மூர்த்தி சிறிதாயினும்..

ச. மோகனப்ரியா

பொடிப்பூக்கள் எனக்கு இனியவை.
சின்னஞ்சிறிய இதழ்களில்
பளீரென்ற நிறத்துடன் உறக்கத்தில்
தனக்குள்ளேயே சிரித்துக்கொள்ளும்
பிறந்த குழந்தைகளெனக்
காண்பவர்களை அதற்குள் பதுக்கும்
சூத்திரம் தெரியுமதற்கு.
உண்மையில்
சூத்திரங்களற்ற ஒரு ஏகாந்தம்
ஒளிரும் நித்தியப்பூக்கள் அவை.
தன்னைக் காணும் எதையும்
சுத்தமாக்கிவிடும்.
சில சமயம்,
வானத்தில் கார்மேகங்கள் வெண்மையாவது
அப்படித்தானென நினைக்க வைக்கும்
மாயம் கற்றவை.
கூட வரும் மழைக்கு
அச்சிறு பூக்கள்
தன் நிறத்தைக் கொஞ்சம்
பரிசளிக்கின்றன.
முதிர்ந்து மண் சேர்வது
உறுதியான நாளில்
புதியவை விளைவிக்கச்
சத்தமின்றி அவை
காற்றுடன் கிளம்பிவிடுகின்றன.

எப்போதேனும்
சின்னஞ்சிறியவைகளில்
காண வாய்க்கிறது பெரியவை.
உருண்ட வெண் தங்கம் தாங்கும் சிப்பி
ஒரு கூடை பன்னீர் ரோஜாக்களுக்கிடையே
நமக்கு பிடித்தமானவர்களின் முகம்
ஏதேனும் ஒரு மரக்கிளையின் தளிரிலைகளில்
மழைத்துளிகளின் தோரணம்
சின்னஞ்சிறு அந்தி நேரத்தை நிரப்பும்
எதிர்பாராத குயிலின் குரல்.
நிரந்தரமற்ற சிறியவற்றின் மேல் ஏற்றப்படும்
பெரியவை இந்த வாழ்வுக்கானவை
ஒரு நிழலுக்கும் மறு நிழலுக்குமான
இடைப்பட்ட காலத்தில்தான் நிகழ்கிறது
எல்லாமும்.