‘இரண்டாவது குழந்தைக்குத் தமிழ் தெரியவில்லை என்பது சரிசெய்ய வேண்டிய சமிக்ஞை’

நித்திஷ் செந்தூர்
மஹேஷ்

சிங்கப்பூரின் ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ நிறுவனமும் நவம்பர் 6ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்திய விண்வெளி அறிவியல் வல்லுநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் ஒப்பந்தம் துவாஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில் கையெழுத்தானது.

ஒப்பந்தம் மூலம் முதன்முறையாக உலகின் எந்த மூலையிலிருந்தும் ஏவக்கூடிய தளத்தின் (Mobile launch) வாயிலாகக் குறைந்த செலவில் கலவை உந்துகணையை (Hybrid rocket) விண்ணில் பாய்ச்சமுடியும். அதோடு சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கும்.

‘மிஷன் ரூமி’ என்பது திட்டத்தின் பெயர். இத்திட்டத்தின் மதியுரைஞராக மயில்சாமி அண்ணாதுரை திகழ்கிறார். சந்திரயான் 1, சந்திரயான் 2, மங்கள்யான் ஆகிய விண்கலன்களை விண்ணில் செலுத்திய பெருமைக்குரியவர் மயில்சாமி அண்ணாதுரை.

இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் முன்னாள் இயக்குநரும் மூத்த அறிவியலாளருமான மயில்சாமி அண்ணாதுரையிடம் ஒப்பந்தம், அறிவியல் ஆகியவற்றோடு தமிழ் சார்ந்தும் பல்வேறு விவரங்களை தி சிராங்கூன் டைம்ஸ் கேட்டறிந்தது.

‘மிஷன் ரூமி’ திட்டத்தைப் பற்றியும் கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியும் சுருக்கமாகக் கூறுங்கள்

சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. ஆரம்பக் காலத்தில் கலவை உந்துகணை (Hybrid rocket) தொடர்பான ஆராய்ச்சிகளைப் பெரிய அளவில் கொண்டு செல்லவில்லை. கலவை உந்துகணையில் ஆபத்து மிகவும் குறைவு. அதில் மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். ஆராய்ச்சிகளைப் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்ல முடியும். அதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

அனைத்துலக அமைப்புகளுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

இணைந்து பணியாற்றும்போது பல்வேறு அம்சங்கள் வேறுபடும். நேரம், மொழி உட்பட பொறியியல் தரநிலைகள் மாறுபடும். அரசாங்க நிலையிலிருந்து பணியாற்றும்போது, தரநிலைகளைப் பொதுவான தளத்திற்குக் கொண்டுவரவேண்டும். ஆரம்பக் கட்டங்களில் எனக்குத் தடுமாற்றமாகவும் சிரமமாகவும் இருந்தது. ஆனால் தரநிலைகளைப் பொதுவான தளத்திற்குக் கொண்டுவரவேண்டிய அவசியத்தை அனைவரும் புரிந்துகொண்டனர். அப்போது, அனைவரும் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது. குறைந்த வேறுபாடு யாருக்கு இருக்கும் என்ற கோணத்தில் பேச்சுவார்த்தையை நடத்தினோம். பல்வேறு நாட்டினரைக் கொண்டுவந்து ஒரே தளத்தில் பணியாற்றினோம். அந்த வகையில் சந்திராயன் 1 மிகப் பெரிய வெற்றி.

ஸ்டார்லிங்க் தொடர்புத் தொழில்நுட்பம் போல, இந்தியாவில் இஸ்ரோ மூலம் குறைத்த செலவில் தொலைத்தொடர்புச் சேவை உருவாக்க வாய்ப்பிருக்கிறதா?

தனியார்த் துறை மூலம் தற்போது அது நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் One Web வாயிலாக அது சாத்தியமாகும்.

சிங்கப்பூரில் தமிழ்மொழி நிலை எவ்வாறு உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தபோது பார்த்ததற்கும் தற்போதைய நிலைக்கும் கண்டிப்பாக மாறுதல் இருக்கிறது. இப்போழுது சில குடும்பங்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. பெற்றோர் தமிழ் பேசுகின்றனர். முதல் குழந்தை தமிழ் பேசுகிறது. இரண்டாவது குழந்தைக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. இதனை நான் கண்கூடாகப் பார்த்தேன். இது சரிசெய்ய வேண்டிய ஆரம்பகால சமிக்ஞை.

அசல் சிந்தனை என்பது தாய்மொழியில் நிகழ்கிறது என்னும் கருத்தை முன்வைக்கிறீர்கள். தாய்மொழி என்பதை எப்படி வரையறுத்துக்கொள்வது?

பெற்றோர் பேசும் மொழிதான் குழந்தைகளின் மொழியாக உள்ளது. அந்த மொழியைப் பேசுவதற்கு முன்னர் புரிந்துகொள்ளும் வாய்ப்பைத் தாய்மொழி உருவாக்குகின்றது. முதற்கட்ட சிந்தனைகள் எழுவது எல்லாம் தாய்மொழியில்தான். அவ்வழியிலேயே சிந்தனைகள் வந்தால் சிறப்பாக இருக்கும். சிந்தனைக்கான மொழியாகவும் மனதிற்கு நெருக்கமான மொழியாகவும் தாய்மொழி திகழும் எனக் கருதுகிறேன்.

உதாரணத்திற்கு ஆப்பிரிக்கர்கள் காலங்காலமாக ஆங்கிலம் பேசினாலும் அவர்களின் மொழி வேறு. அவர்கள் மொழிச் சிதறல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலத்தை அழகாகப் பேசலாம். ஆனால் சுயமான சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறி. தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினாலும் தாய்மொழியில் சிந்திக்கக்கூடிய குழந்தைகள் சிறப்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும்.

இரண்டாம் மொழியாகத் தாய்மொழி புழங்கும் சிங்கப்பூரில் அசல் சிந்தனைகள் எழுவது பாதிக்கப்படுமா?

கண்டிப்பாகப் பாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்

உங்களுடைய நீண்ட தொழில்முறைப் பயணத்தில் என்றேனும் எங்கேனும் தமிழ்வழிக் கல்வி என்பது தடையாக இருந்துள்ளதா?

எனக்குத் தடையாக இருந்ததில்லை. அடிப்படையிலும் அடிமட்டத்திலும் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவது தாய்மொழி. அதனைத் தாண்டி வரும்போது பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அது ஆங்கிலமாக இருக்கலாம், கன்னடமாக இருக்கலாம் அல்லது வேறேதாவது மொழியாக இருக்கலாம். தாய்மொழியில் 12 ஆண்டு படித்தது எனக்கு இன்னும் பலமாகத் துணை நிற்கிறது.

தாய்மொழியில் படித்ததால் ஏதேனும் ஒரு வகையில் தயக்கத்தையோ தாழ்வு மனப்பான்மையையோ அனுபவித்துள்ளீர்களா?

நிச்சயமாக இல்லை.

அறிவியல் கருத்தாக்கங்களைச் சரளமாக உரையாடும் அளவுக்குத் தமிழைத் தொடர்ந்து வளப்படுத்தவும் பயன்படுத்தவும் உங்களைப்போன்று தமிழையும் அறிவியலையும் அறிந்தவர்கள் உதவ இயலுமா? நடைமுறையில் அத்தகைய முயற்சியின் தேவையும் தாக்கமும் என்னவாக இருக்கும்?

கண்டிப்பாகத் தேவை. ஒரு மொழி முன்னேறிச் செல்லவேண்டுமெனில் அறிவியல் சார்ந்து அந்த மொழி இருந்தாகவேண்டும். இல்லையென்றால் அந்த மொழியில் நிலைப்பாடு சரியாக வராது. ‘வளரும் அறிவியல்’, ‘அறிவியல் பலகை’ முதலியவற்றின் மூலம் அண்மையில் நிகழும் அறிவியல் நிகழ்வுகளைத் தமிழில் வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம். இம்முயற்சிகள் சிறப்பாக வந்துகொண்டுள்ளன. விவசாயம் முதல் விண்வெளி வரை தமிழில் படித்த அனைத்து அறிவியலாளர்கள், அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளைத் தமிழில் வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம்.