சேஞ்ச் அலி

தோற்றமும் மாற்றமும்

நித்திஷ் செந்தூர்

‘சேஞ்ச் அலி’ எனப் பேச்சு வழக்கில் இருக்கும் பெயர் 1890ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று தோற்றம் கண்டது. நகரமன்ற ஆணையாளர்கள் ‘சேஞ்ச் அலி’, ‘சேஞ்ச் லேன்’ ஆகிய பெயர்களைப் பரிசீலித்தனர். அக்காலத்தில் லண்டனின் வர்த்தக மையத்தை ‘எக்ஸ்சேஞ்ச் அலி’ (Exchange Alley) என வழங்கினர். அங்கிருந்து அலி என்ற சொல் தற்போது புழங்கப்படும் பதத்தில் ஒட்டிக் கொண்டதாக நம்பப்படுகிறது. அலி என்பது தமிழில் சந்து எனப் பொருள் கொள்ளலாம். ‘சேஞ்ச் அலி’ என்றால் பணத்தை மாற்றும் சந்து அல்லது சில்லறையை மாற்றும் சந்து எனப் புரிந்துகொள்ளலாம். வரலாற்று ரீதியாக சிங்கப்பூரின் ‘சேஞ்ச் அலி’ பகுதியில்தான் உள்ளூர்வாசிகள் வட்டாரக் கடல் வர்த்தகர்களுடனும் சட்டைக்காரர்களுடனும் (ஐரோப்பியர்கள்) பண்டமாற்றில் ஈடுபட்டிருந்தனர்.

1920கள் வரை, சேஞ்ச் அலி பிரபலமான இடமாக மாறவில்லை. சட்டைக்கார வியாபாரிகளும் ஆசிய இடைத்தாரர்களும் கூடும் இடமாக மட்டுமே திகழ்ந்தது. ஏறத்தாழ நூறு மீட்டர் சந்தின் நீளம். ஒருசில கடைகள் மட்டுமே அங்கு அமைந்திருந்ததால், பாதசாரிகள் கோலியர் கீயிலிருந்து (Collyer Quay) ராஃபிள்ஸ் பிளேஸ் (Raffles Place) வரை வசதியாகக் கடந்து சென்றனர்.

1930களின் தொடக்கத்தில், அதன் பரபரப்பிற்குப் பெயர் பெற்றது சேஞ்ச் அலி. முறுகலான பணத்தாள்களை எண்ணும் பணமாற்று வியாபாரிகள் இடையே, சடையர்களின் (சீனர்களின்) தொழில்கள் செழிந்தோங்கின. அவர்கள் மிளகு, கொப்பரை, தகரம், பதச்சாறு (Gambier) முதலியவற்றை வர்த்தகம் செய்தனர். நறுமணப் பொருள்களின் வாசனை வீதியெங்கும் வீசியது. சட்டைக்காரர்களிடையே அப்பொருள்களுக்கு கிராக்கி நிலவியது. கப்பல் மூலம் வந்த சுற்றுப்பயணிகளையும் படகோடிகளையும் சேஞ்ச் அலி சுண்டியிழுத்தது.

சேஞ்ச் அலி ஜான்ஸ்டன்ஸ் படகுத்துறை (Johnston’s Pier) அருகே வசதியாக அமைந்திருந்தது. 1933ஆம் ஆண்டு வரை சுற்றுப்பயணிகள் அங்கு இறங்கினர். 1933இல் ஜான்ஸ்டன்ஸ் படகுத்துறை கிளிஃபர்ட் படகுத்துறைக்கு (Clifford Pier) மாற்றப்பட்டது. அப்படகுத்துறைகள் அக்காலத்தில் பயணிகள் வந்திறங்கும் இடமாகவும் புறப்படும் இடமாகவும் விளங்கின. துறைமுகத்தில் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும். கப்பல்களிலிருந்து பயணிகள் படகுகளின்மூலம் படகுத்துறைக்கு வந்து இறங்குவர். அதேபோலப் படகுத்துறையிலிருந்து கிளம்பும் பயணிகளைப் படகுகள் கப்பல் வரை சுமந்து செல்லும். கோலியர் கீயோரம் கிளிஃபர்ட் படகுத்துறை அமைந்திருந்தது. சிறு சந்தாகத் திகழ்ந்த சேஞ்ச் அலியின் ஊடாகப் பயணிகள் ராஃபிள்ஸ் பிளேஸுக்குச் சென்றனர். பயணிகளின் பணமாற்று தேவையை சேஞ்ச் அலிக்காரர்கள் பூர்த்தி செய்தனர்.

பயணிகளின் பணமாற்று தேவையை சேஞ்ச் அலிக்காரர்கள் பூர்த்தி செய்தனர்.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, சேஞ்ச் அலியில் விற்கப்படும் பொருள்களும் வழங்கப்படும் சேவைகளும் கணிசமாக மாறின. துணிமணிகள், பயணப்பெட்டிகள், கைக்கடிகாரங்கள், பொம்மைகள், மீன்பிடித் துணைப்பொருள்கள், கைவினைப் பொருள்கள், நினைவுப் பொருள்கள் முதலியவை விற்கப்பட்டதோடு தையல் சேவை, காலணிப் பூச்சு முதலிய சேவைகளும் வழங்கப்பட்டன.

பொருள்களுக்குப் பேரம் பேசுதல், கடைக்காரர்கள் பொருள்களை வலிந்து விற்றல், முகத்தைப் பார்த்து விலையை நிர்ணயித்தல் ஆகியவை சேஞ்ச் அலியின் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன. அவையே அதன் அடையாளங்களாகத் தங்கிவிட்டன. சந்து குறுகலாகவும் நெரிசலாகவும் இருந்ததோடு காற்றோட்டம் அதிகம் புகாத இடமாகவும் இருந்தது. இருப்பினும், அவற்றை எல்லாம் உள்ளூர்வாசிகள் பொருட்படுத்தவில்லை. நவீன சிங்கப்பூரின் தன்னிகரற்ற அடையாளமாக சேஞ்ச் அலி உள்ளூர்வாசிகளின் இதயங்களில் நிலைகொண்டுவிட்டது.

பல நாடுகளிலிருந்து வந்த பயணிகள் சேஞ்ச் அலியில் கூடியதால், கடைக்காரர்கள் சிலர் பன்மொழிச் சொற்றொடர்களைக் கற்றுக்கொண்டனர். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழி, ரஷ்ய மொழிச் சொற்கள் நயமாக நாவில் பயின்றன. சேஞ்ச் அலியின் இரு நுழைவாயில்களிலும் சட்டவிரோத பணமாற்று வியாபாரிகள் இருந்தனர். அவர்கள் வாய்க்கு வந்த விலையில் ஆளைப் பார்த்து பணமாற்று விகித்தைக் (Exchange rate) கூறுவர்.

1973ஆம் ஆண்டில் கிளிஃபர்ட் படகுத்துறையில் நடைபெற்ற மறுசீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, குளிர்சாதன வசதி கொண்ட கடைத்தொகுதி திறக்கப்பட்டது. அதன் பெயர் ‘சேஞ்ச் அலி ஏரியல் பிளாசா’. படகுத்துறையையும் சேஞ்ச் அலியையும் இணைக்கும் பாலத்தில் அந்தக் கடைத்தொகுதி நிறுவப்பட்டது.

1980களில் சேஞ்ச் அலியில் நடைபெற்ற தொழில்கள் பாதிக்கப்பட்டன. கடல் பயணங்களில் சுணக்கம், இதர குளிர்சாதன வசதியுடைய கடைத்தொகுதிகளின் வருகையால் ஏற்பட்ட போட்டி, சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டுப் படையினர் விலகல் ஆகிய காரணங்களால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குன்றியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் கடைசியாக சேஞ்ச் அலி கடைகளில் வியாபாரம் நடைபெற்றது.

கோலியர் கீ பக்கம், சேஞ்ச் அலி நுழைவாயிலில் நான்கு மாடி கொண்ட ‘வின்சேஸ்டர் ஹவுஸ்’ (Winchester House) கட்டடம் இருந்தது. சேஞ்ச் அலியின் மறுபக்கம், ராஃபிள்ஸ் பிளேஸில் பதினான்கு மாடி கொண்ட ‘ஸெல் ஹவுஸ்’ (Shell House) கட்டடம் இருந்தது. 1976ஆம் ஆண்டில் அந்தக் கட்டடம் விற்கப்பட்ட பிறகு, அது ‘சிங்கப்பூர் இரப்பர் ஹவுஸ்’ எனப் பெயர் மாறியது. சேஞ்ச் அலி அப்போது இருந்த இடத்திலிருந்து வெளியேறியபோது அவ்விரு கட்டடங்களும் இடிக்கப்பட்டன. ‘கெல்டேக்ஸ் ஹவுஸ்’ (தற்போது ஷெவரோன் ஹவுஸ்), ‘ஹிடாச்சி டவர்’ (தற்போது 16 கோலியர் கீ) ஆகிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் 1993ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. சேஞ்ச் அலி அவ்விடத்திற்குத் திரும்பியது. தற்போது ‘ஆர்கெட்’ என அழைக்கப்படும் சேஞ்ச் அலி, வானுயர ஓங்கி நிற்கும் இரு கட்டடங்கள் நடுவே பழமை மாறாமல் மிடுக்குடன் வீற்றுள்ளது.

உசாத்துணை

  1. Clement Liew, Peter Wilson (2021). A history of money in Singapore, pg 202
  2. Venon Cornelius, Fiona Lim. Change Alley. Retrieved from Singapore Infopedia