கவிதை தாய்மொழியில்தான் உயிர்பெறுகிறது

0
245
கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
மஹேஷ் குமார்

மஹேஷ் குமார் ஒரு கவிஞர், புனைவெழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அவருக்குச் சிறுவயதில் மலையாளமும் இந்தியும் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறமொழிகளைக் கற்றுக்கொள்ளும் உந்துதலும் தொடர்ந்தது. பின்னாளில் பணி நிமித்தம் தில்லிக்கு நகர்ந்தபோது இலக்கியங்களின் அறிமுகமும் கிடைத்தது. விளம்பரத்துறையில் பணியாற்றியதால் மொழிக்கூர்மை, மொழித்தேவை குறித்த கவனம் கூடவே தொடர்ந்தது. மேற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா என்று பணி சார்ந்த பயணங்கள் அமைந்தபோது அந்தந்த மொழி இலக்கியங்களின் பரிச்சயமும் கிடைக்கப்பெற்றார்.

இந்தி, உருது, ஆங்கில, மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தணியாத வேட்கையுடனும் குன்றாத ஆர்வத்துடனும் செயல்பட்டுவரும் மஹேஷ் குமார், ‘வண்ணம் தேடும் சொற்கள்’ (தி சிராங்கூன் டைம்ஸ் வெளியீடு, 2021) என்ற மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். கவிதை மொழிபெயர்ப்பை முன்வைத்து மஹேஷ் குமாருடன் ஓர் உரையாடல் இங்கே

நீங்கள் முதலில் தமிழுக்கு மொழிபெயர்த்த கவிதை எது? ஏன் மொழிபெயர்க்கத் தோன்றியது?

இந்தியில் ஷேர் (sher) எனப்படும் இரண்டு வரிக்கவிதைகள் மிகவும் பிரபலமானவை. சொல்லவந்த கருத்தோடு தொடர்புடையை சில ஷேர்கள் சேர்ந்தது கஸல் (ghazal) வடிவம். இப்படி ஷேர்களையும் கஸல்களையும் எழுதுபவர்கள் அதே உணர்வோடு அவற்றை சபைகளில் வாசிக்கவும் பாடவும் செய்வார்கள். மீர்ஸா காலிப் மிக ஆழமான ஷேர்களைப் படைத்தவர். மேலோட்டமாகக் காதல் கவிதைகள் போலத் தோன்றினாலும் அவர் ஒரு சூஃபி என்பதால் அவை இறையுடனான காதலாகவே பார்க்கப்படுகின்றன.

மீர்ஸா காலிப் பற்றி ஓர் அறிமுகக்கட்டுரை வாசித்தேன். அதை நான் இந்தியில் வாசித்தாலும் மனதுக்குள் வாசிப்பு தமிழில்தான் நிகழ்ந்தது. இயல்பாக மொழிபெயர்க்கப்பட்ட அந்த மன வாசிப்பை எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்ற அதுவே என் முதல் மொழிபெயர்ப்புக் கவிதையாக அமைந்தது.

Hum to fanaa ho gaye unki aankhon ko dekh kar
Ghalib… na jaane wo kaise aaina dekhte honge!!

அவள் கண்களைப் பார்த்த நான் அழிந்தே போனேன்
மேன்மையானவரே… அவள் தன்னை எப்படித்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ!!

Ghalib என்ற பதத்தை அவருடைய பெரும்பாலான கவிதைகளில் பார்க்கலாம். அந்தச் சொல்லும், அவர் ஒரு சூஃபி என்ற புரிதலும், அவருடையவை சாதாரணமான காதல் கவிதைகள் அல்ல என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

நாம் வாசிக்கும் எந்தப் பிறமொழிக் கவிதையும் உதடுகளில் உருவம் பெற்றாலும் மனதிற்குள் நமது தாய்மொழியில்தான் உயிர் பெறுகிறது.

ஏன் கவிதையை மொழிபெயர்க்கத் தோன்றியது என்ற கேள்விக்கு என்னிடம் துல்லியமான விடையில்லை. கவிதையின் வடிவம் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. பிறமொழிக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் கலாச்சார, நிலவியல், அரசியல், அழகியல் புரிதல்கள் தமிழில் அமைந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் மெனக்கெடல்களைக் கண்டபோது இது மனித இயல்புதான் என்பதும் புரிந்தது. நாம் அடைந்த ஆனந்த அனுபவத்தைப் பிறருக்கும் பகிர்வதில் உள்ள மகிழ்ச்சி, ஒரு போதை, அவ்வளவுதான்.

ஒரு கவிதையை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுப்பது முதல் அது முழுமைபெற்றுவிட்டதாக நிறைவுகொள்வது வரை கவிதை மொழிபெயர்ப்பில் உங்கள் பொதுவான அணுகுமுறை என்ன?

பொதுவாக நாம் வாசிக்கும் எந்தப் பிறமொழிக் கவிதையும் உதடுகளில் உருவம் பெற்றாலும் மனதிற்குள் நமது தாய்மொழியில்தான் உயிர் பெறுகிறது. ஆனால் எல்லாக் கவிதைகளுமே நம் உள்ளத்தைத் தொடுமா என்றால் சந்தேகம்தான். அதில் ஏதோ ஒன்று – ஒரு சொல்லோ, அல்லது ஒரு சொல்லின் பல அர்த்தங்களில் ஒன்றோ, அதை அந்தக் கவிஞர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியுள்ள விதமோ அல்லது முழுமையாக அந்தக் கவிதையின் உணர்வோ – நம்மைத் தொடும்போது அதை மொழிபெயர்க்கும் ஆர்வம் வந்துவிடும்.

ஆர்வம் எழுந்த கையோடு மொழிபெயர்த்தால் அது தோல்வியில் முடியலாம். அந்தக் கவிதை மனதிற்குள் பலமுறை உருண்டு அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும்வரை பொறுத்திருந்து மொழிபெயர்த்தால் அது சரியாக இருக்கும் என்பது என் எண்ணமும் அனுபவமும். அதன் பின்னரே அதற்கான சரியான அமைப்பும் சொற்களும் அமைந்து வரும். எனவே இன்றைக்குப் படித்த ஒரு கவிதை ஒரு மாதத்திற்குப் பின்னால் மொழிபெயர்க்கப்படலாம் அல்லது இன்று இரவேகூட அமையலாம். அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. மொழிபெயர்த்த பின்னர் அதையும் பலமுறை வாசிப்பேன், மாற்றங்கள் செய்வேன். கொஞ்சம் கொஞ்சமாகக் கவிதை இறுதி வடிவத்தை அடையும்.

மொழிபெயர்க்கப்பட்டபின் ‘இதுவும் அதுவும் ஒன்றே’ அல்லது ‘இதுவும் அதைப் போன்ற ஒன்றே’ அல்லது ‘இது வேறொன்று’ என்ற மூன்று வகைகளுக்குள் ஒன்றாக அடங்கிவிடும்.

உரைநடையைப் பொறுத்தவரை மூலமொழியில் ஒரு வரி முடியும் இடத்தில்தான் மொழிபெயர்ப்பிலும் முடிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் கவிதை அனுபவத்தில் அத்திருப்பங்களும் கணிசமாகப் பங்காற்றுகின்றன. கவிதையின் வடிவத்தைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு சுதந்திரமாக ஒரு மொழிபெயர்ப்பாளர் செயல்படலாம்? உங்கள் கொள்கை என்ன?

கவிதைகளைப் பொறுத்தவரை அந்தச் சுதந்திரம் மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். கவிஞர்களுக்குக் கவிதைகளின் அமைப்பில் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வரிசையில் சொல்லும்போதுதான் சொல்லவந்த கருத்தும் கவிதையின் அழகும் நிலைக்கும். அது அந்த மூலக்கவிதையைப் படைத்த கவிஞனின் உரிமை. அதை மாற்றிச் சொல்வது சரியாக இருக்காது என்பது என் எண்ணம். எனவே கூடுமானவரை வடிவத்தையும் கருத்தையும் அதிகம் பிறழாமல் மூலக்கவிதையுடன் ஒத்துப்போகும்படி மொழிபெயர்த்தால் வாசகருக்கு ஓரளவுக்காவது சரியான அனுபவத்தைக் கடத்திவிடலாம்.

ரவீந்திரநாத் தாகூர் தன் வங்கக் கவிதைகளைப் பெரும்பாலும் தானே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். அவர் கூற்றுப்படி, மொழிபெயர்க்கப்பட்டபின் ‘இதுவும் அதுவும் ஒன்றே’ அல்லது ‘இதுவும் அதைப் போன்ற ஒன்றே’ அல்லது ‘இது வேறொன்று’ என்ற மூன்று வகைகளுக்குள் ஒன்றாக அடங்கிவிடும். பெரும்பாலும் நாம் செய்வதெல்லாம் ‘போலச்செய்வது’ போலத்தான் இருக்கும். முற்று முழுவதுமாக மூலத்துடன் லயிப்பது மிகவும் கடினம். தாகூர் போல அவரவர்களே செய்தால்தான் உண்டு.

கலீல் கிப்ரனின் Scarecrow கவிதைக்குத் தமிழில் ‘வெருளி’ என்று தலைப்பிட்டிருந்தீர்கள். வழுது, தமரூசி போன்ற வழக்கிலில்லாத பல சொற்களையும் மொழிபெயர்ப்புகளில் மீட்டெடுத்துள்ளீர்கள். வழக்கமான தமிழ்ச் சொல்லொன்று ஒரு கவிதைக்குப் போதவில்லை என்னும் புள்ளியை அடையும்போது உங்கள் சொல்தேடல் எவ்வாறு அமைகிறது?

பல சமயங்களில் ஒரு மொழியின் ஒற்றைச் சொல்லுக்கு இணையான சொல் இன்னொரு மொழியில் இருப்பதில்லை. அல்லது புழக்கத்தில் இருப்பதில்லை. தொடர்ந்த பயன்பாட்டில் பேச்சுவழக்குச் சொற்கள் பல நல்ல சொற்களை விழுங்கி விடுகின்றன. கவிதைகளை மொழிபெயர்க்கும்போது கவிதையின் அழகியலோடு மொழி அழகியலையும் பேணவேண்டியுள்ளது.

என்னதான் freeverse என்றாலும், மிக மிக நேரடியாக மொழிபெயர்த்தால் (மேலே சொன்ன என் முதல் மொழிபெயர்ப்பு வரிகள் போல) அதில் வாசகருக்கு அவ்வளவு ஈர்ப்பு இருப்பதில்லை. தெரியாத ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒன்றின் பொருள் புரிந்துவிட்டது என்ற சமாதானமே மிஞ்சும். மொழிபெயர்ப்பிலும் ஒரு கவிதையின் வடிவத்தை, அழகியலை, கருத்தை ஈர்ப்புடன் படைக்க வேண்டுமென்றால் ‘வெருளி’ போன்ற புழக்கத்தில் இல்லாத சொற்களையும் கொண்டுவர வேண்டியதாகிறது.

கவிஞர் மகுடேசுவரன் போன்றோர் முனைந்து பல பழஞ்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றனர். வாசகர்களிடம் ஏற்பும் உள்ளது. பரந்த, ஆழமான தமிழ்மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. பெரும்பாலும் ஏற்கெனவே உள்ளன. கொஞ்சம் முனைந்தால் புதிய கலைச்சொற்களையும் உருவாக்கிவிட முடியும். இணையம், நிகண்டு போன்றவை இம்முயற்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. மேலும் இது போன்ற தேடல்களின்போது பல்வேறு சுவையான செய்திகளையும் அறியமுடிகிறது. கற்றல் என்பது வள்ளுவர் சொன்னது போல ‘சாந்துணையும்’ என்பதை நமக்கு உணர்த்திகொண்டே இருக்கிறது.

உங்களுடைய சில மொழிபெயர்ப்புக் கவிதைகளில் ‘ஸ்பரிசம்’ போன்ற வடசொற்கள் இடம்பெறுகின்றன. தமிழ் இலக்கணத்திற்குள் பொருந்தாத ‘ஒருவள்’ போன்ற பயன்பாடுகளும் வருவதுண்டு. அவை கவிதைக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாகவே நான் உணர்கிறேன். தமிழ் மொழித்தூய்மை, இலக்கணத்தூய்மை இவற்றிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?

இவையும் கவிதையின் வாசக அனுபவத்துக்குள் வருபவையே. மூலக்கவிதையில் உள்ள ஒரு சொல், அது பிறமொழிச் சொல்லாக இருந்தாலும், தமிழிலும் அதன் புழக்கம் இருக்குமென்றால், கவிதையில் அந்த இடத்தில் அந்தச் சொல் சரியாகப் பொருந்துமென்றால் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் எண்ணம். வாசிக்கும் அனைவருக்கும் அப்படித் தோன்றவேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் சொல்லவந்ததை அந்தச் சொல் மிக அழுத்தமாக – அல்லது மிக மென்மையாக – சொல்கிறது என்றால் அப்படியே இருக்கட்டுமே.

நீங்கள் குறிப்பிட்ட ‘ஒருவள்’ கூட ஓர் அனுபவ முயற்சியே. இலக்கணப்படி தமிழில் ‘ஒருத்தி’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் மலையாள மூலக்கவிதையில், ஒரு பெண்ணின் மனவோட்டத்தைத் தொடரும் முயற்சியில் கவிஞர் பயன்படுத்திய அந்த ‘ஒருவள்’ என்ற சொல் அந்த இடத்தில் மிகப்பொருத்தமாக எனக்குத் தோன்றியது. வேற்று மொழிகளைக் கற்றுக்கொள்வதிலுள்ள நன்மைபயக்கும் விளைவுகளாகவும் இதைப் பார்க்கலாம். அந்தக் கவிதையை வாசிக்கும்போது மலையாளம் தமிழ் வேறுபாடுகள் எனக்குத் தோன்றவேயில்லை. எனவே ‘ஒருவள்’ பதத்தை அப்படியே பயன்படுத்தினேன்.

மிக மிக நேரடியாக மொழிபெயர்த்தால் வாசகருக்கு அவ்வளவு ஈர்ப்பு இருப்பதில்லை. தெரியாத ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒன்றின் பொருள் புரிந்துவிட்டது என்ற சமாதானமே மிஞ்சும்.

கவிதை வாசிப்பனுபவம் நமது இலக்கண வரையரைகளை மழுப்பிவிடுகிறது. ஒரு குறிக்கோளுடன் மிகவும் புறவயமாக (objective) வாசித்து மொழிபெயர்ப்பதிலும், சில சமயங்களில் கவிதையோடு ஒன்றிப்போய் அகவயமாக (subjective) வாசித்து மொழிபெயர்ப்பதிலும் வெளிப்படுகின்ற தருணங்கள் இவை. ஒரு வகையில் மொழிபெயர்ப்பவரின் சுதந்திரம் என்றும் சொல்லலாம். ஆனால் இது போன்ற அணுகுமுறைகள் அழகியலை விடவும் தூய்மையைப் போற்றுபவர்களுக்குக் கொஞ்சம் ஒவ்வாமையைத் தரலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் சில சமயங்களில் கவிதையின் கருத்தையும் அனுபவத்தையும் விடுத்து மொழித்தூய்மை விவாதம் மேலோங்கி மொழிபெயர்ப்பின் பயனை மறைத்துவிடுகிறது.

உமர் கய்யாமின் ‘A Book of Verses’ என்னும் கவிதை வரியைத்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழ்த்தன்மையுடன் ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று மொழிபெயர்த்தார் என்பர். அசல் கவிதையின் சாராம்சமான அனுபவத்தைச் சிதறிவிடாமல் தமிழ்ப் பண்பாட்டுக்குள் கொணர்வது, சொல்லுக்குச் சொல் அல்லது வரிக்கு வரி மூலப்பிரதிக்கு உண்மையாக இருப்பது – இரண்டுமே ஒரு மொழிபெயர்ப்பில் எப்போதும் சாத்தியப்படுமா? உங்கள் அனுபவம் எப்படி?

இரண்டுமே சாத்தியம். ரவீந்திரநாத் தாகூரின் கருத்திலும் அது வெளிப்படுகிறது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும்போது கருத்து மூலத்துக்கு நெருங்கிவரும், ஆனால் கவிதைத்தன்மை குறையலாம். ஒருவேளை மொழிபெயர்க்கும் கவிஞரின் இயல்பு காரணமாக அவரது பாணியில் அமைந்து அவரே அதில் மேலெழுந்து மூலக் கவிஞர் மறைந்துவிடலாம். அது போன்ற சமயங்களில் நேர்மையாக ‘தழுவியது’ என்று சொல்லிவிடலாம்.

கருத்தும் சரியாக அமைந்து கவிதைத்தன்மையும் இருந்து மூலக் கவிதையின் அழகும் சிதையாமல் இருந்தால் அது ஒரு மொழிபெயர்ப்பவருக்கும் சரி வாசகருக்கும் சரி, அருமையான அனுபவமாக அமையும்.

என் அனுபவத்தில் முடிந்தவரை என் பாணியைத் தவிர்த்துவிடவே முயல்கிறேன். உதாரணத்திற்கு கவிஞர் சுதாமா பாண்டே ‘தூமில்’ அவர்களின் Lohe ka swaad கவிதையின் இறுதி வரிகளில் ஒரு கோபமும் எரிச்சலும் தொனிக்கும். இதுபோன்ற இடத்தில் கவிதைத்தன்மைக்காக பலவிதங்களில் அழகாகச் சொல்லலாம். ஆனால் கோபமான மனநிலையில் பிறக்கும் சொற்கள் மிகச் சாதாரணமாக இயல்பாகவே இருக்கவேண்டும் என்பதற்காகச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தேன்.

இரும்பின் சுவையை
கொல்லனிடம் போய்க் கேட்காதே
கடிவாளம் கட்டப்பட்டிருக்கும்
அந்தக் குதிரையிடம் கேள்

அதே சமயம், உருதுக் கவிஞர் மீர் தாகி மீரின் Dhuaan Saa.. கவிதையில் உருது மொழிக்கே உரித்தான அழகான சிறப்புச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். அங்கு நானும் சிறிது சுதந்திரத்துடன் கருத்தை மட்டும் எடுத்து வேறு சொற்களில் மாற்றியிருந்தேன்.

கொஞ்சம் வீட்டையும் ஓர்ப்பாயா மெல்லிசையே
உள்ளத்தின் ஓசை அக்கூட்டிலிருந்தே எழுகிறது

பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நாடக மொழிபெயர்ப்புகளில் அச்சொற்கள் ஷேக்ஸ்பியரின் சமகாலமான 16ஆம் நூற்றாண்டு இலக்கியத் தமிழில் அமைக்க அவர் முயன்றிருப்பதைக் கண்டேன். நவீனக் கவிதை மொழிபெயர்ப்பில், மூலப்பிரதியில் தொழிற்படும் மொழிசார்ந்த காலப்பிரக்ஞைக்கு என்ன இடம்? பழந்தமிழிலக்கியப் பயிற்சி நவீனக் கவிதை மொழிபெயர்ப்பாளருக்கு அவசியமா?

செவ்விலக்கியங்களை மொழி பெயர்க்கையில் மொழிபெயர்ப்பாளர் முன்னமே சில நிலைப்பாடுகளை முடிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. வாசிப்பனுபவத்தோடு அவரது இருமொழித் திறனுக்கு ஒரு சவாலாகவும் அமைகிறது. அதோடு மூலப் பிரதியை நன்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள், ஆழமான வாசகர்கள், விரைவுணர் வாசகர்கள் என்று தனக்கான வாசக வட்டத்தையும் மனதில்கொள்ளவேண்டும்.

இலக்கணப்படி தமிழில் ‘ஒருத்தி’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் மலையாள மூலக்கவிதையில், கவிஞர் பயன்படுத்திய அந்த ‘ஒருவள்’ என்ற சொல் அந்த இடத்தில் மிகப்பொருத்தமாக எனக்குத் தோன்றியது.

சில சமயங்களில் தமது திறமைக்கான சவாலாகவும் மொழிபெயர்ப்பாளர்கள் பார்க்கக்கூடும். வாசிப்பவருக்கு ஒரு காலதேசப் ப்ரக்ஞையையும் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கேற்ற சொற்கள் தேவை. அதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். இதில் சரி தவறு என்று எதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன். பயிற்சி என்ற வகையில் பழந்தமிழ், தற்காலத் தமிழ், செவ்விலக்கியம், பின்நவீனத்துவம் என அனைத்துமே தேவைதான்.

மூலக்கவிஞர்களுடன் இணைந்து பணியாற்றி மொழிபெயர்த்த அனுபவம் ஏதுமுண்டா? பண்பாட்டு நுணுக்கங்களிலோ கவிதை எழுந்த பின்புலத்திலோ தொனியிலோ ஐயங்கள் எழுந்தால் எவ்வாறு தெளிவுபடுத்திக்கொள்கிறீர்கள்?

இதுவரையிலும் பொதுவில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட அல்லது காப்புரிமை கோரப்படாத கவிதைகளையே மொழிபெயர்ப்பு செய்துவருகிறேன். சில தற்காலக் கவிதைகளை மொழிபெயர்த்தபின் அந்தந்தக் கவிஞர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன். சில கவிதைகள் இணையத்தில் கிடைக்கும்போது எழுத்துருப் பிரச்சினைகள் காரணமாகச் சில குழப்பங்கள் வந்ததுண்டு. அப்போது கவிதையில் பரிச்சயமுள்ள நண்பர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

கோபமான மனநிலையில் பிறக்கும் சொற்கள் மிகச் சாதாரணமாக இயல்பாகவே இருக்கவேண்டும் என்பதற்காகச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தேன்.

கவிஞர் சச்சிதானந்தனின் ‘கள்ளிச்செடி’ கவிதையில் ஓர் இணையப்பக்கத்தில் ‘ஸ்வர்க்கம்’ என்றும் மற்றொன்றில் ‘ஸ்பர்ஷம்’ என்றும் இருந்தன. மலையாளத்தில் வாசிக்கும்போது இரண்டு சொற்களும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்ததால் குறுஞ்செய்தி மூலம் அவரிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டேன். சில இந்தி, உருதுக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணையத்தில் கிடைக்கும்போது மொழிபெயர்த்த பின்பு அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வேன்.

மொழிபெயர்ப்புக் கவிதையில் வாசக அனுபவம் என்று வரும்போது எப்படிப்பட்ட வாசகரை மனதிற்கொண்டு மொழிபெயர்க்கிறீர்கள்? மொழிபெயர்ப்புக் கவிதைக்கான உன்னத வாசகர் யார்?

சிக்கலான கேள்வி. பிறமொழியை அறியாத வாசகர் மொழிபெயர்ப்பாளரை நம்பியிருக்கிறார். அவர் கவிதையில் வெளிப்படுத்தும் கருத்தையே ஏற்கிறார். எனவே மொழிபெயர்ப்பவர்கள் பொதுவாக அனைத்து வாசகர்களுக்குமாகத்தான் உழைக்கிறார்கள். அது சரியா, தவறா, திரித்தோ மாற்றியோ சொல்லப்பட்டதா என்று ஆராய்ச்சியில் இறங்குவோர் வெகு சிலரே. எனவே எந்த வாசகராக இருந்தாலும் ஒரு கவிதையை ரசித்து வாசித்து அனுபவிக்கத் தெரிந்தவராக இருந்தால் சிறப்பு. இருமொழியும் தெரிந்த ஒரு வாசகர் கிடைத்தால் அது வெகுசிறப்பு.

நீங்களும் ஒரு கவிஞர். பிற கவிஞர்களைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பது உங்கள் சொந்தக் கவிமொழியை, நடையை பாதிக்குமா?

இந்தக் கேள்வியைப் பலர் கேட்டிருக்கிறார்கள். இதுவரை என்னைப் பாதித்ததாக நான் உணரவில்லை. மாறாக என்னுடைய பல கவிதைகளுக்கு ஒரு உந்துதலாகவே அமைந்திருக்கின்றன. மேலும் பலமொழிக் கவிதைகளை வாசித்ததில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை இருப்பதை உணரமுடிகிறது.

முதல் வரைவை இயந்திரத்தில் தயாரித்துப் பின்னர் கொஞ்சம் சீர் செய்து வெளியிடும் போக்கும் உள்ளது. கவிதை வாசிக்கத் தெரிந்த ஒரு நல்ல வாசகரின் முதல் பார்வையிலேயே சாயம் வெளுத்துவிடும்.

இந்தியில் வாக்கியங்களை அமைப்பதில் இலக்கணப்படியே சுதந்திரம் உண்டு. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்றவற்றை பொதுவாக எந்த வரிசையிலும் பொருத்தி வாக்கியம் அமைக்கலாம். ஆங்கிலத்தைப் போலவே எதுகை (rhyme) அடிகளின் இறுதியில் வரும். அந்த வசதியை பயன்படுத்தி அழகான, கேட்க இனிமையான கவிதைகள் படைக்கலாம். ஆனால் அதை தமிழில் கொண்டுவருவது கடினம்.

உருது, ஜெர்மன் போன்ற மொழிகளில் கூட்டுச் சொற்கள் ஏராளம். மூன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து ஒரே சொல்லாக அமையும். ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் இலக்கண அமைப்பில் பெரும்பாலும் இணையானவை. தமிழும் மலையாளமும் சகோதரிகள். எனவே அந்தந்த மொழிகளின் அமைப்பு புரிந்துவிட்டால் அவற்றை மொழிபெயர்க்கும்போது இயல்பாகவே ஒரு வேறுபாடு தெரியும். அதுவே நேரடியாக சொந்தமாகத் தமிழிலேயே கவிதை எழுதும்போது நமக்கான இயல்பு வெளிவரும். அவ்வப்போது சிறு பாதிப்புகள் இருந்தாலும் அது நமக்கே தெரிந்துவிடும்.

பிறமொழிகளிலிருந்து கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் முன்னோடிகளுடைய அணுகுமுறைக்கும் தற்காலப் போக்குக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா? எதிர்காலத்தில் தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான தேவை என்னவாக இருக்கும்?

நான் பார்த்தவரை முன்னோடிகள் பிறமொழியை நன்கு கற்று, புலமை பெற்று, அந்த இலக்கியங்களில் ஆழ்ந்து அவற்றைச் சொந்தமாக மொழிபெயர்த்தனர். தமிழ் இலக்கியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். எனவே அவர்களின் புரிதல், அணுகுமுறை, சொற்கட்டு போன்றவற்றில் மெனக்கெடல் இருக்கும். இன்று இணைய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்தபின் சில மொழிபெயர்ப்புகள் இயந்திரத்தனமாகத் தெரிகின்றன.

இயந்திரங்களின் பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களாகிய நாம் உருவாக்குவது. இயல்பாக நிகழும் தன்னெழுச்சியான ஓர் அம்சம் அல்ல.

முதல் வரைவை இயந்திரத்தில் தயாரித்துப் பின்னர் கொஞ்சம் சீர் செய்து வெளியிடும் போக்கும் உள்ளது. கவிதை வாசிக்கத் தெரிந்த ஒரு நல்ல வாசகரின் முதல் பார்வையிலேயே சாயம் வெளுத்துவிடும்.

எதிர்காலத்தில் கவிதைக்கே தேவை இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. மேலும் தமிழ் என்பது வெறும் பேச்சுமொழியாக மட்டுமே இயங்குமா என்ற அச்சமும் இருக்கிறது. எனவே மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான தேவையும் கேள்விக்குறிதான் என்று தோன்றுகிறது. இருந்தாலும், உலகின் பேரழிவையும் தாண்டி இன்னமும் உலவுகின்ற கரப்பான் பூச்சிகள் போல சில உயிர்ப்பான கலையுணர்வு கொண்ட படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கவிதைகளுக்கான தேவை இருந்துகொண்டேதான் இருக்கும்.

இயந்திர மொழிபெயர்ப்பை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறீர்கள். செய்யறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம் மொழிபெயர்ப்புக்குள் வலுவாகக் காலடி வைத்துவிட்டது என்றாலும் இன்னும் படைப்பூக்க மொழிக்குள் நுழையவில்லை என நினைக்கிறேன். எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? கவிதையாவது மனிதர்களுக்கு எஞ்சுமா?

இயந்திர மொழிபெயர்ப்பு என்பது காலத்தின் தேவையாகிவிட்டது. தொழிற்புரட்சி மேலெழுந்தபோது மனித உடல்வலிமைத் தேவையைக் குறைத்து, தயாரிப்பை பன்மடங்கு அதிகரித்தனர். அறிவு சார்ந்த பணிகளுக்கு மனிதர்களின் தேவை இருந்தது. இப்போதைய தொழில்நுட்ப அசுர வளர்ச்சியில் அறிவுத்துறையிலும் இயந்திரங்கள் மனிதர்களை விடவும் மேம்பட்டதாக வளர்ந்துவருகின்றன.

மனிதர்களால் கையாள முடியாத மிகப்பெரிய அளவிலான தரவுகளைக் கொண்டு, மொழியைப் புரிந்துகொள்வது அவற்றுக்கு எளிமையாகிவிட்டது. எனவே மொழிபெயர்ப்பிலும் அவை பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த அவசர யுகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுடன் உடனடியாக அவரவர் மொழியில் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

படைப்பூக்கத் துறையில் செய்யறிவு இல்லை என்று சொல்லமுடியாது. பிரதி, ஓவியம், நிழற்படம், பேச்சு, இசை, காணொளி என்று கலையின் அனைத்து வடிவங்களிலும் ஆக்குச் செய்யறிவு (generative AI) கோலோச்சுகிறது. மனிதரின் பரிணாம வளர்ச்சியில் கற்காலத்திலிருந்து மிகச்சிரமப்பட்டு நாகரிகம் உருவாகிக் கலைகள் வளர்ந்தன. அது மனிதருக்கான தனிப்பட்ட மனம் சார்ந்த அனுபவம். அதை எக்காலத்திலும் இயந்திரங்களால் அடையமுடியாது. ஏனெனில் இயந்திரங்களின் பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களாகிய நாம் உருவாக்குவது. இயல்பாக நிகழும் தன்னெழுச்சியான ஓர் அம்சம் அல்ல.

மனிதருக்குள் கலையுணர்வு இருக்கும் வரை கவிதையோ ஓவியமோ அவர்களுக்காக அவையும் அவற்றுக்காக அவர்களும் இருப்பார்கள்.