பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் நாஸருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் உருவாக்க நினைக்கும் புதிய ஆவணப்படம் ஒன்று குறித்து பிரஸ்தாபித்தார். சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ‘காலச்சக்கரா’ கண்காட்சி பேசிய, பேசாத பல தொல்லியல் விபரங்களோடு ‘வெப்-ஸீரிஸ்’ வகையில் அமைந்ததொரு ஆவணப்படம் குறித்த திட்டம் அது.
நாஸர் தொடர்ந்தார்: “தேசிய நூலகத்தின் ‘காலச்சக்கரா’ கண்காட்சி ஒரு மைல் கல். அது நடத்தப்பட்ட 2007க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் இந்திய ஞானமரபு, இந்திய வரலாறு குறித்த அறிவுத்தேடல் இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் ‘காலச்சக்கரா’ கண்காட்சியானது தூரநோக்குடன் எதிர்காலத்தின் செல்திசையைக் கணித்து நடத்தப்பட்ட ஒன்று” என்று புகழ்ந்தார்.
“இன்று பிற மொழிகள், மதங்கள் இந்தியாவில் தாக்கம் எற்படுத்தியிருப்பது போலவே அன்று இந்தியாவும் பிற நாட்டுச் சமூகங்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் பங்களிப்புடன் இந்தியத் துணைக்கண்டம் சாதித்திருக்கும் பல்வேறு வெற்றிகள் பற்றியெல்லாம் மத, மொழி வெறி இல்லாமல் நாம் பேசவேண்டுமே..! அவற்றையெல்லாம் ஆவணங்களாக உருவாக்கப் பாடுபடுவோம்.” என்றார் நாஸர் தன் குரலில் ஆர்வம் கொப்பளிக்க.
நாஸர் தேசிய நூலகத்தின் ‘காலச்சக்கரா’ கண்காட்சியை குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு. ‘காலச்சக்கரா’ கண்காட்சி நிறைவுற்ற பின்னர், அதன் பேசுபொருளை வைத்து ஒரு ஆவணப்படத்தையும் தேசிய நூலகம் தந்திருந்தது. அந்த ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடிகர் நாஸர்.
மீடியாகோர்ப் தயாரித்த “மனம்” என்ற தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் நாடகத்தில் நாஸர் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நாடகப் படப்பிடிப்பு நடந்த ‘ஸ்டூடியோ’விற்கு அடுத்திருந்த அறையில்தான் ‘எதிரொலி’ நடப்பு விவகார நிகழ்ச்சிக்கான எனது அலுவலகம் இருந்தது. நாஸர் நடிக்க வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டிருந்த நான், அவ்வப்போது எனது அலுவலகத்திலிருந்து மெதுவாக நழுவி, படப்பிடிப்பைப் பார்க்கச் சென்றுவிடுவேன்.
நானும் மீடியாகோர்ப் தொலைக்காட்சியில்தான் பணியாற்றுகிறேன் என்பதாலும், “மனம்” தொடர் நாடகத்தின் இயக்குனரான வெங்கா எனது நண்பராக இருப்பதாலும் நாஸருடனான அறிமுகம் சுலபமாயிற்று. அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். கூத்து, இலக்கியம், தமிழ்ப் பாரம்பரியம் என்பனவற்றில் கடும் ஈடுபாடு கொண்டவர் நாஸர். நான் ஈழத்தமிழன் என்பதை அவர் அறிந்து கொண்டபின் நம் அரட்டை அரங்கம் ஈழத்து இலக்கியம், கவிதை என மேலும் ஒரு படி அதிகரித்துக் கொண்டது.
அடிக்கடி சிங்கப்பூருக்கு படப்பிடிப்புக்களுக்காகவும் சொந்த வேலைகளுக்காகவும் தன் நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுமென நாஸர் வருவதுண்டு. எனக்கும் சந்திக்க வாய்ப்பு வந்துவிடும். ‘ப்ரோட்காஸ்ட் ஏசியா’ போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பெருங் கண்காட்சிகள் சிங்கப்பூரில் நடக்கும்போது அவற்றுக்கும் தவறாமல் வந்துவிடுவார். கணினிகள், கமெராக்கள் நிறைந்திருக்கும் சிம்லிம் ஸ்கொயர், சிம்லிம் டவர், ஃபூனான் சென்டர் இவையெல்லாம்கூட அவரது சுற்றுலாத் தலங்கள் என்றும் சொல்லலாம்.
புதிய தொழில்நுட்பங்களில் எவ்வளவு பிரியமோ அதே அளவு பிரியத்துடன் பழைய கலைப்பொருட்களைச் சேகரிப்பதும் நாஸரின் வழக்கம். சுங்காய் ரோடு பழைய பொருள்கள் சந்தையில் கலைப்பொருள்கள் வாங்க அலைவதற்காகவே நாஸர் சிங்கப்பூர் வருகிறாரோ என்று அக்காலகட்டத்தில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. கலைப்பொருள்களுக்கு அவர் பேரம் பேசுவதில்லை. சொல்லும் விலைக்கே வாங்கி விடுவார்.
‘காலச்சக்கரா’ கண்காட்சியைத் திட்டமிடும் ஆரம்ப நிலையிலேயே, அத்துடன் ஆவணப்படம் ஒன்றையும் உருவாக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டோம். ‘காலச்சக்கரா’ கண்காட்சியின் திட்ட மேலாளராகப் பணியாற்றிய புஷ்பலதா நாயுடு ஒருகாலத்தில் மீடியாகோர்ப் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாயிருந்த, அனுபவமிக்க மூத்த அதிகாரியாவர். நான் மீடியாகோர்ப் தமிழ் செய்திப்பிரிவின் நடப்பு விவகார நிகழ்ச்சியான ‘எதிரொலி’க்குத் தயாரிப்பாளராக இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு தேசிய நூலகத்திற்கு வந்தவன். அதனால்தானோ என்னவோ ஆவணப்படத்தை உருவாக்குதல் பற்றி நாம் கேட்டபோது நமது மேலதிகாரிகள் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்திருந்தார்கள்.
திட்டமிட்டபடி கண்காட்சி முடிவடைந்தபின் ஆவணப்படம் ஆரம்பிக்கப்பட்டு செய்து முடிக்கப்பட்டது. உண்மையில் அந்த ஆவணப்பட வேலைகளில் ஈடுபடும்போது பெற்ற அனுபவங்களின் பெறுமதி அளவிட முடியாதது. குறிப்பாக நாஸரோடு இணைந்து பெற்ற படத்தயாரிப்பு அனுபவங்கள் பெறுமதியானவை.
‘காலச்சக்கரா’ கண்காட்சியோடு “தென்கிழக்காசியாவில் இந்திய ஆரம்பகாலத் தாக்கங்கள்” என்ற ஆய்வு மாநாட்டையும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தின் தென்கிழக்காசிய கற்கைகள் நிறுவனத்தோடு இணைந்து தேசிய நூலகம் நடத்தியிருந்தது. அந்த ஆய்வு மாநாட்டிற்கும் நாஸர் வந்திருந்தார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும் அறைகளில் ஒரு மூலையில் நாஸர் உட்கார்ந்து உரைகளை குறிப்பெடுத்துக் கொள்வார். கூடவே பல்வேறு ஆய்வாளர்களிடமும் பேசுவதும் சந்தேகங்களை கேட்பதுமாகவும் இருந்தார்.
அந்த ஆய்வு மாநாட்டிற்கு ஜப்பான் நாட்டின் தமிழ் வரலாற்றாளரும், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் நொபுரு கரோஷிமாவும் வந்திருந்தார். கோபக்காரர் என பெயரெடுத்திருந்தவர் கரோஷிமா. எட்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை சிறப்புற நடத்தியவராயிருந்தாலும் 2010ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடத்த கருணாநிதி நேரடியாகவே அழைப்பு விடுத்தபோது “உலக மாநாடு ஒன்றை நடத்த உரிய கால அவகாசம் தேவை. உங்களுக்கான அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக தமிழாராய்ச்சி செய்ய முடியாது” என மறுவாய்ப்புத் தராமல் மறுத்ததொரு நேர்மையான கொம்பன். இதனால்தான் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பதிலாக புதிதாக செம்மொழி மாநாடு கருக்கொண்டு நடத்தப்பட்டது. அரசியல் மட்டுமல்ல, தமிழ் சினிமா குறித்தும் அதிக ஆர்வம் காட்டாதவராயுமிருந்த நொபுரு கரோஷிமா நாஸரோடு மட்டும் நட்பார்ந்த வகையில் உட்கார்ந்து கருத்துப் பரிமாறுவதாயும் விவாதிப்பதுமாக இருந்தமை எமக்குப் புதுமையாக இருந்தது.
ஆங்கிலத்தில் நடந்த அந்த ஆய்வு மாநாட்டைத் தவிரவும் “காலச்சக்கரம் பேரரங்கு” என்ற தலைப்பிலமைந்த தமிழ் நிகழ்வையும் இரண்டு தடவைகள் தேசிய நூலகம் நடத்தியிருந்தது. முதல் முறை நடந்த “காலச்சக்கரம் பேரரங்கு” நிகழ்விற்கு மலேசியாவிலிருந்து பேராசிரியர் சிங்காரவேலு, ஈழத்திற்காக நோர்வேயிலிருந்து முனைவர் பொ.இரகுபதி, தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி ஆகியோரோடு நாஸரும் பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தார்.
ஆவணப்படத் தயாரிப்பிற்காக ஒன்றிற்கு மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன. தேசிய நூலக வாரிய நிர்வாகம் கோரிய திட்டவரைவு சமர்ப்பிப்புக்கள், நேர்முகத் தேர்வுகள் என பற்பல சோதனை வழிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இருந்தது. பலத்த போட்டி என்றே சொல்லவேண்டும்.
ஒப்பந்தங்கள் என வரும்போது ஊழலற்ற சிங்கப்பூரில் எதிர்பார்க்கப்படும் கண்டிப்பான நெறிமுறைகள் நமக்கு தெரியும்தானே. தனிப்பட்ட வகையில் நாஸரை சந்திப்பதைக் கொஞ்ச காலம் தவிர்த்துக் கொண்டோம். அவரும் நட்பு வேறு நிர்வாகம் வேறு என நமது இக்கட்டை சரிவரப் புரிந்து கொண்டார். சளைக்காமல் ஒவ்வொரு நேர்முகத்திற்கும் செலவைப் பாராது இந்தியாவிலிருந்து வந்துவிடுவார். ஈற்றில் நாஸரின் தயாரிப்பு நிறுவனம்தான் அந்த வாய்ப்பினை வென்றெடுத்தது.
ஆரம்பத்தில் நாஸரின் வேண்டுகோளுக்கிணங்கி, தேசிய நூலகத்தின் அனுமதியோடு அந்த ஆவணப்படத்திற்கான திரைவடிவத்தை நான் எழுதியிருந்தேன். அதன்படிக்கும் தென்கிழக்காசியாவில் இந்திய பாணியில் அமைந்த பெருங்கோயில்கள், சிற்பச் சின்னங்கள், கலைப் பொருள்களை முதல் பத்து நிமிடங்கள் சுருக்கமாகவும் விரைவாகவும் நாஸர் அறிமுகம் செய்வார். அறிமுகம் முடிந்தபின்னர், “இவற்றையெல்லாம் இந்தியக் கலைவடிவங்கள் என்று சொல்ல முடியுமா?” என்ற புதிர்க் கேள்வியையும் எழுப்புவார்.
அந்தக் கேள்வியோடு இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா, தாய்லாந்து என ‘காலச்சக்கரா’ பயணம் ஆரம்பமாகும். இந்திய துணைக்கண்டம் வழங்கிய சமயங்கள் (பௌத்தம், இந்து சமயம்), தேசம் பற்றிய கோட்பாடுகள், அரச உருவாக்கம், எழுத்துரு, நகர வடிவமைப்பு, கட்டடக்கலை, சிலை வடித்தல், கோயில்கள், ஃபூனான் அரசு, விஜயா, மாத்தாரம், பாகான் அரசுகள், வணிகத் தொடர்புகள், சீனவணிகம், தமிழ் வணிகக்குழுக்கள், சண்டிகள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், பிராமணர்கள், சோழர்களின் பிரவேசம், தாக்குதல்கள், படையெடுப்புக்கள், கைதுகள், நட்புறவுகள், கடல்பயணங்கள், ஏற்றுமதி இறக்குமதி, வர்த்தகக் கட்டமைப்புக்கள், கரந்தை செப்பேடு, ஆனைமங்கலம் செப்பேடு, தஞ்சாவூர் கல்வெட்டு, தமிழ்க் கல்வெட்டுக்கள் என பலவற்றையும் ‘ஸ்க்ரிப்ட்’ கொண்டிருந்தது.
அந்த ஸ்க்ரிப்டை முன்வைத்துத்தான் ஆரம்பத்தில் படப்பிடிப்பிற்கான பயணங்கள் தொடங்கின. ஆவணப்படத்தை படமாக்கவென்றே அன்றைய காலகட்டத்தில் புத்தம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த விலையுயர்ந்த ஃபுல் எச்.டி. ஸோனி வீடியோ கமெரா ஒன்றை நாஸர் வாங்கிவிட்டார். அந்த கமெராவோடு, சினிமா கமெராமேன் ஒருவரையும் அழைத்துக் கொண்டு இந்தோனேசியாவிற்கு முதலில் சென்றிருந்தோம். பொரபுதூர் பௌத்த கோயில், பிரம்பானன் சிவன் கோயில் இரண்டையும் விவரணங்களோடு பதிவாக்குவது என அட்டகாசமாகப் படப்பிடிப்பு ஆரம்பமானது. இரண்டாம் கட்டமாக மலேசியாவில் கடாரம் என்ற அரசு இருந்த இடத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன. மூன்றாவதாக சோழர்களின் பழையாறு, தஞ்சாவூர் பகுதிகளும், அதன்பின்னர் தாய்லாந்துப் பகுதிகளும் பதிவாகின.
கடைசியாக கம்போடியாவிற்குப் பயணம் செய்து அங்கோர் வாட் கோயிலை அக்குவேறு ஆணிவேறாகப் படமாக்கினார் நாஸர். ஒரு சூரியோதயக் காட்சியை படமாக்க மட்டும் மூன்று நாட்கள் அலாரம் வைத்து அதிகாலை எழுந்து கமெராமேனோடு ஓடினார். ஒருமுறை “அங்கோர் வாட் கோயிலை ஒரு ஏரியல் ஷாட் எடுக்க வேண்டும்!” என்கிறார் நாஸர். ராட்சத பலூன் ஒன்றை வாடகைக்கு எடுத்து வானத்தில் பறந்து படமாக்கினோம்.
இவையெல்லாம் போதாது என்று காட்சிகளில் ‘கம்பியூட்டர் அனிமேஷன்’ வேலைகளையும் இணைத்தார். ஒரு கட்டத்தில் அனிமேஷனுக்கான செலவுத்தொகை ஒத்துக் கொள்ளாதபடியால், ஓவியங்களை வரைந்தெடுத்து அதன்மூலம் ஆவணப்படத்தை மெருகூட்ட முயன்றார். அவரே ‘மொடலாக’ நிற்க பல காட்சிகள் வரைந்தெடுக்கப்பட்டன. போர் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்கான தனது உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள் பங்கேற்க சோழர்களின் தாக்குதல் காட்சிகளை ஒரு சினிமா போல படமாக்கினார்.
மறக்க முடியாத நினைவுகள் அவை. இந்த இடத்தில் ஆர்வமிகுதியால் தன்னிச்சையோடு நாம் செய்த இன்னுமொன்றையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும். ‘காலச்சக்கரா’ கண்காட்சியின் உள்நுழை வாசலிலிருந்து ஒவ்வொரு கண்காட்சிப் பொருட்களையும் ஒரே ஷொட்டில் கமெரா பார்த்துக் கொண்டு செல்வதுபோல படமாக்கினோம். பின்னர் நாஸரின் பின்னணிக் குரலுடன், வெளிப்புற காட்சிகளையும் இணைத்து “இதுதான் காலச்சக்கரா கண்காட்சி” என்ற தலைப்பில் பிறிதொரு ஒரு மணி நேர ஆவணப்படத்தை உருவாக்குவது நமது இன்னொரு திட்டம். ஆனால் “தேசிய நூலகத்தின் அனுமதி”, “காப்புரிமை” என பல கோணங்களில் நாம் சிந்தித்ததால் அந்த ஆவணப்படம் எடிடிங் கம்பியூட்டருள் முடங்கிவிட்டது.
எது எப்படியோ காலச்சக்கரம் சுழல்கிறது! இன்றுவரை தமிழர்களின் பங்களிப்புடன் இந்தியத் துணைக்கண்டம் சாதித்திருக்கும் வெற்றிகள் பல. தமிழர்களின் பங்களிப்பு ‘சிவசக்தி முனை’ என சந்திரனில் ஓரிடத்திற்குப் பெயரிடும் அளவிற்கு சென்றிருக்கிறது என்ற செய்தி உலகிற்கு தெரியும். ஒப்புநோக்க நம்முன்னோர் தென்கிழக்காசியாவின் பல முனைகளையும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அடைந்த வரலாறு எத்தனை பேருக்கு சரிவரத் தெரியும்? ஆக, நாம் நமது பெருமிதங்களை ஆய்வொளி கொண்டு நோக்க வேண்டிய தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாஸர் குறிப்பிட்டதுபோல “அவற்றையெல்லாம் ஆவணங்களாக உருவாக்கப் பாடுபடுவோம்.” இன்ஷா அல்லா..