சேஞ்ச் அலி

0
227
முஸ்தபா

கொரோனாவுக்குப் பிறகு எல்லாத் தொழில்களுமே வீழ்ச்சியில்தான் இருக்கின்றன. ‘மணி எக்ஸ்சேஞ்’சும் அப்படித்தான் இருக்கிறது. இந்த வீழ்ச்சி நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்குமா அல்லது இன்னும் பாதாளத்திற்கு சரியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், மணி எக்ஸ்சேஞ்சில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்கள் நுழைந்துவிட்டன.

சிங்கப்பூர் மணி எக்ஸ்சேஞ்ச் தொழிலைப் பொறுத்தவரை வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை நம்பியிருந்த காலம் ஒன்றிருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது. ஏனென்றால் அங்குள்ளவர்கள் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, ஆன்லைன் எக்ஸ்சேஞ்ச் என ரொக்கமில்லாத பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள். சிங்கப்பூர் அரசாங்கமும் ‘பிட்காயின்’ போன்ற மெய்நிகர்ப் பணப்பரிமாற்றத்திற்கு உரிமமே தந்துள்ளது.

இவ்வளவு மாற்றத்திற்குப் பிறகும் இங்கே மணி எக்ஸ்சேஞ்ச் தொழில் மேலேயும் போகாமல் கீழேயும் சரியாமல் இருப்பதற்குக் காரணம், இங்கே சிங்கப்பூர் டாலருக்கு அடுத்தபடி மக்கள் மத்தியில் புழங்குவது மலேசிய கரன்ஸி. அப்படி இருக்கும்வரை தொழில் கீழே விழுந்திடாது. பெரிய அளவு வளர்ச்சியும் இருக்காது. ஏன் இங்கே மலேசிய கரன்ஸி தேவைப்படுகிறது என்றால், மலேசியத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மேலும், இங்கே உள்ளவர்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், அவர்கள் தேர்ந்தெடுப்பது மலேசியாவைத்தான். டூரியான் பழ சீசனுக்கு அங்கே செல்வார்கள். சுற்றிப்பார்ப்பார்கள். ஆக, எப்படியும் மலேசிய கரன்ஸி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் சிங்கப்பூரும் கேஷ்லெஸ் பணப் பரிமாற்றம் நோக்கிச் செல்கிறது.

முன்பு பத்தாயிரம் டாலர் இருந்தது. இப்போது ஐந்தாயிரம், ஆயிரம், ஐநூறு டாலர் எல்லாம் புழக்கத்திலேயே இல்லை. தற்போது ஐம்பது, நூறு, பத்து புழக்கத்தில் இருக்கிறது. கேஷ்லெஸ் பணப்பரிமாற்றத்தை நோக்கி அரசாங்கமே நகர்கிறது. இது எவ்வளவுதான் மாறினாலும் மலேசியாவுக்குச் செல்வது வருவது நிற்கப்போவதில்லை. அதனால், மக்களிடம் பணப்புழக்கமாக இருப்பதும் மாறப்போவதில்லை. மலேசிய கரன்ஸியை வைத்துதான் வரவு செலவு இருக்கும்.

ஒருவேளை, மலேசியாவிலும் கேஷ்லெஸ் பணப்பரிமாற்றம் நடைமுறைக்கு வந்துவிட்டால்?

மலேசியாவின் அமைப்பு, சிந்தாந்தம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் அங்கு கேஷ்லெஸ் எகானாமி கொண்டுவர முடியாது. இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே கேஷ்லெஸ் எகானாமி கொண்டுவந்தாலும்கூட, விவசாயியிடம் இருக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? சந்தையில் உள்ள பணத்தை எப்படி கேஷ்லெஸ்ஸாக மாற்ற முடியும்? அதேபோலத்தான் மலேசியாவிலும். இங்கும் விவசாயம் நடைபெறுகிறது. காலையில் கூலிக்கு வேலைக்கு வருபவரிடம் மாலை பணம் கொடுக்க வேண்டும் அல்லவா? மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவு, தொழில் பரிவர்த்தனை எல்லாம் பாரம்பரியமாக இருந்து வருகின்றன. அதனால், மணி எக்ஸ்சேஞ்ச் வீழ்ந்திடாது.

சிங்கப்பூரில் மணி எக்ஸ்சேஞ்ச் தொழிலில் ஈடுபடுவோர் தொழில்நுட்ப அடிப்படையில் சிலவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் இந்த மாற்றத்திற்குத் தயாராக இருப்பதைக் காணமுடிகிறது .

இதில் ஈடுபடும் தமிழ் முஸ்லீம்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்வேன். கிரெடிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை எல்லாம் கொண்டுவந்தார்கள். சுற்றுலா வருபவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தேவைப்பட்டால் கைச்செலவுக்கு கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், எங்கு சென்றாலும் கார்டில்தானே பணம் வாங்குகிறார்கள். டெக்னாலஜி வருவதால் மணி எக்ஸ்சேஞ் தொழிலுக்குப் பின்னடைவுதான் ஏற்படுமே தவிர முன்னேற்றம் இருக்காது. இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப வாங்கிட்டார்கள் இல்லையா? கேஷ்லெஸ் எகானாமி இந்தத் தொழிலுக்குப் பின்னடைவைத்தான் தரும்.

அந்தக் காலத்தில் பணத்தை மூட்டை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சென்றதுபோல இனி திரும்ப வராது. அந்தக் காலத்தில் ஃப்ராங்குக்கு டியூட்டி ஃப்ரியானது. அதற்குப் பிறகுதான் சிங்கப்பூர் டாலருக்கு டியூட்டி ஃப்ரியானது. இப்போது எல்லாம் டியூட்டி ஃப்ரி என்ற கான்செப்ட்டே இல்லை. உள்ளே என்ன கிடைக்கிறதோ அதே விலைக்கு வெளியேவும் கிடைக்கிறது. ஜிஎஸ்டி கொண்டுவந்தபிறகு வெளிநாட்டுக்கு போகிறவங்களுக்கு சலுகை கிடைக்கலாம். உள்ளூரில் இருப்பவர்கள் வரி கட்டித்தான் ஆக வேண்டும். கொரோனா தடை காலத்திற்குப் பிறகு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகமாக உள்ளது.

கொரோனா தடைக்காலத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் இந்தியர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் வருகை 12 மடங்கு அதிகரித்திருக்கிறது.

மணி எக்சேஞ்ச் தவிர Forex எனப்படும் பணமாற்றுச் சேவையை இப்போது அதிக இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். லிட்டில் இந்தியா ஏரியாவில் நிறைய கடைகள் இப்போது இருக்கின்றன.

20,000 வெள்ளி (இந்திய ருபாய் மதிப்பில் 10 லட்சம் வரை கொண்டு வரலாம்). சிங்கப்பூர் குடியேற்ற அலுவலகத்தின் வலைத்தளத்தில் பார்த்து பணமாற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மணி எக்ஸ்சேஞ்ச் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்வது கட்டாயம். இல்லாவிட்டால் சிங்கப்பூரில் கோலோச்சும் மணி எக்ஸ்சேஞ்ச் தொழில் நசிந்துவிடும்.