தொடர்ந்து மெருகேறும் ‘நினைவின் தடங்கள்’

சிவானந்தம் நீலகண்டன்

தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு, டிசம்பர் 2017இல் அவ்வாண்டில் மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூரும் வகையில் ‘நினைவின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. வாசகர் வட்டம் அமைப்பு அம்முதல் முயற்சிக்குத் துணைநின்றது. நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நினைவின் தடங்கள் தொடர்ந்துவருகிறது. இவ்வட்டார எழுத்தாளர்கள் மட்டுமின்றிப் பரந்துவிரிந்த தமிழ் எழுத்துலகில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து மறைந்தவர்களை நிகழ்ச்சி கௌரவிக்கிறது.

அண்மைய நினைவின் தடங்கள், டிசம்பர் 9, 2023 அன்று தேசிய நூலக வாரியத்தின் ‘தி போட்’ அரங்கில் நடந்தேறியது. ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்முகம்மது, ரெ.சோமசுந்தரம், ராம்.நாராயணசாமி, முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன், முருகடியான், முல்லைவாணன் ஆகிய ஒன்பது பேரைக் குறித்து ஒன்பது பேச்சாளர்கள் தம் ஏழு நிமிட உரைகளை ஆற்றினர். சுமார் 100 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை நெறியாளராக ஜெயசுதா தொகுத்து வழங்கினார். நினைவின் தடங்கள் உருவான விதம், தொடர்ச்சி குறித்து முதலில் அழகிய பாண்டியன் சுருக்கமாகப் பேசினார். மறைந்த எழுத்தாளர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேச்சாளர்களுடன் அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் (வலது ஓரம்)

பாலபாஸ்கரனைக் குறித்த என் உரையுடன் பேச்சுகள் தொடங்கின. கோ.சாரங்கபாணியைத் தமிழர்களின் பெருந்தலைவராகப் போற்றும் அதேவேளையில் அவர்மீது விமர்சனமும் வைக்கத் தவறாத ஆய்வுத்துணிச்சல், சிங்கப்பூரை ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ணபூமி’ என்று வருணித்தவர் என்றாலும் சிங்கப்பூரில்தான் முதல் தமிழ்ச்சிறுகதை எழுதப்பட்டது என்பதை விரிவாக மறுத்த பாலபாஸ்கரனின் ஆய்வுநேர்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினேன். கல்விப்புலக் கறார்த்தன்மையைத் தம் ஆய்வுகளில் கைக்கொண்ட அதேவேளையில், தான் ஒரு தொழில்முறை வரலாற்றாளர் அல்லர் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி, சுவாரஸ்யமான மொழியில் ஆய்வுகளை பாலபாஸ்கரன் வெளியிட்டதை அவர் காட்டிச்சென்றுள்ள புதியபாதை என்று கவனப்படுத்தினேன். மோசமாகக் குன்றிய உடல் நிலையிலும் நூல்வெளியீட்டுத் தரத்தில் அறவே சமரசம் செய்துகொள்ளாத அவரது உறுதியையும் முன்னுதாரணமாகக் காட்டிப் பேச்சை முடித்துக்கொண்டேன்.

ச.ஜெகதீசன்

அடுத்ததாக, எம்.கே.நாராயணனைக் குறித்து முனைவர் ச.ஜெகதீசன் உரையாற்றினார். எழுத்து, நடிப்பு, பேச்சு உள்ளிட்ட நாராயணனின் பன்முக ஆளுமைத் திறனைப் போற்றி உரையைத் தொடங்கிய ஜெகதீசன் நாராயணனின் குரலிலேயே சில வரிகளைப் பேசிக்காட்டினார். நாயன்மார்கள் 63 பேரைக் குறித்த ஒலிவட்டு, லீ குவான் இயூ வரலாற்று நூல், மாணவர்களுக்கான தமிழ் உச்சரிப்புக் கையேடு ஆகிய நாராயணனின் வெளியீடுகளையும் சிங்கை வானொலியின் வளர்ச்சிக்கும் நாடகத்துறைக்கும் அவர் ஆற்றிய பங்கையும் குறித்த சுருக்கமாக ஜெகதீசனின் உரை அமைந்தது.

நா.ஆண்டியப்பன்

மூன்றாவதாக, ரெ.சோமசுந்தரம் குறித்து நா.ஆண்டியப்பன் பேசினார். சிறுவயதிலேயே சிங்கப்பூருக்கு வந்த சோமசுந்தரம் முதலில் பத்திரிகை விநியோகிப்பாளராக வேலை செய்தது, நடிப்புத்திறனை சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தில் சேர்ந்து வளர்த்துக்கொண்டது, பின்னாளில் வானொலியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளாராகவும் ஆனது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். ராமாயணம், மகாபாரதம் இரண்டு நாடகங்களிலும் ரெசோவின் நடிப்பு என்றென்றும் அவரது பெயரைச்சொல்லும் என்றார். பிரதான விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது அவரது பங்களிப்புகளுக்கு மகுடம் சூட்டியதாகத் தெரிவித்த ஆண்டியப்பன், ரெசோவின் பொதுச்சேவைகள், நாடகத்துறை குறித்த நூல்களையும் சுட்டிக்காட்டி உரையை முடித்துக்கொண்டார்.

இராம.நாச்சியப்பன்

நான்காவதாக, முத்துமாணிக்கம் குறித்து இராம.நாச்சியப்பன் உரையாற்றினார். இளவயதில் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த முத்துமாணிக்கம் மரபுச்செய்யுள்களிலும் ஆன்மிகத்திலும் ஈடுபாடுகொண்டார். பொன்வண்டு, தேன்சிட்டு உள்ளிட்ட சுமார் 15 மரபுச்செய்யுள் நூல்களை வெளியிட்ட அவர், கிறிஸ்தவ, இஸ்லாமிய பக்திச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். பெரும்பாலும் எண்சீர் விருத்தங்கள். அவற்றின் சொல்லழகு, அமைப்பழகுகளைப் போற்றிய நாச்சியப்பன், முத்துமாணிக்கத்தின் சிறப்புகளையும் அவரது படைப்புகளின் சிறப்புகளையும் தாமே யாத்த செய்யுள்களில் அமைத்து வாசித்தார்.

ஆ.இரா.சிவகுமாரன்

அடுத்தது, ஆ.பழனியப்பன் குறித்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் பேசினார். பாலாவின் மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் பலரும் அறிந்தவை. ஆனால் சிவகுமாரனின் உரை, பாலா பள்ளி நாளில் நடத்திய இதழிலிருந்து பின்னாளில் சமூக அமைப்புகளில் செயலாற்றியது, செய்தித் தொகுப்பாளர், திருமணப் பதிவாளராகச் செயல்பட்டது, ஆதரவற்றோருக்கு உதவி, ஆன்மிகப்பணி, இதர சமூகப்பணிகள் என பாலாவின் முழு ஆளுமையும் வெளிப்படும் வகையில் அமைந்திருந்தது. சிறப்பாகத் தொகுக்கப்பட்ட படங்களும் அவற்றில் சுருக்கமான விளக்கங்களும் என ஏழு நிமிடத்தில் பல்வேறு செய்திகளைத் தொகுத்த செறிவான பேச்சு.

ம.நவீன்

ஆறாவது, சை.பீர்முகம்மது குறித்து ம.நவீனின் உரை பதிவுசெய்யப்பட்டக் காணொளியாக ஒளிபரப்பப்பட்டது. முத்தமிழ் படிப்பகம், தமிழ் இலக்கிய மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களில் சைபீரின் பங்களிப்பை முதலில் விவரித்தார். கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர் என அவரது எழுத்துப் பங்களிப்புகளைக் குறித்தும் அக்கினி வளையங்கள் நாவல் உள்ளிட்ட முக்கியமான படைப்புகளாகத் தான் கருதியவை பற்றியும் பேசினார். முகில் பதிப்பகம் வழியாகவும் வேரும் வாழ்வும் என்ற பெயரில் அவர் பெருமுயற்சி செய்து சொந்த செலவில் வெளியிட்ட மூன்று பெருந்தொகுப்புகளின் வழியாகவும் மலேசிய இலக்கியத்துக்கு சைபீர் ஆற்றிய பணியைக் குறிப்பிட்டு உரையை முடித்துக்கொண்டார்.

இறை.மதியழகன்

ஏழாவதாக, முருகடியானை நினைவுகூர்ந்து இறை.மதியழகன் உரையாற்றினார். மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ள முருகடியான், தமிழ் அதன் சிறப்புகளோடு சிதைவின்றிச் சிங்கப்பூரில் நீடிக்கவேண்டும் என்பதில் இறுதிவரை அக்கறைகாட்டி வந்ததைப் பகிர்ந்துகொண்டார். சிங்கப்பூருக்காக அவர் இயற்றிய தேம்பாவை, எழுதி அவர் குரலிலேயே ஒலிப்பதிவு செய்த திருமுருகன் காவடிச்சிந்து உள்ளிட்ட பல்வேறு வெளியீடுகளின் சிறப்புகளை விவரித்தார். முருகடியானின் எட்டு வயது பெயர்த்தி நன்றாகத் தமிழ் பேசும் காணொளிப்பதிவு திரையிடப்பட்டது. கிடைக்காமற்போன முருகடியானின் வில்லுப்பாடல்களையும் தேடிச்சேர்க்க வேண்டுகோள் விடுத்துப் பேச்சை நிறைவுசெய்தார்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

அடுத்தது, முல்லைவாணன் குறித்து யூசுப் ராவுத்தர் ரஜித் உரையாற்றினார். பதினைந்து வயதில் முல்லைவாணன் சிங்கப்பூருக்கு வந்தது, தமிழ் நேசனில் எழுத்துப்பணி, திருக்குறள் ஆராய்ச்சி, தனித்தமிழ்க் கொள்கைப்பிடிப்பு, கோ.சாரங்கபாணியுடன் இணைந்து ஆற்றிய சமூகப்பணி, மாதவி இலக்கிய மன்றச் செயல்பாடு எனப் பல்வேறு பங்களிப்புகளையும் ஆளுமையையும் ரஜித் விவரித்தார். முல்லைவாணனின் நூல்கள் அனைத்தும் அளவிற்சிறிய மரபுச்செய்யுள் நூல்கள் என்றாலும் அவை செறிவுமிக்கவை என்றார். மாணவர்களுக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் மொழிப்பிழைகள் இருக்கலாகாது என ஆயிரக்கணக்கில் திருத்தங்கள் செய்தவர் என்பதைச் சுட்டிக்காட்டினார். திருக்குறள் விரிவுரை, சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு, நால்வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு என முல்லைவாணனின் இறுதிக்காலப் படைப்புகள் வெளிவரவேண்டும் என்ற தம் அவாவைத் தெரிவித்து ரஜித் உரையை நிறைவு செய்தார்.

தமிழ்மலர்

இறுதியாக, ராம்.நாராயணசாமியைக் குறித்து அவரது மகள் தமிழ்மலர் உரையாற்றினார். மலேசியாவில் பிறந்த நாராயணசாமி பதின்ம வயதில் சிங்கப்பூருக்கு வந்தது, பகுத்தறிவு நாடகமன்றத்தில் இணைந்து நடிப்புத்திறனை வளர்த்துக்கொண்டது, நாடகங்களை எழுதி இயக்கித் தயாரித்தது, சிங்கப்பூர்க் கலைஞர் சங்கப் பங்களிப்புகள், வெளியிட்ட நூல்கள், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது என அவரது வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்மலர் சுருக்கமாகவும் உருக்கமாகவும் பேசினார். பொன் மழை பொழிகிறது என்ற நாராயணசாமியின் சிறுகதைத் தொகுப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நூலின் இலவசப்பிரதிகள் வழங்கப்பட்டன. பேச்சாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை அருண் மகிழ்நன் வழங்க, நிகழ்ச்சி நிறைவை நாடியது.

நினைவின் தடங்கள் தொடங்கிய 2017 முதல் கடந்த மாதம் (டிசம்பர் 2023) நடந்த நிகழ்ச்சிவரை ஏழு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, மறைந்த எழுத்தாளர்கள் எழுவரைக் குறித்து சிற்றுரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒவ்வோராண்டும் தொடர்ந்து பங்கேற்பதால் நிகழ்ச்சி அடைந்துவரும் மாற்றங்களை ஒரு பேச்சாளாராகவும் பார்வையாளராகவும் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வகையில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஆகச்சிறப்பானது என்பேன். இம்முறை நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நூலக வாரியத்துடன் கைகோத்திருந்தது.

ஒவ்வோர் உரையும் ஏழு நிமிடத்தில் முடியவேண்டும் எனப் பேச்சாளர்களை நூலக வாரியத்தினர் உறுதியாக வலியுறுத்தியதன் விளைவாகப் பெரும்பாலான உரைகள் செறிவாக அமைந்தன என்று நினைக்கிறேன். நேரம் முடிவடைவதைப் பேச்சாளர்களுக்கு அரங்கின் பின்னாலிருந்து நினைவூட்டவும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்பது உரைகளிலும் முனைவர் ஆ.இரா.சிவகுமாரனின் உரை மிகச்சிறப்பாக இருந்ததாக உணர்ந்தேன். ஏழு நிமிடத்தில் ஓர் ஆளுமையை முழுமையாகவும் செறிவாகவும் சலிப்புத் தட்டாமலும் விவரிக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் உரையாக அமைந்திருந்தது.

மறைந்த எழுத்தாளர்களைக் குறித்து நிறைய செய்யுள்கள் யாத்து வாசிப்பதைப் பேச்சாளர்கள் தவிர்க்கலாம். அது பேச்சாளரின் யாப்புத் திறனைக் காட்டுமேயொழிய நினைவுகூரப்படும் எழுத்தாளர்களின் பங்களிப்புகளைக் கேட்பவர் புரிந்துகொள்ளும்படி வெளிக்கொணராது. தமக்கும் எழுத்தாளருக்குமான தனிப்பட்ட நெருக்கம் குறித்த தகவல்களையும் – அவற்றைத் தெரிந்துகொள்வதில் அவையோர்க்குப் பலனில்லை என்னும் நிலையில் – பேச்சாளர்கள் தவிர்க்கலாம்.

ஒன்பது எழுத்து ஆளுமைகளை நினைவின் தடங்கள் 2023 நிகழ்ச்சி கௌரவித்ததோடு அவர்களை அறிந்திராதோருக்குச் சிறப்பாக முறையில் அறிமுகமும் செய்திருக்கிறது. நெறியாளரின் பேச்சாளர் அறிமுகங்கள், பேச்சாளர்களின் உரைகள், ஒரு நூல் வெளியீடு, நினைவுப்பரிசு வழங்கல் என அனைத்துமே சுமார் 100 நிமிடத்தில் முடிவடைந்தன. எழுத்தாளர்களின் நூல்கள் இரவல் பெறுவதற்காகத் தயாராக இருந்தன. நிறைவுக்கு நிறைவு சேர்ப்பதைப்போல, நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும்போது சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் இரு பெருந்தொகுப்புகளை சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் மாலதி இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தார். பாராட்டுக்குரிய சேவை அது.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போதும் நினைவின் தடங்கள் தடங்கலின்றித் தொடர்ந்தது. நூலக வாரியம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து, காணொளிப்பதிவுகளைப் பெற்று, இணையவழி நிகழ்ச்சியாக நடத்தியது. சாக்குப்போக்குச் சொல்லித் தவிர்க்காமல் எச்சூழலிலும் ஒரு நல்ல முன்னெடுப்பைத் தொய்வின்றித் தொடரவேண்டும் என்னும் நூலக வாரியத்தின் முனைப்பு போற்றத்தக்கது.

எழுத்தாளர்கள் காலமாவது வருத்தத்திற்குரியது. ஆனால் நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் இரங்கல் கூட்டமாகப் பேசிக் கலைந்துவிடாமல் பங்களிப்புகளைக் கவனப்படுத்தி மறைந்தவர்களைத் தொடர்ந்து வாழச்செய்யும் பொருளுள்ள, தாக்கமுள்ள நிகழ்ச்சியாக நினைவின் தடங்கள் உருவெடுத்திருக்கிறது. நிகழ்ச்சி உள்ளடக்கமும் வடிவமைப்பும் தொடர்ந்து மெருகேறி வருகிறது. தேசிய நூலக வாரியத் தமிழ்ச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியனும் அவரது சக நூலகர்களும் நம் பாராட்டுக்குரியவர்கள்!