
வீடுகளில் மேலும் மனம் திறந்து பேசும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கு இந்நூல் வழிவகுக்கும் என நம்புகிறேன். உறவுப் பரிமாற்றங்களையும் நமது குணங்களையும் மறுபரிசீலனை செய்துகொள்வதற்கும் இந்நூல் கண்டிப்பாக வாய்ப்பளிக்கிறது.