பொன்விழாவைக் கொண்டாடிய கூகுள் தேடுதளம்

நித்திஷ் செந்தூர்

உலகின் ஆகப் பிரபலமான தேடுதளங்களில் ஒன்றாகத் திகழும் கூகுள் தனது 25ஆவது பிறந்தநாளை செப்டம்பர் 27ஆம் தேதியன்று சிறப்பாகக் கொண்டாடியது. அந்நாளில் சிறப்பு ‘டூடுல்’ சித்திரம் வெளியிடப்பட்டது. பிறந்தநாள் ஆண்டைத் தெரிவிக்கும் வகையில் 25 என்ற எண் அதில் இடம்பெற்றிருந்தது.

ஒரு நொடிப் பொழுதில் தேவையான விவரங்களைத் திரட்டித் தருவதிலும் ஐயங்களைக் களைவதிலும் தன்னிகரற்ற துணைவன் கூகுள் என்பதை இணையவாசிகள் அறுதியிட்டுக் கூறுவர். பெயர்ச்சொல்லாகத் திகழ்ந்த கூகுள் தற்போது வினைச்சொல்லாக மாறிவிட்டது. ‘இத கூகுள் பண்ணிப் பாருங்கள்’ எனப் பரவலாகத் தற்போது கூறப்படுகிறது. அந்த அளவிற்கு கூகுள் வாழ்க்கையில் ஆழமாக இரண்டறக் கலந்துவிட்டது.

செர்கேய் பிரின் (Sergey Brin), லேரி பேஜ் (Larry Page) ஆகிய இருவரால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1998இல் செப்டம்பர் 27ஆம் தேதி கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. நண்பர்களாகிய இருவருக்கும் தேடுதளத்தை உருவாக்கவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இருந்தது.

அவர்கள் உருவாக்கிய தேடுதளத்திற்கு முதலில் ‘BackRub’ எனப் பெயரிட்டனர். இணையவாசிகள் அதிகமாகப் பார்க்கும் தளங்கள், நேரத்தைக் கழிக்கும் தளங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேடல் முடிவுகளைச் சீரான முறையில் பட்டியலிட்டுக் காட்டத் தொடங்கியது. அந்த அம்சம் ஏனைய தேடுதளங்களிலிருந்து அவர்கள் உருவாக்கிய தேடுதளத்தைத் தனித்து காட்டியது.

‘Googol’ என்பது எண் 1ஐ தொடர்ந்து 100 சுழியம் வருவதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் கணிதச் சொல். அந்தப் பெயரையே தேடுதளத்திற்கு வைத்துவிடலாம் என இருவரும் முடிவெடுத்தனர். ஆனால் லேரி பேஜ் தவறுதலாக எழுதியதால் ‘Google’ என்ற பெயர் அதிகாரத்துவமானது. ஒரு தவறிலிருந்து தொடங்கிய கூகுள் தற்போது ஆலமரம் போல வளர்ந்து, விவரம் தேடுவோருக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது.

நாளடைவில் படங்களைத் தேடும் அம்சம், மொழிபெயர்ப்பு வசதி, குரல் வழித் தேடல் முதலியவற்றை அறிமுகம் செய்தது கூகுள். அதோடு 2022இல் எழுத்து, படங்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் தேடும் அம்சமும் அறிமுகமானது. புது அம்சங்களின்மூலம் இணையவாசிகளின் அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வரும் கூகுள், இணையில்லா இடத்தைப் பிடித்துவிட்டது.

உசாத்துணை

https://www.britannica.com/topic/Google-Inc#:~:text=They%20ultimately%20raised%20about%20%241,one%20followed%20by%20100%20zeroes)

https://news.lankasri.com/article/google-meaning-googol-googolplex-history-larrypage-1626519013