உக்கிரம்

மணிமாலா மதியழகன்

காதுகள் கதவு மணி அழைப்புக்காகக் காத்திருந்தன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அகிலன் வந்துவிடுவான். அந்தந்தப் பொருள்கள் அந்தந்த இடங்களில் நேர்த்தியோடு வைக்கப்பட்டிருந்த வீட்டைச் சுற்றிக் கண்களை அலையவிட்டான். எப்பவுமே இப்படியிருந்தா நல்லாத்தான் இருக்கும் என்ற எண்ணம் லேசாக முளைவிட்டது. ‘எதுக்கு?’ என்ற கேள்வி, முன்னெழுந்த எண்ணத்தை சட்டெனப் பின்னுக்குத் தள்ளியது. கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே வந்து மின்தூக்கியைப் பார்த்தான். இப்போது வேலையே இல்லை என்பதைப்போல அது தரைத்தளத்திலேயே நின்றிருந்தது.

காரிடாரில் நின்றிருந்த எதிர்வீட்டு ஆண்ட்டி ஐரீன் அவனைப் பார்த்தவுடன் “யூ சீ… மை ட்ரம்பட் லில்லீஸ் புளூமிங்…!” என்றார். அவர் முகத்திலுள்ள சுருக்கங்கள் தற்காலிக ஓய்வை தேடிச் சென்றிருக்க, கண்களோ குழந்தைகளைப் பார்ப்பதுபோலக் கனிவுடன் மலர்களை வருடின.

அவனது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வீட்டில் புதிதாகத் திருமணமாகிய ஓர் இளம் தம்பதியர் குடி வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. ஆண்ட்டி வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வீட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்தனர். தாழ்வார ஓரத்திலுள்ள கம்பிகள், அவர்களது வீட்டின் மேலும் கீழுமுள்ள தாங்காப்படிகளின் குட்டைச் சுவற்றிலுள்ள கம்பிகள் என வெயில் தலைகாட்டும் இடங்களெல்லாம் ஆண்ட்டி வீட்டுச் செடிகள் செழிப்புடன் காணப்பட்டன.

காலணிகளை அணிந்துகொண்டு பூந்தொட்டிகளுக்கு அருகே சென்றான். மின்தூக்கிக்கு அருகிலுள்ள குட்டைச் சுவற்றின் கம்பியில் மாட்டியிருந்த தொட்டிச் செடிகளில் ஒன்றில் நான்கு இள ஆரஞ்சு வண்ண மலர்கள், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளமாட்டோம் என்பதைப்போல வெவ்வேறு திசைகளை நோக்கியிருந்தன.

“லாங் டேஸ் ஆஃடர், இட்ஸ் புளூமிங்!” ஐரீன் ஆண்ட்டியின் முகத்தில் புன்னகைப் பூ மலர்ந்திருந்தது. அவரது உற்சாகம் அவனையும் தொற்ற, “வாவ்… வெரி நைஸ்!” என்றான். எதிர் வீட்டிலிருந்து இருமல் சத்தம் கேட்டது. ஆண்ட்டி உடனடியாகப் பார்வையால் விடைகொடுத்துவிட்டுக் கால்களை எட்டி வைத்தார்.

‘நான் அகிலைப் பார்க்கிற மாதிரி இந்தப் பூக்களைப் பார்க்கிறாரே! என்ன மாயம் செய்திருக்கும்’ என்பதைப்போலப் பூந்தொட்டியைப் பார்த்தான். மென்மையாய் வீசியக் காற்றில் மலர்கள் லேசாக ஆடின.

மின்தூக்கியைப் பார்த்தவன், மகன் வர்ற நேரம்தானே எனத் தனக்குள் சமாதானமும் செய்துகொண்டான். நான்கு பூக்களில் ஒன்றில் அமர்ந்த மஞ்சள் வண்ணப் பட்டாம்பூச்சி சட்டெனப் பறந்து சென்றது. ஏக்கத்துடன் மீண்டும் மின்தூக்கியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றான். மணி ஒன்பதைக் கடந்து அரை மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது. மூன்றாவது சனிக்கிழமை அவன் வாழ்வில் முக்கியமான நாளாக மாறிப் போய் ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை மகனின் அருகாமையில் மனம் குளிர்ந்திருப்பான்.

காதலித்து கரம்பிடித்த திவ்யாவின் நினைவைத் தொடர்ந்து, மண வாழ்க்கை முடிவுக்கு வந்த நாளும் நினைவுக்கு வந்ததில் மனம் பாரமானது. மழையில் நனைந்த மைனா தலையை உதறி நீர்த்துளிகளை அகற்றுவதைப்போல லேசாக தலையை உதறினான். கசந்த நினைவுத் துளிகள் அகலமாட்டேன் என அடம்பிடித்தது. கைபேசியை எடுத்தான். நாளை அனுப்பி வைக்கிறேன் என்று முதல் நாள் இரவு எட்டு மணிக்கு அவளிடமிருந்து வந்த தகவலைத் தவிர வேறு எதுவுமில்லை. போனடித்தாலும் எடுக்கமாட்டாளே எனத் தோன்றினாலும் கைபேசியை எடுத்தான். எண்ணியவாறே அழைப்புக்குப் பதில் இல்லை. ‘அகில் இன்னும் வரவில்லை’ என்ற குறுந்தகவலை அனுப்பினான்.

மணி ஒன்பது நாற்பத்தைந்து ஆகியிருந்தது. மகன் வருகிறான் என்பதற்காகவே, காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் முக்கியமான மீட்டிங்கைக்கூடத் தவிர்த்திருந்தான். ‘சூம்’ வழியேயும் கலந்துகொள்ளலாம் என்றதையும் ஏற்கவில்லை. பிள்ளையுடனிருக்கும் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்று நினைத்தான். மனத்தில் வெறுப்பு மண்டியது.

ஒருமுறை, இரவு மணி ஏழு பத்துக்கு அகிலனை அவள் வீட்டில் கொண்டுவிட்டான். வழியில் விபத்து ஏற்பட்டிருந்ததால் வருவதற்கு ஒருவேளை சற்றுத் தாமதமாகலாம் என்று முன்கூட்டியே குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தான். எதிர்பார்த்ததைப்போலவே சில நிமிடங்கள் தாமதமாகின. திவ்யாவிடம் நிலைமையை எடுத்துச் சொன்னதோடு மன்னிப்பையும் கேட்டுவிட்டுதான் திரும்பினான். சில நாட்களில், சொன்ன நேரத்தில் பிள்ளையை வீட்டுக்கு அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டை சுமந்துகொண்டு வக்கீல் நோட்டீஸ் அவனைத் தேடி வந்தது.

மணி பத்தும் ஆகிவிட்டது. அவள் குறுஞ்செய்தியைப் படித்தாளா என்றுகூடத் தெரியவில்லை. பல முறை அழைத்தும் பயனில்லை. “நெஞ்சழுத்தக்காரி…!” வெறுப்புடன் கைபேசியை விட்டெறிந்தான்.

கதவுமணி அழைத்தது. பரபரப்புடன் சென்று கதவைத் திறந்தான். “வீட்டில் கொசு இருக்கிறதா?” எனப் பார்வையிட ஒருவர் வந்திருந்தார். ஒன்றுமே சொல்லாமல் கதவைத் திறந்துவிட்டான். சமையலறையின் கை கழுவும் தொட்டியின் கீழ்ப்பகுதி, கை கழுவும் தொட்டிக்கும் மேலே பாத்திரங்கள் கவிழ்த்து வைத்திருக்கும் இடத்தையும் கைவிளக்கின் உதவியுடன் பார்த்ததோடு இரண்டு கழிவறைகளையும் பார்த்துவிட்டு கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார்.

சில நிமிடங்கள் மின்தூக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அது அவனது தளத்தில் நிற்காமல் மேலும் கீழுமாகப் போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்குள் செல்லத் திரும்பினான். மேல் தளத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கும் கறுப்புப் பூனை மெல்லப் படியிறங்கி வந்தது. திவ்யாவுக்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும். தானும் வளர்க்க வேண்டுமென ரொம்பவும் ஆசைப்பட்டாள். அவனுக்குப் பூனை என்றாலே ஆகாது. அதோட முடி வீடு முழுக்கக் கொட்டி நமக்கு சீக்கு வந்துடும் என அவளது ஆசையை அப்போதே முடக்கினான்.

அவனுக்குப் பூனை என்றாலே ஆகாது. அதோட முடி வீடு முழுக்கக் கொட்டி நமக்கு சீக்கு வந்துடும் என
அவளது ஆசையை அப்போதே முடக்கினான்.

மேல் வீட்டுப் பூனை சில சமயங்களில் கீழே வரும். அகிலன் அதன் தலையைத் தடவிக்கொடுத்துக் கொஞ்சுவான். அந்தச் சமயங்களில் வெறுப்பை மறைக்க இவன் மிகவும் சிரமப்படுவான். “அப்பா… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்த பர்த்டேக்கு அம்மா எனக்குப் பூனை வாங்கித் தர்றதா சொல்லியிருக்காங்க. நான் அதுக்குப் பேர்கூட வச்சிட்டேன். பேரைச் சொல்லவா? டினோ. நல்லாருக்காப்பா?” மகன் பூரிப்போடு கேட்டபோது மனம் சுருங்கிப் போனான். பூனையிடம் அதிகமாக நெருங்கக்கூடாது என அறிவுரைகளை அடுக்கினான். “நீங்க நினைக்கிற மாதிரில்லாம் இல்லைப்பா” ஒரே வாக்கியத்தில் அகிலன் முடித்துவிட்டான்.
‘இன்னும் என்னைக் கவனிக்கவில்லையே?’ என வயிறு நினைவூட்டியது. மகன் வரும் நாளில் அவனுடன் சேர்ந்து பசியாறுவதுதான் வழக்கம். ‘ஃபிரெஞ்ச் டோஸ்ட்’ செய்வதற்காக வெளியே எடுத்து வைத்திருந்த முட்டைகள் மறுபடியும் குளிர்பதனப்பெட்டிக்குள் சென்றன. உணவு மேசையிலிருந்த தண்ணீர்க் குடுவையை எடுத்தவன் குவளையில் ஊற்றாமல் அப்படியே சாய்த்துக் குடித்தான். தரையில் சில சொட்டுகள் சிந்தின. மெல்லிழைத் தாளால் கவனமாகத் தரையைத் துடைத்தான். மீண்டும் கைபேசியில் திவ்யாவை அழைத்துப் பார்த்தும் பதிலில்லை.

‘ஏன் இன்னும் அகிலன் வரல? பேசாம அவளது வீட்டுக்கே போகலாமா?’ என்ற எண்ணத்தை விரட்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை.

‘நான் அவனைத் தேடிப் போக, அந்த நேரத்தில் பிள்ளை இங்கே வந்துவிட்டால்…!’

‘அவன் தனியேதான் போய் வரணும்!’ கண்டிப்பானச் சொற்கள் நினைவுக்கு வந்தன.

‘மகாராணியோட பேச்சை மீற முடியுமா?’ கோபத்தோடு தரையை உதைத்த வேகத்தில் கால் வலித்தது.

“ஏழு வயசுப் பையன்… யாரோட உதவியுமில்லாம அவனோட வேலையை அவனே பாத்துக்கணுமாம்… இதெல்லாம் அநியாயமில்ல…?” வெறுப்பு முணுமுணுப்பாய் வெளிப்பட்டது. நேரம் காலம் புரியாமல் வயிறு சத்தம் கொடுத்ததால் சோபாவில் சுருண்டு படுத்தான். மணி பதினொன்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நப்பாசையில் போனடித்துப் பார்த்தான். அழைப்பை அவள் சட்டைபண்ணவில்லை. ‘அஞ்சு நிமிஷம் லேட்டா போயிட்டா அவ்ளோ அலப்பற பண்ணுவா? இந்தச் சட்டத் திட்டம்லாம் அவளுக்குக் கிடையாதா?’ கோபத்தில் காது மடல்கள் சிவந்திருந்தன.

“ஏழு வயசுப் பையன்… யாரோட உதவியுமில்லாம அவனோட வேலையை அவனே பாத்துக்கணுமாம்…
இதெல்லாம் அநியாயமில்ல…?”

‘எனக்கு மட்டும் சட்டம் தெரியாதா என்ன?’

மடிக்கணினியை எடுத்து காபி மேசையின்மீது வைத்தான். இரண்டு பத்திகள் அடித்ததும் மின்னஞ்சலைப் படித்துப் பார்த்தபோது, திருப்தியாக இல்லை. அழித்துவிட்டு மறுபடி ஆரம்பித்தான். முன்பைவிட மோசமாக வரவும் பட்டெனக் கணினியை மூடினான். புகைப்படத்திலிருந்து, திவ்யா அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிப்பதுபோலத் தோன்றியது. ‘சே… இந்தப் போட்டோவை மறுபடி மாட்டியிருக்கவே கூடாது’ தலையைத் திருப்பிக்கொண்டான்.

சில மாதங்களுக்கு முன்பு, அகிலன் விளையாடிக்கொண்டிருந்தபோது உருண்டோடிய காற்பந்து கட்டிலுக்குக் கீழே சென்றுவிட்டது. துணி காய வைக்கும் குச்சியால் வெளியில் தள்ளலாம் என நினைத்து குச்சியை எடுத்துக்கொண்டு வருவதற்குள், அகிலன் கட்டிலுக்குக் கீழே நுழைந்து பந்தை எடுத்திருந்தான். கூடவே அம்மாவும் அப்பாவும் இருக்கும் பெரிய புகைப்படத்தையும். மகன்மேல் ஒட்டியிருந்த தூசை அவன் துடைத்தபோது, மகனின் பார்வை புகைப்படத்திலேயே பதிந்திருந்ததைக் கண்டும் காணாதமாதிரி இருந்தான்.

அவனுக்கும் திவ்யாவுக்கும் முதன் முதலில் சண்டை வந்தபோது கூடத்தில் மாட்டியிருந்த அந்தப் போட்டோவைதான் முதலில் வேகமாகக் கழற்றினாள். என்ன செய்கிறாள் என யோசிப்பதற்குள் போட்டோவை தலைக்குமேல் தூக்கி படாரெனத் தரையில் வீசினாள். கண்முன் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை நம்பவியலாமல் பார்த்துக்கொண்டு நின்றான்.

பாசிர் ரிஸ் கடற்கரையில் யாரோ ஒருவர் அவனது கைபேசியில் எடுத்துக் கொடுத்த புகைப்படம், திருமணப் பதிவின்போதும் அதற்கடுத்து திருமணவிழாவின்போதும் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த படங்களைப் பின்னுக்குத் தள்ளியது.

இருள் கவியத் தொடங்கும் மாலை நேரத்தில், இள ஆரஞ்சு வண்ணப் பின்னணியில் விடைபெறும் சூரியனின் கதிர் மென்மையாய் அவர்கள் முகத்தில் படர்ந்திருந்தது. ‘இந்தப் ஃபோட்டோவை எவ்வளவு நேரம் வேணும்னாலும் பார்க்கலாம்’ என்று சொல்வதோடு விடாமல் கைபேசியில் பார்த்துக்கொண்டும் இருப்பாள். கல்யாணத்திற்குப் பிறகு வந்த அவளது பிறந்தநாளுக்கு அந்தப் படத்தைப் பெரிதுபடுத்திப் பரிசளித்தான். கூடவே ஒரு வைர மோதிரத்தையும் கொடுத்தான். புகைப்படத்தைக் கண்ட மனைவியின் கண்களில் என்றுமில்லா ஒளியைக் கண்டான். வைர மோதிரம் தாமதமாகவே அவள் விரலுக்குச் சென்றது.

“ப்பா… நான் சொல்றது கேக்குதா?”

நினைவுகளிலிருந்து மீண்டவன் “என்னடா செல்லம்?” என்று கேட்டான்.

“இந்தப் ஃபோட்டோவை ஹால்ல மாட்டி வைச்சா நல்லாயிருக்கும்பா”

மகனது ஆசையை நிராகரிக்க முடியுமா?

‘தேங்க்யுப்பா’ என்று கன்னத்தில் அகிலன் அழுத்தமாய் முத்தம் கொடுத்தான். லேசான ஈரத்துடன் மெத்தென்று பதிந்த இதழ் நினைவுக்கு வந்தது. மென்மையாகக் கன்னத்தைத் தடவிப் பார்த்தான். ‘இன்னமும் பிள்ளை வரல. ஒரு போனடிச்சி சொல்றதில அவளுக்கு என்ன வந்திச்சி?’ கோபம் காட்டுத்தீயைப்போலப் பரவியது.

எதிர்வீட்டு அங்கிளின் இருமல் சத்தம் அதிகமாகக் கேட்டது. ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர். கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவர்களது வீட்டுக் கதவுக்கருகில் நின்றவாறு “ஆண்ட்டி, நீட் எனி ஹெல்ப்?” என்று கேட்டான்.

“நோ ப்ரோப்ளம்… ட்ரை காஃப் ஒன்லி. தேங்க்யூ டியர்” மெல்லிய புன்னகையை உதிர்த்தார். எட்டாண்டுகளுக்கு முன், முதன் முதலாக வீடு வாங்கிக்கொண்டு வந்தபோது பார்த்த அதே புன்னகை. அவர்கள் இருவரும் வெளியில் போகும்போது மட்டுமே அவர்களது வீட்டுக் கதவு மூடியிருக்கும். நேரெதிர் வீடு என்பதால், ‘நம்ம வீட்டுக் கதவைத் திறந்தாலே அவங்களைப் பார்க்க வேண்டியிருக்கு’ என்று திவ்யா ஆரம்பத்தில் குறைபட்டுக்கொண்டாள். நாளடைவில் அவளுக்கும் அவர்களுடன் நல்ல நட்பு உண்டானது.

“இந்த ஆண்ட்டியையும் அங்கிளையும் பார்த்தா பொறாமையா இருக்குங்க. ஒருத்தருக்கொருத்தர் எவ்ளோ அன்யோன்யமா இருக்காங்க தெரியுமா? வேலைக்குப் போகும்போதும் ஒன்னா போனாங்க. இப்ப ரிடையர்மென்ட் லைஃபையும் சேர்ந்தே அனுபவிக்கிறாங்க” மனைவி சாதாரணமாகச் சொன்னது மனத்தைப் பதம் பார்த்தது.

ஒருத்தருக்கொருத்தர் எவ்ளோ அன்யோன்யமா இருக்காங்க தெரியுமா? வேலைக்குப் போகும்போதும்
ஒன்னா போனாங்க. இப்ப ரிடையர்மென்ட் லைஃபையும் சேர்ந்தே அனுபவிக்கிறாங்க

அவன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிளைகள் இருந்தன. அதனால் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ‘இப்படி மாசத்துல முக்காவாசி நாள் பறந்துகிட்டேயிருங்க. ஒரு நாள் இல்ல ஒருநாள் நான் சொல்லாமகொள்ளாமப் பறந்துடறேன்’ என்று சொல்லிச் சிரிப்பாள். அவளது ஆதங்கத்தைப் புரிந்த அவனும், ‘இன்னும் ஓரிரு வருசம்தான் இப்படிப் போக வேண்டியிருக்கும். அப்புறம் பதவி உயர்வு கிடைச்சிடும். அப்புறம் பாரு…’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வான்.

அகிலன் பிறந்த பிறகு அவள் மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தாள். பணிப்பெண்ணின் உதவியுடன் குழந்தையைப் பார்த்துக்கொள்வது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு அவளிடம் மாற்றம் ஏற்பட்டது. அவன் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது சில சமயங்களில் அவனது அழைப்பைக்கூட எடுப்பதில்லை.

“புள்ளைக்கு சரியான காய்ச்சல், ரெண்டு நாளு விடுப்பு எடுத்துக்கிட்டு வீட்டுலதான் இருந்தேன். அப்புறம் காய்ச்சல்விட்டு சளித்தொல்லை பெருசானது. அதனால சரியா தூங்கறதுமில்ல. ராத்திரில்லாம் கொஞ்சமும் கண்ணை மூடாம அவனைக் கவனிச்சிக்கிட்டு, காலையில எழுந்ததும் வேலைக்கு ஓட முடியலங்க. நீங்க பக்கத்துல இருந்தா எனக்கு ரொம்பவும் ஆதரவாயிருக்கும். இங்கேயே ஏதாவது வேலை தேடிக்குங்களேன்” என்றாள்.

“எனக்கும் புரியுதும்மா. இன்னும் கொஞ்ச நாள்தான். எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிடும். அப்புறம் ஒண்ணும் பிரச்சினையில்ல. எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன்” என்றான்.

கொவிட் பெருந்தொற்று உலகை ஆட்டுவிக்கத் தொடங்க, அச்சத்தின் காரணமாக பணிப்பெண் தாயகத்திற்குப் போய்விட்டாள். ஓட்டமாய் ஓடியவர்களது கால்களை முடக்கநிலை கட்டிப்போட்டது. இருவருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்தனர். புதிய பணிப்பெண் தேடும் படலமும் நிறுத்தி வைக்கப்பட, ஈராண்டுகள் பிரச்சினை எதுவுமின்றி ஓடியது.

கொவிட் கிருமியோடு வாழப் பழகிக்கொள்ளதான் வேண்டும் என்றான பிறகு மீண்டும் பணிப்பெண் தேடும் முயற்சியில் இறங்கினர். அவன் வேலை விஷயமாகப் பறந்துகொண்டிருக்க, பிள்ளையைக் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அவள் வேலைக்குப் போனாள். அகிலுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் என வரத் தொடங்கியது.
“வேலைக்கும் போய்க்கிட்டு பிள்ளையையும் பாத்துக்கிறது ரொம்பவும் கஷ்டமா இருக்குங்க. நீங்க இங்கேயிருந்தா எனக்கு ஒரு பிரச்சினையுமில்ல.”

“எப்பப் பாரு இதையே சொல்லிக்கிட்டிருக்காதே… எனக்கு மட்டும் இங்கேயே இருக்கணும்னு ஆசை இல்லாமலா இருக்கு? உனக்கு இஷ்டம்னா வேலைக்குப் போ. இல்லன்னா வீட்டில சும்மா இரு. மனுசனைப்போட்டுப் படுத்தி எடுக்காதே.”

“ஓகோ… நான் சும்மாயிருக்கணுமா? பிள்ளையப் பாத்துக்கிறது அம்மாவோட வேலைன்னு எழுதி வச்சிருக்கா என்ன? உங்க வேலை உங்களுக்கு முக்கியம்னா என்னோட வேலை எனக்கும் முக்கியம்தான்.”

சிறு புகை, கேட்பாரற்றுப் போனதால் பெருந்தீயானது. நாளும் பிரச்சினையோடு போராடுவதை விட்டுவிட்டுப் பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவிற்கு இருவருமே வந்தனர்.

சிறு புகை, கேட்பாரற்றுப் போனதால் பெருந்தீயானது. நாளும் பிரச்சினையோடு போராடுவதை விட்டுவிட்டுப்
பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவிற்கு இருவருமே வந்தனர்.

கடந்தகால நினைவுகளிலிருந்தவனை கைபேசி அழைத்தது. நண்பன் ஒருவனது அழைப்பு. எடுத்துப் பேசும் நிலையில் மனம் இல்லை. ‘இன்னும் அகில் வரலையே’ தவிப்பு கூடியது. கூடத்தின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகனது சைக்கிளின் மீது பார்வை போனது. ‘காத்து இருக்குமா?’ சட்டென எழுந்தான். சென்ற முறை மகன் வந்திருந்தபோது சைக்கிளில் காற்று இல்லை. காற்றடித்துப் பார்த்தும் பலனில்லை. மகனது சுருங்கிய முகத்தைக் காணப் பொறுக்காது, சைக்கிளுடன் அவனையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான். கடை மூடியிருந்தது.

“அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்பா” என்பதைக் காதில் வாங்காது, சைக்கிளை காருக்குள் வைத்துவிட்டு மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான். அவர்களது பக்கத்து வட்டாரத்திலிருந்த கடையில் ஒரு பெண்மணி ஐந்தே நிமிடங்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். மகனது நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டோம் என்பதோடு கூடுதலாகக் கிடைத்த முத்தத்தால் அவன் மனத்துக்கு சிறகு முளைத்தது. மகிழ்ச்சியைக் கொண்டாடும்விதமாக கிழக்குக் கடற்கரையை நோக்கிக் காரை திருப்பினான். உற்சாகத்துடன் புரண்டுகொண்டிருந்த வெயிலைக் கொஞ்சமும் மதிக்காது அப்பாவும் பிள்ளையும் சைக்கிளில் சுற்றி வந்தனர்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனின் கண்களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. ‘பாழாய்ப்போன கிருமித்தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு தள்ளிப் போன எரிச்சலை அவளிடம் காட்டிவிட்டேனே’ எனக் குமைந்தான்.
விவாகரத்து ஆனபிறகு திவ்யா தீராப் பகையாளிபோலச் சிறுசிறு செயல்களுக்கும் பழி வாங்கினாள். குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளையைக் கொண்டுவந்து விடவில்லை; ஐஸ்கிரீம் கொடுத்து சளி பிடிக்க வைத்துவிட்டான்; சைக்கிள் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி பிள்ளைக்கு அடிபட வைத்தான் எனக் குற்றப் பத்திரிகையின் கனம் கூடிக்கொண்டே போனது.

“புள்ள புள்ளன்னு பின்னாடியே ஓடுறதாலதான் இந்தப் பிரச்சினைல்லாம் வருது. பேசாம உனக்குப் பிடிச்ச யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிற வேலையைப் பாரு” உறவினர்கள் அறிவுரைகளை வழங்கினர். “உன் பொண்டாட்டி அனுப்புற வக்கீல் நோட்டீசுக்கே நீ தனியா சம்பாதிக்கணும்போல” நண்பர்கள் கிண்டல் செய்தனர்.

எல்லா விமர்சனத்திற்கும் மௌனத்தையே பதிலாக்கினான். அபத்தமாகப்பட்ட எதையும் யோசிக்கக்கூட மனம் தயாராகயில்லை. அமைதியாய் இருப்பவர்களை இச்சமூகம் சும்மாவிடுமா? நேரம் கிடைக்கையில் தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது. பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு கிஞ்சித்தும் எழவில்லை.

சோஃபாவிலேயே துவண்டு கிடந்தவன், அழைப்பு மணியின் ஓசைக்குப் பரபரப்புடன் எழுந்தான். “இதோ வந்துட்டேன்டா” பெருகும் உவகையுடன் கதவைத் திறந்தபோது வீட்டுக்கு வெளியே ஆண்ட்டி ஐரீன் நின்றிருந்தார். பார்வை அவரையும் தாண்டிப் போனது. மகனைக் காணவில்லை. லேசாகச் சுருக்கிய புருவத்துடன் பார்த்தவனிடம், “ஐ மேட் அ கேக் ஃபார் அகில்ஸ் பர்த்டே” என்றார். மேல் வீட்டுப் பூனை குரல் கொடுத்துக்கொண்டே படிகளில் இறங்கியது.