உதிரிப்பூக்கள்

0
259

புதியஆராய்ச்சி நிறுவனம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD), சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (SIT), A*STAR ஆகியவை இணைந்து கரைப் பாதுகாப்பு, வெள்ள மீள்தன்மைக்காக CFISG என்ற ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர். அரசு, தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவை இணைந்து இதில் தரவுகளை ஒன்றிணைத்து மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிப்படையக்கூடிய நாடுகளில் சிங்கையும் ஒன்று. பொதுப் பயனீட்டுக் கழகத்தின் 125 மில்லியன் வெள்ளி நிதியுடன் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய நிறுவனம், சுற்றுச்சூழல், உயிர்ப்பன்மம், அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும்.

ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் மிதிவண்டிப் பயணம்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரிலிருந்து மே 1ஆம் தேதி துவங்கிய ஒரு மிதிவண்டிப் பயணம் 129 நாள்களுக்குப் பின் சிங்கையின் தானா மேரா படகுத்துறையில் நிறைவடைந்தது. உயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் இயான் வாலிஸ் (வயது 65), பணி ஓய்வுக்குப் பின்னர் ஓர் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாக இந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் கிளம்பி ஈஸ்ட் திமோர், இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக பாத்தாம் தீவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். தீவுகளுக்கு இடையில் படகுகளில் பயணம் செய்துள்ளார்.

புதிய மின்கலன் தொழில்நுட்பம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு உலோகங்களற்ற மிக மெல்லிய மின்கலம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கண்களில் பொருத்தப்படும் தொடுவில்லை மூலமாக, அணிபவர் காணும் அனைத்தையும் காணொளிகளாக மேகக்கணினியில் சேமிக்க இந்த மின்கலம் உதவும். இதிலுள்ள குளூக்கோஸ் படலம் உப்புக்கரைசலில் உள்ள சோடியம், குளோரைடு அயனிகளுடன் வினைபுரிந்து சிறிய அளவிலான மின்சாரத்தைச் சேமிக்கிறது. நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் வேறு பல கண்காணிப்புக் கருவிகளுக்கும் இந்த மின்கலம் பயனளிக்கும். உடலில் சுரக்கும் வியர்வை, கண்ணீர் போன்றவையும் உப்புக் கரைசல்களே என்பதால் இதன் பயன்கள் பல்வேறு வகைகளில் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாயகம் செல்லும் பாண்டா

சீனாவின் ‘பாண்டா அரசநயம்’ (Panda Diplomacy) ஒப்பந்தப்படி சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட காய் காய், ஜியா ஜியா பாண்டாக் கரடிகளுக்குப் பிறந்த குட்டிப் பாண்டா ‘லெ லெ’வுக்கு தற்போது வயது 2 ஆகிறது. ஒப்பந்தப்படி வெளிநாடுகளில் பிறந்த பாண்டாக்கரடிகளை 2 வயது ஆனபின் சீனாவுக்கு திருப்பி அனுப்பவேண்டும். அதன்படி வரும் டிசம்பரில் லெ லெ சீனா திரும்புகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மண்டாய் உயிரியல் பூங்காவில் மக்களை மகிழ்வித்து வந்த லெ லெ ஊர் திரும்பும் செய்தி கேட்டு பலரும் மிகுந்த சோகத்துடன் உள்ளனர். பராமரிப்பாளர்களின் மிகுந்த பிரயாசையால் ஜியா ஜியா – காய் காய் ஜோடிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல் லெ லெ பிறந்தது.