வேறுபடத் துணிந்துநில்

சிவானந்தம் நீலகண்டன்

லியானா தம்பையா கடந்த செப்டம்பர் மாதம் தம் 86ஆம் வயதில் மறைந்தபோது, ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கத்தின் (Asian Women’s Welfare Association, AWWA) ‘பெண் சிங்கம்’ மறைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அத்தலைப்புச் செய்தியை வாசித்தபோது பெண்ணுரிமைப் போராளி ஒருவர் மறைந்துவிட்டதாகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் அவரது வாழ்க்கையைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது ஒரு மகத்தான முன்னுதாரண வாழ்வைத் தம் செய்தியாக நமக்கு விட்டுச் சென்றுள்ளார் என்பது புரிந்தது.

லியானா தம்பையா
(1937-2023)

தாய் வழியில் லியானா மலாயாவில் மூன்றாம் தலைமுறை. அவரது அம்மாவழித் தாத்தா சீனிவாசகம் 1890களில் தமிழகத்திலிருந்து மலாயாவுக்கு வந்தவர். மருத்துவர் ஹூப்ஸ் என்பாரிடம் மருத்துவம் பழகிய அவர், கெடா மருத்துவச் சேவையில் பணிபுரிந்தவர். தந்தை வழியில் இரண்டாம் தலைமுறை. லியானாவின் அப்பா தேவசகாயம் டேவிட் செல்லையா (டி.டி.செல்லையா) தமிழகத்திலிருந்து 1911இல் தம் 17ஆம் வயதில் பினாங்குக்கு வந்தார்.

அவ்வயதிலேயே செயிண்ட் ஜார்ஜ் மிஷன் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட செல்லையா, ஒரு கணிதப்புலி. ஆசிரியர் பணியைத் தொடர்ந்துகொண்டே மேற்படிப்புகளைப் படித்தார். ரோசலிண்ட் சீனிவாசகத்தை 1925இல் திருமணம் முடித்தார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் “நீரிணைக் குடியிருப்புகளின் கல்விக்கொள்கை வரலாறு 1800-1925” (A History of the Educational Policy of the Straits Settlements from 1800 to 1925) என்ற தலைப்பில் 1939இல் முனைவர் பட்டம் பெற்றார். அன்றைய மலாயாவில் முனைவர் பட்டம் பெற்றிருந்த ஒரே ஆசிய ஆசிரியர் எனக் கருதப்பட்டார்.

சிங்கப்பூரின் செயிண்ட் ஆண்ட்ரூ பள்ளிக்கு முதல்வராகப் பணியாற்ற, செல்லையா குடும்பத்துடன் 1940ஆம் ஆண்டின் இறுதியில் குடிபெயர்ந்தார். அப்போது லியானாவுக்கு சுமார் நான்கு வயது. லியானா ஆறாவது பிள்ளை, கடைக்குட்டி. குடும்பம் சிங்கப்பூருக்கு வந்து நிலைகொள்வதற்குள் 1941இல் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு.

பள்ளிகள் இயங்காததால் செல்லையா ஆங்லிகன் தேவாலயப் பணிகளை மட்டும் கவனித்துவந்தார். வினா தெரிந்த காலத்தில் லியானாவுக்கு அமைந்த முதல் அனுபவங்கள் குண்டுகளுக்குப் பதுங்குவது, உணவு, உடை தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எனக் கடுமையான போர்ச்சூழல் அனுபவங்களாக இருந்தன.

போர் முடிந்ததும், 1946இல் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் லியானா சேர்க்கப்பட்டார். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் குடும்பம். உணவு, உடை, இருப்பிடத்தைப்போல கல்வியும் மனிதரின் அடிப்படை உரிமை என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த செல்லையா, தம் பிள்ளைகள் அனைவரையும் ஆண்-பெண் பேதம் காட்டாமல் பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுப்பினார்.

கண்டிப்பான வளர்ப்பு என்றாலும் கடைக்குட்டி என்பதால் லியானாவுக்குக் கூடுதல் சலுகைகள் உண்டு. தம் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெறவேண்டும் என்பதில் செல்லையா தீவிரமாக இருந்தார். லியானா மட்டும் தம் பாட்டியின் ‘ஒத்துழைப்புடன்’ தமிழுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை.

ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, பிறகு ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷன் என லியானா படிப்பைத் தொடர்ந்தார். லியானாவின் அம்மா, அப்பா இருவருக்குமே சமூக சேவை வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களின் தோல் வியாதிகளுக்கு மருந்திட்டு அவர்களிடம் அன்பாகப் பழகும் சேவையை அம்மா தொடர்ந்து செய்துவந்தார். தொழுநோயாளிகள் கவனிப்பில் அப்பா ஈடுபாடு காட்டினார்.

பதின்மவயது லியானாவையும் பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தினர். குறிப்பாக, உடற்குறை, அறிவுத்திறன் குறைபாடுகளுள்ள பிள்ளைகளின் சேவைக்கு மாதாமாதாம் ஒருநாள் ஒதுக்கியிருந்தனர். ஒருமுறை அத்தகைய பிள்ளைக்கு லியானா கதைசொல்லத் தொடங்க, கதையில் ஆழ்ந்துபோன அப்பிள்ளை லியானாவை இறுக்கிப் பிணைத்துக்கொண்டு கிளம்பவே விடவில்லை. அச்சம்பவம் லியானாவை ஆழமாக பாதித்தது. அத்தகைய பிள்ளைகளுக்குத் தன்னாலானதைச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டார்.

கதையில் ஆழ்ந்துபோன அப்பிள்ளை லியானவை இறுக்கிப் பிணைத்துக்கொண்டு கிளம்பவே விடவில்லை undefined அச்சம்பவம் லியானவை ஆழமாக பாதித்தது.

ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனில் ஜான் அனந்தராஜா தம்பையாவுடன் (1938-2011) லியானாவுக்கு 1950களில் அறிமுகம் உண்டாகி, நட்பு காதலாக மலர்ந்தது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமூக சேவையில் பட்டக்கல்வி பெறச்சென்றார். அங்கு அவர் கேட்காமலேயே அவருடைய முக்கியமான திட்டவேலைகள் குறைபாடுள்ள பிள்ளைகள் சார்ந்ததாக அமைந்தன. ஆனர்ஸ் பட்டம் பெற்றார்.

சிங்கப்பூருக்கு 1960இல் திரும்பிய லியானா, அதீத தகுதி, வெளிநாட்டில் படித்தவருக்கு சிங்கப்பூர் உள்ளூர் விவகாரங்கள் புரியாது என்றெல்லாம் முதலில் ஒதுக்கப்பட்டார். பிறகு 1961இல் சமுதாய நல்வாழ்வுத்துறையில் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அங்கும் விரைவில் அவருக்கு குழந்தைகள், சிறார் பிரிவு வாய்த்தது. திறன்கள், வசதிகள் குன்றிய பிள்ளைகளுக்கு உதவுவதில் அவருக்கு மேன்மேலும் சிந்தனையும் ஆர்வமும் கூடின.

சமுதாய நல்வாழ்வுத்துறை ஊழியர்கள் ஒரு புதிய மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்று அப்போது ஒரு விதி இருந்தது. சிறுவயதில் விளையாட்டுத்தனமாக கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட தமிழைப் படிக்க அமைந்த வாய்ப்பு என மகிழ்ந்து விண்ணப்பித்தார். ஆனால் தமிழ் அவருடைய தாய்மொழி என்பதால் அது ‘புதிய மொழி’யாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாண்டரின் படிக்க அனுமதி கேட்டபோது சிங்கப்பூரில் மாண்டரின் அதிகம் பேசப்படுவதில்லை என்பதால் ஹொக்கியன் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது, படித்தார்.

லியானாவின் பெற்றோர்
ரோசலிண்ட் செல்லையா, முனைவர் டி.டி.செல்லையா

காலவோட்டத்தில் எல்லாம் தலைகீழாகி, சிங்கப்பூரில் வெளிநாட்டுப் படிப்பு பெரிதும் மதிக்கப்படுவதையும் பிற சீனமொழிகள் அனைத்தும் கைவிடப்பட்டு மாண்டரின் முன்வைக்கப்பட்டதையும் ஒரு நேர்காணலில் லியானா நினைவுகூர்ந்தார்.

நெடுநாள் காதலர் ஜான் தம்பையாவை 1964இல் மணந்தார். அதன்பின் லியானா தம்பையா என அழைக்கப்பட்டார். தாய்மை அடைந்ததும், 1965இல், பிள்ளைப் பரமாரிப்பை இன்னொருவரிடம்விட மனமின்றி முழுநேர வேலையை விட்டார். வேலையை விடலாம் சேவையை விடலாகாது என்ற உறுதியுடன் சிறாருக்கான உதவிச் சங்கத்தில் (Children’s Aid Society) பகுதிநேர ஊழியராகத் தொடர்ந்தார். பிறகு, பகுதிநேர ஊழியராகவே, குறைபாடுள்ள பிள்ளைகளுக்கான அமைப்பில் (Spastic Children’s Assoication Singapore) 1973ஆம் ஆண்டுவரை தொடர்ந்தார். எழுபதுகளின் மத்தியில் மீண்டும் தீவிரமாக முழுநேரச் சமூக சேவைக்குள் நுழைந்தார். மருத்துவரான கணவரின் முழு ஆதரவு லியானாவுக்குக் கிடைத்தது.

வேலையை விடலாம் சேவையை விடலாகாது என்ற உறுதியுடன் சிறாருக்கான உதவிச் சங்கத்தில் (Children’s Aid Society) பகுதிநேர ஊழியராகத் தொடர்ந்தார்.

புலி ஆண்டில் பிள்ளை பிறப்பைச் சீனர்கள் பொதுவாக விரும்புவதில்லை. அதிலும் அவ்வாண்டில் பிறந்த பெண்குழந்தைகளைக் கைவிடும் வழக்கம் 60-70களில் அதிகம் இருந்தது. நல்லவேளையாகச் சிங்கப்பூரில் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பியோர் பட்டியலும் நீளமாக இருந்தது. லியானா தன் சேவைகளின் ஒருபகுதியாக கைவிடப்பட்டக் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதில் முனைப்புடன் செயலாற்றினார். அக்காலகட்டத்தில் சமுதாய விவகார அமைச்சின் ‘பரோல்’ வாரிய உறுப்பினராகவும் சுமார் பத்தாண்டு (1973-1982) பணியாற்றினார்.

மாதர் நல்வாழ்வுச் சங்கமான ‘ஏவா’ (AWWA) வைத் தொடங்கிய சகுந்தலா பாட்டியாவுடன் உண்டான அறிமுகத்தால், 1972இல் ஏவாவில் தொண்டூழியராக இணைந்தார். அங்கு முக்கியப் பொறுப்பிலிருந்த விமலா குலசேகரத்துடன் இணைந்து செயலாற்றினார். குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்ச்சி முதல் (அப்போது சிங்கப்பூர் இரண்டு பிள்ளைகளுக்குமேல் வேண்டாம் என வலியுறுத்தி வந்தது) குடும்ப உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதுவரை பல்வேறு அம்சங்களில் ஏவாவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

ஏவாவில் பிள்ளைகளுக்கான தனித்திட்டங்கள் ஏதுமில்லை என்பதைக் கண்ட லியானா துணைப்பாட வகுப்புகளைத் தொடங்கினார். நல்ல வரவேற்பைப் பெற்ற அத்திட்டத்திற்கு 1974இல் தலைமையேற்றார். முதியோர் பராமரிப்புத் திட்டத்திலும் ஓரிரு ஆண்டுகள் பணியாற்றினார். அனைத்துலகக் குழந்தைகள் ஆண்டாக 1979 அறிவிக்கப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்தி குறைபாடுள்ள பிள்ளைகள் கவனிப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்காக ஒரு திட்டத்தை உருவாக்க ஏவாவுக்குப் பரிந்துரைத்தார். குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுள்ள பிள்ளைகளை எந்த நிறுவனமும் அப்போது ஏற்கவில்லை என்பதால் அதில் ஏவா பங்களிக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கணவர் டாக்டர் ஜான் அனந்தராஜா தம்பையாவுடன் லியானா.
இடதுபுறம் பேராசிரியர் சியா ச்செங் சியாங்

லியானாவின் யோசனையை ஏவா ஏற்றது. பிள்ளைகளை அனுப்பப் பெற்றோரும் முன்வந்தனர். ஆனால் இடமில்லை. செயிண்ட் இக்னேஷியஸ் தேவாலயத்தின் ஒருபகுதியை வகுப்புகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அருட்தந்தை ரீட் (Father Reid) அனுமதித்தார் ஆனால் அங்கு பொருள்களை வைக்க இடமில்லை. ஆகவே தன் காரிலேயே பொருள்களைக் கொண்டு செல்வதும் பிறகு எடுத்து வந்துவிடுவதுமாகச் செயல்பட்டார். பெரும் முயற்சிகள் மிக எளிமையாகவே தொடங்குகின்றன என்பதை நினைவூட்டும் வகையில் முதலில் அவ்வகுப்புகளுக்குப் பயன்படுத்திய பாய் ஒன்றை இறுதிவரை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

அவ்வகுப்புகளில் காற்றடிக்கப்பட்ட பெரிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை ஒவ்வொரு முறையும் காற்றடிக்கவும் பிறகு பயிற்சி முடிந்ததும் காற்றை வெளியேற்றி மடித்து எடுத்துச்செல்லவும் வேண்டியிருந்தது. லியானா சளைக்கவில்லை. பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியது. ‘ரிட்ரீட் ஹவுஸில்’ ஒரு வராந்தா கிடைத்தது. மாடிப்படிக்குக்கீழ் ஒரு சிறிய அறையும் பொருள்களை வைக்கக் கிடைத்தது. ஒரு மாது தன் வீட்டிலிருந்த நீச்சல் குளத்தைப் பிள்ளைகளின் ‘ஹைட்ரோ தெரபி’க்குப் பயன்படுத்த அனுமதித்தார்.

தமக்கு அதிகரித்த தொடர்புகளை ஏதாவது ஒருவழியில் சேவையில் ஈடுபடுத்தும் சிந்தனை லியானாவை உந்திக்கொண்டே இருந்தது. அரசாங்கத்துக்கும் தனியார் கட்டட முதலாளிகளுக்கும் நிரந்தர இடம்வேண்டித் தொடர்ந்து கோரிக்கைகளை அனுப்பினார். அரசாங்கம் அளிக்க முன்வந்த இடங்கள் பொருத்தமானதாக இல்லை. தனியார் சிலர் அளிக்க முன்வந்த இடங்கள் நன்றாக இருந்தன ஆனால் அங்கு ஏற்கெனவே அனுமதியின்றித் தங்கியிருந்தோரை வெளியேற்ற இயலவில்லை.

சிங்கப்பூர் மாதர் புகழரங்கில் லியானா தம்பையா இணைந்த விழாவில் (2014)

ஏவாவின் பிற திட்டங்களும் விரிவடைந்து சென்றதால் நிரந்தர இடம் நிச்சயமாகத் தேவைப்பட்டது. ராமகிருஷ்ண மிஷனுக்குச் சொந்தமான கட்டடம் நோரிஸ் ரோட்டில் விற்பனைக்கு வந்தபோது, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, சுமார் 500,000 வெள்ளி நிதிதிரட்டி அக்கட்டடத்தை ஏவா வாங்கியது. அங்கேயே ஹைட்ரோ தெரபிக்கான குளத்தை அமைத்தது. மின்தூக்கி அமைப்பு முதல் வண்ணப்பூச்சு வரை ஒவ்வொன்றுக்கும் லியானாவும் விமலா குலசேகரமும் நிறுவனங்கள், தனியார் என அனைத்துக் கதவுகளையும் தட்டினர். அவை திறக்கும்வரை அவர்கள் விடவில்லை.

பல்வேறு குறைபாடுகளுள்ள பிள்ளைகளுக்கான வகுப்புகள் அன்றாடம் நடந்தன. ஊழியர்கள், தொண்டூழியர்கள் அனைவரும் தகுந்த திறன்மிக்கவர்களாக இருப்பதை லியானா உறுதிசெய்தார். தொண்டூழியம் ஊதியமின்றிச் செய்வது என்றாலும் செய்வது உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பது லியானாவின் கொள்கை. குறைபாடுள்ள பிள்ளைகளின் பெற்றோரும் ஒன்றுகூடிக் கலந்துறவாட வாய்ப்பு அமைந்ததால் கொஞ்சம் மெனக்கெட்டால் தம் பிள்ளைகளின் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது, ஒரு வலுவான பிடிமானம் கிடைத்தது.

தொண்டூழியம் ஊதியமின்றிச் செய்வது என்றாலும் செய்வது உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பது லியானாவின் கொள்கை.

‘ஏவா சிறப்புத்தேவையுள்ளோர் பள்ளி’யாகப் (AWWA Special School) பெயர் சூட்டப்பட்டு அடுத்த பத்தாண்டில் தொடர்ந்து வளர்ந்தது. வளர்ச்சி விரும்பத்தக்கது என்றாலும் இடவசதி, நிதிவசதிச் சிக்கல்களும் கூடவே வந்தன. சிங்கப்பூர் அறக்கொடைத் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் யீ பெங் லியாங் (Dr Ee Peng Liang) 1983இல் தொடங்கியிருந்த சமூக உண்டியல் (Community Chest) நிதியின்மீது ஏவாவின் பார்வை திரும்பியது. அதற்குமுன்னும் பின்னும் இல்லாத வகையில், நம்பிக்கையின் அடிப்படையில், கணிசமான தொகையை ஏவா வட்டியில்லாக் கடனாகப் பெற்றது. அருகிலிருந்த கட்டடத்தை வாங்கி மேம்படுத்தி இணைத்துக்கொண்டு ஏவாவும் பள்ளியும் வளர்ந்தன.

சிங்கப்பூர் 1990இல் சுதந்திர வெள்ளிவிழாவைக் கொண்டாடியபோது கொடையளிக்கப்படும் ‘வெள்ளிவிழா நிதி’க்கு வெள்ளிக்கு வெள்ளி ஈடுசெய்வதாக அரசாங்கம் அறிவித்தது. மீண்டும் கணிசமான நிதிக்கொடைகள் பெற்று, அரசாங்க உதவியுடம் அதை இரட்டிப்பாக்கி ஏவா தன் சமூக உண்டியல் கடனை அடைத்தது. அதில் லியானாவின் பங்கு கணிசமானது.

சில உடற்குறைபாடுகளுடன் இருந்தாலும் மூளைத்திறன் குறைபாடில்லாத பிள்ளைகள் சிலர் இருந்தனர். ஆனல் அவர்கள் வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவதில்லை என்பதைக்கண்ட லியானா, புத்தாக்கத்துடன் ‘டீச் மி’ (Therapy and Educational Assistance for Children in Mainstream Education, TEACH ME) என்னும் திட்டத்தை 1990இல் உருவாக்கினார். அதன்மூலம் அத்தகைய பிள்ளைகளின் திறன்களை மேம்படுத்தி சில வழக்கமான பள்ளிகளின் முதல்வர்களிடம்பேசி இணையச் செய்தார். தயக்கம் விலகியதும் மேலும் பல பள்ளிகள் முன்வந்தன.

முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் முதலில் ஏவா சிறப்புப் பள்ளி, பிறகு டீச் மி, அதன்வழியாக வழக்கநிலைப் பள்ளி என மேம்பட இயன்றது. எல்லாவிதக் கைவிடல்களையும் புறந்தள்ளி ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து தம் எதிர்காலத்தை அடியோடு புரட்டிப்போட அப்பிள்ளைகளால் முடிந்தது. பள்ளிக்கூடத்தில் நுழைவதே கனவாக இருந்த பிள்ளைகள் பலர் லியானாவின் விடாமுயற்சிகளால் பல்கலைக்கழகத்தில் நுழைந்தனர்.

பள்ளிக்கூடத்தில் நுழைவதே கனவாக இருந்த பிள்ளைகள் பலர் லியானாவின் விடாமுயற்சிகளால் பல்கலைக்கழகத்தில் நுழைந்தனர்.

அதோடு நிற்காத லியானா, அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தார். குறைபாடுள்ள பிள்ளைகளின் பெற்றோர் பலர் விரும்பினாலும் பள்ளிக்கு அழைத்துவருவதும் மீண்டும் வீட்டுக்குச்செல்வதும் சிரமமாக இருந்ததால் தவித்தனர், தவிர்த்தனர். பிள்ளைகள் பள்ளிக்கு வரமுடியாவிட்டால் என்ன, பிள்ளைகளை நோக்கிப் பள்ளி செல்லட்டும் என்று துணிந்தார் லியானா.

உடற்பயிற்சி வல்லுநர், பேச்சுப்பயிற்சி வல்லுநர், ஆசிரியர்கள், உதவியாளர்கள், வாகன ஓட்டுநர் என ஒரு நடமாடும் சிகிச்சையகத்தை (Mobile Therapy Clinic) அமைத்து அக்குழு பள்ளிகளுக்கும் வீடுகளுக்கும் சென்று உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்குச் சேவையாற்ற ஏற்பாடு செய்தார். சிறப்பான விளைவுகளை அத்திட்டம் கொணர்ந்தது. கொடையாளர்களிடம் நிதிபெற்றே அவ்வாகனங்களை வாங்கினார். அதற்கு வாகன உரிமைச் சான்றிதழ் (Certificate of Entitlement) பெற சுமார் 20,000வெள்ளி கட்டவேண்டி இருந்தது. கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு அரசாங்கத்துக்கு எழுதி சிறப்பு அனுமதி பெற்றார்.

லியானா 80களின் இறுதியிலிருந்து 2013இல் ஓய்வுபெறும்வரை ஏவாவின் கௌரவ ஆலோசகராக முற்றிலும் தொண்டூழியராகவே பணியாற்றினார். ஓய்வுபெற்றதும் தமிழை மேலும் கற்க விரும்பினார். எந்தக் கனவையும் நனவாக்காமல் விடுவதில் லியானாவுக்குச் சம்மதமில்லை. பொதுச்சேவைப் பதக்கம் (1984), சிறந்த தொண்டூழியர் விருது (1991), பொதுச்சேவை நட்சத்திர விருது (1994), ஆண்டின் சிறந்த பெண்மணி (Her World, 1994), தேசிய தொண்டூழிய, அறக்கொடை சிறப்பு அங்கீகார விருது (2011), சிங்கப்பூர் மாதர் புகழரங்கில் இணைவு (2014) என அவருக்குப் பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன.

விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெரிதாகக் கருதாத லியானா, குறைபாடுள்ள பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக நிதி திரட்டுவது, திறனுள்ள தொண்டூழியர்களைச் சேர்ப்பது, அரசாங்க, தனியார் உதவிகளைக் கோருவது, அரசாங்கக் கொள்கைகளை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றத் தொடர்ந்து போராடுவது, புத்தாக்கமுள்ள, அதிக பலன்களை அளிக்கக்கூடிய திட்டங்களைச் சிந்தித்து உருவாக்குவது, அவற்றைச் செயல்படுத்துவது என சதாசர்வகாலமும் சிறப்புத்தேவையுள்ள பிள்ளைகளின் தாயாகச் செயல்படுவதையே வாழ்க்கையாக்கிக்கொண்டார்.

சிங்கப்பூரின் கட்டாயக் கல்விச் சட்டத்தில் (1996க்குப்பின் பிறந்த, சிங்கப்பூர்க் குடியுரிமையுள்ள, பிள்ளைகள் அனைவரும் கட்டாயமாகத் தொடக்கக்கல்வி பெறவேண்டும்) உடற்குறையுள்ள பிள்ளைகளுக்குக் கல்வி கட்டாயமாக்கப்படவில்லை. அதைக் கட்டாயமாக்கவேண்டும் என்று லியானா தொடர்ந்து குரல் கொடுத்தார்.

கட்டாயக் கல்விச் சட்டத்தில் உடற்குறையுள்ள பிள்ளைகளுக்குக் கல்வி கட்டாயமாக்கப்படவில்லை. அதைக் கட்டாயமாக்கவேண்டும் என்று லியானா தொடர்ந்து குரல் கொடுத்தார்.

குறைபாடுள்ளோர் கட்டாயக் கல்வியிலுள்ள சிரமங்கள், நிதித்தேவை முதல் கட்டமைப்பு வசதிகள்வரை, எத்தகைய நடைமுறைக் காரணங்கள் சொல்லப்பட்டு நியாயப்படுத்தப்பட்டாலும் அவற்றுக்கான தீர்வுகளைத் தொடர்ந்து சிந்தித்து அராசாங்கத்திடம் தெரிவித்துக்கொண்டிருந்தார். குறைபாடுள்ளோர் கட்டாயக் கல்விக்குப் பரிந்துரைகள் அளிக்கும் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராகத் தீவிரமாகச் செயல்பட்டார்.

சுமார் பத்தாண்டுப் போராட்டத்திற்குப்பின் லியானாவின் ஆசை நிறைவேறியது. உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கும் 2019 முதல் தொடக்கக்கல்வி சிங்கப்பூரில் கட்டாயமானது. அரசாங்க நிதியுடன் சிறப்புக் கல்வி அளிக்கும் (Special Education, SPED) பள்ளிகளில் அப்பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவிகளுடன் (2015)

லியானா குறைபாடுள்ள பிள்ளைகளை நேசித்த அளவுக்கே சிங்கப்பூரையும் அதன் பன்மைத்துவத்தையும் ஆழமாக நேசித்தார். சீனப் பட்டுத்துணியில் நெய்யப்பட்ட, இவ்வட்டாரப் பூர்வகுடிகளுக்குரிய பத்திக் (Batik) வடிவமைப்புகொண்ட, சேலையை (இந்திய இனத்துக்கான குறியீடு) லியானா தன் அடையாளமாக அணிந்தார். அதைச் ‘சிங்கப்பூரர் சேலை’ என்று பெருமிதத்துடன் சுட்டினார். நமது பார்வையை ஒருபோதும் குறுக்கிக்கொள்ளலாகாது என்பதில் உறுதியாக நின்றார்.

எந்தப் பிள்ளையும் அதனால் இயன்ற அளவுக்கு மேம்படுவதை உறுதிசெய்வது அத்தகைய பிள்ளைகளுக்கு மட்டுமின்றி சிங்கப்பூரின் நலனுக்கும் அவசியம் என்று அவர் கருதினார். “குறைபாடுகள், செலவுகள், சிக்கல்களைப் பிறகு பார்க்கலாம், முதலில் அவர்கள் சிங்கப்பூரர்கள்” என்பதே எப்போதும் அவர் முன்வைக்கும் முதல் வாதம். இன, மொழி, சமய வேறுபாடுகள் மட்டுமின்றி உடற்திறன், அறிவுத்திறன் வேறுபாடுகளுக்கும்கூடச் சிங்கப்பூரர்களைப் பிரித்துவிடக்கூடாது என்று கவனப்படுத்திக்கொண்டே இருந்தார்.

“குறைபாடுகள், செலவுகள், சிக்கல்களைப் பிறகு பார்க்கலாம், முதலில் அவர்கள் சிங்கப்பூரர்கள்” என்பதே எப்போதும் அவர் முன்வைக்கும் முதல் வாதம்.

அடிப்படையான மாற்றங்களின் அவசியத்தைத் தொடர்ந்து முன்வைத்த லியானா வேறுபடத் துணிந்துநில் (dare to be different) என்பதைத் தன் தாரக மந்திரமாகக்கொண்டிருந்தார். அதை வலியுறுத்தியதோடு மட்டுமின்றி வாழ்ந்துகாட்டவும் செய்தார். இங்கிலாந்தில் படித்தபெண், இளவயதிலேயே பெரிய பதவியில் அமர்ந்தபெண், பிள்ளை வளர்ப்புக்காக வேலையை விடுவது தோல்வி என்று கருதவில்லை. சமூக அழுத்தத்திற்கு ஆளாகாமல் அங்கு வேறுபட்டு நின்றார். ஒரு சாதாரணத் தொண்டூழியர் எவ்வளவு நிதி திரட்டமுடியும், கொள்கைவகுப்பில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட என மலைக்கவும் இல்லை. எங்கும் எப்போதும் வேறுபடத் துணிந்தே இருந்தார்.

வேறுபடத் துணிந்து நிற்கும் விதி, மாற்றங்கள் காலப்போக்கில்தான் வரும் என்றுணர்ந்த விவேகம், நெடிய போராட்டப் பயணத்தில் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாது சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்ச்சி, அடிமேல் அடிஅடித்து அம்மிக்கல்லை நகர்த்திவிடும் விடாமுயற்சி என லியானா தம்பையா விட்டுச்சென்றுள்ள வாழ்க்கைத் தத்துவத்தைக் கைக்கொள்ள முனைவது அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும். அது நம்மையும் சிங்கப்பூரையும் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்.

உசாத்துணை

https://www.nas.gov.sg/archivesonline/oral_history_interviews/record-details/ec4a806c-115f-11e3-83d5-0050568939ad
https://www.swhf.sg/profiles/leaena-tambyah/
https://www.todayonline.com/singapore/moe-extends-compulsory-education-special-needs-children
https://www.straitstimes.com/singapore/leaena-tambyah-the-lioness-of-the-asian-women-s-welfare-association-dies-at-86
https://www.awwa.org.sg/awwa-school/#
https://www.herworld.com/woman-of-the-year/leaena-tambyah-woman-of-the-year-1994/
https://theindependent.sg/paul-tambyahs-mother-awwa-school-founder-leaena-tambyah-dies-at-age-86/
https://medicine.nus.edu.sg/giving/author/medicine/