இன்னும் அதிகமான உள்ளூர் வாசகர்களை ஈர்க்கும் நோக்கில் முதல்முறையாக ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழ் ‘மெகா இந்தியா எக்ஸ்போ’ தீபாவளிச் சந்தையில் ஒரு சிறுகடையை அமைத்திருந்தது. அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து 22 வரை நடைபெற்ற ‘மெகா இந்தியா எக்ஸ்போ’ சந்தையில் மேடையருகே தி சிராங்கூன் டைம்ஸ் கடை இடம்பெற்றிருந்தது.
மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகா இந்தியா எக்ஸ்போவில் விழா காலத்திற்குத் தேவையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்பமாய்ப் பொழுதைக் கழிக்க வந்தவர்களைக் கொஞ்சம் இலக்கியம் பக்கமும் ஈர்க்கலாம் என்னும் முயற்சியில் தி சிராங்கூன் டைம்ஸ் குழு இறங்கியது.
தி சிராங்கூன் டைம்ஸ் இதழ்கள் ஒரு தொகுப்பாகப் பொட்டலமிட்டு நேர்த்தியாக மேசையில் அடுக்கி வைக்கப்பட்டன. ஆண்டுச் சந்தாவிற்கு 30 வெள்ளி செலுத்தி விண்ணப்பிப்போருக்கு ஒரு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
நான்கு நாள் நிகழ்வில் ஆண்டுச் சந்தா உறுப்பினர்கள் சுமார் 10 பேர் சேர்ந்துள்ளனர். எண்ணிக்கை சிறிதாக இருப்பினும் எங்களோடு இணைந்தவர்களின் இதயங்களில் தமிழ்மீதான பற்று மேலோங்கி இருந்தது என்றே கூறவேண்டும். அதோடு 300க்கும் அதிகமான இதழ்கள் சந்தைக்கு வந்த தமிழ் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இதழின் இதயத்துடிப்பாக இருப்பவை விளம்பரங்கள். இந்த உயிர்நாடிக்கு ஊட்டம் சேர்க்க புது விளம்பரதாரர்களை ஈர்க்கும் முயற்சியிலும் குழுவினர் ஈடுபட்டனர். ஓரளவிற்கு அந்த முயற்சி கைகூடியது எனலாம். ஓராண்டுக்கு விளம்பரம் தருவோருக்கு 20 விழுக்காடு கழிவும் வழங்கப்பட்டது.
மூத்தோர் இதழ்களைப் படிக்க முனைப்பு காட்டினர். தி சிராங்கூன் டைம்ஸ் இதழ்களோடு உள்ளூர் எழுத்தாளர்களான முனைவர் சலீம், பொன் சுந்தரராசு, இன்பா, அழகுநிலா, ரமா சுரேஷ், மஹேஷ் ஆகியோரின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் உள்ளூர் எழுத்தாளர்களுடனும் தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழுவினருடமும் உரையாடும் வாய்ப்பை வருகையாளர்கள் பெற்றனர்.
பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, கோலாட்டம் உட்பட தவில், உடுக்கை ஆகிய பாரம்பரிய இசைக்கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. சிறார் இசைக்கருவிகளை வாசிக்க அதிக ஆர்வம் காட்டினர். சோழிகளைக் கையில் எடுத்த பெரியவர்கள், பல்லாங்குழியை விளையாடிப் பார்த்து அக்கால கம்பத்து வாழ்க்கையை நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக உள்ளூர் எழுத்தாளர்கள் பொன் சுந்தரராசு, முனைவர் சலீம், செ.ப.பன்னீர்செல்வம், சித்ரா ரமேஷ் ஆகிய நால்வருக்கும் ‘சிண்டியன்’ (Sindian) விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்மொழி, இலக்கியம், சமூகப் பணி, வரலாறு உட்பட சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பிற்காக விருதுகள் வழங்கப்பட்டன.
மெகா இந்தியா எக்ஸ்போவின் ஏற்பட்டாளர் மாலிக் விருதாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி விருதுகளை வழங்கினார். தகுதிபெற்ற நால்வருக்கு விருதுகளை வழங்குவதன் மூலம் அவர்கள்தான் ‘Sindian’ விருதுகளுக்குக் கண்ணியம் செய்கிறார்களேயொழிய விருதுகள் அவர்களைக் கண்ணியம் செய்யவில்லை என மாலிக் தெரிவித்தார். எக்ஸ்போவின் கடைசி நாளான அக்டோபர் 22ஆம் தேதியன்று, தி சிராங்கூன் டைம்ஸ் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. நடனமணிகள் எழிலாய்ப் பவனி வந்து அபிநயம் புரிந்தனர்.
நூறாவது இதழை நோக்கிச் செல்லும் தி சிராங்கூன் டைம்ஸ் இதழுக்கு உற்சாகமான ஒரு மைல்கல் நிகழ்வாக அமைந்திருந்தது தீபாவளிச் சந்தை அனுபவம்.